Search
Thursday 26 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கையில் ISIS தாக்குதலும் பின்னணியும்

இலங்கையில் ISIS தாக்குதலும் பின்னணியும்

யதீந்திரா
கடந்த 21.04.2019 அன்று, கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உல்லாச விடுதிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்கள் இலங்கையின் அரசியல் வரைபடத்தை முற்றிலுமாக மாற்றியிருக்கிறது. இந்தியாவின் உடனடி அயல்நாடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் என்னும் வகையில் மேற்படி பயங்கரவாத தாக்குதல்கள் இந்தியாவின் பாதுகாப்பிலும் பெருமளவு தாக்கம் செலுத்தவல்லது, குறிப்பாக தென்னிந்தியாவின் பாதுகாப்பில் உடனடித் தாக்கம் செலுத்தவல்லது. இதுவரை வெளியான தகவல்களின்படி இலங்கையை தளமாகக் கொண்டு இயங்கிவரும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் ((National Thowheed Jamath (NTJ) என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்களே மேற்படி தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர். இத்தாக்குதல் இடம்பெற்ற உடனேயே, இதற்கு பின்னால் உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாத வலையமைப்பு ஒன்று நிச்சயம் இருக்க வேண்டும் என்னும் சந்தேகம் நிலவியது. எனெனில் இவ்வாறானதொரு தாக்குதலை ஒரு உள்ளுர் அமைப்பால் தனித்து முன்னெடுக்க முடியாது. தற்போது அந்த சந்தேகத்தை குறித்த அமைப்பே நிவர்த்திசெய்திருக்கிறது. இலங்கையில் கிறிஸ்த்தவர்கள் மற்றும் வெளிநாட்டு உல்லாசப்பயணிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தாமே மேற்கொண்டதாக ISIS என்று அறியப்படும் இஸ்லாமிய அரசு (Islamic State (IS) என்னும் சர்வதேச பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியிருக்கிறது.

தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்னும் அமைப்பு இலங்கையில் அதிகம் அறியப்பட்ட ஒரு அமைப்பல்ல ஆனால் குறித்த அமைப்பு, சில வருடங்களாகவே மிகவும் வெளிப்படையாகவே இயங்கிவந்திருக்கிறது. சில தகவல்களின்படி குறித்த அமைப்பு 2014இலிருந்து கிழக்கு மாகணத்தில் முஸ்லிம்கள் செறிவாக வாழும் காத்தான் குடியை தளமாகக் கொண்டு இயங்கிவருவதாக அறியமுடிகிறது. ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் என்னும் இஸ்லாமிய மதக் கோட்பாட்டின் ஆரம்பம் தமிழ் நாடு ஆகும். தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ((Tamil Nadu Thowheed Jamath (TNTJ) என்னும் அமைப்பு, மௌலவி பி.ஜெயினுல் ஆப்டின் (Moulvi P Jainul Abideen) என்பவரால் 2004இல் நிறுவப்பட்டது. இவர், 2015இல் இலங்கை தஹ்வீத் ஜமாஅத்தினால் (Sri Lankan Thowheed Jamath (SlTJ)  இலங்கைக்கு அழைக்கப்பட்டிருந்தார். இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பை வெளியிட்டு வைப்பதற்காகவே இவர் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அகில இலங்கை ஜமியத்துள் உலமா (All Ceylon Jamiyathul Ulem) ஆப்டின் நாட்டுக்குள் நுழைவதை தடுக்குமாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சு அவருக்கான நுழைவு அனுமதியை நிராகரித்தது. அப்போது இதனை எதிர்த்து இலங்கை தஹ்வீத் ஜமாத்அத்தினர் அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றையும் தாக்கல் செய்திருந்தனர். அதே வேளை ஜமியத்துள் உலமாவை பகிரங்க விவாதமொன்றிற்கு வருமாறும் அழைப்பு விடுத்தனர். ஆனால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் ஜெயினூல்டின் வன்முறைக்கு ஆதரவான நபரல்ல. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டும் என்னும் நிலைப்பாட்டை கொண்டவர். இவரது கருத்தியல் செல்வாக்குட்பட்டே இலங்கை தஹ்வீத் ஜமாஅத்தும் செயற்பட்டுவந்தது. இந்த பின்புலத்தில் இவர்களுடன் முரண்பட்டு வெளியேறிய குழுவினரே பின்னர் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (National Thowheed Jamath (NTJ)  என்னும் புதிய அமைப்பை உருவாக்கினர். காத்தான்குடியை சேர்ந்த Zahran Hashim  என்பவரே இந்த அமைப்பின் ஸ்தாபகராவார். தற்கொலை குண்டுதாரிகளில் இவரும் ஒருவர்.

Easter 1

தற்கொலை தாக்குதல்கள் அனைத்தும் இலங்கை கத்தோலிக்கர்களையும் உலகளாவிய கத்தோலிக்கர்களையும் இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளன. தெற்காசிய அனுபவத்தில் தற்கொலை தாக்குதலில் அதிகளவான கிறிஸ்த்தவர்கள் கொல்லப்பட்ட முதல் சந்தர்ப்படும் இததான். அதே வேளை, ISIS சிரியாவிற்கு வெளியில் மேற்கொண்ட தாக்குதல்களில், ஒரு இலக்கில் அதிகளவான மக்கள் கொல்லப்பட்டதும் இதுதான் முதல் தடவை. கடந்த மார்ச் மாதம் நியுசிலாந்தில் உள்ள Christchurch mosque இல் வெள்ளிக்கிழமை பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது கத்தோலிக்க அயுதாரி ஒருவர் துப்பாக்கிப்பிரயோகம் செய்திருந்தார். இதன் போது 50 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். வெள்ளை மேலாதிக்க நோக்கம் கொண்ட ஒருரே இவ்வாறு முஸ்லீம்களை இலக்கு வைத்து சுட்டதாக கூறப்பட்டது. இதற்கு பழிதீர்க்கும் ஒரு நடவடிக்கையாகவே உயர்த்த ஞாயிறு பிரார்த்தனைகளுக்காக கூடியிருந்த கிறிஸ்தவர்கள் மீது, மேற்படி தற்கொலை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆனால் இங்கு எழும் கேள்வி – குறித்த நியுசிலாந்து தாக்குதல் மார்ச் 15இல் இடம்பெற்றது. அதற்கு பழிதீர்க்கும் வகையில் ஏப்பிரல் மாதம் இந்தளவு பாரிய தாக்குதல்களை மேற்கொள்ள முடியுமா? ஏற்கனவே நன்கு ஒழுங்கமைப்பட்ட உள்ளுர் வலையமைப்பு ஒன்று இல்லாமல் இவ்வாறான தாக்குதல்களை மேற்கொள்வது சாத்தியமான ஒன்றா?

தாக்குதல்களின் தன்மையை நோக்கினால் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலை தவிர, அனைத்து தாக்குதல்களும் கொழும்மை மையப்படுத்தித்தான் இடம்பெற்றிருக்கின்றன. இரண்டு பிரதான கத்தோலிக்க தேவாலயங்களும் நட்சத்திர உல்லாச விடுதிகளும் தாக்குதல் இலக்காக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் மட்டக்களப்பு ஏன் தாக்குதல் இலக்காக தெரிவு செய்யப்பட்டது என்பது சற்று குழப்பமாகவே இருக்கிறது. ஏனெனில் அதிகளவான தமிழ் கத்தோலிக்கர்களை இலக்கு வைக்க வேண்டுமாயின், அதற்கு மிகவும் பொருத்தமான இடம் மன்னார் மடுமாதா தேவாலயம்தான் ஆனால் அது இலக்கு வைக்கப்படவில்லை. அதே வேளை மட்டக்களப்பில் கூட, வேறு பிரபலமான பெரிய தேவாலயங்கள் இருக்கின்றன.

easter 2

ஒப்பீட்டடிப்படையில் மிகவும் சிறிய அதே வேளை கத்தோலிக்க தேவாலயம் அல்லாத சீயோன் தேவாலயம் ஏன் தெரிவு செய்யப்பட்டது? ஒன்றில், தாக்குதல் இலக்குகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கான உள்ளுர் தொடர்புகள் பலமாக இருக்கின்ற இடங்களையே பயங்கரவாத அமைப்பினர் தெரிவு செய்திருக்க வேண்டும். அந்த வகையில் தஹ்வீத் ஜமாஅத் அமைப்பினருக்கு கிழக்கு மாகாணத்திலும் கொழும்பிலும் வலுவான உள்ளுர் தொடர்புகள் இருந்திருக்க வேண்டும். இது காரணம் இல்லாவிட்டால், குறித்த தேவாலயத்தை அமெரிக்க- யூத எதிர்ப்பிற்கான குறீயீடாக அவர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும். குறித்த சீயோன் தேவாலயம் 1974ம் ஆண்டு, இன்பம் மோசஸ் என்பவரால் நிறுவப்பட்டது. சியோன் என்பது (ஹிப்று) யூத மொழியில் ஜெருசலேமை குறிக்கும். அதே வேளை இதற்கு யூத நிலம் (Land of Israel)  என்றும் பொருள் உண்டு. இவ்வாறானதொரு கருத்தியல் பின்புலம் கொண்ட தேவாலயத்தை இலக்கு வைத்து, அங்குள்ள கிறிஸ்தவர்களை கொல்லுவது தங்களது உலகளாவிய நிகழ்சிநிரலுக்கு ஏற்புடைய ஒன்று என்று ISIS கருதியிருக்கலாம்.

இவ்வாறான தாக்குதல்கள் தொடர்பில் இந்திய உளவுத்துறை எச்சரித்திருந்த போதும் இலங்கை இதில் போதிய கரிசனையை காண்பிக்கவில்லை. இதன் காரணமாகவே இதனை தடுத்து நிறுத்த முடியாமல் போனது என்றவாறு ஒரு விமர்சனம் உண்டு. ஆனால் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்கள் இலங்கையை இலக்கு வைப்பதற்கான வாய்ப்புக்கள் தொடர்பில் கொழும்பு குறைவாக மதிப்பிட்டிருப்பதாகவே தெரிகிறது. ஏனெனில் சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்கள் இலங்கையை தளமாக பயன்படுத்துகின்றன என்றவாறன செய்திகள் அவ்வப்போது பல்வேறு சர்வதேச தரப்பினராலும் கூறப்பட்டுவந்திருக்கிறது. இது தொடர்பில் அமெரிக்க, இந்திய புலனாய்வு அமைப்புக்கள் எச்சரித்திருந்தாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. கூட்டாட்சிக்குள் அவ்வப்போ ஏற்பட்டுக் கொண்டிருந்த இழுபறிகள், ஒரு ஸ்திரமற்ற அரசியல் சூழலை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சூழலை குறித்த அமைப்பினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியிருக்க வேண்டும். 2015, யூலை மாதம் சிரியாவில் இடம்பெற்ற ISIS இற்கு எதிரான விமானத்தாக்குதலின் போது, இலங்கையைச் சேர்ந்த முதலாவது ISIS உறுப்பினர் கொல்லப்பட்டார். அதுவரை இலங்கை முஸ்லிம்கள் மத்தயில் ISIS ஊடுருவல் இருப்பதான செய்திகள் ஒரு வித வதந்தியாகவும், அரசியல் லாபம் கருதிய குற்றச்சாட்டுக்களாகவே பார்க்கப்பட்டன. கண்டி கலேவல்லவைச் சேர்ந்த Sharfaz Nilam Mushin என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டவராவார். 2016 நபம்பரில் இடம்பெற்ற பாராளுமன்ற விவாதமொன்றின் போது, அப்போது நீதியமைச்சராக இருந்த விஜயதாச ராஜபக்ச, நன்கு படித்த முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் ISIS இல் இணைந்திருப்பதான தகவல்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதனை பலரும் அப்போது நிராகரித்திருந்தனர். இலங்கை முஸ்லிம் பேரவை (Muslim Council of Sri Lanka (MCSL) அதனை கடுமையாக எதிர்த்ததுடன் அதற்கான ஆதாரங்களையும் கோரியிருந்தது. இன்று அதற்கான ஆதாரங்களை ஐளுஐளு அமைப்பே வழங்கியிருக்கிறது.

உலகளாவிய இஸ்லாமிய வலைமைப்புக்கள் இந்திய துனைக்கண்டத்தில் பரவலாகவே இயங்கிவருகின்றன. நியுயோர்க்கை தளமாக் கொண்ட சிந்தனைக் கூடமான ஷபான் நிலையம் ((Soufan Center (TSC)) 2009 ஜனவரியில், வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில் ((AL-QAEDA IN THE INDIAN SUBCONTINENT (AQIS): The Nucleus of Jihad in South Asia) எந்தளவிற்கு ஜிகாதி வலையமைப்புக்கள் தெற்காசியாவில் நிலைகொண்டு இயங்குகின்றன என்பதை தெளிவுபடுத்துகின்றது. அவ்வாறான 17 அமைப்புக்கள் தொடர்பில் அதில் விபரிக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய அமைப்புக்களின் அடிப்படையான பண்பு அவற்றுக்கிடையில் கருத்தியல் சார்ந்த வேறுபாடுகள் இருப்பினும் கூட, அவைகளுக்கிடையில் ஒருங்கிணைந்த செயற்பாடுகள் உண்டு. ISIS அமைப்பும், அல்ஹய்டாவும் தங்களது கருத்தியல்களுக்கான ஆதரவை திரட்டுவதில் போட்டித்தன்மையுடன் இயங்குவதாகுவே குறித்த அறிக்கை கூறுகின்றது. அடிப்படையில் இந்த அமைப்புக்கள் தங்களின் தொலைதூர எதிரிகளை இலக்குவைப்பதற்காக உள்ளுரில் பணியாளர்களை தேடுகின்றனர். ISIS  இன் தொலைதூர எதிரிகள் மேற்குலக நாடுகள்தான். அந்த மேற்குலகை கட்டமைப்பு சார்ந்தும், கருத்தியல் சார்ந்தும் எதிர்த்துநிற்பதற்கு மேற்குலகின் குடியானவர்களையும், அந்த மேற்குலக கிறிஸ்தவ-கத்தோலிக்க விசுவாசிகளையும் இலக்குவைக்கின்றனர். மேற்குலகில் அது முடியாத போது, தங்கள் இலக்குகளை வெளியில் தேடுகின்றனர். அவ்வாறானதொரு இலக்குத்தான் தற்போது இலங்கையில் நிறைவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்தத் தாக்குதல் மூலம் இலங்கையும் உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாத நிகழ்நிரலுக்குள் வந்துவிட்டது என்பது வெள்ளிடைமலை. இது இலங்கையை முன்னரைவிடவும் சர்வதேச நிகழ்சிநிரலுக்குள் தள்ளியிருக்கிறது. அதே வேளை இந்த புதிய அரசியல் பரிணாமம் தமிழர் அரசியலுக்கு எந்தவகையிலும் சாதகமான ஒன்றல்ல. இலங்கையின் அரசியல் இலக்கணம் இனி முன்னரைப் போன்று இருக்க வாய்ப்பில்லை. ஒரு நாடு இஸ்லாமிய பயங்கரவாத நிகழ்சிநிரலுக்குள் ஒரு முறை விழுந்துவிட்டால், அதிலிருந்து மீளுவது மிகவும் கடினமாகவே இருக்கும், சிலவேளை முடியாத காரியமாகவும் போகலாம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *