Search
Thursday 26 April 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கதவுகள் திறவாதோ! நீதியும் கிட்டாதோ!

கதவுகள் திறவாதோ! நீதியும் கிட்டாதோ!

-கே.வாசு-

போகாத கோயில்களில்லை. வேண்டாத தெய்வங்கள் இல்லை. ஏறாத படிகள் இல்லை. தட்டாத கதவுகள் இல்லை. விழாத கால்கள் இல்லை. கெஞ்சாத ஆட்கள் இல்லை. ஆனால் பதில் சொல்லத்தான் யாருமில்லை! என்ற உருக்கமான வேண்டுகோளை முன்வைத்து காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் 14 பேர் வவுனியா பிரதான தபால் நிலையம் அருகில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் நான்கு நாட்கள் தொடர்ந்தும் முன்னெடுத்து வந்திருந்தனர். இராணுவத்தினரிடம் தமது பிள்ளைகளை ஒப்படைத்தும், வெள்ளை வான்களில் இராணுவத்தாலும், இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய குழுக்களாலும் கடத்தப்பட்டும், சுற்றி வளைப்புக்களின் போது கைது செய்யப்பட்டும் பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எங்கு இருக்கிறார்கள், அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாதும், அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் கடந்த பல வருடங்களாக தேடி அலைகின்றனர்.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையின் படி சுமார் 20,000 பேர் வரையில் தமிழ் மக்கள் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளனர். காணமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பாக அவர்களது உறவினர்கள் சர்வதேசம் முதற்கொண்டு உள்நாட்டு நிறுவனங்கள் வரை அனைத்திலும் முறைப்பாடுகள் செய்தும் உரிய பலன் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அவர்கள் பல்வேறு கவனயீர்ப்புப் போராட்டங்களையும், மௌன ஊர்வலத்தையும் அடையாள உண்ணாவிரதங்களையும் மேற்கொண்ட நிலையிலும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்த நாட்டின் பாதுகாப்பு தரப்பினரால் கொண்டு செல்லப்பட்டவர்கள் விரைவில் வீடு திரும்புவார்கள் என்று ஆவலோடும், எதிர்பார்ப்புக்களோடும் காத்திருந்த மக்களுக்கு விரக்தியும், ஏமாற்றமுமே மிஞ்சியது. இறுதி யுத்தத்தின் போது அரசாங்கத்தினரதும் பாதுகாப்பு தரப்பினரதும் அமைச்சரினதும் எச்சரிக்கையை ஏற்று கையளித்த மக்கள் இன்று தமது பிள்ளைகளுக்கு தாங்களே வினையாகி விட்டோமே என்ற குற்றவுணர்வுடன் ஆதங்கப்பட்டுகின்றனர்.

இதனால், உறவுகள் அனைவரும் விரக்தியினால் மனவுளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். இந்த மனோநிலையே அவர்களை உயிரை வெறுத்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தள்ளியது. உண்ணாவிரதத்தின் இரண்டாம் நாள் இவர்களது உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் அந்த மக்களின் பிரதிநிதியாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் என்றுமில்லாத வகையில் உணர்ச்சி வசப்பட்டவராக உரையாற்றியிருந்தார். அங்கு உரையாற்றுகையில், ‘ இந்தச் சபையிலே இருக்கின்ற ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களோ அல்லது உறுப்பினர்களோ யாராவது இதற்குப் பதில் சொல்ல முடியுமா? அல்லது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டு காணாமற்போனவர்கள் இருக்கின்றார்களா, இல்லையா? என்பதற்கான பதிலை இந்தச் சபையிலே இருக்கின்ற எவராவது எழுந்துசொல்ல முடியுமா? இந்த நிலைமையை நாங்கள் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது’ எனத் தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக அன்றைய தினமே இந்த நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுடனும் இது தொடர்பில் பேசியிருந்தார்.

உண்ணாவிரதத்தின் மூன்றாம் நாளில் (25.01) பாராளுமன்றத்தில் இது தொடர்பில் ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் அனுர எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது இந்த நாட்டின் பிரதமர் ‘ அவர்கள் குறித்து உறுதியான பதில் எதிவும் வழங்க முடியாதுள்ளது. அவர்களில் சிலர் வெளிநாடுகளுக்கு சென்றிருக்கலாம். அவ்வாறு சென்றவர்கள் சட்ட ரீதியாக செல்லவில்லை. சிலரது பெயர்கள் பொலிசாரிடம் உள்ளது. அந்த விபரத்தை கேட்டுள்ளேன். வந்ததும் தெரியப்படுத்துவேன்’ என்று பட்டும்படாமலும் பதிலளித்துள்ளார்.

அமைச்சரவையின் இணைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித, இந்த நாட்டில் காணாமல் போனவர்களை எங்கு போய் தேடுவது என்று சொல்லியிருக்கிறார். மேற்சொன்ன இருவரின் கூற்றுக்களில் இருந்தும் சில கேள்விகள் எழுகின்றன. அரசாங்கத்தின் பாதுகாப்பில் இருந்தவர்கள் எவ்வாறு வெளிநாடு செல்ல முடியும்..?, காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் அனைவரும் திருவிழாவின் போதோ அல்லது அரசியல் கட்சி மாநாடுகளின் போதோ காணாமல் போனவர்கள் அல்ல. மாறாக இநத நாட்டின் பாதுகாப்பு கடமையை ஏற்றுள்ள படைத்தரப்பினரின் பாதுகாப்பில் இருந்த போதே காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எங்கு வைக்கப்பட்டிருந்தனர் என்பதும், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு யார் பொறுப்பானவர்கள் என்பதும், அந்த இடத்தை கால் புரிந்தவர்கள் யார் என்பதும் அரசாங்கத்திற்கு தெரிந்திருக்கும். தெரிந்திருக்க வேண்டும். இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களை எங்கு போய் தேடுவது என்று அமைச்சர் எந்த அடிப்படையில் கூறுகின்றார்.

உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு இந்தக் கருத்துக்கள் மிகவும் மனவுளைச்சலை ஏற்படுத்தியுள்ளதுடன், இந்த அரசாங்கத்தின் மீது கோபத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் தங்களுக்கு விடிவு கிடைக்கும் என்று வாக்குறுதி அளித்த தமிழ் தலைமைகளின் மீதும் அவர்களது கோபம் திரும்பியுள்ளது. அவர்களது உடல் நிலையும் மோசமடைந்து வந்தது. இதனைக் கருத்தில் கொண்டு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களும் ஜனாதிபதிக்கு ஒரு அவசர கடிதத்தை அனுப்பியிருந்தார். அதில் ‘ குடிநீரையேனும் எடுத்துக் கொள்ளாமல் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுவரும் இவர்கள் மிகவும் பலவீனமாக உள்ளனர். இது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்காவிடில் விலைமதிப்பற்ற சில உயிர்களை இழக்க நேரிடும். அத்துடன் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரை சம்பவ இடத்திற்கு அனுப்பி, போராட்டத்தை மேற்கொண்டு வருபவர்களுக்கு உறுதிமொழிகளை வழங்குமாறும் தனது கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒரு பெண் தனது கைகளில் ஜனாதிபதிக்கு அருகில் தனது மகள் இருப்பது போன்ற புகைப்படத்தை வைத்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள விக்னேஸ்வரன், குறைந்தபட்சம் குறித்த சிறுமி பற்றியேனும் ஆராய்ந்து அவரை அவரது தாயுடன் இணைக்குமாறும் தெரிவித்துள்ளார்’.

நான்காம் நாள் பாராளுமன்றமத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் காணாமல் போனோர் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர். நான்காம் நாள் மலை உண்ணாவிரத இடத்திற்கு நேரடியாக வருகை தந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் எதிர்வரும் 9 ஆம் திகதி அலரி மாளிகையில் உயர்மட்ட சந்திப்பு ஒன்றை ஏற்படுத்துவதாக எழுத்து மூலம் வழங்கப்பட்ட வாக்குறுதியை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டிருந்தது. இதன்போது அவர்களில் நால்வரின் உடல்நிலை மோசமடைந்து இருந்தது. உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு சர்வதேச மட்டத்தில் இருந்தும், உள்நாட்டில் இருந்தும் நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வந்திருந்தது. இலங்கை அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிழந்தவர்களாக ஐ.நாவின் நேரடி தலையீடு தங்களது விடயத்தில் விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் சகல தரப்பினரிடமும் வேண்டுகோளை முன்வைத்திருந்தனர். இதன் ஒரு பகுதியாகவே வவுனியாவில் அணிதிரண்ட இளைஞர்கள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தையும் முற்றுகையிட்டு இருந்தனர். உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக வவுனியா முச்சக்கர வண்டி சாரதிகளும் உரிமையாளர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியையும் நடத்தியிருந்தனர். தமிழ் அரசியல் கைதிகளும் தமது சிறைச்சாலைகளில் அடையாள உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தனர். இவ்வாளவு பேரின் கனத்தையும் சர்வதேச சமூகங்களின் கவனத்தையும் தன்பால் ஈர்த்துள்ள உண்ணாவிரதிகளுக்கு இந்தருணத்திலாவது உரிய பதிலை வழங்கி தனது நல்லிணக்கத்தை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *