Search
Sunday 21 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

உளத்தாக்கத்திற்கு பின்பான நெருக்கீடும் உளத்தாக்கத்திற்கு பின்பான மீபடிநிலையும்

உளத்தாக்கத்திற்கு பின்பான நெருக்கீடும்  உளத்தாக்கத்திற்கு பின்பான மீபடிநிலையும்

மருத்துவர் சி. யமுனானந்தா

சிறுபிள்ளைகள் விளையாடுவதற்கும், அவர்களின் புத்திக்கூர்மையினை அதிகரிப்பதற்கும் கடதாசி மட்டையிலான பொருத்தும் விளையாட்டுப் பொருட்கள் பல இன்று பிரபல்யமாகி உள்ளன. அதன்மூலம் வீடு, மயில், கப்பல், விமானம் போன்ற இன்னோரன்ன அமைப்புக்களை முப்பரிமாணத்தில் சிறுவர்கள் பொருத்தி விளைனயாடுவர். அவ்வாறு செய்வதனால் அவர்களின் கற்றல்திறன் அதிகரிக்கின்றது. இதன்போது சில பகுதி அல்லது முழுவதும் குழப்பப்பட்டாலோ அல்லது காணாமல் போனாலோ அதனை உணர்ந்து அவற்றைச் சில பகுதியாகப் பூர்த்தி செய்வர். இதனை உள்வாங்கி நகரல் (Assimilation) என்பர். இதுவே ஒரு பாதிப்பின் பின் மேற்கொள்ளப்படும் கற்றல் செயற்பாடாகும். திறமையான சிறுவர்கள் காணாமல் போனபகுதிகளுக்கு தம்மால் இயற்ற பொருட்களைப் பொருத்தி முழுமைப்படுத்த முனைவர். இதனை நிரப்பி நகரல் (Accommodation) என்பர். இத்தகைய கற்றல் செயற்பாடுகள் சாதாரண வாழ்விலும், அசாதாரண சூழலிலும் மனிதனில் நிகழ்கின்றது.

பாரிய உளத்தாக்கங்கள் தனிமனிதவாழ்விலும், சமூகத்திலும் ஏற்படலாம். தனிமனிதவாழ்வில் ஏற்படும் பாரிய உளத்தாக்கங்களாக நெருங்கிய உறவுகளின் இறப்புக்கள், பிரிவுகள் அமைகின்றன.

நவீன வன்முறைத் தொழில்நுட்பம் ஒரு கணத்தில் ஒரு சமூகத்தை கூட்டாக அழிக்கின்ற தன்மையினை இன்று நாம் காண்கின்றோம். இதனை இன்று நாம் சமூகமாகக் காண்கின்றோம். மேலும் இன்றைய தகவல் தொழில்நுட்பத் தொடர்பாடல் உளப்பாதிப்பினை ஒரு கணப்பொழுதில் பல்லாயிரக்கணக்கானோருக்கு ஏற்படுத்துகின்றது. இவை யாவும் உளத்தாக்கத்திற்குப் பின்பான நெருக்கீட்டினை (Post Traumatic Stress) ஏற்படுத்துகின்றது.

ஓரு அழகான பூச்சாடி மீது கல்லெறியும்போது அது எப்படி நொருங்குகின்றதோ அவ்வாறே எமது மனதிலும் நெருக்கீடுகள் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. உளப்பாதிப்பினை எதிர்கொண்ட மனம் அதற்குப்பின் இரு பாதைகளில் இயங்கலாம். முதலாவது அப்பாதிப்புக்களை உள்வாங்கி நகரல் (Assimilation). அடுத்தது அப்பாதிப்புக்களை நிரப்பி நகரல் (Accommodation) ஆகும்.

Assmilation and accomodation

Assmilation and accomodation

உளத்தாக்கத்திற்குப் பின்பான மனம் அதனை நிரவி நகரல் என்பது உளத்தாக்கத்திற்குப் பின்பான வளர்ச்சி அல்லது உளத்தாக்கத்திற்குப் பின்பான மீபடிநிலை ஆகும். (Post Traumatic Stress)

உளத்தாக்கத்திற்குப் பின்பான நெருக்கீட்டின் அளவிற்கும் உளத்தாக்கத்திற்குப் பின்பான மீபடிநிலைக்கும் இடையிலான தொடர்பு பின்வருமாறு அமையும்.

Figure

அதாவது உளத்தாக்கத்தின் பாதிப்பு குறைவாக உள்ளபோது உளத்தாக்கத்திற்குப் பின்பான மீபடிநிலை குறைவாக இருக்கும். உளத்தாக்கத்திற்கு பின்பான நெருக்கீடு அதிகமாகும்போது உள்ளபோது உளத்தாக்கத்திற்குப் பின்பான மீபடிநிலை அதிகரித்து, உளத்தாக்கத்திற்கு பின்பான நெருக்கீடு மேலும் அதிகரிக்கும்போது உளத்தாக்கத்திற்குப் பின்பான மீபடிநிலை குறைவடையும். இது தலைகீழ் J வடிவில் அமையும்.

உளத்தாக்கம் சிறிதாக இருந்தால் அது எமது உலகப் பார்வையில் சிறிதளவு உடைவினையே ஏற்படுத்தும். இதனை துன்பம் எனலாம். உளத்தாக்கம் பெரிதாக இருந்தால் அது எமது உலகப் பார்வையினையே மாற்றிவிடும். இதனை கலி எனலாம். கலிநிலை எம்மை முன்னைய நிலைக்கு கொண்டு வரவிடாது.

உளத்தாக்கத்திற்குப் பின் மனிதன் உலகை புதிய பார்வையில் கற்க வேண்டும். இதற்கு உரிய மதிநுட்பக் காப்பு ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடும். சிறந்த மதிநுட்பக் காப்பினை உடையோர் (Cognitive Conservation) சிறந்த முன்னேற்றத்தை அடைவர். அதாவது உளநெருக்கீட்டில் ஏற்பட்ட தடைகளைத் தாண்டி முன்னேறுவர். அதாவது நெருக்கீட்டினால் தவறான பாதைக்குச் செல்லாது பிரச்சினைகளுக்குத் தீர்வினை எதிர்கொண்டும் உணர்வுகளினால் ஏற்படும் மாற்றங்களிற்கு தீர்வினை எதிர்கொண்டும் நகர்வர். இவையே உளத்தாக்கத்திற்குப் பின்பான மீபடிநிலை ஆகும். உணர்வுபூர்வமான எதிர்கொள்ளலில் சமயக்கிரியைகள், கலாச்சார வழக்கங்கள் என்பனவும் இன்றியமையாதவையாகின்றன.

தனிமனிதனுக்கு உளத்தாக்கத்திற்குப் பின்பான மீபடிநிலை அமைகின்றதோ அவ்வாறே கூட்டான வன்னின்னல்களிற்கு உட்பட்ட சமூகத்திற்கும் வன்னின்னல்களிற்கு பின்பான சமூக மீபடிநிலை உண்டு. அதனை அடைவதற்கு அச்சமூகத்திற்கான கூட்டான மதிநுட்பக்காப்பு மிகவும் முக்கியமானதாகும்.

உதாரணமாக வன்னி வன்னின்னல்களிற்கு பின்பான சமூக மீபடிநிலையில் பத்து ஆண்டுகள் கழிந்தும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. குறிப்பாக சுமார் 30 – 50 வயதில் உள்ளவர்களுக்கு சர்வதேச தரத்திலான தொழில்நுட்பக் கற்கைநெறிகளும், அவற்றிற்கான தொழிற் தகைமைச் சான்றிதழ்களும் வழங்கும் தொழிற்கல்வி நிலையங்கள் உருவாக்கப்படல் வேண்டும். இதனால் அவர்கள் சமூகவாழ்வில் இழந்த சில விடயங்களைத் தாண்டி முன்னேற முடியும்.

அண்மைய இனமதரீதியான வன்முறைகளுக்கு பின்பாக எமது சமூகத்தின் கூட்டான மதிநுட்பக்காப்பு மிகவும் சாதுரியமாக அமைய வேண்டும். ஆனால் அரசியல் பிரக்ஞைகள், சமயப் பிரக்ஞைகள் தீயவழியில் சமூகத்தினை வழிநடத்த முயல்வது எமது எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதல்ல.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *