Search
Friday 14 August 2020
 • :
 • :
தலைப்பு செய்திகள்

“ஒப்பரேசன் தமிழ் தேசியத்தின் முடிவு”: சுமந்திரனை புரிந்துகொள்ளுதல்

“ஒப்பரேசன் தமிழ் தேசியத்தின் முடிவு”: சுமந்திரனை புரிந்துகொள்ளுதல்

லோ. விஜயநாதன்  

தமிழர்கள் எப்போது தமக்கென்று அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார மூலோபாய கொள்கைகளை வகுக்கக்கூடிய நிறுவனமயப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை உருவாக்கி அவற்றுக்கூடாக தமது தேசவிடுதலை போராட்டத்தை நகர்த்த முற்படுகின்றார்களோ அன்றுதான் அழிவு நிலையில் இருக்கும் தமிழ் தேசியம் பாதுகாக்கப்படும். இல்லாதுவிட்டால் ஏகாதிபத்திய நாடுகளின் எடுபிடிகளாக மாறி இப்போதுவரை இலக்கற்ற பாதையில் பயணிப்பதுபோன்றே தொடர்ந்தும் பயணிக்கவேண்டி வரும். இதற்கு சிறந்த உதாரணம் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் எனும் நபரின் பிடிக்குள் சிக்கி தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளாகும். தமிழ் தேசிய போராட்டத்தை முன்நகர்த்துவதற்கு என்று உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை பயன்படுத்தியே தமிழ் தேசியத்துக்கு எதிரான காய் நகர்த்தல்களை மிகவும் சாமர்த்தியமாக மேற்கொண்டுவரும் சுமந்திரன் தனது நடவடிக்கைகளின் முடிவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற ஒன்றையே இல்லாமல் செய்யும் கைங்கரியத்தை செய்துவருகிறார்.

எப்படி கருணாவை பயன்படுத்தி நிழல் தமிழீழ தனியரசு அழிக்கப்பட்டதோ அதைப்போலவே ஒரு நடவடிக்கைக்காக 2009 முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட்டவர் சுமந்திரன் என்று கருதும் வகையில் அவரது செயற்பாடுகள் அமைந்துள்ளன. “ஒப்பரேசன் தமிழ்தேசியத்தின் முடிவு” என்ற நடவடிக்கையை செயற்படுத்த இறக்கிவிடப்பட்டுள்ளவரே சுமந்திரன் என்று  கருத இடமுண்டு.

தனது இறைமைக்கு ‘தமிழ்தேசியம்’ ஒரு பெரும் ஆபத்து என்பதே இந்திய மூலோபாயவகுப்பாளர்களின் சிந்தனையாக இன்றுவரை இருந்துவருகிறது. இதனால் தான் ஆயுத போராட்டம் மூலம் தமிழ் தேசியத்தை வென்றெடுக்கும் விழிம்புவரை வந்த விடுதலைப்புலிகளை அழித்தொழிக்கும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கியது.

யுத்தத்திற்கு பின்னரும் தமிழ் தேசியகோட்பாடுகளை அரசியல் ரீதியாக தோற்கடிக்கவேண்டிய தேவை இந்தியாவுக்கு இருந்தது. விடுதலைப்புலிகளினால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை இல்லாமல் செய்வதும் அதற்கு முன்னர் அதே தமிழ் தேசிய கூட்டமைப்பை பயன்படுத்தியே தமிழ் தேசிய கோட்பாடுகளை இல்லாமல் செய்வதும் அவற்றை தமிழ் மக்களின் மனங்களில் இருந்து இல்லாமல் செய்வதும் அவசியமானதாக இருந்தது. இந்த சந்தர்ப்பதில் தான் சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட்டார். அதேசமயம், தமிழ் தேசிய கோட்பாடுகளில் உறுதியாக இருந்த கஜேந்திரகுமார் உட்பட ஒரு குழு கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டது. பின்னர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான EPRLF வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டது.

sumanthiran stf security

இதன்பின்னர் தமிழ் தேசிய கோட்பாடுகளை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகள் படிப்படியாக வெற்றிகரமாக தமிழ் தேசிய கூட்டமைப்பினூடாக மேற்கொள்ளப்பட்டுவரும் அதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பும் இல்லாமல்செய்யப்பட்டுவருகிறது. இந்த சந்தேகம் மக்கள் மத்தியில் எப்பொழுதோ  ஏற்பட்டுவிட்டது.

வயோதிபத்தினால் மட்டுப்படுத்தப்படும் சிந்தனை மற்றும் உடல் இயலாமை ஆகியவற்றை பயன்படுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சிறிலங்கா கொடியை ஏந்தவைக்கப்பட்டார். 60 வருட பகிஸ்கரிப்பை புறந்தள்ளி சிறிலங்காவின் சுதந்திரதினத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்குகொண்டது. இவற்றின் மூலம் தமிழர்கள் ‘சிறிலங்கன்’ என்ற அடையாளத்தை ஏற்றுக்கொள்ளச்செய்யும் சிந்தனைக்குள் தள்ளப்பட்டனர். வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியத்தின்பால் பற்றுள்ளவர்கள் முதலமைச்சராக வரக்கூடாது என்தற்காக தெற்கிலிருந்து பல எதிர்பார்ப்புக்களுடன் விக்கினேஸ்வரன் களமிறக்கப்பட்டார். ஆனால் இறக்கப்பட்டவர் ஒரு முன்னால் நீதியரசர் என்பதால் அவர் நீதியின் பக்கமிருந்து குரல் கொடுக்கத் தொடங்கியதால் அவரை ‘செயலற்றவர்’ என்று கூறி அகற்றும் நடவடிக்கைகள் உடனடியாகவே முன்னெடுக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கி சுமந்திரன் இன்று வரை செயற்பபடுகிறார்.

தீர்வு எனும் மாயமானை காட்டி சாத்தியமானதைத்தான் கேட்கமுடியும் எனும் பிம்பத்தை உருவாக்கி தமிழ் தேசியத்தின் அத்திவாரங்களான தாயகம், இறைமை, சுயநிர்ணயம் ஆகிய கோட்பாடுகள் தூக்கி வீசப்பட்டன. பௌத்தத்திற்கு முன்னுரிமை என்பதை அரசியலமைப்பு சீர்திருத்த முன்மொழிவுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டது. வடக்கு -கிழக்கு இணைப்பு சாத்தியம் அற்றது என்ற கருத்து வினைப்பாடு மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டது.

அதேவேளை, எதிர்கட்சி தலைவர், குழுக்களின் தலைவர் என்று பலபதவிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டு அவற்றின் மூலம் அரசாங்கத்தின் பங்காளிகளாக மாற்றப்பட்டு ஐ. நா மனிதவுரிமை சபையின் தீர்மானங்கள் மழுங்கடிக்கப்பட்டன.

உள்ளூராட்சி சபை தேர்தல்களை பயன்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பில் விரிசல்கள் மேலும் ஏற்படுத்தப்பட்டன. அத்துடன் மற்றொரு அல்பிரட் துரையப்பாவாக ஆர்னோல்ட் கொண்டுவரப்பட்டதுடன் எந்த பேரினவாதத்துக்கு எதிராக தமிழர்கள் போராடி வந்தார்களோ அதே பேரினவாதிகளுடனும் அதன் துணை ஆயுதக்குழுக்களுடனும் உள்ளூராட்சி மன்றங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைத்துள்ளது.

தற்பொழுது தமிழ்மக்களுக்கு சமஷ்டி தேவை இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன் அறிவித்துள்ளார்.

ஆக மொத்தத்தில் தமிழ் தேசியத்தை இல்லாமல் செய்வதற்கான சகல அடிப்படை நடவடிக்கைகளையும் விடுதலைப்புலிகளினால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த 10 வருடங்களில் கச்சிதமாக செய்துமுடித்துள்ளது அல்லது செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

இவற்றுக்கு எல்லாம் இந்திய ஏகாதிபத்தியத்தின் திட்டமிடலும் சுமந்திரனின் சாமர்த்தியமும் மட்டுமன்றி எமது மூலோபாயரீதியான திட்டமிடல்கள் எதுவும் அற்ற நிறுவனமயப்படுத்தப்படாத  செயற்பாடுகளுமே முக்கியமான காரணங்களாகும்.

சுமந்திரனின் செயற்பாடுகள் காரணமாக எதிர்வரும் மாகாணசபை தேர்தலின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று ஒன்று இல்லாமல் போவதற்கான அறிகுறிகள் இப்பொழுதே தென்படத்தொடங்கியுள்ளன.


5 thoughts on ““ஒப்பரேசன் தமிழ் தேசியத்தின் முடிவு”: சுமந்திரனை புரிந்துகொள்ளுதல்

 1. Suman Rasanayagam

  சுமந்திரனை பொறுத்தவரையில் கொடுக்கப்பட்ட நிகழ்சசித்திட்டத்தை கச்சிச்சமாக செய்துவிட்டார் . அவரை பொறுத்தவரை “Mission accomplished”. தமிழ் தேசிய கூட்டமைப்பு இல்லாமல் போகின்றபோது தானும் அதில் இருந்து வெளியேறுவதாக கூறி தனது தாய் கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கு அவர் செல்லும் நாள் தொலைவில் இல்லை. அல்லது குடும்பத்துடன் வெளிநாடு செல்லக்கூடும்.

  Reply
 2. Sivanathan

  வெளித்தோற்றத்துக்கு அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகளின் ஆதரவாளராக சுமந்திரன் தன்னை காட்டிக்கொண்டாலும் அவர் உண்மையில் இந்திய Agent

  Reply
 3. Vijayasingham

  பாவம் சம்பந்தன். அவமானத்துடனும் குற்றஉணர்வுடனும் சாகப்போகிறார்.

  Reply
 4. புகழேந்தி

  புளொட் , டெலோ ஆகியவை கூட்டமைப்பில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. தமிழ் காங்கிரஸ் மற்றும் EPRLF ஆகியவை தமது எதிர்ப்பை காட்டி சண்டையிட்டு வெளியேறியதால் தனிக்கட்சிகளாக இன்றும் உயிர்வாழ முடிகிறது. ஆனால் இறுதிவரை சகல சூழ்ச்சிகள் காட்டிக்கொடுப்புக்களுக்கு துணையாக இருந்து சலுகைகளை அனுபவித்து விட்டு இறுதி நேரத்தில் வெளியேறப்போகும் டெலோ அவ்வாறு உயிர்பிழைக்கும் வாய்ப்பு குறைவு.

  Reply
 5. saro

  தேசியத்தை காப்பதற்கு ஒரு கடசியும் இலங்கையில் இல்லை. த.ம.தே.மு. தலைவர்கஜேந்திரகுமார் கூட அண்மையில் டையிலி மிரர் க்கு கொடுத்த பேட்டியில் தமிழீழம் கேட்கவில்லை என்றும் சமஷடிதான் கேட்பதாகவும் மிகத் தெளிவாக கூறிவிடடார். வீரன் பிரபாகரனால் வென்ரெடுக்கமுடியாத தேசியத்தை வேறொருவராலும் வென்றெடுக்க முடியாது. இது ஒரு கசப்பான உண்மை. எவ்வளவு கூடிய கெதியில் தமிழர் இதை உணர்கிறார்களோ அவ்வளுவு கெதியில் தமிழ் நிலங்களை, மொழியை கலாச்சாரத்தை காப்பாற்ற முனையலாம். அல்லது ராஜபக்சவின் நிகழ்ச்சி நிரல் வெற்றியடைய நாம் துணைபோனவர்களாக அமையும்.

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *