Search
Wednesday 23 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இறுதி போர் நடந்த இடம் தற்போது எப்படி உள்ளது: நவீன கலிங்கத்தின் சாட்சியாக முள்ளியவாய்கால்!

இறுதி போர் நடந்த இடம் தற்போது எப்படி உள்ளது: நவீன கலிங்கத்தின் சாட்சியாக முள்ளியவாய்கால்!

நேரடி ரிப்போட்

-கே.வசந்தன்-

2009 மே 18 என்பது மானுடத்தை நேசிக்கும் எந்தவொருவராலும் மறக்க முடியாத நாள். அந்த வடுக்களை யாராலும் எப்பொழுதும் மறைக்கவும் முடியாது. 30 வருட ஆயுத வழியிலான உரிமைப் போராட்டத்தை நிர்மூலமாக்கி தமிழ் மக்களின் மண்ணில் பாரிய இனப்படுகொலை நடந்தேறிய நாள். இன்று அந்த இனப்படுகொலை நடந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், போரின் அவலத்தையும், அந்த நேரத்தில் மக்களின் துயரங்களையும், பரபரப்பையும் சுமந்து நவீன கலிங்கமாக இன்னமும் காட்சியளிக்கிறது முள்ளியவாய்கால் மண்.

IMG_0475Aஇறுதி யுத்தம் நடந்த பகுதியே கரைத்துறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முள்ளியவாய்கால். இங்கு தான் தமிழ் மக்கள் கொத்து கொத்தாக மரணித்து அந்த மண்ணுக்கு உரமாகிய இடம். பலர் காணாமல் போனதும், பல குடும்பங்கள் தமது உறவுகளை இழந்ததும், பலர் தமது உடல் அபயங்களை இழந்ததும், சிறுக சிறுக சேர்த்த சொத்துக்களை இழந்ததும் இந்த மண்ணில் தான். இன்று 9 ஆண்டை நோக்கி நகரும் நிலையிலும் மனிதகுலம் சந்திக்க கூடாத அனைத்து அவலங்களையும் சுமந்தவாறு அந்த மண் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது. அங்கு மீள்குடியேறிய மக்களும் அமைதியாகவே அடிப்படை வசதிகளற்ற நிலையில், போரின் சாட்சிகளாக நடைபிணங்களாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

IMG_0503Aஇறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளியவாய்கால் கிழக்கு பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கையும் சோகம் நிறைந்தது. முல்லைத்தீவு மாவட்டம் பேரழிவைச் சந்தித்து இது முதல் முறையல்ல. அதற்கு முன்னரும் 2004 ஆம் ஆண்டு இந்த நாட்டில் ஏற்பட்ட சுனாமி அனர்த்ததால் மிகவும் மோசமாக பாதிப்படைந்த இடங்களில் ஒன்றே முல்லைத்தீவு. இதன்போது வெகுவாக பாதிப்படைந்த, இழப்புக்களை சந்தித்த செல்வபுரம், வண்ணாங்குளம், மணற்குடியிருப்பு போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்களை 2005 ஆம் ஆண்டு குடியேற்றிய இடமே முள்ளியவாய்கால் கிழக்கு பகுதி.

IMG_0545Aஅவர்கள் மீள்குடியேறி தமது வாழ்வை கட்டியெழுப்ப முன்னர் மீண்டும் ஒரு இடப்பெயர்வைச் 2009 இல் சந்திக்க நேரிட்டது. இதன்போது அவர்கள் மட்டுமல்ல, வன்னி மண்ணில் வாழ்ந்த அத்தனை மக்களும் வந்து தங்கியிருந்த இடமாகவும் இது விளங்கியது. இன்று முள்ளியவாய்கால் கிழக்கு பகுதியில் வட்டுவாகல் உள்ளடங்கலாக 464 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். யுத்தம் முடிவடைந்த பின்பு இம் மக்கள் 2012 ஆம் ஆண்டு மீள்குடியேற்றப்பட்டனர். ஆனாலும் அந்த மக்களுக்கான அடிப்படை வசதிகளான போக்குவரத்து, வீட்டுத்திட்டம், குடிநீர் என்பன முழுமை பெறாத நிலையில் இம்மக்கள் தமது வாழ்நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். இம் மக்களின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் கடல் வளம் கூட தென்னிலங்கை மீனவர்களால் அரச இயந்திரங்களின் ஆதரவுடன் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

IMG_0555Aயுத்தம் நடைபெற்ற போது மக்கள் அமைத்த பதுங்குழிகள் குண்டுமழைகளால் மூடப்பட்ட நிலையிலும், அதனுள் மக்களின் உடைமைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் இன்றும் காட்சியளிக்கின்றது. மக்களது உடைகள், அவர்கள் பயன்படுத்திய பாத்திரங்கள் என பரவலாக காணப்படுவதுடன் சிறுவர்களது விளையாட்டுப் பொருட்கள் கூட சேதமடைந்த நிலையில் அந்த மண்ணில் போரின் சாட்சியாகவுள்ளது. பரவலாக காணப்படும் காயமடைந்த மக்களுக்கு ஏற்றப்பட்ட மருந்துக் குவளைகள், மருத்துவப் பொருட்கள் என்பன அந்த மண்ணில் இடம்பெற்ற உயிரிழப்புக்களை வெளிப்படுத்துகின்றது.

IMG_0599Aவிடுதலைப்புலிகளால் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ரவைகள் வெடித்த நிலையிலும், வெடிக்காத நிலையிலும் மக்கள் குடிமனைகளை அண்டியதாக இன்றும் காணப்படுகின்றது. இரத்தம் தோய்ந்த ஆடைகள் இனப்படுகொலைக்கான சாட்சியாக அந்த மண்ணில் உள்ளது. அந்த பகுதியில் மூடப்பட்ட பதுங்கு குழிகளையும், மண்களையும் அகற்றுகின்ற போது எலும்புக் கூடுகளும் வெளிப்படுகின்றன.

IMG_0587Aமுள்ளியவாய்கால் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் இறந்த அப்பகுதி மக்களை நினைவு படுத்தும் முகமாக 500 பேரின் நினைவுக் கற்கள் நடுகை செய்வதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட கடற்படைக் கலங்களை காட்சிப்படுத்தி அவர்களின் பொறியியல் திறமையை வெளிப்படுத்திக் காட்டிக் கொண்டிருக்கிறது இராணுவம். இந்த மண்ணில் காணும் மக்கள் ஒவ்வொருவரினதும் முகத்திலும், மனதிலும் கணதியையே காணமுடிகிறது. உணர்வு பூர்வமாக அனைவரும் நினைவுகூர வேண்டிய அந்த நாளுக்காக தமிழர் தேசம் தயாராகி வருகிறது.

IMG_0635Aஇறுதிப் போர் நடைபெற்ற முள்ளியவாய்கால் கிழக்கு பகுதியில் எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளியவாய்கால் நினைவேந்தலை செய்வதற்காக வடமாகாண சபை அவசர அவசரமாக ஏற்பாடுகளை செய்து வருகிறது. வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் அப்பகுதி மக்களுடன் இணைந்து அந்த ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார். மே மாதம் 12 தொடக்கம் 18 வரை முள்ளியவாய்கால் வாரமாக அறிவிக்கப்பட்டு படுகொலைகள் இடம்பெற்ற செம்மணி மண்ணில் நினைவு நாள் நிகழ்வுகள் மாகாண சபை உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், ஆ.பரஞ்சோதி, க.விந்தன் மற்றும் வடமாகாண எதிர்க் கட்சி தலைவர் தவராசா ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

IMG_0642Aஇவைகள் அனைத்தும் புதிய கலிங்கத்தை நினைவூட்டுகின்றது. அன்றைய அசோகச் சங்க்கரவர்த்தியின் மனமாற்றத்திற்கும், ஆசைகளை துறந்து பௌத்தத்தை தழுவதற்கும், அந்த பௌத்தத்தை இலங்கைக்கு பரப்புவதற்கும் காரணமாக அமைந்தது கலிங்கத்துப் போர். இந்த நிலையில் முள்ளியவாய்கால் அவலம் இன்றைக்கும் அந்த பௌத்தத்தை தழுவிக் கொண்டவர்களின் மனச்சாட்சியை உறுத்தவில்லை அல்லது தட்டியெழுப்பவில்லை என்பதை நினைக்கும் போது இங்குள்ள பௌத்தம் தரம் தாழ்ந்து விட்டதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

IMG_5862

N5


One thought on “இறுதி போர் நடந்த இடம் தற்போது எப்படி உள்ளது: நவீன கலிங்கத்தின் சாட்சியாக முள்ளியவாய்கால்!

  1. kaneshanElankumaran

    உண்மைதான்சகோ!நடந்நவைஎல்லாவற்றிற்கும்ஒருதீர்வினைக்காணவேண்டும்

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *