Search
Thursday 24 May 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இரண்டு வருட பூர்த்தியில் ஜனாதிபதி மைத்திரி: வன்னி மக்கள் என்ன சொல்கிறார்கள்…!

இரண்டு வருட பூர்த்தியில் ஜனாதிபதி மைத்திரி: வன்னி மக்கள் என்ன சொல்கிறார்கள்…!

-கே.வாசு-

இலங்கை அரசியல் வரலாற்றில் 2015 ஆம் ஆண்டு முக்கியமானதொரு ஆண்டாக விளங்கியது. போர் வெற்றிவாதத்தில் மிதந்த மஹிந்த ராஜபக்சவின் குடும்ப அரசியலுக்கு முற்றுபுள்ளி வைத்து பொது அமைப்புக்கள், இந்த நாட்டின் சிறுப்பான்மை இனமான தமிழ், முஸ்லிம் மக்களின் பேராதரவுடன் மைத்திரிபால சிறிசேன பலத்த எதிர்பார்ப்புக்களுடன் ஜனாதிபதியாக பதவியேற்றார். 2015 ஜனவரி 08 ஆம் திகதி இடம்பெற்ற இந்த நிகழ்வைத் தொடர்ந்து அதே வருடம் பாராளுன்றத் தேர்தல் இடம்பெற்று தற்போதைய நலலாட்சி அரசாங்கம் எனக் கூறப்படும் தேசிய அரசாங்கம் உருவானதுடன் 37 வருடங்களுக்கு பின்னர் தமிழர் ஒருவர் எதிர்கட்சித் தலைவராகவும் பதவியேற்றிருந்தார். இந்நிலையில் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று  இரண்டு வருடங்கள் முடிவடைந்து விட்டது. இதனை முன்னிட்டு விசேட பூஜைகள், விசேட நிகழ்வுகள், நல்லிணக்க வாரம் என்றெல்லாம் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த இரண்டு வருடம் தொடர்பில் வன்னி மக்களின் மனங்களில் உளள கருத்துக்களே இவை…

ஐங்கரமுத்து யோகநாதன்ஐ.யோகநாதன், தவசிகுளம், வவுனியா

வாழ்க்கை ஒரு வட்டம் அதற்கு எம்மினமும் விதிவிலக்கல்ல. ஆனால் தமிழர் வாழ்வில் மட்டுமே தொடர் சோகம், தொடர் சோதனை கடந்த கால கசப்புணர்வுகள் எம்மை விட்டுவைக்கவில்லை. காலம் எத்தனை சென்றாலும் எம்மினம் பட்ட சொல்லெண்ணா துயரினை வார்த்தைகளால் விபரிக்க முடியாது. காலம் காலமாக நாம் ஏமாற்றப்பட்ட ஒரு இனம். தோல்வி ஒன்றும் புதிதல்ல. பல தோல்விகளை கடந்து வந்தது எம்மினம். அந்த சோகங்களில் இருந்து விடுபட்டு ஒரு நிரந்தர தீர்வுக்காய் நாங்கள் வாக்களித்து உருவாகியது நல்லாட்சி என்கின்ற இந்த அரசாங்கம். நல்லாட்சி என்பது வார்த்தையின் வடிவம் மட்டுமே. அதற்கு இன்னும் செயல் வடிவம் கொடுக்கப்படவில்லை. 30வருட அகிம்சை என்ற வகையில் சாத்வீக போராட்டம் 30 வருடம் ஆயுத போராட்டம் இரண்டுமே மௌனித்து போன இன்றைய காலகட்டத்தில் நல்லாட்சி என நாக்கு கூசாமல் சொல்வதே தவறு. தமிழர்கள் மொழியால் ஒன்று பட்டாலும் எம்மிடையே பல முரண்பாடுகள் இன்றும் தலைவிரித்து ஆடுவதனை நாம் கண்கூடாக காணலாம். இருந்தும் சிங்கள பேரினவாதிகளினை பொருத்தவரையில் அவர்கள் கருத்தால் சிறு மாற்றம் கொண்டிருந்தாலும் பௌத்தம், பேரினவாதம் ஆகிய இரண்டு விடயங்களில் ஒன்று பட்டவர்களாகவே காணப்படுகிறார்கள். அதற்கு தற்போதைய ஜனாதிபதி கூட விதிவிலக்கல்ல. இதுவே அவர்களின் பலமும் வெற்றியுமாகும். இப்போது உள்ள நல்லாட்சியிலும் இதுவே தலைவிரித்தாடுவதினை காணலாம். கடந்த கொடுங்கோல் ஆட்சியிலும் சரி, இப்போதும் சரி தமிழர்களுக்கான தீர்வு எட்டாக்கனியே. ஒன்று மோதகம் மற்றொன்று கொழுக்கட்டை. இங்கே இரண்டினுடைய வடிவம் மட்டுமே மாற்றம். உள்ளீடு ஒன்றுதான். இருந்தும் மாற்றம் என்கிற சொல் மட்டுமே உலகில் மாறாதது. இதனை எம் தலைமைகளும் நம்பியிருப்பது வேடிக்கை. தமிழர்களுக்கான தீர்வு என்பதில் இந்த அரசும் தவறிழைத்து வருகிறது. நல்லாட்சி அரசின் ஜனாதிபதி மைத்திரிபால அவர்களும் ஆட்சி பீடமேறி இரண்டு வருடமாகிவிட்டது. இரண்டு வருடங்களில் கண்துடைப்பு நாடகங்கள் நடந்தேறியுள்ளதே தவிர, தமிழர்களின் அடிப்படை தேவையின் ஆரம்ப கட்டமே இன்னும் நிறைவடையவில்லை. மைத்திரிபால சிறிசேன வந்து இரண்டு வருடத்தை கொண்டாடினாலும் கூட தமிழ் மக்கள் வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட்டதாக இல்லை. தமிழ் கைதிகளின் விடுதலையும் கானல் நீரே. தமிழனை இனி ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்.

என்.ரஜீபன்ந.ரஜீபன், தனியார் கல்வி நிலைய ஆசிரியர், வவுனியா

2015 ஜனவரி 08 ஆம் திகதி இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நாள். தற்போது இரண்டு வருடம் கடந்து விட்டது. பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் தான் இந்த ஜனாதிபதியைக் கொண்டு வருவதற்கு பலரும் வாக்களித்திருந்தார்கள். ஆனால் பழைய குருடி கதவைத் திறவடி என்ற நிலை தான் தற்போதும் உள்ளது. இந்த .ரண்டு வருடத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இராணுவத்தால் அபகரிக்கபபட்ட மக்களது காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வில்லை. இன்றும் தமிழ் மக்கள் முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை. அவர்களது குடும்பங்கள் நாளாந்தம் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கின்றன. தீர்வுத் திட்டம் பற்றி அவர் பேசுகிறார். ஆனால் அதற்கான ஒரு நல்லெண்ண வெளிப்பாடாக செய்ய வேண்டிய விடயங்களையே அவர் செய்யவில்லை. ஆக, அவரது ஆட்சிக்கு பின்னர் ஒரு அச்சமற்ற சூழல் உருவாகியிருக்கிறது. மாவீரர் நாளை கொண்டாட முடிந்திருக்கிறது. ஆனால் அதற்கு பின்னால் கூட ஒரு அரசியல் இருக்கிறது. ஓரளவு கருத்துச் சுதந்திரம் கிடைத்திருக்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசின் பங்காளி ஆகி எதிர்கட்சி பதவியைப் பெற்றிருக்கிறது. இதை விட என்ன கிடைத்திருக்கிறது. இவற்றை பார்க்கின்ற போது இந்த ஜனாதிபதியின் மனதில் கூட இன்னும் தமிழ் தேசிய இனம் தொடர்பான மாறுதல்கள் ஏற்படவில்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது. அப்படியான நிலையில் இரண்டு வருடமல்ல மூன்று வருடம் கடந்தும் என்ன தான் நடக்கப்போகிறது.

புவனேஸ்வரன் தர்சிகன்பு.தர்சிகன், ஊடகத்துறை மாணவன், குட்செட் வீதி, வவுனியா

நல்லாட்சி அரசாங்கம் எனும் பெயரில் தமிழ் மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு 08.01.2015இல் ஆட்சிக்கு வந்த மைத்திரி அரசு இன்றுடன் தனது இரண்டு வருட கால ஆட்சியை பூர்த்தி செய்துள்ள போதும். 
தமிழர்களின் எதிர்பார்ப்புக்கள் எதையும் இன்றுவரை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்பதே உண்மை. கடந்த கால யுத்த குற்ற விசாரனைகள், 
காணிப்பிரச்சினைகள், 
காணாமல் ஆக்கப்பட்டோர், 
தமிழரின் உாிமைப்பிரச்சினைகள், 
தீர்வு போன்ற விடயங்களில் இந்த அரசும் பெரிதும் அக்கறை காட்டாமை இந்த அரசின் மீதான மக்களின் நம்பிக்கையை தகர்த்து வருகின்றது என்பதே நிதர்சனம். 
ஆனாலும் கடந்த கால அரசுகளை விட நல்லாட்சி அரசில் மக்கள் சுதந்திரமாக செயற்பட கூடிய நிலை காணப்படுவதை மறுத்துவிட முடியாது. உதாரணமாக கடந்த வருட மாவீரர் தினம், தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் என்பவற்றை குறிப்பிடலாம். அத்தோடு பேச்சு சுதந்திரம், ஊடக சுதந்திரம் என்பனவும் நல்லாட்சி அரசில் சற்றே கிடைத்துள்ளமை பெரிய விடயமே.
அதுமட்டுமன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பூரண ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசினை பயன்படுத்தி கூட்டமைப்பினர் தமிழரின் உரிமைப்பிரச்சினையில் தமிழா்கள் விரும்பும், அவர்கள் ஏற்ககூடிய ஒரு தீர்வினை கொண்டுவருவார்கள் என்ற தமிழ் மக்களின் நம்பிக்கையும் குறைந்தவண்னம் இருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது. 
இந்த நல்லாட்சி அரசு மாறுவதற்கு மூன்று வருட காலமே உள்ள நிலையில் இந்த இரண்டு வருடங்களில் ஏற்படாத மாற்றங்கள் இனி ஏற்படுமா என்பது கேள்விக்குறியே.

ஜெயசீலன்எம்.ஜெயசீலன், ஆசிரியா, சாந்தசோலை, வவுனியா

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு வருடம் பூர்த்தியாகிவிட்டது. ஆனால் மக்களது வாழ்வில் தான் இன்னும் விடிவு வரவில்லை. ஜனாதிபதியாக குறைந்த செலவில் சிக்கனமாக பதவியேற்றார். ஆனால் இன்று சிக்கனமாக கூட மக்கள் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மக்களுக்கு சலுகைகள், விலைக் குறைப்புக்கள் எனக் கூறி முன்னர் இருந்ததை விட எல்லாப் பொருட்களின் விலைகளும் அதிகரித்து விட்டது. சாதாரண லொத்தர் டிக்கற் தொடக்கம் அரிசி, மா, சீனி என எல்லாப் பொருட்களுமே நாளாந்தம் விலை அதிகரித்த வண்ணமே உள்ளது. நாளாந்த கூலி வேலை செய்து வாழ்கின்ற மக்கள் இந்த அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைக்கு வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுகிறார்கள். நாட்டில் அபிவிருத்தி என்று பார்க்கின்ற போது கூட ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன வந்த பின் பெரியவில் மாற்றம் நடந்ததாக தெரியவில்லை. முன்னைய ஆட்சியில் அதிக அபிவிருத்திகள் நடந்திருக்கின்றன. ஆனால் தற்போது அதை பாதுகாக்க கூட முடியாத நிலையே உள்ளது. ஊழல் விசாரணைகள் என தினமும் வாக்குமூலம் பெறும் நடவடிக்கைகள் தொடர்கிறது. தீர்வுகளை காணவில்லை. குமரபுரம் படுகொலை, பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை வழக்கு என சில தீர்ப்புக்கள் கூட கடந்த கால ஆட்சியையே ஞாபகப்படுத்துகின்றது. பௌத்த கடும்போக்கு வாதம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. அதனை கட்டுப்படுத்த முயல்வதாக தெரியவில்லை. எம்மை பொறுத்தவரை நாம் எதிர்பார்த்தது போன்று எந்த மாற்றமும் இந்த இரண்டு வருடத்தில் ஏற்பட்டதாக தெரியவில்லை.

எஸ்.கண்ணன்எஸ்.கண்ணன், சிகை அலங்கரிப்பு நிலைய உரிமையாளர், வைரவபுளியங்குளம், வவுனியா

இரண்டு வருடம் வழமை போலவே போய்விட்டது. முன்னைய அரசாங்கத்தில் இருந்த பிரச்சனைகள் தற்போதும் தொடர்கிறது. காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. இராணுவம் சிகை அலங்கரிப்பு நிலையம், உணவகங்கள், வர்த்தக நிலையங்கள் என்பவற்றை நடத்தி மக்கள் தொழில் செய்ய முடியாத படி தொழில் நடவடிக்கைனளில் தலையிடுகிறது. மறுபக்கம் நாம் வாழ முடியாதபடி பொருட்களின் விலையேற்றம். இப்படி நெருக்கடியான நிலையில் நாம் இருக்கின்றோம். அரசியல தீர்வு விடயத்தில் கூட இந்த ஜனாதிபதியும் இந்த இரண்டு வருடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக செயற்பட்டதாக தெரியவில்லை. அவர் தென்னிலங்கையை திருப்திப்படுத்த முயல்கின்ற தன்மையையே அவதானிக்க முடிகிறது. மஹிந்தா காலப் பகுதியில் அட்டகாசம் செய்த பொதுபலசேனா தற்போதும் அட்டகாசம் செய்கிறது. மதவாதம், இனவாதம் தற்போதும் தொடரும் நிலையில் என்ன மாற்றம், நன்மை கிடைத்து என நாம் கூற முடியும்.

சந்திரகுமார்செ.சந்திரகுமார், வரியிறுப்பாளர் சங்கத் தலைவர், வவுனியா

மாற்றம் என்று சொல்லக் கூடிய எதுவுமே இல்லை. காணாமல் போனோர் தொடர்பான பதில்கள் எதுவுமில்லை. தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. அபிவிருத்தி கூட முன்னர் நடந்தது போன்று நடைபெறவில்லை. குறிப்பாக வவுனியா பொருளாதார மத்திய நிலையம், பொருத்து வீட்டுப் பிரச்சனை என்பவறறை கூட மக்களுடனும், மக்கள் பிரதிநிதிகளுடனும் பேசி ஒரு முடிவை எடுக்க முடியாமல் தானே இருக்கிறார்கள். மக்களை போட்டு குழப்புகிறார்களே தவிர எந்த நன்மையும் நடப்பதாக தெரியவில்லை. தீர்வு விடயத்தில் கூட அரசாங்கம் சமஸ்டி இல்லை, வடக்கு கிழக்கு இணைப்பு இல்லை, பௌத்திற்கு முன்னுரிமை எனக் கூறிவிட்டது. ஆனால் கூட்டமைப்பு சமஸ்டி தான் நாங்கள் கோருவோம் என்கிறது. இரண்டு தரப்பிடமும் தீர்வு பற்றி தெளிவான நிலைப்பாடு இல்லை என்றே தோன்றுகின்றது. இந்த இரண்டு வருடம் கூட பெரியளவில் தமிழ் மக்களைப் பொறுத்தவரை நன்மைகள் கிடைத்ததாக தெரியவில்லை. நல்லாட்சி என நாங்கள் கொண்டு வந்த இந்த ஆட்சியிலும் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. ஜனாதிபதி எஞ்சிய தனது மூன்று வருட ஆட்சியில் ஆவது இவை தொடர்பில் கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு ஒரு தீர்வைத் தருவாரா என்ற ஏக்கம் எமது மக்கள் மனங்களில் தொடர்கிறது.

ஆக, ஜனாதிபதி பதவியேற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் தமிழ் மக்களின் மனங்களில் உள்ள சோகங்களும், துன்பங்களும் இன்றும் தொடர்வதாகவே அவர்கள் உணர்கிறார்கள். சில சிறிய சிறிய மாற்றங்கள் இருந்த போதும் மக்கள் மனங்களில் புதிய ஜனாதிபதி தொடர்பில் மாற்றம் ஏற்படவில்லை என்பதே வன்னியில் நிலை.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *