Search
Monday 18 June 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

எதிர்பார்ப்புக்களுடன் கிழக்கின் எழுக தமிழ்!

எதிர்பார்ப்புக்களுடன் கிழக்கின் எழுக தமிழ்!

-றெஜி-

வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் பேராதரவுடன் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதிவியேற்று இரண்டு வருடங்கள் கடந்து விட்டன. ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலையடுத்து தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. தமிழ் மக்கள் 69 வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டில் நீடித்து இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு கிட்டிவிடும் என நம்பியிருந்தனர். ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஐ.நா மனிதவுரிமை பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட மனிதவுரிமை மீறல் மற்றும் போர்க்குற்றம் தொடர்பான தீர்மானங்களில் இலங்கை அரசாங்கமும் இணை அணுசரணை வழங்கியிருந்தது.

இலங்கை அரசாங்கம் இணை அணுசரணை வழங்கி ஏற்றுக் கொண்ட விடயங்களைக் கூட இதுவரை நடைமுறைப்படுத்தாத நிலை தொடர்வதுடன், சில நல்லெண்ண நடவடிக்கைகளை செய்ததாக காட்டுவதற்கான முயற்சிகளையும் ஏனோ தானே என்று செய்திருக்கின்றது. ஆங்காங்கே சில பகுதிகளில் இடம்பெற்ற காணிவிடுவிப்பு மற்றும் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளமை என்பவை அதனையே வெளிப்படுத்துகின்றது.

இம்மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மனிதவுரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கம் எழுத்து மூல அறிக்கையை வழங்கி மேலும் கால அவகாசத்தை கோரவுள்ளது. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமன் என்ற நிலையில் ஐ.நா தீர்மானங்களை நீர்த்துப் போக செய்வதற்கான நடவடிக்கைகள் திரைமறைவிலும், வெளிப்படையாகவும் இடம்பெறத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் விடுதலைக்காகவும், சமநீதிக்காகவும், ஓடுக்குமுறைக்கு எதிராகவும் போராடிய தமிழ் தேசிய இனம் இந்த அரசாங்கம் தொடர்ந்தும் தம்மை ஏமாற்றுகின்றது என்பதையும், தொடர்ந்தும் பௌத்தமயமாக்கல், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், தமிழ் பிரதேசங்களின் இனவிகிதாசாரத்தை குழப்புதல் என திட்டமிட்ட நடவடிக்கைகளை வடக்கு, கிழக்கு பகுதிகளில் முன்னெடுத்து வருகின்றது என்பதையும் ஒருமித்த குரலாய் வெளிப்படுத்த வேண்டிய தேவை எழுந்திருக்கின்றது. இது காலத்தின் தேவையும் கூட. மாறியுள்ள சர்வதேச சூழலில் தமிழ் மக்கள் தமக்கான நீதிக்காவும், உரிமைக்காகவும், இறைமைக்காகவும் உறுதியுடன் இருக்கின்றார்கள் என்பதை மீண்டும் வெளிப்படுத்த வேண்டிய தேவை எழுந்திருக்கின்றது. வடக்கு, கிழக்கு பகுதிகளில் காணிவிடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் மக்கள் பொறுமையிழந்தவர்களாக தாமாகவே போராட முன்வைந்துள்ளனர். அந்த போராட்டங்களின் உண்மையையும், அதற்கான தீர்வை பெறுவதற்கும் ஒட்டுமொத்த குரலாய் ஒலிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் தான் கிழக்கின் எழுக தமிழ் பேரணி முக்கியம் பெறுகின்றது.

வடமகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களின் இணைத்தலைமையில் உருவான தமிழ் மக்கள் பேரவை கடந்த செப்ரெம்பர் 24 ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளியில் எழுக தமிழ் பேரணியை நடத்தியது. அதில் பல தடைகளையும் தாண்டி சாரை சாரையாக தமிழ் பேசும் மக்கள் கலந்து கொண்டு தமது அபிலாசைகளை ஓருமித்த குரலில் ஒங்கி ஒலித்தனர். புதிய அரசியல் அமைப்பிலும் தமிழ் மக்களது அபிலாசைகளை இந்த அரசாங்கம் புறக்கணித்து நடைமுறைப்படுத்த முயலும் நிலையில், தமிழ் பேசும் மக்கள் தமது கோரிக்கைகளை இந்த அரசாங்கத்திற்கும், சர்வதேசத்திற்கும் மீண்டும் வலியுறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனால் வடக்கு, கிழக்கு இணைந்த தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசங்களில் ஒன்றான மட்டக்களப்பில் நாளை எழுக தமிழ் பேரணி நடைபெறவுள்ளது.

வடமாகாண முதலமைச்சரும், பேரவையின் இணைத்தலைவருமான சி.வி. விக்கினேஸ்வரன் அவர்கள் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அழைப்பு கட்சி சார்ந்ததல்ல. மதம் சார்ந்ததல்ல. இனம் சார்ந்ததல்ல. எமது அழைப்பு தமிழ்மொழி சார்ந்தது. தமிழ் மொழி பேசும் யாவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். எமது பவனி ‘எழுக தமிழர்’ என்று பெயரிடப்படவில்லை. இந்து, முஸ்லீம், கிறீஸ்தவ சகோதரத்துவத்தை அவர்களின் பொது மொழியாம் செந்தமிழ் ஊடாக நிலை நிறுத்தவே எமது பவனியானது ‘எழுக தமிழ்’ என்று பெயர்பெற்றது. ஏன் தமிழுக்கு முதலிடம் கொடுத்துள்ளீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். ஏனென்றால் கிழக்கு மாகாணத்தில் 85 சதவிகிதத்திற்கு மேல் தமிழ்ப் பேசுவோர் இருந்த காலம் போய் தற்போது மூன்றில் ஒரு பங்கு சிங்கள மொழியால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. காணிகள் பறிபோயுள்ளன. கலைகள் சிதைவடைந்துள்ளன. கலாச்சாரம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. மொத்தத்தில் ‘எழுக சிங்களம்’ எல்லை தாண்டி வந்து இங்கு குடி கொண்டுள்ளது. சுயநலம் மிக்க அரசியல்வாதிகளுக்கன்றி மற்றவர்கள் யாவர்க்கும் இது வெள்ளிடைமலை. இது காறும் ஒடுக்கப்பட்ட தமிழ்ப் பேசும் மக்கள் இனியாவது விடிவு காணவே ‘எழுக தமிழ்’ எழுந்து வருகின்றது’ என அதன் அவசியம் தொடர்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் பேசும் மக்கள் இதனை உணர்ந்தவர்களாக, காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்ற பழமொழிக்கு அமைவாக எழுக தமிழாய அணிதிரளவேண்டியது அவசியமானதும், கட்டாயமானதும் கூட. வடக்கு மக்களுக்கு நாம் சளைத்தவர்கள் அல்ல என்பதை கிழக்கு மாகாண மக்கள் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் வழங்கிய பங்களிப்புக்களில் இருந்து அறிந்து கொள்ள முடியும். அதே நிலையில் வடக்கின் எழுக தமிழ் மக்கள் அலையை மிஞ்சுவதற்கு கிழக்கின் தடைகளை உடைத்து தமிழ் தேசத்தின் விடுவிக்காக அனைத்து வடக்கு, கிழக்கு வாழ் மக்கள் அனைவரும் இந்த பேரணியில் கலந்து கொண்டு தமிழர் தாயகப் பிரதேசத்தில் வாழ்கின்ற அனைவரும் சமத்துவம் மிக்கவர்கள் என்பதையும், சமவுரிமையுடையவர்கள் என்பதையும், ஒரு நியாயமான கோரிக்கையை முன்வைத்து உரிமைக்காக போராடி வருபவர்கள் என்பதையும் சகலருக்கும் தெரியப்படுத்தும் வகையில் அணிதிரளவேண்டும். மட்டுநகரின் நாவற்குடா விவேகானந்தா விளையாட்டுக் கழகத்திடல் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிய வேண்டும். தமிழ் நாட்டில் ஜல்லிக் கட்டுக்காக திரண்ட எழுச்சியை எழுக தமிழ் மூலம் மீண்டும் வெளிப்படுத்துவோம். வாழ்க தமிழ்… எழுக தமிழ்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *