தலைப்பு செய்திகள்

உயிர் பறித்த குப்பைமேடு: அச்சுறுத்தலாக மாறியிருக்கும் இலங்கையின் கழிவு முகாமைத்துவம்!

உயிர் பறித்த குப்பைமேடு: அச்சுறுத்தலாக மாறியிருக்கும் இலங்கையின் கழிவு முகாமைத்துவம்!

-கே.வசந்தன்-

இலங்கையின் கழிவகற்றல் முகாமைத்துவத்தில் உள்ள பாரிய குறைபாட்டை மீதொட்டமுல்ல குப்பைமேட்டுச் சம்பவம் பதிவு செய்திருக்கின்றது. இயற்கை அனர்த்தங்களும், அதனால் ஏற்படும் சில இழப்புக்களும் தவிர்க்க முடியாதவை தான். ஆனால் திட்மிட்டப்படாத நடவடிக்கையால் ஏற்படுகின்ற அனர்த்தத்தை நாம் இயற்கை அனர்த்தம் என்று கூறிவிட முடியாது. இலங்கையின் மலைநாட்டுப் பகுதியில் கடும் மழை காலங்களில் மண்சரிவு எற்படுவதும் அதனால் பாதிப்புக்கள் ஏற்படுவதும் நாம் அறிந்த விடயம் ஒன்றே. மீரியாபொத்த மண்சரிவு கூட பல்வேறு சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியிருந்தது. ஆனால் குப்பை மேடு சரிந்து உயிரிழப்புக்கள் ஏற்படுவது என்பது எமது நாட்டைப் பொறுத்தவரை ஒரு புதிய விடயமே.

இவ்வாறு குப்பை மேடுகளில் மண் சரிவு ஏற்படுவதென்பது உலகின் சில நாடுகளில் இடம்பெற்றும் உள்ளது. இறுதியாக இவ்வாறான பாரிய சம்பவம் ஒன்று கடந்த மார்ச் 12ஆம் திகதி எத்தியோப்பியாவின் தலைநரகமான அடிஸ் அபாபா நகரத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த அனர்த்தத்தில் 113 பேர் உயிரிழந்துள்ளனர். இலங்கையைப் பொறுத்தவரை மக்கள் இந்தக் குப்பை மேட்டால் பாதிப்பு ஏற்படும் என முன்கூட்டியே எதிர்வு கூறல்கள் இருந்த போதும் கழிவகற்றல் முறையில் காணப்பட்ட பாரிய குறைபாடே இந்த அனர்த்ததை ஏற்படுத்தியிருக்கின்றது.

கொழும்பின் புறநகரப் பகுதியில் அமைந்துள்ள மீதொட்டமுல்ல பகுதியானது மேல் மாகாண சபையின் கீழ் உள்ள கொழும்பு மாநகரசபை மற்றும் கொலன்னாவ மாநகரசபை ஆகியவற்றின் குப்பைகள் கொட்டப்படும் இடமாக இருந்து வருகின்றது. இலங்கையைப் பொறுத்தவரை அதிக சனநெரிசல் மிக்க பிரதேசமாகவும், பல்வேறு தொழில் நடவடிக்கைகளைக் கொண்ட முக்கிய பிரதேசமாகவும் கொழும்பு நகரம் இருந்து வருகின்றது. கொழும்பு நகரில் ஆறரை இலட்சம் பேர் வசிப்பதுடன் ஒவ்வொரு நாளும் வெளியிடங்களில் இருந்தும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளாகவும் சுமார் 10 இலட்சம் பேர் வரையில் வந்து செல்கின்றனர். இதன்காரணமாக நாளாந்தம் கொழும்பு மாநகரில் சேர்கின்ற சுமார் 800 தொன் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு வருகின்றது.

889676785c2b517b32d7b5d7ccc79181_XLமீதொட்டமுல்ல பகுதியில் மக்கள் குடிமனைகளை அண்டியுள்ள 20 ஏக்கர் காணியில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் திட்டமிடப்படாத வகையில் குப்பைகள் கொட்டப்பட்டு அவை 300 அடி உயரமான குப்பை மலையாக உருவெடுத்திருக்கின்றது. இதன் அடிப்பகுதி பலமாக அமையாதநிலையில் அதன் உயரம் அதிகரித்தமையால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக பாரிய சத்தத்துடன் அந்த குப்பை மேடு ஒரு மண்சரிவு ஏற்பட்டத்தைனப் போன்று உடைந்து விழுந்திருக்கின்றது. மக்கள் புதுவருடக் கொண்டாட்டத்தில் மூழ்கி இருந்த போது எதிர்பாராத விதமாக மாலை நேரத்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கினது. இதன்காரணமாக உயிரிழந்த 30 இற்கும் மேற்பட்டவர்களின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் பலர் குப்பை மேட்டினுள் புதையுண்டுமுள்ளனர். இதனால் இறப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 228 குடும்பங்களைச் சேர்ந்த 980 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 79 வீடுகள் முற்றாகவும், 17 வீடுககள் பகுதியளவும் பாதிப்படைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்திருக்கின்றது.

முப்படைகளையும் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் அதிகமான படையினர் தற்போது மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திடீரென மழை பெய்யும் பட்சத்தில் மேலும் அனர்த்தம் ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக புவியியலாளர்கள் எச்சரித்தும் உள்ளனர். குப்பை மேட்டையண்டி மூன்று பகுதிகள் அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டு மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்த குப்பை மேடு அனத்தங்களை ஏற்படுத்தக் கூடியது என இன்று நேற்றல்ல பல வருடங்களாகவே எச்சரிக்கப்பட்டும் உள்ளது. இதனால் இங்குள்ள குப்பைகளை சீராக முகாமைத்துவம் செய்திருக்க வேண்டும். அல்லது தற்போது அபாய வலயங்கள் அறிவித்ததனைப் போன்று முன்னரே அபாய வலயங்களை இனங்கண்டு மக்களை பாதுகாப்பான பகுதிக்கு நகர்த்தி குடியேற்றியிருக்க வேண்டும். ஆனால் இரண்டுமே நடைபெறவில்லை. இது தொடர்பில் உரிய அரசியல்வாதிகள், அதிகாரிகள் கண்டு கொள்ளாமையே இந்த அனர்த்தத்திற்கு காரணமாகவும் அமைந்திருக்கின்றது.

கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேராதெனிய பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் டொக்டர் ஏ.கே.கருணாரத்ன ‘கடந்த காலங்களில் எங்கள் பல்கலைக்கழகம் (பேராதெனிய) குப்பைகளை கொட்டுதல் அதனால் ஏற்படும் சூழல் மாசுகள் குறிப்பாக குப்பைகள் கொட்டப்படும் இடங்கள் தொடர்பில் ஒரு ஆய்வினை மேற்கொண்டிருந்தது. அந்த வகையில் மீதொட்டமுல்ல குப்பை மேடு உயரம் கூடுதலாக காணப்படுகின்றமையும்இ அந்த இடத்தின் அடித்தளம் அவ்வளவு ஸ்தீரமானதாக இல்லை என்பதும் கடந்த வருடத்தின் முதல் காலாண்டில் நாம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்தது. அந்த சந்தர்ப்பத்தில் இது தொடர்பில் உரிய திணைக்களங்களுக்கு நாம் அறிவித்தோம். பொது மக்களுக்கும் தெளிவுபடுத்தினோம். எந்த சந்தர்ப்பத்திலும் அது சரியுமென நாம் ஏற்கனவே அறிந்திருந்தோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

kuppai5இப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் கூட கடந்த இரு தசாப்பதங்களாக இப்பகுதியில் குப்பைகளை கொட்ட வேண்டாம் என போராடி வருகின்றார்கள். மீதொட்டமுல்ல பகுதியில் விண்ணைத்தொடும் அளவுக்கு நிரப்பிவைக்கப்பட்டுள்ள குப்பை மேடுகளை அங்கிருந்து அகற்றி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கொண்டுசெல்லுமாறு கோரி அப்பகுதி மக்களால் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை மூன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த ஜனவரி மாதம் 11ஆம் திகதி, மார்ச் மாதம் 6ஆம் திகதி மற்றும் அதே மாதத்தில் 25ஆம் திகதி இவ்வாறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் அரசாங்கம் உடனடியாக இது தொடர்பில் காத்திரமாக நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. கொழும்பு மாநகரில் சேரும் குப்பைகளை வேறு இடங்களில் கொட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அப்பகுதிகளில் வசிக்கும் மக்களும், அப்பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும் காட்டிய எதிர்ப்பு காரணமாக அதனை மேற்கொள்ள முடியவில்லை என மாநகர மற்றும் மேல்மாகாண அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார். மக்களுடைய எதிர்ப்புக்கு குப்பைகளை அகற்றி மீள்சுழற்சிக்கு உட்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்திடம் முறையான திட்டம் எதுவும் இல்லாமையே காரணம் என்பதையும் மறும்து விட முடியாது.

நல்லாட்சி அரசாங்கம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சூழல் தொடர்பில் கவனம் செலுத்தி ‘குப்பையற்ற உலகம் நிலைபெறுதகு சூழல்’ என்னும் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் வீட்டிலும் நகரங்களிலும் சேரும் கழிவுகளை தரம்பிரித்து அவற்றை கழிவு கூடைகளில் போட வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்ததுடன் அதனை மேற்கொண்டும் வருகிறது. குறிப்பாக உக்கக் கூடிய சமையல் மற்றும் தோட்டக் கழிவுகளை (சேதனக் கழிவுகளை) பச்சை நிற குப்பைத் தொட்டியிலும், உக்காத பொலித்தீன் பிளாஸ்ரிப் பொருட்களை செம்மஞ்சள் நிற குப்பைத் தொட்டியிலும், காகிதக் கழிவுகளை நீல நிறக் குப்பைத் தொட்டியிலும், போத்தல்- உடைந்த கண்ணாடி உள்ளிட்ட கண்ணாடி கழிவுகளை சிவப்பு குப்பைத் தொட்டியிலும் இது தவிர இலத்தினியல் கழிவுகள், பற்றரிகள் மற்றும் உதிரிப்பாகங்களை வேறாகவும் வகைப்படுத்துவதற்கான ஒழுங்குகள் தொடர்பில் அரசாங்கம் விழிப்புணர்வு செய்கின்றது. ஆனால் அவ்வாறு வகைப்படுத்தி பெறப’பட்ட கழிவுகளை முகாமைத்துவம் செய்வதில் இந்த அரசாங்கமும் தவறியிருக்கின்றது. அதனாலேயே இந்த குப்பை மேடு தொடர்ந்தும் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து சென்றிருக்கின்றது.

இதேவேளை, உலகின் பல நாடுகளிலும் குப்பைகள் மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றன. யப்பான் கழிவு பொருட்களை சிறப்பான முறையில் மீள்சுழற்சிக்கு உட்படுத்தி அதனை பயனுள்ளதாகவும், வருமானத்தை தரக் கூடியதாகவும் மாற்றுகின்றது. ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை அந்த நிலை இன்னும் ஆக்கப்பூர்வமானதாக மாற்றமடையவில்லை. அதற்கு நிதிப்பற்றாக்குறை மற்றும் தொழிற்நுட்ப வசதி போதமையே காரணம் எனக் கூறப்பட்டாலும் அதனை செய்வதற்கு அரசாங்கம் காத்திரமாக நடவடிக்கை எதனையும் முன்னெடுத்திருக்கவில்லை. தற்போது குப்பை மேடு சரிந்ததால் ஏற்பட்ட பாதிப்புக்கு யப்பான் உதவியுள்ளதுடன் தனது தொழில்நுட்பவியலாளர்களை உள்ளடக்கிய குழு ஒன்றையும் இலங்கைக்கு அனுப்பியுள்ளது. இந்த நாட்டுடன் முன்னரே இது தொடர்பில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அல்லது உதவிகள் பெறப்பட்டு கழிவு முகாமைத்துவம் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தால் இத்தகைய ஒரு அனர்த்தத்தை தடுத்திருக்க முடியும் என்பதை மறுத்துவிடவும் முடியாது.

n

இலங்கையில் 2015 ஆம் ஆண்டு தகவல்களின் படி நாளொன்றுக்கு 7500 தொன் குப்பைகள் கொட்டப்படுவதுடன் அவற்றில் 1000 தொன் குப்பைகள் மாத்திரமே முகாமைத்துவம் செய்யப்படுகின்றது. முகாமைத்துவம் செய்யப்படாதுவிடப்படும் எஞ்சிய 6500 தொன் குப்பைகளை தொழில் நுட்ப உதவியுடன் முறையாக முகாமைத்துவம் செய்யவும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இருப்பினும் இலங்கையைப் பொறுத்தவரை கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் அதனை மீள்சுழற்சிக்கு உட்படுத்துதல் என்பது பாரிய சவாலாக மாறியுள்ளது. ஒரு கிலோ கழிவினை மீள்சுழற்சிக்கு உட்படுத்த ஏழு ரூபாய் தொடக்கம் 10 ரூபாய் வரை செலவாகும். இவ்வளவு நிதியை செலவு செய்து முகாமைத்துவம் செய்வதில் இலங்கை இன்னும் முன்னேற்றம் காணவேண்டியும் உள்ளது.

யாழ்ப்பாணம், கண்டி, கொழும்பு என குப்பை மேடுகள் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றன. இனியாவது இத்தகைய அனர்த்தகங்கள் ஏற்படாத வகையில் அந்த குப்பை மேடுகளை முகாமைத்துவம் செய்ய வேண்டிய தேவையும் எழுந்திருக்கின்றது.

குப்பை மேட்டு அனர்த்தத்திற்கு அப்பகுதியைப் பிரதிநிதித்துவப்படும் உள்ளூராட்சி மன்றங்களின் அரசியல்வதிகள் முதல் மாகாண மற்றும் பாராளுமன்ற அரசயல்வாதிகள் வரை பொறுப்பு கூற வேண்டியவர்கள். ஏன்னெனில் இது இன்று நேற்று ஏற்பட்ட பிரச்சனை அல்ல. கடந்த இரு தசாப்தமாக இந்த மக்கள் போராடுகிறார்கள். இருதாசப்தமாக இருந்த அரசியல் வாதிகளின் பொறுப்பற்ற தன்மையும்இ அரசாங்கத்தின் சீரற்ற கழிவகற்றல் முகாமையும் இந்த நிலைக்கு காரணம் என்பதை மறுத்து விட முடியாது.

மீட்பு நடவடிக்கைகளும், நிவாரணப்பணிகளும் நடைபெறுகின்றன. அவை ஒரு புறம் நடக்கட்டும். கழிவகற்றல் முகாமைத்துவத்தில் அலட்சியம் செய்யக் கூடாது என்பதை இந்த சம்பவம் உணர்த்தியிருக்கின்றது. இதனை உணர்ந்து கழிவகற்றல் முகாமைத்துவத்தை இனியாவது அரசாங்கம் ஒவ்வொரு நகரங்களிலும் ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகவுள்ளது.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *