Search
Tuesday 17 September 2019
  • :
  • :

காலங்கடத்தும் அரசியல்

காலங்கடத்தும் அரசியல்

முகுசீன் றயீசுத்தீன்
மீளாத்துயரில் மக்கள் வாழும் அரசுகளில் இலங்கையும் ஒன்றாகி வருகிறது. இதற்கு தேசிய – சர்வதேச காரணிகள் பல செல்வாக்குச் செலுத்தி வந்தாலும் உடனடிக் காரணியும் வெளித் தெரியும் காரணியும் உள்நாட்டிலேயே விதைக்கப்படுகிறது.

ஆட்சியாளர்களின் குறுகிய அரசியல் நலனும் மக்களின் ஏமாளித்தனமும் நாட்டை நாசமாக்கி எவருமே நிம்மதியாக வாழ முடியாத சூழலை உருவாக்கியுள்ளது. நாட்டில் அதிகரித்துள்ள பிரச்சினைகளுக்கு எவ்வித எல்லையோ வரையறையோ இல்லாத வகையில் அவை வளர்ச்சியடைந்துள்ளன. பிரச்சினைகள் பூதாகரமாக இருக்கத்தக்கதாக ஆட்சியாளர்கள் எவ்வித கூச்சமுமின்றி ஆட்சிக் கதிரைகளை அலங்கரித்துக் கொண்டு – சௌகரியம் கண்டு வருகின்றனர்.

நாட்டில் தமிழ், முஸ்லிம்களுக்கெதிராக விஸ்வரூபமெடுத்திருக்கும் இனவாதிகளின் செயற்பாடுகள், அவற்றைக் கணக்கிலெடுக்காது வியாபகமடையச் செய்திருக்கும் அரசாங்கத்தின் போக்குகள் என்பன காலத்துக்குக் காலம் புதுப்புதுக் கோணங்களில் அரசியல் பரிமாணங்களையும் தோற்றப்பாடுகளையும் ஏற்படுத்தி வருகின்றன.

பல்லின சமுதாயம் கொண்ட இந்நாட்டில் தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினரின் அபிலாஷைகளை ஆட்சியாளர்கள் மதிக்கத்தவறிய விளைவின் எதிரொலி அழிவு மாத்திரமே. இதனால் தமிழ், முஸ்லிம்கள் மாத்திரமன்றி சிங்கள சமூகமும் இன்று கொதிநிலையில் வாழ்ந்து வருகின்றனர். இந்நாட்டு மக்களின் பெறுமதிமிக்க வாழ்க்கையை துன்பமும் பதற்றமும் நிறைந்ததாக வைத்துக் கொண்டு ஆட்சியாளர்களோ குளிர் காய்ந்து வருகின்றனர்.

சுதந்திர இலங்கையின் வரலாற்றில் எந்தவொரு ஆட்சியாளரும் இதயசுத்தியுடன் செயற்பட்டு இந்நாட்டில் புரையோடிப் போயிருக்கும் இனங்களுக்கிடையிலான கசப்புணர்வுகளைக் களைந்துவிடக்கூடிய நிலையான தீர்வை ஏற்படுத்த ஆக்கபூர்வமானதும் சாத்தியமானதுமான முயற்சிகள் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.
அப்படியாயின் இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுக்காக கடந்த காலங்களில் ஆட்சியாளர் எவரும் எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளவில்லையா என்றால் அதுதான் காலங்கடத்தும் அரசியல் செய்யப்பட்டதே அன்றி அவை உணர்வுபூர்வமானதும் உண்மையானதுமான முயற்சிகளோ தீர்வுகளோ அல்ல என்பதை வரலாறு தெளிவாக எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கிறது.

உள்நாட்டு இனப்பிரச்சினைத் தீர்வுக்கு தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா மேற்கொண்ட நம்பகரமானதும் வெளிப்படையானதும் ஆக்கபூர்வமானதுமான நடவடிக்கை போல இருக்க வேண்டும். அதுதான் தீர்வென்பதல்ல. அது ஒரு மாதிரியாகக் கொள்ளப்படலாம். தென்னாபிரிக்காவில் அடிமைகளாக வாழ்ந்த மக்கள் இன்று சுதந்திரமாக – சந்தோஷமாக – சௌகரியமாக வாழ்கிறார்கள். இதுதான் அறிவுபூர்வமான முயற்சியும் தீர்வும்.

Ranil-Maithri-Jan-25-2015-

ஆனால் இலங்கையில் நடந்ததும் நடப்பதும் என்ன? தேர்தல் காலங்களில் அழகாக வடித்தெடுத்த வாசகங்களை தேர்தல் விஞ்ஞாபனங்களில் இட்டு மக்களைக் கவர்ந்து வாக்குகளைப் பெற்று அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்கின்ற ஆட்சியாளர்கள் பின்னர் நாட்டின் உண்மையானதும் நிலையானதும் பிரதானமானதுமான தேவையாகவுள்ள இனப்பிரச்சினையைத் தீர்த்து வைக்காமல் சாதாரண விடயங்களில் காலநேரங்களை வீணடித்துக் கொண்டு காலங்கடத்தும் அரசியல் செய்து வருகின்றனர்.

நாடடில் இனங்களுக்கிடையில் காணப்படும் இனப்பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டியதே இன்று நாட்டின் பிரதான அடிக்கட்டுமானமாகும். ஏனையவை மேல்கட்டுமானங்களாகும். அடிக்கட்டுமானத்தை சரிவர பலமாகக் கட்டியெழுப்பாத – கட்டியெழுப்ப முடியாத – கட்டியெழுப்பத் திறனற்ற அரசியல்வாதிகள் மேற்கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுக் காலங்கடத்துவது நகைப்புக்கிடமானதும் அறிவுபூர்வமற்றதுமாகும்.நாட்டில் எங்கு பார்த்தாலும் அவலம் நிறைந்த ஓலங்கள். யுத்த காலத்தில் காணாமலாக்கப்பட்ட உறவினர்கள் நூறு நாட்களையும் தாண்டி தரையில் நடத்திய போராட்டம் அரசாங்கத்தினால் கணக்கிலெடுக்கப்படாத நிலையில் ஒரு கட்டமாக கடலுக்குள் சென்றது.

கேப்பாபிலவு, முள்ளிக்குளம், சிலாவத்துறை என வடக்கில் மக்கள் குடியிருப்புப் பகுதிகள் பலவற்றில் நிலைகொண்டுள்ள ஆயுதப்படையினரை அங்கிருந்து வெளியேற்றிட மக்கள் நடத்திய போராட்டங்கள் எவ்வித முடிகளுமின்றி முடங்கிப் போயுள்ளன.

ஞானசார தேரர் எனும் பௌத்த துறவி நாட்டில் தமிழ், முஸ்லிம்களைத் துரத்தித் துரத்தி தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டும் சிறுபான்மையினரை சீண்டி வம்புக்கிழுத்துக் கொண்டும் திரியும் போது, மஹிந்த முதல் மைத்திரி வரை அதுகுறித்து எவ்வித உணர்வுமற்றவர்களாக மாறிவிட்டுள்ளனர்.

அல்குர்ஆனை அவமதித்தமை, ஊடகவியலாளர் மாநாட்டினுள் அத்துமீறிப் புகுந்து குழப்பம் விளைவித்தமை தொடர்பில் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தும் கூட பொலிசார் அவரைக் கைது செய்து விடாத வண்ணம் அவருக்குத் தஞ்சமளித்து மறைத்து வைத்திருந்ததாக ஆட்சியாளர்கள் மீது பரவலாகக் குற்றஞ் சாட்டப்பட்டிருந்தது. பின்னர் அவர் நாட்டின் ஒரு பிரபல நபராக வெளியே வந்து விட்டார்.

இலங்கையில் இனங்களுக்கிடையிலான கசப்புணர்வுகளை திட்டமிட்டு வளர்த்தவர்கள் ஆட்சியாளர்களே. ஆட்சி நடவடிக்கைகளின் போது சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதன் விளைவாக அப்பாதிப்பிலிருந்து நிவாரணம் வழங்கும் ஒப்பந்தங்களைச் செய்துவிட்டு பின்னர் பௌத்த பெரும்பான்மை மக்களின் அழுத்தம் எனக்கூறி அவற்றைக் கிழித்தெறிந்து குப்பைத் தொட்டியில் போட்டவர்கள் இந்நாட்டின் ஆரம்ப கால பிரதமர்களே. பண்டா – செல்வா ஒப்பந்தம், ட்டலி – செல்வா ஒப்பந்தம் எல்லாம் வெறும் கண்துடைப்புகளே.

1970 இல் பதவிக்கு வந்த பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக தலைமையிலான அரசாங்கம் பௌத்த மதத்துக்கும் சிங்கள மொழிக்கும் அரசியலமைப்பு அந்தஸ்தைக் கொடுத்து ஏனைய மதங்களையும் தமிழ் மொழியையும் சிறுமைப்படுத்தியதன் மூலம் நாட்டில் எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றிவிட்டிருந்தார். இன்றைய புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் பௌத்த மத அந்தஸ்து குறித்த கேள்வி முதன்மையான விவாதப் பொருளாகவே மாறிவிட்டிருக்கிறது.

1977 இல் நிறைவேற்று அதிகாரங் கொண்ட ஜனாதிபதி முறையின் மூலம் நாட்டைத் துரிதமாக அபிவிருத்தி செய்து விடலாம் என்ற சுலோகம் தாங்கி வந்த ஜே.ஆர். ஜயவர்தன, 1978 புதிய அரசியலமைப்பினூடாக எதேச்சாதிகார அரசை நிறுவி, அதியுச்ச அதிகாரங்களைக் கொண்டு அடக்குமுறை அரசியல் நடத்தினார். 1979 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டு வந்தது முதல் 1983 ஜுலை கலவரம் தொட்டு ஆரம்பமான உள்நாட்டு யுத்தத்திற்கு அரச தரப்பில் தலைமைத்துவம் வழங்கி யுத்தத்தை வழிநடத்திச் சென்று நாட்டை நாசமாக்கினார்.

யுத்தம் ஓய்ந்து எட்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக மென்போக்குடைய புதிய சட்டம் கொண்டுவரப்பட இருப்பதாக அண்மைக் காலங்களாகத் தெரிவிக்கப்பட்டு வந்தது. எனினும் புதிய சட்டம் கொண்டு வரப்படுவதன் மூலம் பழைய பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட மாட்டாது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

1994 இல் நாட்டில் நிலையான சமாதானத்தைக் கொண்டுவரப் போவதாகக் கோஷமெழுப்பி ஆட்சிபீடமேறிய ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் தனது பங்கிற்கு அதிகாரப் பகிர்வை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியில் முன்னைய காலத்தையும் யுத்தத்தின் மூலம் சமாதானத்தை அடைவது என பின்னைய காலத்தையும் கடத்தினார்.

எனினும் அவர் உருவாக்கிய நகல் அரசியலமைப்பின் முகவுரையில் நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிர்சசினையின் உண்மையான வரலாற்று வடிவத்தை சுருக்கமாக எடுத்துரைத்திருந்தார். அந்த நகல் அரசியலமைப்பு யோசனையைக்கூட பாராளுமன்றத்தில் ஒரு தரப்பு எரியூட்டினர்.

சென்றவாரம் (2017.06.30) கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய சந்திரிகா ‘சிறுபான்மை மக்கள் மீதான அழுத்தங்களும் தாக்குதல்களும் இன்றும் தொடர்கின்றன. முன்னர் யுத்தம் முடிவுக்கு வரும்வரை தமிழ் மக்கள் மீதான அடக்குமுறை காணப்பட்டது. இன்று இந்த நிலை முடிவுக்கு வந்துள்ள போதிலும் முஸ்லிம் மக்கள் மீதான அடக்குமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2013 இலிருந்து முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்படுகின்றன. அவர்கள் மீதான அடக்குமுறைகளை அரசாங்கம் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

2005 இல் மென்மையான நடத்தையினூடாக ஜனாதிபதியாகிக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷ 2009 இல் நாட்டின் சகல வளங்களையும் பலத்தையும் ஒன்று திரட்டி புலிகளுடனான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த வகையில் நாட்டை சுடுகாடாக்கினார். தொடர்ந்த வருடங்களில் சுடுகாட்டின் மேல் நின்று கொண்டு வெற்றிக் கொண்டாட்டம் நடத்தினார்.

2010 இல் அரசியலமைப்புக்கு 18 ஆம் திருத்தம் கொண்டு வந்து தனது அதிகாரங்களை அதிகரித்துக் கொண்டு நாட்டில் பேயாட்டம் ஆடினார். சர்வாதிகாரம் தலைவிரித்தாடவே ஒன்றிணைந்த எதிர்ச் சக்திகள் வட்டமிட்டு 2015 ஜனவரியில் அவரது ஆட்டத்துக்கு ஒரு முடிவு கட்டினர்.

Ranil Maithri

ஆனால் 2015 ஆடுகளத்தில் பௌத்த – சிங்கள பெரும்பான்மை கொண்ட இரு பிரதான கட்சிகளுமே ஒன்றுசேர்ந்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் முன்னெப்போதும் கண்டிராத புதிய ரக ஆட்டங்களை ஆடி வருகின்றனர். அரசியலமைப்புக்கான 19 ஆம் திருத்தத்தில் நல்லாட்சியையும் ஜனநாயகத்தையும் ஏற்படுத்துவதாகச் சொன்னவர்கள், ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து மக்களுக்கு வழங்கவில்லை, மாறாக ஜனாதிபதியும் பிரதமரும் அதிகாரங்களை தமக்குள் பகிர்ந்து கொண்டார்கள். அவ்வளவுதான்.

இப்போது இரட்டைக்குழல் துப்பாக்கியாகி இருவரும் ஆடுகளத்தில் நவீன காலத்திற்கேற்ற ஆட்டங்களை நடத்துகின்றனர். அரசியலில் ஆட்டக் கோட்பாடு  குறித்த இயல்புகள் இன்றைய இலங்கை அரசியலில் மலிந்து விட்டன.

சிங்கள – பௌத்த ஆட்சியாளர்கள் சிறுபான்மையினரை நசுக்குவதன் மூலம் தாம் பெரும்பான்மை இன மக்களுக்கு நல்லது செய்வதாக நினைத்து அவர்கள் தம் பெரும்பான்மை சமூகத்தையும் நிம்மதியிழக்கச் செய்வது கொண்டிருக்கிறார்கள். நாட்டில் சிறுபான்மை தமிழர்களுக்கெதிரான யுத்தத்தின் போது பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்கள் மாத்திரமல்ல. பெறுமதியான உயிர்களையும் உடைமைகளையும் நிம்மதியையும் சந்தோஷத்தையும் சுதந்திரத்தையும் இழந்தது இந்நாட்டின் ஒட்டுமொத்த சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் அனைவருமே.

மொத்தத்தில் அரசியல்வாதிகளதும் அரசியல் கட்சிகளதும் இக்காலங்கடத்தும் அரசியலில் மகா ஜனங்கள் வெறும் பார்வையாளர்களாக மாறிவிட்டனர். இந்நாட்டைப் பொறுத்தவரை அதே அரசியல் தரப்பினரும் அதே அரசியல் பாணியும் இன்னும் தொடராக இருக்கும் நிலைதான் உள்ளது. மாறாக புரட்சிகர மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் தொலைவில் கூட தென்படவில்லை.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *