Search
Wednesday 19 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

எதற்காக சர்வகட்சி மாநாடு?

எதற்காக சர்வகட்சி மாநாடு?

வீரகத்தி தனபாலசிங்கம்

பாராளுமன்றம் கடந்த திங்கட்கிழமை அரசியலமைப்பு சபை என்ற வகையில் கூடி அரசியலமைப்பு வரைபு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை விவாதிக்க ஆரம்பித்த சிலமணி நேரங்களில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய நல்லிணக்க மகாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய மகா நாடொன்றை விரைவில் கூட்டவிருப்பதாக அறிவித்ததைக் காணக்கூடியதாக இருந்தது. உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பில் தப்பெண்ணத்தை உருவாக்கும் வகையிலான தவறான தகவல்களைத் தடுப்பதற்காக முன்னெடுக்க உத்தேசித்திருக்கும் மூன்று முக்கியமான செயன்முறைகளின் ஒரு அங்கமே சர்வகட்சி மகாநாடாகும். சகல மதங்களின் தலைவர்களையும் உள்ளடக்கிய மகாநாடும், அரசியல் சீர்திருத்தங்களில் அக்கறைகொண்ட கல்விமான்கள் மற்றும் புத்தி ஜீவிகள் மகாநாடுமே அடுத்த இரு செயன்முறைகள் என்று ஜனாதிபதி சிறிசேன தெரிவித்தார். கடந்த வாரம் அரசியலமைப்புச்சபை இடைக்கால அறிக்கையை நான்கு நாட்கள் விவாதத்துக்கெடுத்திருந்தது. அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறைகள் ஒப்பீட்டளவில் ஒரு தீர்க்கமான கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில் இந்த மூன்று படி நிலைச்செயற்பாடுகள் தொடர்பிலான யோசனையை எதற்காக ஜனாதிபதி முன்வைத்திருக்கிறார் என்ற கேள்வியைக் கேட்காமல் இருக்க முடியவில்லை.

சர்வகட்சி மகாநாடுகள் எனப்படுபவை இலங்கையர்களாகிய எமக்கு ஒன்றும் புதியவையல்ல. முன்னைய சர்வகட்சி மாநாடுகளில் சகல மதங்களினதும் தலைவர்களும் கூட பங்கேற்றிருந்தார்கள். ஆனால், பெளத்த மத தலைவர்களின் அபிப்பிராயங்களைத் தவிர, வேறு எந்தவொரு மதத்தினதும் தலைவர்களின் அபிப்பிராயங்கள் அரசியல்வாதிகளின் குறிப்பாக அரசாங்கத் தலைவர்களின் கவனத்தைப் பெற்றதாக வரலாறு இல்லை.

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சியாக தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய முக்கிய அரசியல் கட்சிகளுடன் பல தடவைகள் அரசாங்கத் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்கள். ஆனால், முழு அளவிலான சர்வகட்சி மகாநாடு 1984 ஆம் ஆண்டில் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவினாலேயே முதன் முதலாக கூட்டப்பட்டது. 1983 கறுப்பு ஜூலைக்கு பின்னரான நிகழ்வுப்போக்குகளின் மத்தியில் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காணுமாறு இந்தியாவிடமிருந்து வந்த கடுமையான நெருக்குதல்களின் விளைவாகவே அவர் அதைச் செய்தார். தமிழ்நாட்டில் அரசியல் அஞ்ஞாதவாசம் செய்த அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், இரா சம்பந்தன் போன்ற தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர்கள் இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் அங்கிருந்து வந்து சர்வகட்சி மகாநாட்டில் பங்கேற்றார்கள். இரண்டாவது சர்வகட்சி மகாநாடு இந்திய– இலங்கை சமாதான உடன்படிக்கையை அடுத்து வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் இந்திய அமைதி காக்கும் படை நிலைகொண்டிருந்த காலகட்டத்தில் 1989 நடுப்பகுதியில் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவினால் கூட்டப்பட்டது. வடக்கில் வன்னிக்காட்டில் இருந்து இலங்கை விமானப்படையின் ஹெலிக்கொப்டரில் கொழும்பு வந்து விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்டன் பாலசிங்கம் உட்பட அவ்வியக்கத்தின் மூத்த தலைவர்களும் அந்த மகாநாட்டில் பங்கேற்றனர். ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது ஆட்சிக்காலத்தில் அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பில் தேசிய கலந்தாலோசனைச் செயன்முறையொன்றை முன்னெடுத்தார் என்ற போதிலும், அதை ஒரு சர்வகட்சி மகாநாடென்று கருத முடியாது. இறுதியாக சர்வகட்சி மகாநாட்டை கூட்டியவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அது போர்க் காலக்கட்டத்தில் நடைபெற்றது. அந்த மகாநாட்டில் லங்கா சமசமாஜக்கட்சி தலைவரும் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் நியமிக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதித்துவக் குழுவினால் ஜனாதிபதி ராஜபக் ஷவிடம் விரிவானதொரு அறிக்கை கையளிக்கப்பட்ட போதிலும் அதற்கு பிறகு எதுவுமே நடக்காமல் அது வரலாற்றுக்குள் புதைந்து போய்விட்டது.

இங்கு ஒரு முக்கியமான விடயத்தை நினைவு படுத்துவது அவசியம். ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையில் ஐக்கிய தேசியக்கட்சி அதன் 1977 ஜூலை பொதுத்தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்கு நியாயபூர்வமான அரசியல் பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை ஏற்றுக் கொண்டு அவற்றுக்கு அரசியல் இணக்கத்துடனான தீர்வொன்றைக் காண்பதற்காக (ஆட்சிக்கு வந்ததும்) சர்வகட்சி மகாநாடொன்று கூட்டப்படுமென்று வாக்குறுதி அளித்திருந்தது. அந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி இலங்கை தேர்தல் வரலாற்றில் முன்னென்றுமேயில்லாத வகையில் பிரமாண்டமான வெற்றிபெற்று பாராளுமன்றத்தில் ஆறில் ஐந்து அசுரப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தபோதிலும், தமிழர்களுக்கு அளித்த சர்வகட்சி மகாநாட்டு வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டுவிட்டது. அவரது அரசாங்கத்திற்குள் இருந்த படுமோசமான இனவாத சக்திகளின் அனுசரணையுடன் 1983 ஜூலையில் நாடுபூராகவும் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்செயல்களுக்கு பின்னரான காலக்கட்டத்தில் இந்தியாவின் கடுமையான நெருக்குதல்களுக்குப் பிறகே ஜெயவர்தன சர்வக்கட்சி மகாநாட்டை கூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Politics

தேசிய இனப்பிரச்சினைக்கு நிலைபேறான அரசியல் இணக்கத்தீர்வொன்றைக் காணும் மானசீகமான அக்கறையுடன் அந்த சர்வகட்சி மகாநாடுகள் கூட்டப்பட்டதாக கூறமுடியாது. காலத்தைக் கடத்தி பிரச்சினையை மேலும் இழுத்தடித்து மக்களின் கவனத்தைத் திசைத்திருப்பும் கெடுதியான நோக்குடனேயே அந்த மகாநாடுகள் நடத்தப்பட்டன என்பதை வரலாறு நிரூபித்திருக்கிறது. இன்றுவரை அதுதான் உண்மை நிலை. சர்வகட்சி மாநாடுகள் தொடர்பில் தமிழ்மக்களுக்கு இத்தகையதொரு ‘கசப்பானதும் கனதியானதுமான’ படிப்பினை கிடைத்த பின்புலத்தில், இன்றைய ஜனாதிபதி சிறிசேன கூட்டுவதற்கு உத்தேசிக்கும் புதிய சர்வகட்சி மகாநாடு குறித்து வித்தியாசமாக நினைத்துப் பார்க்க எம்மால் முடியவில்லை. முன்னைய சர்வகட்சி மகாநாடுகள் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத்தீர்வொன்றைக் காண்பதற்கான வழிவகைகளை ஆராயும் நோக்குடன் என்று மாத்திரமே கூட்டப்பட்ட அதேவேளை, தற்போது ஜனாதிபதி உத்தேசிக்கும் சர்வகட்சி மகாநாடு முழுமையாக அரசியலமைப்புச் சீர்திருத்தத்தைக் கொண்டு வருவதற்கான செயன்முறைகளுக்கு ஆதரவான கருத்தொருமிப்பை செயற்படுத்தும் நோக்குடனானது என்று கூறப்படுகிறது. அதுவே ஒரு வித்தியாசம். உத்தேச அரசியலமைப்பு தொடர்பில் தப்பெண்ணத்தை உருவாக்கும் வகையிலான தவறான பிரச்சாரங்களை தடுப்பதே தனது மாநாட்டு யோசனையின் நோக்கம் என்று ஜனாதிபதி சிறிசேன கூறுகிறார்.

அரசியலமைப்புச் சீர்த்திருத்தங்கள் தொடர்பில் நாட்டு மக்கள் மத்தியில் குறிப்பாக பெரும்பான்மைச் சமூகத்தவர்கள் மத்தியில் அநாவசியமான பீதிகிளப்பப்பட்டு வருகிறது என்பது உண்மையே. அரசியல் சீர்திருத்தங்களுக்கு எதிரான அரசியல் சக்திகள் மிகவும் உரத்துப் பேசுபவையாகவும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் அவற்றின் செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடியவையாகவும் இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அந்தச் சக்திகள் நாட்டின் சகல பகுதிகளிலும் முனைப்பான பிரச்சாரங்களைச் செய்யக்கூடிய வலுவுடன் இருக்கின்றன. 2015 ஜனவரி ஆட்சிமாற்றத்துக்குப் பிறகு நாட்டில் தோன்றியிருக்கின்ற ஒப்பீட்டளவிலான ஜனநாயக சுதந்திர சூழ்நிலையை அரசியல் சீர்திருத்தங்களுக்கு எதிரான ஜனநாயக விரோத சக்திகளே உச்ச பட்சத்துக்கு தங்களுக்கு வாய்ப்பான முறையில் பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற அதேவேளை அவற்றுக்கு எதிராக உருப்படியான செயற்பாடுகளை முன்னெடுக்க அரசாங்கத்தினால் இயலாமல் இருக்கிறது. இதுவே அரசாங்கம் அதன் கொள்கை முன்னெடுப்புகள் மற்றும் செயற்திட்டங்கள் தொடர்பில் முகங்கொடுக்க வேண்டியிருக்கின்ற கடுமையான எதிர்ப்புக்கு பிரதான காரணமாகும்.

அரசாங்கத் தலைவர்கள் கடந்த இரண்டரை வருடங்களுக்கு கூடுதலான காலமாக அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் குறித்துப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அரசியலமைப்புச் சபை உருவாக்கப்பட்டு ஒன்றரை வருடங்களுக்கும் கூடுதலான காலமாக செயன்முறைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், உத்தேச அரசியலமைப்பு தொடர்பில் பெரும்பான்மைச் சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு பயனுறுதியுடைய துடிப்பான அரசியல் பிரச்சார இயக்கத்தை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான கூட்டு எதிரணியைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறைகள் முழுவதையும் மக்கள் மத்தியில் தவறான முறையில் அர்த்தப்படுத்துவதற்கு மிகவும் தரக்குறைவானதும் நாகரிக சமுதாயத்தினால் எதுவிதத்திலும் அனுமதிக்கமுடியாத வகையிலானதுமான செயற்பாடுகளில் இறங்கியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இத்தகைய எதிர்மறையான பிரச்சாரங்களுக்கு பதிலடி கொடுப்பதில் அரசாங்கத் தரப்பில் காட்டப்பட்டு வந்திருக்கின்ற தயக்கமும், தாமதமுமே தென்னிலங்கையில் அநாவசியமான பீதி கிளம்புவதற்கு வசதியாயமைகின்றன.

அரசியலமைப்புச் சபையின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் இருக்கின்ற சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளித்து சந்தேகங்களை நிவர்த்திக்கக்கூடிய வகையில் உறுதியான அரசியல் போதனை மற்றும் பிரச்சாரச் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் அரசாங்கத் தரப்பு அக்கறை காட்டவேயில்லை. ஆனால், அதே சர்ச்சைக்குரிய
விடயங்கள் தொடர்பில் மக்களைத் தவறாக வழிநடத்தும் நோக்கில் பிரச்சாரங்களையும் செயற்பாடுகளையும் முன்னெடுப்பதே எதிரணிச் சக்திகளின் பிரதான வேலையாக இருக்கிறது. இனவாத, மதவாத, தீவிரவாத சக்திகளின் பிரச்சாரங்களின் விளைவான எதிர்மறையான தாக்கங்களை வெற்றி கொள்வதற்கு சமுதாயத்தின் சகல மட்டங்களையும் எட்டக்கூடியதாக அக்கறையுடனான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். பாராளுமன்றத்தில் விவாதிப்பதன் மூலம் மாத்திரம் மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்து அவர்களிடமிருந்து ஒத்துழைப்பைப் பெறக்கூடியது சாத்தியமேயில்லை.
அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் பெரும்பான்மைச் சமூகத்தின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெறுவதில் அரசாங்கத்தரப்பு உற்சாகத்துடன் செயற்படவில்லை என்பதனால்தான் அரசியலமைப்புச் சீர்திருத்தச் செயன்முறைகளை முன்னெடுப்பதில் அனுகூலமற்ற ஒரு நிலையில் இருப்பதாக உணர்ந்து கொண்ட நிலையில்தான் ஜனாதிபதி சிறிசேன இப்போது சர்வகட்சி மகாநாடு, சர்வமதத் தலைவர்கள் மகாநாடு மற்றும் கல்விமான்கள், புத்திஜீவிகள் மகாநாடு பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார் போலும்.

கடந்தவாரம் அரசியலமைப்புச் சபையில் நடைபெற்ற நான்கு நாள் விவாதத்தின் போது அரசாங்கத் தரப்பைச் சேர்ந்த பிரதான அரசியல் கட்சிகளின் பேச்சாளர்கள் சகலருமே பெரும்பான்மைச் சமூகத்தின் மத்தியில் ஏற்பட்டிருக்கின்ற சந்தேகங்களையும் அச்சத்தையும் தணிப்பதற்கான முயற்சிகளுக்கே அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

சிறுபான்மையினங்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற கட்சிகளின் உறுப்பினர்களைத்தவிர, வேறு எவருமே உத்தேச அரசியலமைப்பின் ஊடாக அந்த மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடியதான திருப்திகரமான ஏற்பாடுகள் செய்யப்படுமென்று உத்தரவாதத்தை அளிக்க முன்வரவில்லை. மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே மாகாண சபைகளுக்கு அதிகாரமளிக்கப்படுமென்று விளக்கமளிப்பதிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் நேரத்தைச் செலவிட்டார்கள். ஒரு சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால், தமிழ், முஸ்லிம், கட்சிகளின் முக்கிய பேச்சாளர்கள் சகலருமே அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு அதி முதன்மை அந்தஸ்த்து வழங்கப்படுவதில் தங்களுக்கு ஆட்சேபம் எதுவுமில்லை என்று வலியுறுத்துவதில் குறியாக இருந்து உரையாற்றினர் என்பதே. ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பௌத்த மதத்துக்கு அதிமுதன்மை அந்தஸ்த்து வழங்கப்படாவிட்டால் புதிய அரசியலமைப்புக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதில்லை என்று பிரசாரம் செய்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற சகல அரசியல் கட்சிகளும் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான அவற்றின் நிலைப்பாடுகளை தெளிவாக அரசியலமைப்புச் சபை விவாதத்தின் போது முன்வைத்திருந்தன. மீண்டும் அதே கட்சிகளை உள்ளடக்கி சர்வகட்சி மகாநாடென்ற பெயரில் ஒரு கூட்டத்தைக் கூட்டுவதன் மூலமாக எதைச் சாதிக்க முடியும்?

ஏனைய மதத்தலைவர்களின் ஆலோசனைகளையும் அபிப்பிராயங்களையும் அக்கறையுடன் கேட்டறிவதற்காகத்தான் ஜனாதிபதி சிறிசேன சர்வமதத் தலைவர்களின் மகாநாட்டைக் கூட்டுவதில் அக்கறை காட்டுகிறார் என்று நம்புகின்ற அளவுக்கு எவரும் எளிதான ஏமாளிகள் அல்ல. பௌத்த மகாநாயக்க தேரர்கள் புதிய அரசியலமைப்பு தொடர்பில் தங்களது திட்டவட்டமான எதிர்ப்பை அண்மைக்காலமாக மிகவும் தெளிவான முறையில் பிரகடனம் செய்திருக்கும் நிலையில், அவர்களின் நிலைப்பாடுகளில் தளர்வை ஏற்படுத்த முடியுமென்று ஜனாதிபதி நம்புகிறாரா? அவர்களைச் சாந்தப்படுத்துவதற்கு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் எல்லாம் அவர்களின் நிலைப்பாடுகளை மேலும் கடுமையடையச் செய்வதற்கே உதவின. ஜனாதிபதி தெரிவித்திருக்கும் யோசனையின் பிரகாரம் புதிய அரசியலமைப்பு தொடர்பில் அரசியல் கட்சிகளுடனும் மதத்தலைவர்களுடனும் மக்களுடனும் ‘விரிவான பேச்சுவார்த்தைகள்’ நடத்தப்படுமென்று பிரதமர் விக்கிரமசிங்கவும் அரசியலமைப்புச் சபை விவாதத்தின் போது தனதுரையில் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தைப் பொறுத்தவரை, அரசியலமைப்புச் சபையில் இடைக்கால அறிக்கையை விவாதித்த பிறகு இப்போது சில மாதங்களுக்கு அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறைகளை கிடப்பில் போடவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அடுத்த வருடம் ஜனவரியில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தல்களும் அதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று. அந்த இடைப்பட்ட காலத்தில் அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பில் அரசாங்கத்துக்கு எதிரான பிரச்சாரங்கள் இடம்பெறாதிருப்பதை உறுதி செய்து கொள்ளவே இந்த சர்வகட்சி, சர்வமத மகாநாட்டு திட்டங்கள்.

முன்னைய சர்வகட்சி மகாநாடுகள் எல்லாமே சர்ச்சைக்குரிய விவகாரங்களில் கருத்தொருமிப்பையோ அல்லது இணக்கப்பாட்டையோ ஏற்படுத்துவதற்குப் பதிலாக மேலும் குரோத உணர்வையும் குழப்பநிலையையுமே தோற்றுவித்தன. சர்வகட்சி மகாநாட்டைக் கூட்டுவதற்கு பதிலாக ஜனாதிபதி சிறிசேனவும் பிரதமர் விக்கிரமசிங்கவும் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் சர்ச்சைக்குரியவையாக இருக்கின்ற விவகாரங்களில் தங்களது இரு கட்சிகளுக்கும் இடையில் கணிசமான கருத்தொருமிப்பை ஏற்படுத்த முயற்சிப்பார்களேயானால் பெருமளவு முட்டுக்கட்டைகள் தம்பாட்டிலேயே விலகிவிடும். முதலில் அவர்கள் அதைச் செய்ய வேண்டும்!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *