Search
Monday 30 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஈழத்தமிழ்ச் சினிமா தொழில்சார் ஊடகமாக வளரும் வரை ஈழத்தமிழ்த் தொலைக்காட்சிகளுக்கு எதிர்காலம் இல்லை: தென்னிந்தியத் தொலைக்காட்சி ஊடகங்களோடு ஒப்பிட்டு மிகச் சுருக்மானதொரு மீள்வாசிப்பு

ஈழத்தமிழ்ச் சினிமா தொழில்சார் ஊடகமாக வளரும் வரை ஈழத்தமிழ்த் தொலைக்காட்சிகளுக்கு எதிர்காலம் இல்லை: தென்னிந்தியத் தொலைக்காட்சி ஊடகங்களோடு ஒப்பிட்டு மிகச் சுருக்மானதொரு மீள்வாசிப்பு

தங்கேஸ் பரம்சோதி ( கலாநிதிப்பட்ட ஆய்வு மாணவன், மானிடவியற் துறை, கிழக்கு லண்டன் பல்கலைக்கழகம்)

ஈழத் தமிழர்களிடையே தாயகத்திலும் புலத்திலும் தொலைக்காட்சிகள் பல தொழிற்பட்டு வருகின்றன. எம் பலரிடத்தேயுள்ள பொதுவானதொரு கேள்வி என்னவெனில், ஏன் ஈழத்தமிழர்களின் தொலைக்காட்சிகள் தன்னிறைவு பெற்ற ஊடகமாக இயங்க முடிவதில்லை? என்பதாகும். நான் இங்கு தன்னிறைவு என்று கூறுவதனூடாக கருதுவது யாதெனில், ஒரு நிறுவனத்தினதோ அல்லது ஒரு நபரினதோ உதவியின்றி வெற்றிகரமாக இயங்குவதற்கு போதுமான வருமானத்தினைத் தானாகவே ஈட்டிக்கொள்ள முடியாதுள்ள நிலமையையேயாகும். இக்கேள்விக்கு விடைகான வேண்டின் நாம் ஈழத்தமிழ் தொலைக்காட்சிகளின் போக்கினை அதன் வரலாற்றுப் பின்னணியோடு ஆராய்வது மட்டுமன்றி, ஒரு தொலைக்காட்சியின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருக்கும் இதர காரணங்களையும் ஆராய வேண்டியுள்ளது.

TVs

தனிநபர் அல்லது ஒரு நிறுவனத்தின் வருமானத்தினையும் அந்நபர் அல்லது அந்நிறுவனம் அத்தொலைக்காட்சி இயங்குவதற்கு ஒதுக்கும் மாதாந்த பணத்தினை மையமாக வைத்து பெரும்பாலும் இவ்வூடகங்கள் இயங்குகின்றன. இவ்வாறு இயங்கும் ஈழத்தமிழ்த் தொலைக்காட்சிகளின் கால எல்லை மிகக் குறுகியதாக இருக்கின்றது. அல்லது அத்தகைய தொலைக்காட்சிகள் தொடர்ச்சியாக இயங்கினாலும், அவர்களது இயக்கம் மந்தகதியிலேயே இடம்பெறுகின்றது. இவை எல்லாவற்றையும் கடந்து அது நீண்டு சென்றாலும் அவை தொடங்கப்பட்ட காலத்திலிருந்த பொலிவுத்தன்மையை படிப்படியாக இழந்துவரும் போக்கினையே காணமுடிகின்றது. புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்த TTN, தற்பொழுது இயங்கிவருகின்ற தீபம் தொலைக்காட்சி, GTV என்பன இதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகக் கூற முடியும். தாயகத்தில் தற்பொழுது இயங்கிக் கொண்டுவரும் DAN மற்றும் DD தொலைக்காட்சிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. அன்மைக் காலமாக புலம் பெயர்ந்த மக்களிடையே இயங்கிவரும் ஆதவன், குறிப்பாக IBC தமிழ்த் தொலைக்காட்சிகளின் நிலையை இங்கு கூறப்பட்ட வகைமைக்குள் உள்ளடக்கி விடலாமா அல்லது இத்தொலைக்காட்சிகள் இந்த அவதானங்களிலிருந்து வேறுபட்டு தன்னிறைவை அடையுமா என்பதை தீர்மானிப்பதற்கு சற்று கால அவகாசம் தேவைப்படுகின்றது. இவ்வாறு கூறுவதனூடாக எடுத்த எடுப்பில் ஒரு குழுவினரது கடின முயற்சியை அல்லது உழைப்பினை மிகச் சாதாரணமாக எடை போட்டுவிடுகின்றேன் என்று தவறாக எண்ணக்கூடாது. எனது இந்தச் சிறு கட்டுரையின் நோக்கம் ஈழத்தழிழ் தொலைக்காட்சிகள் தன்னிறைவோடு வளர்ச்சி பெறாது இருப்பதற்கான காரணங்களை தரவுகளோடு அடையாளம் காண்பதும், அந்தத் தரவுகளைக் கொண்டு தன்னிறைவோடு முன்னேறிச் செல்லுவதற்கான வழியினைச் சிந்திப்பதுமாகும்.

Tmilnaadu Tvsஈழத் தமிழ்த் தொலைக்காட்சிகளின் நிலமை இவ்வாறு இருக்க, தென்னிந்தியத் தமிழ்த் தொலைக்காட்சிகளின் நிலமை எவ்வாறு உள்ளது. தென்னிந்தியாவில் பல தமிழ்த் தொலைக்காட்சிகள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் பெரிய வெற்றிநடை போடுகின்றன என்று கூறாவிட்டாலும். பெரும்பாலன தொலைக்காட்சிகள் வெற்றிகரமாக இயங்குகின்றது என்பது நிதர்சனமான உண்மை. இதற்கான பின்னணிக் காரணங்கள் என்ன? தேவையான அனைத்து வசதிகளுடன் ஒரு தொலைக்காட்சியைத் தொடங்குவது என்பது பாரிய பொருளாதார மூலதனத்தின் பின்னணியில் இடம்பெறும் ஒன்று. அவ்வாறு ஒரு பொருளாதார மூலதனத்தை தன்னகப்படுத்திய தொலைக்காட்சி, தொடர்ச்சியான தனது இயக்கத்திற்கு பொருளாதாத்தினை தானாகவே ஈட்டிக்கொள்ளாது, தொடர்ந்தும் பொருளாதரத்தினை முதலிட்டவரிடமிருந்து எதிர்பார்பதே இங்குள்ள பிரச்சினை. பெரும்பாலான தென்னிந்தியத் தொலைக்காட்சிகள் இந்த நிலையிலிருந்து விடுபட்டு தன்னிறைவடைய, ஈழத்தமிழ் தொலைக்காட்சிகளினால் அது சாத்தியப்படாதுள்ளது, தென்னிந்தியத் தொலைக்காட்சிகளில் சில தாம் தன்னிறைவு பெறுவதற்கு தென்னிந்தியத் தமிழர்களின் ஆதரவினைப் பெற்றதோடு, உலகெங்கும் பரவிவாழும் ஈழத்தமிழர்களையும் உள்வாங்கிக் கொண்டமை இதற்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்றாகின்றது.

அவ்வாறாயின் ஏன் ஈழத்தழிழ்த் தொலைக்காட்சிகளினால் ஆகக் குறைந்தது ஈழத் தழிழர்களினது தொடர்ச்சியான பங்களிப்பினைப் பெறமுடியாது போகின்றது. அவர்களைத் தொடர்ச்சியான செயற்பாட்டு ஆதரவாளர்களாக தக்கவைத்திருக்க முடியாதுள்ளது. இங்கு நான்கூறும் தொடர்ச்சியான பங்காளிகள், செயற்பாட்டு ஆதரவாளர்கள் ஆகிய வார்த்தைகளைக் கவனிக்க வேண்டும். இவர்கள் தனியே முகப் புத்தகத்தில் விருப்பத்தை அழுத்தும் நபர்களோ அல்லது ஒரு தொலைக்காட்சியினால் வெளிக்கொண்டுவரப்படும் படைப்புக்களை பகிர்ந்து கொள்பவர்களோ அல்ல. இவ்வாறு செயற்படுவதும் ஒருவகையான ஆதரவே. ஆனால், அத்தகைய ஆதரவு மட்டுப்படுத்தப்பட்ட எல்லையைக் கொண்டது. சரியான அளவுகோலைத் தராது.

tamilnaadu cienmaதென்னிந்தியாவில் பிரபல்யமடைந்துள்ள பெரும்பாலான தொலைக்காட்சிகளின் வரலாறு மிகக் குறிகிய கால எல்லைகளைக் கொண்டது. ஆனால் தென்னிந்தியச் சினிமா ஒரு நீண்ட வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. நீண்ட வரலாற்றுப் பின்னணிக்கு அப்பால், அது வெற்றிகரமான பாரிய தொழில்சார் நிறுவனமாக பரிணமித்துள்ளது. பின்னர் வந்த தொலைக்காட்சிகளின் வளர்ச்சிக்கும் பல தசாப்தங்களாக படிப்படியாக வளர்ந்துவரும் தென்னிந்தியச் சினிமாவுக்கும் பாரிய தொடர்புண்டு. இவ்வாறு முன்னையது பின்னையதை வளர்த்துச் சென்றது. தற்பொழுது இவ்விரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைது வளர்ந்து செல்கின்றது. எந்தவொரு கலையோ அல்லது கலைப்படைப்போ தொழில்ரீதியான ஒரு தளத்தினைக் கொண்டிருக்காத போது, அந்தக் கலையும் படைப்பும் சிறிதுகாலம் சுவாசித்து, அழிவை அல்லது வீழ்ச்சியை நோக்கி நகரும் என்பது நிதர்சனம். தென்னிந்தியாவில் ஜனறஞ்சகச் சூழலுக்குள் கலை வாழ, ஈழத்தில் அது கல்விசார் எல்லைகலோடு பெரும்பாலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, தாயகத்தில் நுண்கலைகள் கல்விசார் எல்லைகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்டு அதனூடாகப் பெறும் தொழில் என்ற வரம்பெல்லையோடு நின்றுவிடுகின்றது, புலத்தில், நடனம் மற்றும் சங்கீதக் கலைகள் பெற்றோர்களின் விருப்பத்தின் பெயரிலும், பிள்ளைகளது ஆர்வத்திலும் செயலூக்கம் பெறுகின்றது. ஆனால், தாம் பயிலும் கலையினூடாக வாழ்வாதரம் என்ற எல்லைக்கு இவர்கள் போவதில்லை. அவ்வாறானதொரு தெரிவினை பெரும்பாலான பெற்றோர்களோ அல்லது பிள்ளைகளோ சுவிகரிப்பதில்லை. அதற்கு ஓரோ காரணம் தொழில்சார் உறுதிப்பாட்டினை இக்கலைகள் கொடுப்பதில்லை. அல்லது அதற்கானதொரு வெளி எம்மவரிடையே காணப்படுவதில்லை. இது தென்னிந்திய கலைவாழ்க்கையோடு ஒப்பிடும் போது நேர்மாறானதொன்று.

eela cienmaகற்கும் கலையைக் கொண்டு தொழில், தன்னிறைவு, பொருளாதார முன்னேற்றம், கலையே வாழ்வு என்பது தென்னிந்தியாவில் ஒப்பீட்டுரீதியில் சாதியப்பட, இங்கு ஏன் சாத்தியப்பட வில்லை? என்ற கேள்விக்கு என்னிடமுள்ள உடனடிப் பதில் ‘ஈழத்தமிழ்ச் சினிமா தொழில்சார் ஊடகம் என்ற தரத்துக்கு உயரவில்லை’ என்பதாகும். ஈழத் தழிழ் கலைவடிவங்கள் கல்விசார் நிறுவனக் கட்டமைப்புக்கு அப்பால் ஜனறஞ்சகப்படவில்லை. சாமான்ய ஈழத்தமிழ் கலைவடிவங்கள் அவற்றின் எல்லைகளைத் தாண்டி புதுப்பிக்கப்படவில்லை. ஈழத்தமிழ்த் தொலைக்காட்சிகளின் இயக்கத்திற்கு விரும்பியோ விரும்பாமலோ தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களிலும் அவர்களது படைப்பிலும் பெரிதும் தங்கியிருக்கவேண்டிய சூழ்நிலை. இவ்வாறு மேலும் பலகாரணங்களை அடுக்கிக் கொண்டு போகலாம். ஏன் ஈழத்தமிழர்ளிடையே சினிமா வளரவில்லையா? என்பது இங்கு எழும் அடுத்த கேள்வி. ஈழத் தமிழர்களிடையே சினிமாவை வளர்த்தெடுப்பதற்கான முயற்சிகள் பல தசாப்தங்களாக இடம்பெற்றுவருகின்றன என்பதற்கு மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இத்தகைய முயற்சிகள் பல தனி மனிதர்சார்ந்தும், அரவோடு இயங்கும் சிறு குழுசார்ந்துமே இடம்பெறுகின்றது. அதனைப் மக்கள் மயப்படுத்தும் முயற்சியில் இத்தனிநபர்கள் ஆதரவின்றித் தோற்றுப்போகின்றார்கள். மக்களின் தேவையைப் பூர்த்திசெய்யும் கலைவடிவங்கள், தென்னிந்தியச் சினிமா உட்பட விரவிக் காணப்படும் போது, ஈழத்துச் சினிமாவினை வளர்க்கவேண்டிய தேவை அவர்களுக்கு இருப்பதில்லை. எனவே தனிநபர்களிடத்தே மையம்கொண்ட ஈழத் தமிழ்ச்சினிமா தொடர்பான முயற்சிகள் வெற்றியளிப்பதுபோல் தோன்றினும். அவை ஒரு வரையறைக்கு அப்பால் செல்வதில்லை.

gun and the ringநான் இங்கு ‘வரையறைக்கு அப்பால் செல்வதில்லை’ என்று கூறுவதனூடாக ஒரு விடயத்தை அழுத்திச் சொல்ல விரும்புகின்றேன். எம்மவரிடையே இருந்து வெளிவரும் ஒரிரு படங்கள் மற்றவர்களால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர், எம்மவர் அப்படங்களைப் பார்க்க முயற்சிக்கின்றனர். கனேடிய ஈழத்தமிழரால் எடுக்கப்பட்ட “A Gun and A Ring” (ஒரு துவக்கும் ஒரு மோதிரமும்) மற்றும் பிரஞ்சு இயக்குனரால் இயக்கப்பட்டு ஈழத் தழிழர் பிரதான பாத்திரம் ஏற்று நடித்த ‘தீபன்’ போன்ற படங்களை இதற்கான உதாரணங்களாகக் குறிப்பிட முடியும். இவ்வாறு சில திரைப்படங்கள் பல ஆண்டுகால இடைவெளியில் எம்மிடையே வந்து வந்து போகின்றன. இவ்வாறு வந்து வந்து போகும் ஒரு சில சிறந்த படங்களினால் ஒட்டுமொத்த ஈழத்தமிழ்ச் சினிமாத் துறையும் வளர்ச்சியடையாது. இத்தகைய புதிய, நுனுக்கமான முயற்சிகள் மீண்டும் மீண்டும் கால எல்லைகளைக் கடந்து தொடர்ச்சியாக இடம்பெற வேண்டும். தொடர்ச்சியான புதிய முயற்சிகளுடன் கூடிய நிலைபேறே சினிமாத்துறையின் வளர்ச்சிக்கு காரணமாகின்றது. இது ஈழத்தமிழ்ச் சினிமாவில் இல்லை.

வரையறைகளைத் தாண்டிச் செல்வதற்கு இத்தனிநபர்களுடன் பொருளாதரா பலமோ அல்லது ஆட்பலமோ இருந்ததில்லை. சினிமா போன்ற ஜனரஞ்சகக் கலைவடிவம் வளராதபட்சத்தில், கலைக்கான தொழில் சாத்தியப்படாது போகின்றது. தாம் கற்ற கலைக்கான தொழில் இல்லை என்கின்ற போது, அத்தகைய முயற்சியில் ஈடுபடும் தனிநபர்களது வேகமும் எல்லைகளுக்கு உட்பட்டே செயற்படும். அது தனித்துவமான சினிமாவின் வளர்ச்சிக்கு வித்திடாது. ஈழத் தமிழ் சினிமாவின் வளர்ச்சி இவ்வாறான இன்னோரன்ன காரணங்களுக்காக சாத்தியப்படாது போகும் போது, ஈழத்தமிழ்த் தொலைக்காட்சியின் வளர்ச்சியும் சாத்தியப்படாது போகின்றது. ஈழத்தமிழ்த் தொலைக்காட்சியின் வளர்ச்சியினை தென்னிந்தியாவின் மாதிரியோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அதற்கான முன்னெடுப்பு ஏதும் எம்மிடையே இல்லை என்றே தோன்றுகின்றது.

OperationEllalanவிடுதலைப் புலிகள் இயக்கம் போராட்ட காலத்தில் இதற்கான கூட்டுமுயற்சியில் இறங்கினர். அவர்கள் ஒரு மூடிய கொள்கையை வகுத்து அதில் வெற்றி பெறவும் முயற்சித்தனர். தென்னிந்திய சினிமா மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களுக்கு அவர்களால் மேற்கொள்ளப்பட்ட தடையையே மூடிய கொள்கை என்று கூறுகின்றேன். போராட்டத் தேவைக்காக அவர்களால் உருவாக்கப்பட்ட சினிமா மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் தவிர, மக்கள் பார்ப்பதற்கு வேறு ஏதேனும் ஊடகங்கள் இல்லை என்ற நிலை அப்போது உருவானது. இது ஒருவகையில் சர்வதிகாரா மற்றும் மனித உரிமை மீறல்போக்கு என்ற விமர்சனத்துக்கு அப்பால், போராட்டம்சார் கதைகளைக் கூறுவதனூடாக ஒரு வகைசார் ஈழச் சினிமாவினை ஜனறஞ்சகப்படுத்த முயற்சித்தனர் என்று கூறலாம். எவ்வாறாயினும் தடைகளையும் மீறி தென்னிந்தியப் படங்களை மக்கள் பதுங்குழிகளுக்குள் இருந்தும் பார்த்தமை எம்மில் பலருக்குத் தெரிந்ததே.

சரி, தென்னிந்தியத் தொலைக்காட்சியின் மாதிரியிலிருந்து விலகி யோசிப்போம். பல்வேறு தெரிவுகள் மக்கள் மத்தியில் காணப்படும் பொழுது, ஏன் ஈழத் தமிழ்த் தொலைக்காட்சிகளை குறிப்பாக புலத்தில் இயங்கும் தொலைக்காட்சிகளை மக்கள் பார்க்கவேண்டும்? என்ற கேள்வி பொதுவாக மக்களிடத்தே இருக்கின்றது. புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள தொலைக்காட்சிகளைப்பற்றி நாம் போசும் போது, பலர் இந்தக் கேள்வியைக் கேட்கின்றார்கள். யுத்தகாலத்தில் அங்கு இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் அறிய வேண்டிய தேவை இருந்தது. உணர்வுரீதியாக மக்கள் தாயகம் நோக்கி தமது எண்ணங்களைக் குவித்திருந்தனர். ஆனால் தற்போது அதற்கு சமாந்தரமான தேவை இல்லாதுபோயுள்ளது. அவ்வாறான தேவைகளை இணைய ஊடகங்களே பூர்த்தி செய்கின்றன. என்பது பொதுவானதொரு எண்ணப்பாடாக பெரும்பாலான மக்களிடத்தே காணப்படுகின்றது. இத்தகைய கருத்துகளிலிருந்து ஒருவிடயத்தினைப் பெற்றுக்கொள்ள முடிகின்றது. அதாவது ஈழத்தமிழ் தொலைக்காட்சிகளைப் பார்க்கவேண்டிய அவசியம் வெகுவாகக் குறைந்து வருகின்றது என்பது. எம்மிடையே போட்டி போட்டு முன்னேறக்கூடிய சினிமாவும் அதற்கான சந்தையும் இல்லாதுள்ளமை, அந்த அவசியமற்ற தன்மையை மேலும் தூண்டி நிற்கின்றது. எவ்வாறு ஈழத்தமிழ் சினிமாத்துறை தனிநபர்களின் முயற்சியினால் செயலூக்கம் பெற்று, பொதுநீரோட்டத்திற்கு வருவதற்கு பாரிய தடைகளை எதிர்கொள்கின்றதோ அதுபோலவே ஈழத் தமிழர்களது தொலைக்காட்சியின் நிலமையுமுள்ளது.

இத்தகையதொரு நிலைக்கு மிக முக்கியமானதொரு காரணம் ஈழத்தமிழர்களின் சினிமாசார் முயற்சிகளும் தொலைக்காட்சி ஊடகம்சார் முயற்சிகளும் தனிநபர்களிடத்தேயும் சிறு சிறு குழுக்களிடத்தேயும் சிதறிக்காணப்படுவதாகும். இவர்களில் பலர் தமது ஆர்வத்தினை அத்திவாரமாகக் கொண்டு இத்துறைக்கு வருபவர்கள். தொடர்ச்சியான பயிற்சினாலும் கலை ஈடுபாட்டினாலும் அவை மேலும் வளர்த்ததெடுக்கப்பட வேண்டியவை. கலைத்துறைக்கே உரிய அடிப்படைப் பண்பான பயிற்சிக்கானதொரு கூட்டு வெளியினை உருவாக்க நாம் மீண்டும் மீண்டும் தவறுகின்றோம். ஈழத் தமிழர்களிடையே சிதறிக்காணப்படும் மனித வளங்களும் பொருளாதார வளங்களும் இணையும் போதே அது சாத்தியப்படும். இவ்வாறானதொரு சாத்தியத்தினூடாக ஈழத் தமிழ் சினிமாத்துறை தொழில்சார் ஊடகமாக மாற்றப்பட வேண்டும். ‘ஈழத்தமிழ் கலைஞர்கள் முதல்முறை ஒன்றுகூடுகின்றார்கள்’. என்ற வாசகத்தினை இத்துறைசார்ந்து செயற்படுபவர்கள் அடிக்கடி கூறுவதை நாம் முகநூல்கள் வாயிலாப் பலதடவை பார்த்திருக்கின்றோம். இங்கு நான் கூறும் இணைவு என்பது கலைஞர்கள் (அவர்களது உடல்கள்) ஓரிடத்திற்கு வந்து பின்னர் மறைவதல்ல. தொடர்ச்சியான, தெளிவானதொரு வேலைத்திட்டத்தோடு பொருளாதார பலத்தினைத் திரட்டிக்கொண்டு ஒன்றுகூடுவதாகும். அவ்வாறனதொரு மாற்றத்தினூடே ஈழத்தமிழ் தொலைக்காட்சிகளுக்கான ஒரு உறுதியான எதிர்காலத்தினையும் உருவாக்க முடியும். இல்லையேல், தற்பொழுதுள்ளது போல், ஒருசாராரின் தேவைகளை கடினப்பட்டு பூர்த்திசெய்யும் தொழிலையே எமது தொலைக்காட்சி ஊடகங்கள் தொடர்ச்சியாகச் செய்யநேரிடும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *