Search
Tuesday 7 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இந்தியாவை கையாளல்

இந்தியாவை கையாளல்

யதீந்திரா

முள்ளிவாய்க்காலின் 11வது ஆண்டை பல தரப்பினரும் நினைவு கூர்ந்திருக்கின்றனர். இம்முறை ஒரு விடயத்தை அவதானிக்க முடிந்தது. அதாவது, வழமைக்கு மாறாக அதிகமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இது கொரோனாவின் விளைவு. வீடுகளில் இருந்தவாறே பலரும் கலந்துரையாடல்களில் பங்குகொள்ளக் கூடியதாக இருந்ததால், அதிகமானவர்கள் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றனர். இவற்றில் ஒரு சில கலந்துரையாடல்களை செவிமடுக்க முடிந்தது. அதில் ஒன்று – தமிழர் உரிமைச் செயலரங்கம் என்னும் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையடல். இதில் இளம் தமிழகம் என்னும் அமைப்பைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர், இந்தியாவும் ஈழத் தமிழரின் விடுதலையும் (கள நிலைமை கருதி தலைப்பில் ஒரு சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்னும் தலைப்பில் உரையாற்றிருந்தார். அவரது உரையின் சாரம்சம் இந்திய அரசின் ஆதரவை ஈழத் தமிழர்கள் பெற வேண்டியது கட்டாயமான ஒன்றாகும். அங்குள்ள அனைத்து தரப்பினருடனும் ஈழத் தமிழர்கள் உறவில் இருக்க வேண்டும். அங்குள்ள கட்சி வேறுபாடுகள், கட்சிப் பிரச்சினைகள் எதற்குள்ளும் ஈழத் தமிழர்கள் செல்லக் கூடாது. இது ஒரு முக்கிய உபாயமாக கைக்கொள்ளப்பட வேண்டும் – பொதுவாக தமிழ் நாட்டில் இருக்கும் ஈழ ஆதரவாளர்கள் என்போர், எப்போதும் மத்திய அரசை எதிர்த்துப் பேசுவதையே வழமையாகக் கொண்டிருக்கின்றனர். அதனோடு ஒப்பிட்டால் செந்தில்குமாரின் பார்வை யதார்த்தமான ஒன்றாக இருந்தது. இவ்வாறான கருத்தை நான் பல வருடங்களாக குறிப்பிட்டு வருகின்றேன். இந்தியா தொடர்பான பல கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கின்றேன். அதனை இப்போது, ஒரு தமிழ் நாட்டைச் சேர்ந்தவரின் வாயிலாக கேட்பது மகிழ்சியளிக்கின்றது.

‘இந்தியாவை எதிர்த்தல்’ என்பது புலம்பெயர் சூழலில் உள்ள பலரிடம் இருக்கும் ஒரு மனேபாவம். இதற்கு அவர்களின் வாழ்நிலையும் ஒரு காரணம். அவர்கள் இலங்கையிலிருந்து வெளியேறிய பின்னர் – தெற்காசிய பிராந்தியத்திலிருந்தே வெளியேறிவிட்ட உணர்வை பெற்றுவிடுகின்றனர். இதனால் அவர்களால் இலகுவாக இந்திய எதிர்புணர்வுக்குள் தங்களை இணைத்துக் கொள்ள முடிகின்றது. முக்கியமாக ஒரு குறிப்பிட்ட தமிழ் அரசியல் தரப்பினர் மத்தியில் ‘றோ’ எதிர்ப்பு என்பது தீவிரமாக இருக்கின்றது. வடக்கிலும் புலம்பெயர் சமூகத்தினர் மத்தியிலும் ‘றோ எதிர்ப்பாளர்கள்’ என்னும் ஒரு பிரிவினர் இருந்து கொண்டே இருக்கின்றனர். பெரும்பாலும் இது ஒரு உணர்ச்சிவசப்பட்ட அரசியல் நிலையாகும் – மேலும் இவ்வாறு பேசுகின்ற போது தாங்கள் அறிவுபூர்வமாக பேசுவதாகவும் சிலர் எண்ணிக் கொள்ளக் கூடும்.

எனக்குத் தெரிந்த ஒருவரின் கதை இதற்கு ஒரு நல்ல உதாரணம். அதனை இங்கு பதிவு செய்கின்றேன். அவர் இப்போது ஒரு புலம்பெயர் செயற்பாட்டாளர் ஆனால் அவர் உண்மையில் புலம்பெயர் செயற்பாட்டாளர் அல்ல. அவர் கொழும்பில் நிலைகொண்டிருந்த ஒரு சர்வதேச அரசுசாரா நிறுவனத்தில் பணியாற்றியவர். அவர் கொழும்பில் இருக்கின்ற போது, விடுதலைப் புலிகள் தொடர்பில் ஒரு போதுமே ஆதரவாகப் பேசியதுமில்லை. மேற்குலகின் ஊடாக அறிமுகமான முரண்பாட்டு;த் தீர்வு தொடர்பில் தனது நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்தார். 2009இற்கு பின்னர் மேற்படிப்பிற்கான வாய்ப்;பு ஒன்றை பெற்று ஜரோப்பிய நாடு ஒன்றிற்கு சென்றார். அங்கு சென்ற பின்னர் அவர் திடிரென்று என்னுடனான தொடர்புகளை துண்டித்துக் கொண்டார். அப்போது நான் எங்களுடைய பக்கத்திலுள்ள தவறுகள் தொடர்பில் எழுதிக் கொண்டிருந்தேன். அவரது எழுத்துக்களை பார்த்தேன் – அவரது புலம்பெயர் புதிய நட்புக்கள் அவரை அதிகம் மாற்றியிருக்கவேண்டும். அவர் கொழும்பிலிருக்கும் போது இந்தியா தொடர்பில் பேசியதற்கும் – புலம்பெயர் நட்புவட்டங்களுக்குள் சென்ற பின்னர் இந்தியா தொடர்பில் பேசியதற்கும் இடையில் மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாட்டை காண முடிந்தது. இங்கு ஒரு குறிப்பிட்ட புலம்பெயர் தரப்பினர் பற்றியே குறிப்பிடப்படுகின்றது.

இந்தியா ஒரு உடனடி அயல்நாடு. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இலங்கை விவகாரங்களில் இந்தியா தலையீடு செய்யும். அது தெற்காசிய பிராந்தியத்தின் அரசியல் யதார்த்தம். அந்த வகையில் தமிழர் பிரச்சினையில் இந்தியா ஒரு தவிர்க்க முடியாத சக்தி. ஒரு விடயம் தவிர்க்க முடியாதது என்று புரிந்துகொண்டால் அதன் பின்னர் அதனை எதிர்த்து நிற்றல் என்பதற்கு பொருள் இல்லை. அதன் பின்னரும் அதனை எதிர்ப்பது என்பது, அதனுடன் மோதல் நிலையை கடைப்பிடிப்பதாகும். விடுதலைப் புலிகள் அவ்வாறானதொரு பாதையைத்தான் தெரிவு செய்தனர். அந்தப் பாதை வெற்றியளிக்கவில்லை. இந்தியா நினைத்திருந்தால், இறுதி யுத்தத்தின் போது விடுதலைப்புலிகள் அமைப்பை அழிவிலிருந்து காப்பாற்றியிருக்கலாம் என்று ஒரு கருத்துண்டு. அது உண்மை. ஆனால் இந்தியாவிடம் அதனை எதிர்பாக்கக் கூடிய தார்மீக பொறுப்பு தமிழர்களிடம் இருந்ததா என்னும் கேள்வியை நம்மால் தாண்டிச் செல்ல முடியாது. அதே போன்று இறுதி யுத்தத்தின் திசைவழியை மாற்றியமைக்கக் கூடிய ஒரேயொரு நாடு இந்தியா மட்டும்தான் என்பதில் ராஜபக்ச தலைமையிலான கொழும்பும் தெளிவாகவே இருந்தது. ‘கோட்டாவின் யுத்தம்’ – என்னும் நூலில் இந்த விடயம் துலக்கமாக விபரிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இந்தியாவின் ஆற்றல் தொடர்பில் கொழும்பிடம் இருந்தது போன்றதொரு தெளிவு தமிழர் பக்கத்தில் இருக்கவில்லை. சிலரிடம் இருந்தது ஆனால் அவர்களது பேச்சுக்கள் தமிழர் சபையேறவில்லை.

TNA-Modi-696x327

இந்தியாவை கையாளுதல் என்னும் தலைப்பில் நீண்டகாலமாகவே நாம் பேசி வருகின்றோம். ஆனாலும் இதில் பெரிய முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. உண்மையில் முன்னேற்றங்களை நோக்கி இந்த விடயத்தை தள்ளுகின்ற ஆற்றலுடன் தமிழ் தலைமைகள் என்போர் செயற்படவில்லை. இதற்கு பல காரணங்கள் உண்டு. ஒன்று, 2009இற்கு பின்னரான அரசியல் சூழலில் புதுடில்லியுடன் நெருங்கிச் செயற்படக் கூடிய ஆளுமையை கூட்டமைப்பு வெளிப்படுத்தவில்லை. இந்தியாவுடனான தொடர்பு என்பதை கூட்டமைப்பு வெறுமனே கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தோடு மட்டுப்படுத்தியிருந்தது. அத்துடன் 2009இற்கு பின்னரான அரசியல் சூழலில், இந்தியாவிடமிருந்து எதை எதிர்பார்க்கின்றோம் என்பதில் கூட்டமைப்பிடம் தெளிவான நிலைப்பாடு இருந்திருக்கவில்லை. இரண்டு, இந்திய வெளிவிவகாரக் கொள்கை தொடர்பில் அபிப்பிராயங்களை உருவாக்கவல்ல சிந்தனைக் கூடங்கள், புத்திஜீவிகள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் தமிழர் தரப்பிற்கு தொடர்புகள் இல்லை. அதனை ஏற்படு;திக் கொள்வதற்கு தமிழர் தரப்பு முயற்சிக்கவும் இல்லை. மூன்று, இந்தியாவின் நலன்கள் தொடர்பான விடயங்களில் தமிழர் தரப்பு எப்போதுமே தங்களை உள்ளடக்குவதில்லை. உதாரணமாக இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது தொடர்பில் பிரதான தமிழ் கட்சிகள் ஒரு வார்த்தையேனும் இதுவரை பேசியதில்லை. இந்தியாவில் தமிழர்கள் வாழ்கின்றனர் எனவே தமிழர்களின் நலன்களில் இந்தியா அக்கறை செலுத்த வேண்டும், என்னும் பார்வையே பெரும்பாலான தமிழ் தரப்புக்களிடம் உண்டு. ஆனால் இந்தியாவில் தமிழ் நாடு ஒரு அங்கம் மட்டுமே!

இந்த விடயங்களில் தமிழர் தரப்புக்கள் தொடர்ந்தும் பின்தங்கியே இருக்கின்றன. இதில் முன்நோக்கி பயணிப்பதற்கான முயற்சிகளிலும் தமிழர் தரப்பு ஈடுபடவில்லை. இது தொடர்பில் ஒரு வித தயக்கமே காணப்படுகின்றது. இந்தியாவுடனான உரையாடல் என்பது இந்திய அரசு தொடர்பானது மட்டுமல்ல. அங்குள்ள புத்திஜீவிகளுடன் பேசுதல், சிந்தனைக் கூடங்களுடன் உரையாடுதல், ஊடங்களுடன் தொடர்புகளை பேணுதல், இந்திய நலனை முன்னிறுத்தி செயலாற்றும் அமைப்புக்களுடன் உரையாடுதல் என – பல மட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டியது. இது தொடர்பில் நான் தொடர்ச்சியாக பேசி வந்திருக்கின்றேன். தமிழ் நாட்டில் தங்கியிருந்து கருத்துருவாக்கங்களில் ஈடுபட்டுவரும் நண்பர் ஒருவரிடம், ஒரு முறை இது பற்றிக் கேட்டேன். பேராசிரியர் சூரிய நாரயணின் பெயரை குறிப்பிட்டு அவரைப் போன்றவர்களுடன் நீங்கள் பேசுவதில்லையா என்று கேட்டேன். அதற்கு அந்த நண்பர் கூறிய பதில் – நான் பேசச் செல்வதில்லை. அதெல்லாம் சிக்கல். இதுதான் தமிழர் தரப்பின் பிரச்சினை – இந்தியாவை எங்களுடைய நலன்களிலிருந்து அணுகவும் வேண்டும் ஆனால் எவருடனும் பேசவும் மாட்டோம். அவ்வாறாயின் தமிழரின் எண்ணங்களை எவ்வாறு இந்தியாவுடன் பகிர்ந்துகொள்வது?

தமிழர் தரப்பு ஒரு விடயத்தை தெளிவாக குறித்துக் கொள்ள வேண்டும். இந்தியாவை நோக்கி நாம்தான் பயணிக்க வேண்டுமேயன்றி இந்தியா நம்மை நோக்கி வராது. பிராந்திய சக்தியான இந்தியா தனது நலன்களை வெற்றி கொள்வதற்கு குறுகிய மற்றும் நீண்டகால இலக்குகளை வரையறை செய்து பயணிக்கும். குறுகிய காலத்தில் எவரை கையாள வேண்டும் – நீண்டகால நோக்கில் எவரை கையாள வேண்டும் என்பதில் அவர்களிடம் ஒரு தெளிவான வரைபடம் இருக்கும். இந்த வரைபடத்தை வெளியிலிருந்து எவரும் மாற்ற முடியாது. ஆனால் அந்த வரைபடத்தை நாம் தெளிவாக புரிந்து கொண்டால், அதில் நமக்கு சாதகமாக இருக்கக் கூடிய விடயங்களின் ஊடாக இந்தியாவை நெருங்கலாம். இந்தியாவை எதிர்த்து பேசுவதால் இந்தியாவிற்கு எந்தவொரு தீமையும் இல்லை – மாறாக அது தமிழர்களுக்கே தீங்கை கொண்டுவரும். இந்தப் பிராந்தியத்தை பொருத்தவரையில், உலகளவில் இந்தியாவின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கப் போகின்றது. குறிப்பாக கொரோனாவிற்கு பின்னரான உலக அரசியல் போக்கில் சீனாவிற்கு எதிரான சிந்தனை வலுவடைந்து வருகின்றது. இதன் காரணமாக, இந்தியாவை நோக்கி அனைவரது பார்வையும் திரும்பலாம். இதனால் இந்தியாவின் பிராந்திய முக்கியத்துவம் மேலும் வலுவடையும். இவ்வாறானதொரு சூழலில் தமிழர் தரப்புக்கள் இந்தியாவின் நலன்களை விளங்கிக் கொண்டு பயணிக்கும் பொறிமுறை ஒன்றை கண்டுபிடிக்க வேண்டியது கட்டாயமான ஒன்று.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *