Search
Monday 18 June 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

எதிர்பார்ப்புக்களுடன் கிழக்கின் எழுக தமிழ்…!

எதிர்பார்ப்புக்களுடன் கிழக்கின் எழுக தமிழ்…!

-சிவ.கிருஸ்ணா-

இலங்கைத் தீவு 1948 ஆம் ஆண்டு பிரித்தானிய ஏகாதிப்பத்தியத்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற போது இந்த நாட்டின் ஆட்சி உரிமையானது பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிங்கள சகோதரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இலங்கை தேசிய காங்கிரஸ் உருவாக்கத்தில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒன்றுபட்டு செயற்பட்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூககங்கள் அதன் பின் தனித்தனி கட்சி அரசியலை நோக்கி நகர்ந்திருந்தின. 1921 ஆம் ஆண்டு மனிங் அரசியல் யாப்பு சீர்திருத்தம் கொண்டு வரப்பட்ட போது தமிழ், சிங்கள பிரதிநிதித்துவம் தொடர்பில் ஏற்பட்ட குழப்பம் இரு சமூகங்களையும் தனிக் கட்சி அரசியலை தீவிரப்படுத்த தூண்டியிருந்தது. அன்றில் இருந்து இரு சமூகங்களுக்கும் இடையில் ஒரு நிரந்தரமான நல்லிணக்கத்தையோ அல்லது நீதி, நியாயமான ஒரு ஆட்சியையோ ஏற்படுத்த முடியவில்லை.

இலங்கைக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்த டி.எஸ்.சேனநாயக்காவால் உருவாக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியும் சரி, 65 ஆண்டுகால பாராம்பரியம் மிக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் சரி அவ்வப்போது தமிழ் தலைமைகளுடன் பேச்சுக்களை நடத்திருக்கின்றது. ஆனால் அவற்றை நியாயபூர்வமாக தீர்த்து வைக்க விரும்பவில்லை. அதன் விளைவாகவே தமிழ் தேசிய இனம் தனது பூர்வீக பிரதேசமான வடக்கு, கிழக்கை மையப்படுத்தி வன்போக்கு அரசியலை கையில் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. தமிழ் மக்களின் நிரந்தர தீர்வு மற்றும் அவர்களது அபிலாசைகளை முன்னிறுத்தி பல குழுக்கள் ஆயுதக் போராட்டங்களை முன்னெடுத்திருந்தன. இருப்பினும் ஆயுத ரீதியாக போராடிய தமிழ் தலைமைகளிடம் காணப்பட்ட ஒற்றுமையற்ற தன்மையால் அவற்றில் பல தமது இலக்கில் இருந்து மாறி தம்மை பாதுகாக்க அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டிய நிலமை ஏற்பட்டிருந்தது. இது தமிழ் மக்களின் துரதிஸ்டமே. தமிழீழ விடுதலைப் புலிகள் மாத்திரம் ஆயுத ரீதியாக இறுதி வரை அரசாங்கத்திற்கு எதிராக போராடியிருந்தனர். 2002 ஆம் ஆண்டு ரணில் அரசாங்கத்தின் காலப்பகுதியில் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கையைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் அமைப்புக்குள் பிளவுகள் ஏற்பட்டு இறுதியில் 2009 ஆம் ஆண்டு முள்ளியவாய்கால்வரை தமிழ் தேசிய இனம் செல்ல வேண்டியிருந்தது. இந்த வரலாறுகள் அனைவரும் அறிந்ததே.

கிழக்கு மாகாணத்தின் மாவிலாறு நீரை விடுதலைப் புலிகள் மறித்ததாக கூறி ஆரம்பித்த இராணுவ நடவடிக்கை கிழக்கை இழந்து வடக்கு நோக்கி நகர்ந்து முள்ளியவாய்காலுடன் மௌனித்தது. மாவிலாறு நீரை மறித்தமைக்காக தான் போர் நடந்ததா அல்லது விடுதலைப் புலிகளை அழிக்க அதனை சாட்டாக பயன்படுத்தியதா என்பது வேறு விடயம். அதனை ஆராய்வது இப் பத்தியின் நோக்கமும் அல்ல. ஆனாலும் இந்த இடத்தில் மாவிலாற்றை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. தமிழர்களின் வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் கிழக்கு மண் தமிழர் வரலாற்றில் பல்வேறு நெருக்குதல்களை எதிர்நோக்கிய மற்றும் எதிர்நோக்கி வருகின்ற மண். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை வடக்குடன் ஒப்பிடுகின்ற போது மூவின மக்களும் செறிவாக வாழ்கின்ற பகுதி. போராட்ட காலத்தில் இருந்து அதிக நெருக்குவாரங்களை எதிர்நோக்கி வருகின்றது. திட்டமிட்ட குடியேற்றங்கள், பௌத்தமயமாக்கல், வெளிநாடுகளுக்கு நிலங்களை தாரை வார்த்தல் என கிழக்கு மாகாணம் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கிறது. தமிழ் தேசிய இனத்தின் கைகளில் இருந்து பறிபோகும் அபாய நிலையில் அது உள்ளது.

தமிழ் மக்களின் தற்போதைய அரசியல் நடவடிக்கைகளில் கிழக்கை காட்டிலும் வடக்கிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் தன்மை காணப்படுகிறது. சர்வதேச இராஜதந்திரிகளின் வருகை, அரசின் கவனம் என எல்லாம் வடக்கு நோக்கியே குவிந்திருக்கிறது. ஆனால் அந்த நிலை மாற்றப்பட வேண்டும். வடக்கை காட்டிலும் கிழக்கு அதிக பிரச்சனைகளை கொண்ட பிரதேசம். அப்பகுதியும் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசம் என்பதை தமிழ் தலைமைகள் மறந்து விட முடியாது. இவ்வாறான ஒரு நிலையில் தமிழ் பேசும் மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவாகிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற பின் உருவாகிய இந்த நல்லாட்சி அரசாங்கம் கூட வடக்கு, கிழக்கு மக்களின் அபிலாசைகளை புரிந்து கொண்டதாக தெரியவில்லை. கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பில் மங்களராமய பிக்கு அண்மையில் மேற்கொண்ட செயற்பாடுகள் எல்லோரும் அறிந்ததே. அவ்வாறான ஒருவருக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் கபினற் அமைச்சர் நற்சான்றிதழ்லும் வழங்கியிருந்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதும் தென்னிலங்கை அரசியல்வாதிகளின் மனங்களில் இன்னும் மாற்றம் ஏற்படவில்லை என்பதையே அது வெளிப்படுத்தியிருககின்றது. இதனால் தமிழ் மக்கள் தமது அபிலாசைகள், கோரிக்கைகள் தொடர்பில் புரிய வைக்க வேண்டிய தேவை மீண்டும் எழுந்திருக்கிறது.

2009 ஆம் ஆண்டு முள்ளியவாய்கால் பேரவலத்திற்கு பின்னர் தமிழ் மக்கள் சார்ந்த அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வரும் பிரதான அமைப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு விளங்குகிறது. ஆனாலும் அவர்கள் கூட இந்த விடயத்தில் தோற்றுபோனவர்களாய் உள்ளார்கள். நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி இந்த அரசாங்கத்தை உருவாக்கி ஐ.நா அழுத்தங்களை குறைப்பதற்கு உதவிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் 2016 ஆம் ஆண்டு நியாயபூர்வமான தீர்வு தமிழ் மக்களுக்கு கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டிருந்தார். அது இன்று கானல் நீராகவே போய்விட்டது. இந்த அரசாங்கம் மீது தமிழ் தேசியக் கூட்டமைப்பு வைத்திருந்த நம்பிக்கை ஏமாற்றத்தையே கொடுத்திருக்கிறது. தொடர்ந்தும் கால நீடிப்புக்களை வழங்கி வழங்கி தமிழ் தேசிய இனத்தின் உரிமைப் போராட்டம் இன்று 65 வருடத்தை தாண்டிவிட்டது. பல தலைமுறைகள் இந்த நாட்டில் துன்பத்தை அனுபவித்து விட்டது. அடுத்த தலைமுறைக்கும் இந்த பிரச்சனையை விடாது தீர்க்க வேண்டிய தேவை இருக்கிறது. இதனால் தமிழ் தலைமைகளால் செய்ய முடியாதததை மக்கள் தான் செய்ய வைக்க வேண்டும். ஜனநாயக ரீதியாக தமது அழுத்தங்களை சர்வதேசத்திற்கும், அரசாங்கத்திற்கும், தமிழ் தலைமைகளுக்கும் வெளிப்படுத்த வேண்டும்.

தமிழ் தேசிய இனம் தனது இறைமையை யாரிடமும் அடகு வைத்து விடவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டத்தில் நிற்கிறது. அதனை நன்குணர்ந்த சமூக ஆர்வலர்கள், கூட்டமைப்பின் சில பங்காளிக் கட்சிகள், சூழ்சிகளின் காரணமாக கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு அரசியல் கட்சி, புத்துஜீவிகளும், துறைசார் வல்லுனர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், தொழில் சங்கங்கள், பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ் மக்கள் பேரவை என்னும் ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். தமிழ் மக்கள் தமது அரசியல் தலமை தமது அரசியல் அபிலாசைகளை சரியான வகையில் அனைத்து தரப்பினருடனும் பேரம் பேசி நீண்டகாலமாக நீடித்து வரும் இனப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வை எட்ட வேண்டும் என்று நினைக்கிறது.

இறுதியாக நடைபெற்ற யுத்த்தில் இடம்பெற்றதாக ஐ.நா மற்றும் சர்வதேச சமூகத்தினாலும் சுட்டிக்காட்டுப்பட்டுள்ள போர்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், மனித குலத்திற்கு எதிரான செயல்கள் என்பவற்றை ஆராய்ந்து குற்றம் சுமத்தப்பட்டவர்களிடமே விசாரிக்கும் பொறுப்பை ஒப்படைக்காமல் சர்வதேச விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தியும், இந்த நாட்டில் தமிழ் தேசிய இனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒடுக்கு முறையின் தொடக்க காலத்தில் இருந்தே பலவந்தமாக காணாமல் போகச் செய்தல் என்ற ஒரு விடயம் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. இறுதியாக நடைபெற்ற யுத்தத்தில் இவ்வாறு பல்லாயிரக்கணக்கானோர் பலவந்தமாக காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளனர். இதனை உரிய முறையில் விசாரிப்பதற்கு அரசாங்கம் அக்கறை செலுத்தாமல் இருப்பதில் இருந்து அதனை விசாரிப்பதில் இந்த அரசாங்கத்திற்கு நாட்டம் இல்லை என்பதும் தெரிகிறது. ஆகவே இது குறித்தும் ஒரு சர்வதேச விசாரணை தேவைப்படுகிறது. பன்னெடும் காலமாக பரம்பரை பரம்பரையாக தாம் வாழ்ந்து வந்த பூமியில் யுத்தத்தை காரணம் காட்டி அந்த மக்களை அப்புறப்படுத்தி விட்டு அவர்களை சொந்த நாட்டிலேயே ஏதிலிகளாக்கிவிட்டு யுத்தம் முடிந்த பின்னரும் அவர்களது பூமியை அவர்களிடம் கையளிக்காமல் இருக்கிறது. அந்தக் காணிகளில் புத்தர் சிலைகைளை வைத்து பெரிய பெரிய அளவில் விகாரகைளை கட்டுவதுடன் புதிய புதிய கிராமங்களை உருவாக்கி இங்கு சிங்கள மக்களை பலவந்தமாக குடியேற்றும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. ஒரு புறம் இராணுவத்தரப்பினரால் ஏற்படுகின்ற அச்சம் மறுபுறத்தில் புதிதாக கொண்டு வந்து விடப்பட்டுள்ள சிங்கள மக்களை கண்டதும் ஏற்படுகின்ற அச்சம் என்று இருவிதமான அச்சுறுத்தலுக்கு மத்தியில் தமிழ் தேசிய இன்று வாழ்கிறது. அவசரகால சட்ட்த்தின் கீழும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழும் வகை தொகையின்றி கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர் யுவதிகள் இன்று சட்டத்தின் மூலமாக கூட விடுதலை பெற முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.

இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு தமிழ் அரசியல் கட்சி தலைமைகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும், சர்வதேச சமூகத்திற்கும் தமிழ் மக்களின் பிரச்சனைகளை உரிய வகையில் தீர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்கும் தேர்தல் அரசியலுக்கு அப்பால் ‘எழுக தமிழ்’ எனும் எழுச்சிப் பேரணி ஒன்றை தமிழ் மக்கள் பேரவை யாழ்ப்பாணத்தில் ஒழுங்கு செய்தது. அதில் சாரை சாரையாக அணிதிரண்ட மக்கள் தமது கோரிக்கையை வலியுறுத்தி தமது உரிமைக்காக குரல் கொடுத்தனர். புதிய அரசியல் அமைப்பில் தமிழ் மக்களது அபிலாசைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பலரும் கூறி வரும் நிலையில் அதற்கான தேவை மீண்டும் எழுந்திருக்கிறது.

அதன் தொடர்ச்சியாவே கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 21 ஆம் திகதி எழுக தமிழ் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான தீவிர பிரச்சார நடவடிக்கைகளில் அதன் ஏற்பாட்டுக்குழு இறங்கியிருக்கின்றது. புதிய அரசியலமைப்பு வரவுள்ள இந்த நிலையில் மட்டக்களப்பில் நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணியானது முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பலராலும் கூர்ந்து அவதானிக்கக் கூடியதொன்றாகவும் மாறியிருக்கின்றது.

இதனால் தமிழ் மக்கள் அனைவரும் 65 வருட இன்னல்களை மீண்டும் ஒரு தடவை வெளிப்படுத்தும் சந்தர்ப்பமாக கருதி மட்டக்களப்பு எழுக தமிழில் கூட வேண்டும். வீதிகள் தோறும் தமிழ் மக்களின் பேரணியின் எதிரொலிப்பு தெரிய வேண்டும். நாம் தலை நிமிர்ந்து வாழ்வதற்கும், எமக்கு இழைக்கப்பட்ட அநிதீகளுக்கு நீதி கிடைப்பதற்கும், இந்த நாட்டில் உள்ள அனைத்து சமூகத்தினருடனும் நாம் கைகோர்த்து நடப்பதற்கும் இந்த பேரணி மிகவும் அவசியமானது. இதுவரை காலமும் யாரோ எமக்கு விடுதலை பெற்றுத் தருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருந்த எமக்கு, எமக்கான விடுதலையை நாமே பெற்றுக் கொள்ள முடியும் அல்லது பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வெளிப்படுத்துவதற்கான ஒரு அரிய சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இந்த சந்தர்ப்பம் தொடர்ந்தும் இருக்குமா என்பது சந்தேகமே. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும். எனவே கிழக்கில் எழுக தமிழ் பேரணியில் எழுக தமிழாய் அணிதிரள்வோம்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *