Search
Tuesday 11 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்தது என்ன…?: அரசாங்கத்திற்கு 10 ரூபாய் காசு கொடுத்து நீதி கோரும் போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்தது என்ன…?: அரசாங்கத்திற்கு 10 ரூபாய் காசு கொடுத்து நீதி கோரும் போராட்டம்!

-கே.வாசு-

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலையே தொடர்கிறது. தமது சிறு சிறு பிரச்சனைகளை கூட போராடி தீர்க்க வேண்டிய நிலை தொடர்கிறது. யுத்தம் முடிவடைந்து 8 ஆண்டுகள் ஆகிய போதும் காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் இதுவரை தீர்க்கமான எந்தவொரு பதிலையும் இந்த அரசாங்கம் வழங்கவில்லை. மஹிந்த ஆட்சிக்காலத்தில் பல போராட்டங்களை நடத்திய காணாமல் ஆக்கப்டோரின் உறவுகள் தற்போதைய ஆட்சியிலும் போராட்டங்களை நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி முதல் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 14 பேர் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து வவுனியாவில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.

அனைத்து தரப்புக்களின் கவனத்தையும், புலம் பெயர் சமூகத்தின் கவனத்தையும் பெற்றிருந்த குறித்த உண்ணாவிரதப் போராட்டம் வலுப்பெற்றுக் கொண்டிருந்த நிலையில், நான்காம் நாள் மாலை உண்ணாவிரதிகளுடன் சந்திப்பை ஏற்படுத்திய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேயவர்த்தன கடந்த 9 ஆம் திகதி அலரி மாளிகையில் இது தொடர்பில் நீதி அமைச்சர், புனர்வாழ்வு அமைச்சர், சட்டம் ஒழுங்கு அமைச்சர், பொலிஸ் மா அதிபர் ஆகியோருடன் பேசுவதற்கு ஒழுங்கு செய்து தருவதாக எழுத்து மூலம் வழங்கப்பட்ட வாக்குறுதியையடுத்து குறித்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது. இருப்பினும், அங்கு நடந்த பேச்சுக்குள் கடந்த காலங்களைப் போன்று நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியது. அரச தரப்பினருடன் இணைந்து கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் அங்கு சென்றிருந்த நிலையில் காணாமல் போகச் செய்யபட்டவர்களின் உறவுகளால் அவர்கள் வெளியேற்றப்பட்டும் இருந்தனர்.

IMG_4143தமது கணவன்மாரை இழந்த மனைவிமாரும், பிள்ளைகளை இழந்த தாய்மாரும் இழப்பின் வலியை தாங்க முடியாதவர்களாக அவர்கள்…?, அவர்களுக்கு என்ன நடந்தது..? என அறிந்து கொள்வதற்காக அரசின் வாக்குறுதியில் நம்பிக்கையிழந்து மீண்டும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டங்கள் வடக்கின் இரு பகுதிகளில் தற்போது நடைபெற்று வருகிறது. 15 நாட்களைத் தாண்டி கிளிநொச்சி கந்தசாமி ஆலயம் அருகிலும், 11 நாட்களைக் கடந்து வவுனியா வீதி அபிவிருத்தி அதிகாரசபை அருகிலும் இப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் பலரும் இணைந்து கொண்டுள்ளனர். இப் போராட்டங்கள் தென்பகுதி மக்களினதும் ஆதரவுகளையும் பெற்றுள்ளது. இன, மத, மொழி பேதங்களைக் கடந்து இந்த மக்களின் நியாயமான போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் தென்பகுதியில் கடத்தப்பட்டு காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலியகொட அவர்களின் மனைவி சந்தியா எக்னலிகொட உள்ளிட்ட சிங்கள சகோதரர்களும், அதேபோன்று இஸ்லாமிய சகோதரர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து இப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இன்னும் சில காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கொழும்பில் அமைந்துள்ள ஐ.நா அலுவலகம் மற்றும் அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா ஆகிய நாடுகளின் தூதரகங்கள் முன் போராட்டங்களை நடத்தியுள்ளதுடன், மகஜர்களையும் கையளித்துள்ளனர். இவ்வாறு இம் மக்கள் நீதியையும், தீர்வையும் பெறுவதற்காக ஒவ்வொரு வாசல் படிகளிலும் ஏறி போராடி வருகின்றனர்.

IMG_4113இந்நிலையில் காணாமல் போகச் செய்யப்பட்ட உறவுகளின் போராட்டம் இன்று மற்றுமோர் வடிவத்தைப் பெற்றிருக்கின்றது. வவுனியாவில் சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலை என்ன..? என தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் செயன்முறை ஒன்றையும் ஆரம்பித்துள்ளனர். கடந்த ஏழாவது நாட்களாக நடைபெற்று வரும் இந்த கடிதம் பெறும் நடவடிக்கையில் இதுவரை நான்காயிரம் வரையான கடிதங்கள் கிடைத்துள்ளதுடன், பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த 48 சிங்கள சகோதரர்களும் கடிதங்களை வழங்கியுள்ளனர். இவ்வாறு பெற்றுக் கொண்ட கடிதங்களை எதிர்வரும் நாட்களில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் கடிதம் வீதம் ஜனாதிபதிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதே நடைமுறையை கிளிநொச்சியிலும் பின்பற்றவுள்ளதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் இந்த மக்களின் நியாயமான இப் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டிய தேவை அனைத்து மக்களுக்கும் உள்ளது. காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் கோவில் திருவிழாவிலோ அல்லது சனநெரிசலிலோ தொலைந்தவர்கள் அல்ல. இவர்களில் பலர் அரசாங்கத்தினதும், இராணுவத்தினரதும் அறிவுறுத்தலுக்கு அமைவாக நேரடியாக அவர்களின் கையில் கையளிக்கப்பட்டவர்கள். இன்னும் சிலர் யுத்த காலத்தில் இடம்பெற்ற சுற்றி வளைப்புக்கள், தேடுதல்களின் போதும் சந்தேகத்தின் பேரிலும் முப்படையினராலும், பொலிசாராலும், புலனாய்வுத்துறையினராலும் கைது செய்யப்பட்டவர்கள். சிலரை தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தொடர்பிலும், அரசாங்கத்திடம் இருந்தமை தொடர்பிலும் ஆதராங்களும் உள்ளன. இத்தகைய நிலையில் இது குறித்து தீர்க்கமான பதிலை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அவர்களுக்கு என்ன நடந்தது…?, அவர்கள் தற்போது எங்கே..?, அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்களா…?, அப்படியாயின் யார் அதனை செய்தது…?, ஏன் அவ்வாறு செய்தது..? என பொறுப்பு கூறவேண்டிய தேவை இந்த நாட்டின் அரசாங்கத்திற்கு இருக்கிறது. அந்தப் பொறுப்பில் இருந்து அவர்கள் விலகிவிடமுடியாது.

IMG_5045இந்நிலையில், காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ந்தும் கண்ணீருடன் வாழ்வதா அல்லது அவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதா என ஒவ்வொரு வரும் சிந்திக்க வேண்டும். இவர்களுக்கு ஆதரவாக புலம்பெயர் தேசங்களில் கூட போராட்டங்கள் வலுப்பெற்று வருகிறது. ஆனால் ஈழத்தில் தான் இவர்களுக்கான ஆதரவு என்பது…?

இவர்களது சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டத்தில் தமது வேலைப்பழுக்கள் மற்றும் பல்வேறு காரணங்களால் பலராலும் பங்கேற்ற முடியாத நிலை இருக்கலாம். அதனை நாம் மறுத்து விட முடியாது. ஆனால், குறைந்த பட்சம் ஒரு 10 ரூபாய் பணத்தை இம் மக்களுக்காக செலவு செய்து நீதி கேட்டு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப முடியாதா…?, நாளொன்றுக்கு 1000 கடிதம் அனுப்பும் போராட்டம் அரசாங்கத்திற்கு முத்திரை ஊடாக வருமானத்தைக் கொடுத்து நீதியைக் கோரும் ஒரு செயன்முறை. நலிவடைந்து போயிருக்கும் தபால் திணைக்களம் இதன் மூலம் தினமும் வருமானத்தைப் பெறப் போவதுடன், ஜனாதிபதியின் அலுவலகத்தில் நீதி கோரிய கடிதங்கள் குவியப் போகின்றன. இதில் அனைவரும் இணைவதன் மூலம் இந்தப் போராட்டத்தை இன்னுமொரு படி மேலே உயர்த்தி நீதியை கோர முடியும். இத்தகைய மக்கள் திரட்சி மூலம் அடிக்கு மேல் அடி அடித்தால் அம்மியும் நரும் என்பது போல் இந்த அரசாங்கம் குறைந்த பட்சம் மனிதாபிமான ரீதியில்யாவது இந்தப் பிரச்சனையை அணுகக் கூடிய ஒரு நிலைமையை உருவாக்க முடியும். எனவே, பாதிக்கப்பட்ட சமூகத்திற்காக சிந்திக்க வேண்டியதும், அவர்களது கரங்களை பலப்படுத்தி வலுவான கோரிக்கையை முன்வைக்க வேண்டியதும் அனைவரதும் கடமை என்பதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே நீதிக்காக ஏங்கும் அந்த மக்களின் ஏக்கமாகவுள்ளது.

IMG_5041

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *