Search
Monday 18 June 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கிழக்கின் எழுக தமிழ்..!

கிழக்கின் எழுக தமிழ்..!

-நரேன்-

தேசிய இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்தே தொடங்கி விட்டன. அவை அரசியலமைப்பில் பிரதிநித்துவ வாய்ப்புக்களை வழங்கிய போது ஏற்பட்டிருந்தது. 1948 பெப்ரவரி 4 ஆம் திகதி பிரித்தானிய ஏகாதிப்பத்திய அரசாங்கம் இலங்கையை விட்டு வெளியேறிய போது இந்த நாட்டில் பெரும்பான்மையாக வாழ்ந்த சிங்கள தலைவர்களிடம் ஆட்சி அதிகாரத்தை கையில் கொடுத்துவிட்டுச் சென்றனர். சுதந்திர இலங்கையில் முதன் முதலாக ஆட்சி அமைத்த மேலைத்தேச செல்லப்பிள்ளையாக விளங்கிய ஐக்கிய தேசியக் கட்சியும் சரி, தன்னுடைய அரசியல் இருப்பிற்காக மேலைத்தேச எதிர்பாளராக களமிறங்கி ஆட்சிக்கு வந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் சரி தமிழ் தேசிய இனத்தின் நிலை தொடர்பாக கவனம் செலுத்தியிருக்கவில்லை. அவ்விரு கட்சிகளும் தமிழ் தேசிய இனத்தை அடக்கி ஆளுவதையும், அவர்கள் இந்த நாட்டின் சமபங்காளிகள் என்பதையும், அவர்களது அபிலாசைகளை புறக்கணித்து இந்த நாட்டை ஒரு சிங்கள பௌத்த தேசிய நாடாக மாற்றும் நோக்கில் தமது செயற்பாட்டை முன்னெடுத்திருந்தனர். இதன்காரணமாக தமிழ் தேசிய இனம் தமது இறைமை அங்கீகரிக்கப்பட்ட சம நீதி, சமவுரிமை என்பவறறுக்காக குரல் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து பாராளுமன்ற ஜனநாயக மரபுகளுக்கு உட்பட்டு தமிழ் தேசிய இனம் குரல் கொடுத்து வந்திருந்தது. சேர் பொன் அருணாசலம், சேர் பொன் இராமநாதன் போன்றோர் ஓட்டுமொத்த நாடும் அந்நிய ஆதிக்கத்தில் இருந்து விடுபடவேண்டும் கடினமாக உழைத்துக் கொண்டிருந்த அதேவேளையில் துளிர் விடத் தொடங்கியிருந்த தமிழ் தேசிய இனத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் தங்களது அறிவுக்கு எட்டியவரை போராடினர். அந்த அடித்தளத்திலேயே சுத்தந்திரத்திற்கு பின்னர் தமிழ் தேசிய இனம் தனது விடுதலைக்கான போராட்டத்தைத் தீவிரப்படுத்தியது. அந்நியர் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட இலங்கையை ஆட்சி செய்ய இரு பிரதான கட்சிகளும் தமிழ் தேசிய இனத்தை அடக்கி ஒடுக்கியமையால் இன்று சுதந்திரம் பெற்று 69 வருடங்கள் கடக்கின்ற போதும், இந்த நாட்டில் ஒரு நிலையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாத நிலை தொடர்கிறது. பாராளுமன்ற ஜனநாயக ரீதியாக போராடிய தமிழ் மக்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதுடன், அவர்கள் மீதான அடக்குமுறை தீவிரமடைந்தது. இதனை இன்றைய ஆட்சியாளர்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மிதவாத தலைமைகளின் அரசியல் நகர்வுகளில் ஏற்பட்ட தோல்வியும், அதனை தென்னிலங்கை சக்திகள் கையாண்ட விதமும் இளைஞர்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தின. கலவரம் என்ற பெயரால் தமிழ் மக்கள் தென்பகுதியில் அடித்து விரட்டப்பட்டனர். இதனால் தமிழ் இளைஞர்கள் ஆயுத ரீதியாக ஒரு தற்காப்பு நிலைக்கு செல்ல வேண்டி ஏற்பட்டது.

தமிழ் மக்களை வெளியேற்றுவதையும், அவர்களது நிலத்தை அபகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு செயற்பட்ட தென்னிலங்கை கடும் போக்கு சக்திகளிடம் இருந்தும், இந்த நாட்டின் இராணுவத்திடம் இருந்தும் தம்மை பாதுகாத்து கொள்ளும் முகமாக தமிழ் தேசிய இனம் ஒரு தற்காப்பு போரில் ஈடுபட்டது. அந்த தற்காப்பு யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் வடக்கு, கிழக்கில் நில ஆக்கிரமிப்புக்களோ, புதிது புதிதான சிங்கள கிராமங்களோ சிங்கள குடியேற்றங்களோ மக்களின் காணிகளில் இராணுவ முகாம்களோ, புத்தர் சிலைகளோ, புத்த விகாரைகளோ எழுப்பப்பட்டிருக்கவில்லை. தமிழ் தேசிய இனம் தாம் பாதுகாப்பாக இருப்பதாக அப்போதைய சூழலில் உணர்ந்தது. இந்த நிலையை தான் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் முன்னைய மஹிந்த அரசாங்கம் நசுக்கியது. இதன் பின்னர் தான் தமிழ் தேசிய இனத்தின் தாயகப் பிரதேசங்களில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளில் இராணுவம் முகாம் அமைத்ததும், சிங்கள குடியேற்றங்கள் தோன்றியதும், தமிழ் கிராம பெயர்கள் சிங்களமயமாக்கப்பட்டதும், புதிய சிங்கள கிராமங்கள் உருவாக்கப்பட்டதும், திடீர் திடீரென புத்தர் சிலைகள் முளைப்பதும், புத்த மதத்தவர்கள் செறிந்து வாழாத பகுதியில் புத்தர் சிலைகளும் புத்த விகாரைகளும் அமைப்பது இன்று வரை தொடர்கின்றது.

ஆயதப்போராட்டத்தை மௌனிக்கச் செய்ய வேண்டும் என்று விரும்பிய சர்வதேச சமூகம் அதற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்ததுடன் அதற்கு பிரதிபலனாக இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்தை தாங்கள் பயன்படுத்துவதற்கு இடமளிக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் வைத்தது. தமிழ் மக்கள் இனி எழுச்சி பெற முடியாத அளவுக்கு அவர்களை நசுக்கி ஒடுக்கி தன்னை ஒரு வரலாற்று நாhயகனாக மாபெரும் வெற்றி வீரனாக சிங்கள மக்கள் மத்தியில் காண்பித்து இந்த நாட்டை தானும், தன் குடும்பமுமே ஆட்சி செய்ய வேண்டும் என்று மஹிந்த விரும்பியிருந்தார். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே சர்வதேச சமூகத்திற்கு அன்று பொய்யான வாக்குறுதிஜயையும் வழங்கியிருந்தார். தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டதை விட தாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வின் காரணமாகவே சர்வதேச சமூகம் தமிழ் மக்கள் நலன்சார்ந்து செயற்படுவதாக காட்டி அவர்களின் ஆதரவையும் பெற்றுக் கொண்டு தென்னிலங்கையிலவ் அல்லது இந்த நாட்டில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும் தமிழ் மக்களுக்கான விடியல்கள் தொடர்பில் எத்தகைய குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை. கடந்த அரசாங்கம் முடியாது என்று நேரடியாக சொன்ன விடயத்தையே இந்த அரசாங்கம் செய்கிறோம் என்று சொல்லி செய்யாமல் காலத்தை கடத்துகிறது. தாங்கள் கொண்டு வந்த இந்த அரசாங்கத்தை கட்டிக் காப்பாற்றி தங்களுடைய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதிலேயே சர்வதேச சமூகத்தின் கவனம் குவிந்திருக்கிறது. இந்த தைரியத்திலேயே புதிய அரசியலமைப்பிலும் கூட தமிழ் மக்களுக்கு உரிய தீர்வை அரசாங்கம் முன்வைக்க மறுத்து வருகிறது.

மஹிந்தவிடம் இருந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக எவ்வாறு பொது அமைப்புக்களும், சிவில் அமைப்புக்களும், தொழில் சங்கங்களும் சர்வதேச நிகழ்ச்சி நிரலுக்கு அமைய ஒன்றுபட்டார்களோ அதேபோன்று தமிழ் சமூகத்திற்காக அல்லது அந்த சமூகத்தின் நலன்சார்ந்து உழைக்கின்ற அனைத்து தரப்புக்களும் ஓரணியில் திரளவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த அவசியத்தின் நிமித்தமாகவே வடக்கு. கிழக்கின் விடியலுக்காக தமிழ் மக்கள் பேரவையும் உருவானது. கட்சி, தேர்தல் அரசியலுக்கு அப்பால் மக்களின் உரிமைகளை மையப்படுத்தி செயற்படுகின்ற ஒரு கட்டமைப்பாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு தமிழ் மக்கள் பேரவை இன்னமும் முயற்சித்து வருகிறது.

ஒரு தேசிய இனத்தின் உரிமைகளை முன்வைத்து அதேநேரத்தில் நாடு பிளவுபடுவதைத் தடுக்கும் நோக்கத்தில் தேர்தல் காலங்களில் தமிழ் தலைமை முன்வைத்த விஞ்ஞாபனங்களுக்கு அமைவாக ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைத்த பெருமையும் பேரவையைச் சேரும். அதன் தொடர்ச்சியாக அதற்கு ஆதரவு திரட்டும் வகையில் மக்கள் கருத்துக்களைக் கேட்டறிந்து தன்னை ஒரு ஜனநாயக சக்தியாக வெளிப்படுத்தியதுடன், கடந்த செப்ரெம்பர் மாதம் 24 ஆம் திகதி தங்களது அரசியல் யாப்பு முன்மொழிவுகளை முன்வைத்தும், ஏனைய தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகளை முன்வைத்தும் எழுக தமிழ் பேரணியை நடத்தியது. அதில் சாரை சாரையாக திரண்டு வந்த தமிழ் மக்கள் தமது அபிலாசைகளையும், கோரிக்கைகளையும் முன்வைத்தனர். அதன் தொடர்ச்சியாக எதிர்வரும் 10 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பில் எழுக தமிழ் பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளது.

தமிழ் மக்களின் நீண்டகால போராட்ட வரலாற்றில் வடக்கைப் பொறுத்தவரையில் வன்னியும், கிழக்கைப் பொறுத்தவரையில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பெருளவானோர் போராட்டங்களில் பங்கெடுத்து களப்பலியும் ஆகியுள்ளனர். வடக்கை விட கிழக்கில் உள்ளவர்களே அதிகம் பாதிக்கப்பட்டவர்களாகவும் உணர்ந்திருந்தனர். ஆகவே, இணைந்த வடக்கு, கிழக்கில் ஒரு சமஸ்டி ஆட்சிமுறையே தமிழ் மக்கள் தலைநிமிர்ந்து வாழுவதற்கான வழி என்பதை கிழக்கு மக்கள் என்றோ உணர்ந்து கொண்டு விட்டனர். இதன் கருத்தின் ஆழமும், அகலமும் பரிமாணங்களும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே தான் இந்த முறை கிழக்கில் நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணி அந்த மக்கள் மத்தியில் பலமான எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இது கட்சி பேதங்களுக்கு அப்பாற்பட்டது. இன, மத, பேதங்களுக்கு அப்பாற்பட்டது. எனவே, வடக்கு, கிழக்கு வாழ் மக்கள் அனைவரும் இந்த பேரணியில் கலந்து கொண்டு தமிழர் தாயகப் பிரதேசத்தில் வாழ்கின்ற அனைவரும் சமத்துவம் மிக்கவர்கள் என்பதையும், சமவுரிமையுடையவர்கள் என்பதையும், ஒரு நியாயமான கோரிக்கைரய முன்வைத்து உரிமைக்காக போராடி வருபவர்கள் என்பதையும் சகலருக்கும் தெரியப்படுத்தும் வகையில் அணிதிரளவேண்டும். வருகின்ற 10 ஆம் திகதி மட்டுநகர் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிய வேண்டும். பிரச்சனைகளில் இருந்து நழுவத் துடிக்கும் அனைத்து தரப்புக்களும் விலகிவிட முடியாது என்று புரிந்து கொள்வதற்கு இது ஒரு அரிய சந்தர்ப்பம்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *