தலைப்பு செய்திகள்

‘ஒருமித்த’ நாட்டில்  ஒற்றையாட்சியா? சமஷ்டியா?  இணைப்பாட்சியா?

‘ஒருமித்த’ நாட்டில்  ஒற்றையாட்சியா? சமஷ்டியா?  இணைப்பாட்சியா?

இதயச்சந்திரன் 

இராணுவத்தால் சிதைத்தழிக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்கள், மக்களால் புனரமைக்கப்படுகின்றன.

இதுவரைகாலமும், இறந்தவர்களை நினைவுகூரும் அடிப்படை மனித உரிமைகூட இலங்கையில் மறுக்கப்பட்டு வந்தன.

இப்போது இது அனுமதிக்கப்படுவதால், நல்லிணக்கத்தை உருவாக்க ஆட்சியாளர்கள் ஆரம்பித்துவிட்டார்கள் என்று ஒரேயடியாக பாராட்டிவிட முடியாது.

காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் குடும்பங்களும், நிலத்தை இராணுவத்திடம் இழந்த மக்களும் இன்னமும் போராடிக்கொண்டுதானிருக்கிறார்கள்.

நீண்டகாலச் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலைகுறித்து, இந்த நல்லாட்சி (?) அரசு வேண்டாவெறுப்புடனே நடந்து கொள்கிறது.

‘ ஏதோ சட்டத் சிக்கல் இருக்கிறது, சட்டமா அதிபர் திணைக்களம் பதில் சொல்ல வேண்டும், ரணிலோடு பேசுகிறோம், மைத்திரியோடு தனிப்பட்ட சந்திப்புக்களை மேற்கொள்கிறோம்’ என்றவாறு தமிழ் அரசியல் தலைவர்கள் கடந்து செல்கிறார்கள்.

சிறைக்கைதிகளை சனாதிபதி விடுதலை செய்யும் நிகழ்வுகள் ஒவ்வொரு வருடமும் அரங்கேறுகிறது.இந்த விவகாரத்தில் மட்டும் நல்லாட்சி அதிகாரவாசிகளுக்கு என்ன பிரச்சினை?

எதுவித நிபந்தனையுமின்றி, மேற்குலக- இந்திய பிராந்திய நலனிற்கு இசைவாக, தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிமாற்றத்திற்கு உதவிய தமிழ் அரசியல் தலைமைகளால், அரசியல் கைதிகளை விடுவிக்கமுடியவில்லை என்பது பெருங்கொடுமை.

கூட்டமைப்பிற்குள் இருக்கும் உள்முரண்பாடுகளை தீர்ப்பதில், கோஷ்டி பிரிப்பதில் செலவிடும் பெரும்பகுதி நேரத்தை, மக்கள் முகங்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஒதுக்கினால் என்ன என்பதுதான் வெகுமக்களின் கேள்வி.

அடிப்படைப்பிரச்சினைகளிலிருந்து மக்களை மடைமாற்றம் செய்வதற்கு உள்கட்சி விவகாரம் மற்றும் இடைக்கால அரசியல் யாப்பு முன்மொழிவு என்பன பூதாகரமாக்கப்படுகின்றன.

ஆட்சிமாற்றம் என்பது யுத்தவடுக்களை சுமந்துநிற்கும் மக்களின் வாழ்வில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தவில்லை.

பிணைமுறி விவகார திரைக்குள், எகிறிவரும் வாழ்க்கைச் செலவுகள் குறித்த உண்மைகள் மறைக்கப்படுகின்றன.

இது பற்றியதான ஆழமான பார்வையை, சரியான புள்ளிவிபரங்களோடு அடுத்த பதிவுகளில் முன்வைப்போம்.

தற்போது உத்தேச அரசியல் யாப்பு குறித்தே சமூகவலைத்தளங்களிலும், அச்சு ஊடககங்களிலும் பரவலாகப் பேசப்படுகிறது.

‘ அது வரும் ஆனா வராது’ என்பதுபோல்தான் தமிழ் தலைவர்களும் தற்காப்பு நிலையெடுத்துப் பேசுகிறார்கள்.

‘புரட்சி வெடிக்கும்’ என்கிறார் இன்னுமொரு பழந்தலைவர். கார்த்திகை மார்கழி மாதமானால், தையில் ‘போராட்டம் வெடிக்கும்’ என்பார்.

உள்ளூராட்சி தேர்தல் வருவதால், மாவீரர் புகழ்பாடும் புரட்சி கீதங்களும், மாவீரர்தின அழைப்புகளும் அவரிடமிருந்தே வருகின்றன.

மாவீரர் தினம் முடிந்தவுடன், மீண்டும் யாப்புச் செங்கோல் கையிலெடுக்கப்படும். ஒரே கூட்டு பல குரல்களில் பேசும்.

சமஸ்டி இல்லாவிட்டால் புரட்சி வெடிக்கும் என்பார் ஒருவர். வந்தாலும் வரலாம் என்பார் இன்னொருவர். எக்கிய ராஜ்யவிற்குள் எல்லாமே ( சமஸ்டி) அடங்கும் என்பார் அரசியல் துறைப் பொறுப்பாளர்.

இந்த ஆரவாரம் தணியும் போது, ‘எக்கிய ராஜ்ய என்றால் ஒருமித்த நாடு, அது ஒற்றையாட்சி என்று அர்த்தப்படாது’என்று பூகோள அரசியல் புது விளக்கம் கொடுக்க ஆரம்பிப்பார்கள்.

72, 78 இல் கொண்டுவரப்பட்ட குடியரசு அரசியல் யாப்பில், Unitary State , எக்கிய ராஜ்ய, ஒற்றையாட்சி என்றே மும்மொழிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்போது தமிழில், ஒற்றையாட்சியை ‘ஒருமித்தநாடு’ என்று தன்னிலை விளக்கம் அளிக்கின்றனர் கூட்டமைப்பினர். ஆனால் சிங்களச் சொல்லில் எந்த மாற்றமும் இல்லையே..!.

சட்டத் சிக்கல் ஏற்படும்போது, எந்த மொழிச் சொல்லை நீதிமன்றம் அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளும்??.

‘எக்கிய ராஜ்ய’ என்கிற சொல்லாடல் ஒருமித்த நாடா? இல்லையா? என்பதற்கு அப்பால், அந்த ஒருமித்தநாட்டில் ஒற்றையாட்சியா? என்பதுதான் இங்கு விவாதத்திற்கூறிய விவகாரமாக இருக்கிறது.

அரசியலமைப்பானது எந்த அரசியல் யாப்புக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது என்பதுதான் இங்குள்ள பிரச்சினை.

சகல சட்டமியற்றும் அதிகாரங்களும், நாடாளுமன்றத்திடம் குவிந்திருக்கும் ஒற்றையாட்சியா?, அல்லது இரு தேசங்களின் இறைமையை ஏற்றுக் கொண்ட கூட்டு ஆட்சியா ( confederation) ? அல்லது 2009 ஆகஸ்டில் தமிழ் தலைமையால் முன்வைக்கப்பட்ட பிராந்தியங்களின் ஒன்றியமா? என்பதனை முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.

இன்னும் இலகுவாகச் சொல்லப்போனால், ஒருமித்த நாட்டிற்குள் இருக்கும் ஆட்சி முறைமை என்ன?.

தீர்வினை நோக்கிய நேர்மையான உரையாடலில், ‘எக்கிய – ஒருமித்த’ போன்ற திசைதிருப்பல் வாதங்கள் தேவையற்றது.

ஆட்சி முறைமை என்ன? இதற்கு விடை சொன்னால் போதும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *