Search
Wednesday 16 January 2019
  • :
  • :

உலகை அச்சுறுத்தும் நுண்ணுயிர் கொல்லிகளிற்கு தாக்குப்பிடிக்கும் பக்றீரியாக்களின் உருவாக்கம்

உலகை அச்சுறுத்தும் நுண்ணுயிர் கொல்லிகளிற்கு தாக்குப்பிடிக்கும் பக்றீரியாக்களின் உருவாக்கம்

மருத்துவர். சி. யமுனாநந்தா

மனிதரைத் தாக்கும் பக்றீரிய நோய்களைக் கட்டுப்படுத்த நுண்ணுயிர் கொல்லிகளின் உபயோகம் 50 ஆண்டுகளிற்கு முன் வரப்பிரசாதமாக அமைந்திருந்தது. பலவகையான நுண்ணுயிர் கொல்லிகள் கண்டறியப்பட்டு மருத்துவ உலகில் புரட்சிகரமாக நோய்கள் பலவற்றைக் கட்டுப்படுத்தக்கூடியதாக அமைந்தது. ஆனால் நுண்ணுயிர் கொல்லிகளின் கட்டுப்பாடற்ற பாவனை, அந் நுண்ணுயிர் கொல்லிகளின் செயற்றிறனை இல்லாது செய்யுமாறு பக்றீரியாக்கள் இசைவாக்கப்பட்ட சூழல்களையும் உருவாக்கியுள்ளது. இவ்வாறு நுண்ணுயிர் கொல்லிகளுக்குத் தாக்குப் பிடிக்கும் பக்றீரியாக்களின் உருவாக்கம் 2050ம் ஆண்டளவில் உலகில் அதிக உயிரிழப்புக்களுக்குக் காரணமாக அமையும்.

எனவே நாம் நுண்ணுயிர் கொல்லிகளின் தவறான பாவனையையும், துர்ப்பாவனையையும் கண்டறிந்து அவற்றைத் தடுத்தல் அவசியமாகும். நுண்ணுயிர் கொல்லிகளிற்குத் தாக்குப்பிடிக்கும் பக்றீரியாக்களின் உருவாக்கத்திற்கான காரணங்கள் :

01) அளவுக்கதிகமான நுண்ணுயிர்க் கொல்லிகளை மருத்துவ பரிந்துரைகளில் சிபார்சு செய்தல். குறிப்பாக வைரஸ் காய்ச்சலிற்கு, பக்றீரியாக்களுக்கான நுண்ணுயிர் கொல்லிகளைச் சிபார்சு செய்தல் தவறு. மேலும் நோய்க் கிருமிகளின் நுண்ணுயிர் கொல்லிகளின் சகிப்புத் தன்மையைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தல் சிறந்தது. ஆனால் சமுதாயமட்டத்தில் பாரிய அளவில் இதனைச் செய்தல் கடினம். அடுத்துக் காய்ச்சலுடன் தூர இடங்களில் இருந்து வருவோரை, குருதிப்பரிசோதனையோ, மீள வருகையோ உறுதிப்படுத்தப்படும் வரை, முறையான சிகிச்சையினை வைத்தியரால் உறுதிப்படுத்த முடியாது. நுண்ணுயிர் கொல்லிகளே உயிர்காக்கும் ஆயுதமாகப் பயன்படுகின்றது. இதனையே பல வைத்தியர்கள் தமது சிகிச்சை அணுகுமுறையாகக் கடைப்பிடிக்கின்றனர். இதில் மாற்றத்தைக் கொண்டு வருவதே நுண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிர்ப்பான பக்றீரியாக்களை உருவாக்கலைக் குறைக்கும். தற்போது பல புதிய நுண்ணுயிர் கொல்லிகள் இந்தியா, பங்களா தேசம், பாகிஸ்தான், இந்தோனேசியா, தாய்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து மருத்துவ முகவர்களால் இறக்குமதி செய்யப்பட்டு மிட்டாய்கள் போல விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.
முறையான ஆலோசனை அற்ற நிலையில் நுண்ணுயிர் கொல்லிகளை வழங்கல் ஓர் சமூகக் குற்றமாகும்.

02) நோயாளிகள் வைத்தியரின் பரிந்துரைகளுக்கு அமைவாக நுண்ணுயிர் கொல்லிகளை எடுக்காமை, நுண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிர்ப்புடைய பக்றீரியாக்கள் உருவாக ஒரு காரணமாகும். நோயினால் பாதிக்கப்பட்டவர் வைத்தியரின் ஆலோசனைக்கு ஏற்ப, குறித்த அளவு மருந்துகளை, குறித்த நேர இடைவெளியில், குறித்த காலத்திற்கு முற்றாகப் பயன்படுத்துதல் அவசியம். மருந்துகளின் அளவைக் குறைப்பதோ, பாவிக்கப்படும் நேர இடைவெளியை அதிகரிப்பதோ, பாவிக்கப்படும் காலத்தை மருத்துவரின் சிபார்சுக் காலத்தைவிடக் குறைத்தல் நுண்ணுயிர் கொல்லிக்கு எதிர்ப்புடைய பக்றீரியாக்கள் உருவாக ஏதுவாகும். நுண்ணுயிர் கொல்லிமருந்துகளை இடையில் கைவிடலாகாது. மேலும் அபரிமிதமான நுண்ணுயிர் கொல்லிப்பாவனை உடல் நலத்துக்குக் கேடாகும்.

03) மனிதரின் நோய்த் தொற்றுக்கு அப்பால் மிருக மருத்துவத்திலும் மனிதருக்குப் பயன்படும் நுண்ணுயிர் கொல்லிகள் பயன்படுத்தப்படு-கின்றன. ஆடு, மாடு, பன்றி, கோழி, புறா வளர்ப்போர், நாய், பூனை போன்ற தமது வளர்ப்புப் பிராணிகளுக்கு நோய் வரும்போது கால்நடை மருத்துவரின் ஆலோசனையில் நுண்ணுயிர் கொல்லிகளைப் பெற்று உபயோகிப்பர். ஆனால் வர்த்தகநோக்கில் பண்ணைகளாக வளர்ப்போர், கட்டுப்பாடற்ற முறையில் இலாபம் கருதி, நுண்ணுயிர் கொல்லிகளைத் தமது விளைபொருட்களை அதிகரிக்க உபயோகிப்பர். இத்தகைய துர்ப்பாவனை பக்றீரியாக்களை நுண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிர்ப்பு உடையனவாக உருவாக்க ஏதுவாக அமைகின்றது.

மேலும் இறால் பண்ணைகளில், இறால்களின் விளைவை அதிகரிக்க, அவற்றுக்கு நோய் ஏற்படாதவாறு நுண்ணுயிர் கொல்லிகளைக் கரைத்து ஊற்றுதல் பாரிய அளவில் மருந்துக்கு எதிர்ப்புத்தன்மை உடைய பக்றீரியாக்கள் உருவாக ஏதுவாக அமைகின்றது. இவை தவிர்க்கப்படல் வேண்டும்.

மேலும் அழகுக்காக தொட்டிகளில் மீன் வளர்ப்போரும், நுண்ணுயிர் கொல்லிகளைத் தவறாக உபயோகிப்பதால் சூழலில் ஆபத்தான பக்றீரியாக்கள் உருவாக ஏதுவாகின்றது.

அடுத்து உபயோகிக்கப்படாத, காலாவதியான நுண்ணுயிர் கொல்லிகளை எரித்தல் மூலம் அழிக்க வேண்டும். மாறாக மண்ணிலோ அன்றில் நீரிலோ அவற்றைக் கழிப்பின், அச்சூழலில் உள்ள பக்றீரியாக்கள், விகாரமடைந்து, ஆபத்தான கிருமிகளாக உருமாறிவிடலாம்.

04) நோயாளிகளுக்குச் சரியான நுண்ணுயிர் கொல்லிகளை வழங்கமுடியாது இருத்தலுக்கும், தவறாக நுண்ணுயிர் கொல்லிகளை வழங்குவதற்கும் ஆய்வுகூடப் பாதிசோதனைகளை விரைவாகச் செய்ய முடியாமையும் ஒரு காரணமாக அமைகின்றது. எனவே ஆய்வுகூடப் பாதிசோதனைகள் மேற்கொள்வதற்கான வசதிகளை அதிகரிக்க வேண்டியதும் அவசியம் ஆகும்.

05) முறையற்ற சுகாதாரப் பழக்கவழக்கங்கள் நுண்ணுயிர்க் கொல்லிக்கு எதிர்ப்புடைய பக்றீரியாக்கள் பரவ உதவுகின்றன.

06) தனிநபர் சுகாதாரம், கைகழுவுதல், மலசலகூடங்களை முறையாகப் பாவித்தல், இருமும்போதும், தும்மும்போதும் மற்றவர்களுக்குப் பாதிப்பினை ஏற்படுத்தாதவாறு, கைக்குட்டைகளைப் பயன்படுத்தல், தூயநீரைப்பருகல், உணவுகளை முறையாக வேகவைத்து உண்ணல் போன்ற நடவடிக்கைகளால் நோய்த்தொற்றலைக் குறைக்கலாம்.

07) நோயாளர்கள் சிகிச்சைபெறும் நிலையங்களிலும், வைத்தியசாலை-களிலும் முறையான நோய்த் தொற்றல் தடுப்புமுறைகள் இருத்தல் வேண்டும். இவற்றில் குறைபாடு இருக்குமிடத்து, நோய்க்கிருமிகள் விரைவாகப் பலரைத் தொற்றிப் பெருகுவதற்கு வழிவகுக்கும். தொற்று நோய்களுக்கான சிறப்பான தனிமைப்படுத்தும் விடுதிகள், வைத்தியசாலைகள் மிகவும் இன்றியமையாதவை ஆகும். குறிப்பாகச் சுவாசத் தொற்றுக்கள் காற்றோட்டம் மூலம் தீர்மானிக்கப்படுகின்றது. வைத்தியசாலையில் தொற்று நோயாளிகளிற்கான விடுதிகளுக்குத் தனியான வழி இருத்தல். குறிப்பாக பொதுவான மின்தூக்கிகளைப் பயன்படுத்தாமை நோய்த் தொற்றுக் கட்டுப்பாட்டிற்கு இன்றியமையாதது ஆகும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *