Search
Monday 30 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஒளவையார் கூறும் வாழ்க்கை நெறிகள்

ஒளவையார் கூறும் வாழ்க்கை நெறிகள்

பிறேமலதா பஞ்சாட்சரம்

ஒளவையார் கூறுகின்ற வாழ்க்கைநெறிகள் பற்றிப் பார்க்கும் முன்னர் அப்புலவர் பற்றிய பாடல் ஒன்றை ஞாபகப்படுத்திக்கொள்வது பொருத்தமானது:

ஒளவைக் கிழவி நம் கிழவி
அமிழ்ததின் இனிய சொற் கிழவி
செவ்வை நெறிகள் பற்பலவும்
தெரியக் காட்டும் தமிழ்க் கிழவி

அப் பாடலில் பொதிந்துள்ள கருத்தின் ஆழம் எவ்வளவு தூரம் உண்மை என்பது இங்கு நாம் பார்க்க இருக்கும் பாடல்களின் பொருளுணரும் போது விளங்கிக் கொள்ள கூடியதாக இருக்கின்றது. ஒளவையார் எழுதிய நூல்களாக ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை, விநாயகர் அகவல், ஞானக்குறள் என்பனவற்றுடன் அவர் பாடியுள்ள சில தனிப்பாடல்களையும் குறிப்பிடலாம்.

ஒளவையார் கூறுகின்ற வாழ்க்கைநெறி முறைகள் சிறுவர் முதல் பெரியோர்வரை அறிந்து கொள்ளக்கூடிய வகையில் இலகுதமிழ் மொழிநடையில் கூறப்பட்டுள்ளதுடன் அவற்றை மனப்பாடம் செய்வதும் எளிதாக உள்ளது. குறிப்பாக ஆத்திசூடியும் கொன்றை வேந்தனும் சிறுவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் ஓரடியில்கூறி அவர்கள் தமது வாழ்வை செம்மையான வழியில் சிறுபராயத்திலிருந்தே தயார் செய்துகொள்ள வழிவகை செய்கின்கின்றது.

எடுத்துக்கட்டாக ஆத்திசூடியில் சொல்லப்டடுள்ள கருத்துக்களின் ஆழத்தை பின்வரும் அடிகளிலிருந்து புரிந்து கொள்ளமுடியும்.

1.அறம் செய விரும்பு-நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.
2. ஆறுவது சினம்- கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.
3. இயல்வது கரவேல்- உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.
4. ஈவது விலக்கேல்- ஒருவர், மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே
5.உடையது விளம்பேல்-உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.
6. ஊக்கமது கைவிடேல்- எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.
7. எண் எழுத்து இகழேல்-எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இன்றியமையாதன் ஆகவே, அவற்றை வீணென்று-இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே.
8. ஏற்பது இகழ்ச்சி-இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.
9. ஐயம் இட்டு உண்- யாசிப்பவர்கட்கு கொடுத்து பிறகு உண்ண வேண்டும்.
10. ஒப்புரவு ஒழுகு-உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.
11. ஓதுவது ஒழியேல்-நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.
12. ஒளவியம் பேசேல்-ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.
13.அஃகஞ் சுருக்கேல்-அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே.

இங்கு ஒளவையின் ‘சுருங்கச்சொல்லலி விளங்க வைக்கும்’ நயம்போல வேறெந்த தமிழிஇலக்கியத்திலும் இல்லையென்றே சொல்லலாம்.

மனிதகுலம் வாழ்வாங்குவாழ அறம், பொருள், இன்பம் என்பன எவ்வாறு உதவி புரிந்து வீடு(முக்தி ) என்னும் பெருநிலையை எட்ட வைக்கின்றது என்பதைச் சொல்ல வள்ளுவப் பெருந்தகை 1330 பாடல்களில் திருக்குறளைப் பாடியுள்ளார் . ஆனால் ஒளவையாரோ தனது ஒருபாடலிலேயே அதனை விளக்கியிருகின்றர். அப்பாடல்:

ஈதலறம் தீவினை விட்டு ஈட்டல் பொருள் எஞ்ஞான்றும்
காதலிருவர் கருத்தொருமித்து-ஆதரவு
பட்டதே இன்பம்;பரனை நினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.

இதன் பொருள்:-
மற்றவர்களுக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், எடுத்துக் கொடுத்தலே ‘ஈதல்’என்று சொல்லத்தக்க அறமாகும். நாம் ஈட்டுகின்ற பொருளில் எவ்விதக் குற்றங்களும் இருக்க கூடாது. அதாவது நல்வழியில் மட்டுமே பொருளைச் சம்பாதிக்க வேண்டும். கணவனும் கணவனும் மனைவியும் கருத்து ஒற்றுமையோடு ஒருவருக்கொருவர் அன்பு காட்டி வாழ்தலே இல்லறமாகிய இன்பம். இம்மூன்று நிலைகளிலும் சரிவர வாழ்ந்தபின், ‘போதும்’ என்ற எண்ணம் நிறைந்து இந்த மூன்றின் பற்றுக்களையும் அறுத்து விட்டு, இறைவனை மட்டுமே நாடுகின்ற நிலைதான் பேரின்பமாகிய ‘வீடு’ (முக்தி)என்கிறார்.

ஒளவையார் பாடிய தனிப் பாடல்களில் நான்கு கோடிப் பாடல் மிகவும் பிரசித்தமானது. இது எவ்வாறு ஒருவர் நான்கு கோடிகளுக்கு அதிபதியாகலாம் என்பதை கூறுகிறது.

மதியாதார் முற்றம் மதித்தொருகால் சென்று மிதியாமை கோடி பெறும்
உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும்
கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே கூடுதலே கோடி பெறும்
கோடானு கோடி கொடுப்பினுந் தன்நாக் கோடாமை கோடி பெறும்.

இப் பாடலின் பொருள் என்னவெனில் எம்மை ஒருவர் மதிப்பளித்து நடவாதுவிடில் அல்லது எம்மை கண்டும் காணாதவராக நடந்து கொள்வராயின் அவர் ஏதாவது தேவையின் நிமித்தம் நம்மை அழைக்கின்ற பொழுது அவரை மதித்து அவரது வீட்டுக்கு செல்லாதிருப்பதனது ஒருகோடி பெறுமதி வாய்ந்தது. அது மட்டுமன்றி நாம் ஒருவருடைய வீட்டுக்குச் செல்லும் பொழுது எம்மை உரிய முறையில் உபசரிக்காவிடத்தில் அவ்வீட்டில் உண்ணாது வருவ தானதும் ஒருகோடிக்கு சமமானது. மேலும் நாம் நற்பண்புடையவருடன் எவ்வளவு பெறுமதி கொடுத்தாவது சேருதலானதுவும் ஒரு கோடிக்கு சமமானது இவை போல நாம் இன்னும் ஒரு கோடிக்கு அதிபதியாக வேண்டுமெனில் ஒருவருக்கு கொடுத்த வாக்கை எவ்விடர்வரினும் தளராது காப்போமாகில் அதுவும் எம்மை கோடீஸ்வரராக்கிவிடும். இங்கு ஒளவை சொல்லும் கோடி என்பது பணப்பெறுமதியல்ல பணத்தால் அளவிடமுடியாத சில உயரிய பண்புகளை எம்மிடையே வளர்துக் கொள்ளளும் வழியைச் சொல்கிறார் . இது போலவே மூதுரையில்

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
‘என்று தருங்கொல்?’ எனவேண்டாம் – நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.

இதன்கருத்து என்னவெனில்:
ஒருவர்க்கு நாம் உதவி செய்யும்போது, அதற்கு பிரதிபலனும், நன்றியும் எப்போது கிடைக்கும் என்று கருதி அதனை நாம் செய்யக்கூடாது. எப்படிப்பட்ட நீரை வேர் மூலம் உண்டாலும், நன்கு தளராது வளர்ந்துள்ள தென்னை மர மானது அந்நீரை சுவையான இளநீராக தேங்காய்களூடாக தந்து விடும். அதுபோல ஒருவர்க்கு செய்த சிறு உதவியும் நமக்கு ஒரு காலம் நிச்சயம் நன்மை பயக்கும். இதன்மூலம் பிறருக்கு உதவிபுரிகின்ற நற்பண்பின் சிறப்பை எடுத்துச் சொல்கின்றார். பிறருக்கு உதவிபுரிவது சிறந்த பண்பாகிலும் அதுவும் நல்லவர்களுக்கு செய்யும் பொழுதே நின்று நிலைக்கும் , அஃதல்லாது தீயவர்கட்கு நாம் உதவிபுரிவோமாகில் அது நீர்மேல் எழுதிய எழுத்துப் போல் பலனின்றிப் போய்விடும் என்பதை எமக்கு எடுத்துச்சொல்ல மூதுரையில் மேற்சொன்ன பாடலை அடுத்து வருமாறு பின்வரும் பாடலை அமைத்துள்ள பாங்கானது ஒளவையின் புலமைச்சிறப்பை மட்டுமல்ல உதவிபுரிதல் என்னும் உயரிய பண்பால் எத்தகையவர்கள் பலனடைய வேண்டும் என்பதை உதவிபுரிபவருக்கு முன்னரேயே எச்சரிக்கையூட்டுவதாக அமைகிறது.

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே – அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்.

இவை தவிர நல்வழியில் ஒளவை கூறிய ஒரு பாடல் நம்மை சிந்திக்க தூண்டி நாமாகவே உய்த்துணர்ந்து சில நற்பண்புகளை நம்மிடையே வளர்த்துக் கொள்ள தூண்டுதலாக அமைகின்றது. அப் பாடல்:

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் – கூடுவிட்டுங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்.

இப் பாடலின் மூலம் வெளிப்படையாகவே ஒருவன் தான் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தைஅனுபவியாமல் சேர்த்து வைப்பானாகில் அவன் இறந்தபினர் அதனை யார் யாரோ அனுபவிப்பர். அகவே அப் பணத்தால் உழைத்தவனுக்கு பலனில்லை. எனவே அதன் மூலம் பலன் பெறவேண்டுமாயின் உழைக்கும் பொழுதோ அல்லது உயிருடன் இருக்கும் பொழுதோ நல்ல காரியங்களுக்கு பயன்படுத்துவானாயின் அதனால் அவன் இப்பிறவியில் திருப்த்தியும் மறுபிறவியில் புண்ணியத்தையும் அடையமுடியும் என்பதை சொல்லது சொல்லிச் சென்றுள்ளார் . மேலும் இப்பாடலுக்குரிய கருத்தைக் ஒளவையார் அருளிய கொன்றை வேந்தனில் ஒருவரியில் விளக்கியுள்ளார் . அதவது ‘ஈயார் தேட்டைத் ( தேட்டம்- சொத்து ) தீயார் கொள்வர்’ என்பதே அதாகும் . இதே கருத்தமைந்த இன்னுமொரு பாடல் ஒன்றை ஒளவையாரின் தனிப் பாடல் வெண்பாவொன்றிலும் காணலாம். அது;

கருங்குளவி சூரைத்தூ றீச்சங் கனிபோல்
வருந்தினர்கொன் றீயாதான் வாழ்க்கை – அரும்பகலே
இச்சித் திருந்தபொருள் தாயத்தார் கொள்வாரே
எற்றோமற் றெற்றோமற் றெற்று.

தன்னிடம் இல்லையென்று வருபவர்களுக்கு ஒன்றுமே கொடுத்து உதவாதவன் குளவிக்கூடு, சூரைமுள்ளோடு பழுத்திருக்கும் சூரைப்பழம், கூரான நீண்ட முள்ளுக்கிடையே பழுத்திருக்கும் ஈச்சம்பழம் போன்றவன். அவன் செல்வத்தை அவனுக்குப் பின் வரும் அவனது சந்ததியினர்தான் அனுபவிப்பார்களே தவிர அதனால் அவனுக்கு எந்தப் பயனும் இல்லை. இப் பாடல்களை தொகுத்து நோக்குகின்ற பொழுது பிறருக்கு கொடுத்துதவுதால் அல்லது இல்லாதவர்களுக்கு நம்மிடையே இருக்கின்ற செல்வத்தை வழங்குவதால் எமக்கு வருகின்ற நன்மையும் திருப்தியும் எத்தகையது என்பதை விளங்கி எமது வாழ்வை வழிப்படுத்தக் கூடியதாக இருக்கிறது.

மேலும் விதிவசத்தால் தொடர்ந்தும் துன்பம் அல்லது வறுமையில் உழல்கின்ற பொழுது இந்த நிலையும் எம்மைவிட்டு கடந்தது போகும் என்பதைக் காட்ட ஒளவை என்ன சொல்கின்றார் என்று பார்போமாகில்

இட்டமுடன் என்தலையில் இன்னபடி என்றெழுதி
விட்டசிவ னுஞ்செத்து விட்டானோ – முட்டமுட்டப்
பஞ்சமே யானாலும் பாரமவ னுக்கென்னாய்
கொஞ்சமே அஞ்சாதே நீ.

நெஞ்சமே! பெரும் பஞ்சமே (துன்பம் ) வந்தாலும் அதைக்கண்டு நீ அஞ்சாதே. இதுதான் உனக்கு என்று தலையில் எழுதிய சிவன் (இறைவன்) இன்னமும் சாகவில்லை. அவனிடம் உனது துன்பத்தை பாரம் கொடுத்துவிட்டு வைராக்கியத்தோடு இரு. அதாவது ‘இதுவும் நம்மை விட்டு கடந்துபோகும்’ என்ற மனநிலையை நம்மிடையே வளர்த்துக் கொள்ளும் வழிவகையைச் சொல்கின்றார்.

ஒளவையார் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பாடிய பாடல்கள், நீதி நூல்களில் கூறப்பட்டுள்ள வாழ்க்கை நெறிமுறைகள் இன்றைய காலத்துக்கும் ஒரு மனிதனுடைய வாழ்வை அவன் செம்மையாக அமைக்க எவ்வளவு தூரம் உதவுகின்றது என்பது கண்கூடு . அப்பாடல்களின் பொருட்சுவையை மட்டும் அனுபவியாது அதன்படி நாமும் ஒழுகி மற்றவர்களும் வாழ வழி சமைப்போமாகில் அதுவே பெரிய வாழ்வியல் நெறியாகும்.

 


2 thoughts on “ஒளவையார் கூறும் வாழ்க்கை நெறிகள்

  1. N . Krishnasamy

    இட்டமுடன் என்தலையில் இன்னபடி யென்றெழுதி விட்ட சிவனும் செத்து விட்டானோ -முட்ட முட்ட பஞ்சமே வந்தாலும் பாரம் அவனுக்கன்னாய் நெஞ்சமே அஞ்சாதே நீ.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *