Search
Wednesday 3 June 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இருபிரதான கட்சிகளும் புதிய அரசியல் யாப்பும்

இருபிரதான கட்சிகளும் புதிய அரசியல் யாப்பும்

அ.நிக்ஸன்
புதிய அரசியல் யாப்புத் தொடர்பாக இரண்டு பிரதான கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை ஏற்படாத நிலையில் அது எவ்வாறு நிறைவேற்றப்படப்போகின்றது என்பதுதான் அனைத்து தரப்பினரின் கேள்வியும். குறிப்பாக இனப்பிரச்சினை தீர்வு குறித்த விடயம் இன்னமும் யாப்பில் முழுமையாக சேர்க்கப்படாத நிலையில் தமது நலன்சார்ந்த விடயங்களில் மாத்திரம் முரண்படும் இரண்டு பிரதான கட்சிகள் எந்த அடிப்படையில் இந்த யாப்பை நிறைவேற்ற முடியும் என்ற சந்தேகங்கள் விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

மூன்று விடயங்கள்
மூன்று விடயங்களை நோக்க வேண்டும். ஒன்று யுத்தம் அழிக்கப்பட்ட பின்னர் எட்டு ஆண்டுகள் சென்ற நிலையிலும் இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற சிந்தனை ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற இரு பிரதான அணிகளிடமும் இருப்பதாகக் கூற முடியாது. இரண்டாவது ஒற்றையாட்சியை தக்கவைப்திலும் பௌத்த சமயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலும் இரு கட்சிகளும் ஏட்டிக்குப்போட்டியாக செயற்படுகின்றன. இதனை முரண்பாட்டில் உடன்பாடு என்றுகூட சொல்லாம்.

மூன்றாவது சர்வதேச நாடுகளின் அழுத்தங்களை குறைத்துக்கொள்ளல் குறிப்பாக இனப்பிரச்சினை தீர்வில் சர்வதேச நாடுகளின் ஆலோசணைகளை தவிர்ப்பதுடன் ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானங்களில் இருந்து தப்பிப்பது என்ற விடயத்திலும் இந்த இரு கட்சிகளும் ஒருபுள்ளியில் நிற்கின்றன. இந்த மூன்று காரணங்களையும் தவிர தமது கட்சி நலன்சார்ந்த விடயங்களில் இரு கட்சிகளும் முரண்படும் நிலையும் சில விடயங்களில் இணங்கிச் செல்லும் பண்பையும் பின்பற்றி வருகின்றன.

Maithri-and-Ranil-720x480-720x480

இடதுசாரிகளின் நிலை
ஆகவே இவ்வாறானதொரு சூழலில்தான் புதிய அரசியல் யாப்புத் தொடர்பான வேலைத் திட்டங்கள் நடைபெறுகின்றன. அதேவேளை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகளும் அவ்வாறான பண்புகளுடன் செயற்படுகின்றன. அந்த இடதுசாரி கட்சிகளைப் பொறுத்தவரை ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்பட்டு முடிந்தவரை தம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது அவர்களின் பிரதான நோக்கம்.

எனவே பிரதான இரு கட்சிகளும் எவ்வாறான போக்கை பின்பற்றுகின்றதோ அந்த நிலைப்பாட்டை அந்தக் கட்சிகளும் எடுத்துக் கொள்கின்றன. ஆனாலும் அவர்கள் தம்மை இடதுசாரி கட்சிகள் என்றே கூறிக் கொள்வார்கள். இதுதான் வேடிக்கை. பௌத்த சமயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என இடதுசாரி என கூறிக் கொள்ளும் முன்னாள் தினேஸ்குணர்த்தன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நாடாளுமன்றத்தில் முரண்பட்டுள்ளார். மாக்சிய கட்சி என்று அடையாளப்படுத்தும் ஜே.வி.பியும் பௌத்த சமயத்துக்கான அந்தஸ்த்தை பெற்றுக் கொடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

அழுத்தம் கொடுக்க முடியாத நிலைமை
நாடாளுமன்றத்திற்கு வெளியேயுள்ள இடதுசாரி கட்சிகள் இனப்பிரச்சினை விவகாரம் பற்றி பேசினாலும் தீர்வு எவ்வாறு அமைய வேண்டும் என்பதில் தெளிவற்றநிலையில் உள்ளன. குறைந்தபட்சம் வடக்கு கிழக்கு இணைப்பு என்பதைக்கூட அடித்துக் கூறுவதில் அவர்களிடையே முரண்பட்ட நிலை உண்டு. சில இடதுசாரிகட்சிகள் இனப்பிரச்சினை விடயத்தில் தெளிவான நிலைப்பாட்டுடன் இருந்தாலும் புதிய யாப்பு விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டை அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ள வைப்பதற்கான சக்தியை பெற்றிருக்கவில்லை.

சிங்கள முற்போக்குவாதிகள் சிலர் அவ்வாறான இடதுசாரி கட்சிகளுடன் சேர்ந்து செயற்பட்டாலும் அவர்களால் அரசாங்கத்தை வெளிப்படையாக விமர்சிக்க மாத்திரமே முடியும். ஆகவே இவ்வாறானதொரு அரசியல் சூழலில் புதிய அரசியல் யாப்புத் தொடர்பாக நல்ல மாற்றங்களை எதிர்ப்பார்க்க முடியாது என்பது கண்கூடு. இந்த நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பல விடயங்களை வெளிப்படையாக பேச வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளது.

maxresdefault

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலை
குறிப்பாக தென்பகுதி இடதுசாரி கட்சிகளையும் இணைத்துக் கொண்ட அரசியல் செயற்பாட்டு முறை ஒன்றை கூட்டமைப்பு அறிமுகப்படுத்த வேண்டும். இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் தம்மிடையே முரண்பட்டாலும் இனப்பிரச்சினை விவகாரத்தில் ஒரே நிலைப்பாட்டில் இருக்கின்றன என்பது குறித்து இந்த பத்தியில் பல தடவை சொல்லப்பட்டிருக்கின்றது. மேற்படி இரு பிரதான கட்சிகளின் உடன்பாடு பற்றி வேறுபல விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இனிமேலும் காலம் தாழ்த்தாமல் இடதுசாரிகள் மற்றும் ஏனைய சிறிய அரசியல் கட்சிகள் அனைத்தையும் இணைத்து அரசியலில் ஈடுபடுட வேண்டிய காலகட்டமிது.

ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் நின்று கொண்டு தமிழர்களின் பிரச்சினை பற்றி பேசும் பழக்கத்தை தமிழரசுக் கட்சி சில காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும். மகாநாக்க தேரர்களின் ஒற்றைத்தனமான கருத்தின் பின்னரும் கூட தமிழரசுக் கட்சி மௌனமாக இருக்க முடியாது என மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். நான்குபேர் சொல்வதை கேட்பது என்றால் நாடாளுமன்றம் எதற்கு என சட்டத்தரணி சுமந்திரன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெளிப்படையான செயற்பாடுகள் அவசியம்
அவரது பேச்சு மகாநாயக்க தேரர்களை நேரடியாகவே சாடியுள்ளது. ஆகவே தமிழரசுக் கட்சி முதலில் ஏனைய கட்சிகளை உள்ளடக்கிய தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் இந்த விடயம் தொடர்பாக வெளிப்படையாக பேசி தென்பகுதியில் இருக்கின்ற சிங்கள இடதுசாரி கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து அரசியல் உரிமைக் கோசங்களை எழுப்ப வேண்டும். ஜனநாயக வழிTNA-456serயில் போராடுவதை யாரும் தடுக்க முடியாது. ஆயுதப் போராட்டம் ஒன்றை நடத்திய சமூகம் ஜனநாயக வழியில் போராட முடியும் என பேராசிரியர் உயங்கொடதேவா தனது கட்டுரை ஒன்றில் கூறியிருந்தார்.

13 ஆவது திருத்தச்சட்டத்தை அப்படியே புதிய அரசியல் யாப்பில் சேர்க்கும் திட்டமும் மேலதிகமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டை இன்னும் இறுக்கும் புதிய யோசனைகளும் புதிய யாப்பில் இருப்பதாக மூத்த அமைச்சர் ஒருவர் நெருக்கமான செய்தியாளர் ஒருவரிடம் கூறியுள்ளார். ஆகவே அதிகாரப்பரவாலாக்கம் என்பதை விட அதிகாரப்பகிர்வு என்ற விடயத்தை ஜனநாயக வழியில் அடித்துச் சொல்ல வேண்டிய காலம் இது என்பதை தமிழ்த் தலைமைகள் மறந்துவிட முடியாது. தமிழ்த்தேசிய மக்கள் முன்ணி, தமிழ் மக்கள் பேரவை மற்றும் சிவில் அமைப்புகளும் இந்தப் பொறுப்பை சுமக்க வேண்டும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *