Search
Tuesday 22 May 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

குண்டு வெடிப்புக்களினால் பாதிக்கப்பட்ட மக்களில் 80% மானோருக்கு பார்வைப்புலத்தில் பாதிப்பு

குண்டு வெடிப்புக்களினால் பாதிக்கப்பட்ட மக்களில் 80% மானோருக்கு  பார்வைப்புலத்தில் பாதிப்பு

மருத்துவர்  சி. யமுனானந்தா

2008 – 2009 வன்னிப் பேரவலத்தில் பல்லாயிரக்கணக்கான குண்டு வெடிப்புக்களை விமானத்தில் இருந்தும், எறிகணை வீச்சில் இருந்தும் தமிழ் மக்கள் அனுபவித்தனர். இதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். ஆனால் இவ்வவலம் நிகழ்ந்து 10 வருடங்கள் கழிந்த நிலையிலும், மிகவும் முக்கிய பாதிப்பான மக்களின் பார்வை தொடர்பான பாதிப்பு இதுவரை அடையாளங் காணப்படவில்லை.

குண்டு வெடிப்புக்களினால் பாதிக்கப்பட்ட மக்களில் 80% மானோர் தமது பார்வைப்புலத்தில் பாதிப்பினைப் பெற்றுள்ளனர். கண் உடலின் 0.1% பரப்பளவைக் கொண்டிருந்தாலும் முகத்தில் அதன் அமைவும் வளைவும் சாதாரணமாக எதிர்பார்க்கப்பட்ட அளவிலும், 30% அதிகமாகக் குண்டுவெடிப்பு தாக்கத்தில் பாதிக்கப்படும் சாத்தியம் உள்ளது. அந்த வகையில் வன்னியில் உயர் தப்பியவர்களின் பார்வைப்புலத்தில் பல பாதிப்புக்கள் உள்ளன. இவற்றில் 90% மானவை விழிவெண்படலத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கள் ஆகும். இப்பகுதியில் நரம்புகள் அற்றமையால் இப் பாதிப்புக்கள் பொதுவாக வெளியில் தெரிவதில்லை. ஆனால் பின்வரும் நோய்நிலைகள் அவர்களின் பார்வையினைப் பாதிக்கின்றது.

(1) விழிவெண்படல நுண் உலோகத் தாக்கம் (Corneal Nano metastasis)
(2) தாழ்நிலை விழிவெண்படல சேதாரம் (Low Grade-Corneal laceration)
(3) விழிவெண்படல வடு (Corneal Scaring)

இவை குண்டு வெடிப்பின் அதிர்ச்சி அலைகள் மூலம் ஏற்பட்டிருக்கலாம். இவ்வதிர்ச்சி அலைகள் செக்கனுக்கு 10,000 மீற்றர் தொடக்கம், 30,000 மீற்றர் வரை வேகத்தில் தாக்கி கண்ணில் மறைமுகப் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதனால் விழித்திரையில் நீர் அமுக்கம் அதிகரித்தல் (Macular oedema) விழித்திரையில் பரவிய குருதிக்கசிவு (diffused retinal haemorrhage) என்பனவும் ஏற்பட சாத்தியம் உள்ளது.

மக்கள் கூட்டம்மீது எறிகணைத்தாக்குதல்கள், விமானத்தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டமைக்கு நிரந்தர ஆதாரமாக அக் குண்டுத்தாக்கலில் உயிர்தப்பிய மக்கள் அமைகின்றனர். அவர்களின் கண்களின் விழிவெண்படலத்தில்; குண்டுவெடிப்பு அதிர்ச்சி அலைகள் நிரந்தர வடுவினை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வெடிப்பின்போது சிதறும் உலோகங்களின் நுண்மங்கள், மண், தூசு என்பன விழிவெண்படலத்தில் படிந்து காணப்படும். விழிவெண்படலத்தின் தடிப்பு, அடர்த்தி, வடிவம், பாதிப்புக்கள் என்பனவற்றை விழிவெண்படல முப்பரிமாண அளவிடலுக்கான (Corneal Tomography) தளக்கதிர் படம் மூலம் அதாவது நவீன தொழில்நுட்பம் மூலம் (Oculus Pentacam) பாதிப்பும் இன்றி அறியலாம். இதன் மூலம் எமது சமூகத்தில் வன்னி அவலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் கண்களைப் பரிசோதித்து அவர்களுக்கு உரிய சிகிச்சையினைச் செவ்வனே செய்யலாம். மேலும் கட்புரைச் சத்திரச் சிகிச்சைக்கு முன்னரும் (Cataract) Oculus Pentacam மூலம் விழிவெண்படலத்தின் தன்மையை அறிதல் வேண்டும். இதன்போது மக்களின் விழிவெண்படல அசாதாரண நிலைக்கு எமது பிரதேசத்தில் நிகழ்கின்ற குண்டுவெடிப்புப் பாதிப்புக்களையும் கருத்தில் எடுக்க வேண்டும். வன்னி அவலம் நிரந்தர விழிவெண்படல வடுவினை ஏற்படுத்தியுள்ளமை பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்படல் வேண்டும்.

முள்ளிவாய்க்கால் அவலம் எமது இனத்திற்கு ஓர் பாரிய சமூகவடு, மனவடு என்பவற்றோடு சுவாசவடு, புற்றுவடு, விழிவடு என இனப்படுகொலையின் எச்சங்களாக அமைந்து உள்ளது.

“விளக்கு விளக்கு விளக்கு விளக்கு – முள்ளிவாய்க்கால்
விலக்கு விலக்கு விலக்கு விலக்கு”

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *