Search
Tuesday 17 September 2019
  • :
  • :

கூட்டமைப்பின் சஞ்சலம்

கூட்டமைப்பின் சஞ்சலம்

வீரகத்தி தனபாலசிங்கம் 

வட மாகாண சபையில் தோன்றிய அண்மைய நெருக்கடிக்கு இணக்கபூர்வமான முடிவு காணப்பட்டதாகக் கூறப்பட்ட கையோடு மறுநாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையில் குறிப்பிட்ட சில விடயங்கள் தமிழர் அரசியலின் இன்றைய நிலைவரம் அவருக்குச் சஞ்சலத்தை ஏற்படுத்த ஆரம்பித்திருக்கிறது என்பதை வெளிக்காட்டுவதாக இருக்கின்றன.

காணாமல் போனோர் விவகார அலுவலக திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் தமிழ் மக்களை அழுத்துகின்ற பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் காணப்படக்கூடியதாக இருக்கின்ற காலதாமதத்தை இல்லாமற் செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நெருக்குதல்களைப் பிரயோகிக்கவில்லை என்ற விசன அபிப்பிராயம் தமிழ்ச் சமூகத்தின் ஒரு பிரிவினரிடையே காணப்படுகிறது. மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளே கூட்டமைப்புக்கு எதிரான பிரசாரங்களில் ஈடுபட்டிருக்கின்றார்கள். 2010 பொதுத் தேர்தலிலும் 2015 பொதுத் தேர்தலிலும் இந்த அரசியல்வாதிகள் தோல்வியடைந்தனர். எதிர்காலத் தேர்தல்களிலும்  அவர்கள் தோல்வியடைவார்கள் என்று கூறினார்.சகல இன மக்களும் ஐக்கியமாக சம அந்தஸ்துடன் நீதியான சூழலில் வாழவேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.ஆனால், மக்கள் ஒருவரை மற்றவர் பகைத்துக்கொண்டு வாழவேண்டும் என்று எமது பிரதேசங்களில் உள்ள சில அரசியல் கோமாளிகள் விரும்புகிறார்கள். சமாதானமான நாட்டில் தமிழ்ப் பகுதிகளில் சுயாட்சிக்கான நிலைமையை உருவாக்க வேண்டும் என்பதே கூட்டமைப்பின் நோக்கமாகும். ஆனால், நாட்டில் குழப்பநிலை இருக்கவேண்டும் என்பதே அந்த அரசியல் கோமாளிகளின் விருப்பமாக இருக்கிறது. அரசியல் ஸ்திரத்தன்மைக்குப் பதிலாக நாட்டில் குழப்பநிலை ஏற்படவேண்டுமென்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது.அதற்கு இடமளிக்கும் வகையில் அரசாங்கம் அதன் உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில்  காலதாமதத்தைச் செய்யக்கூடாது என்றும் சம்பந்தர் வலியுறுத்தித் தெரிவித்தார்.

sampanthan

கூட்டமைப்பின் தலைவர் யாரைச்சாடுகிறார் என்பதை இங்கு பெயர் குறிப்பிட்டுச் சொல்லித்தான்  வாசகர்கள் தெரிந்துகொள்ளவேண்டுமென்றில்லை.இத்தகைய தாக்குதலை பாராளுமன்றத்துக்கு வெளியேயும் உள்ளேயும் அவர் ஏற்கெனவே சில தடவைகள் தொடுத்திருக்கிறார்.சுற்றிவளைத்துப் பேசவேண்டியதில்லை.தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகள் கூட்டமைப்புக்கு குறிப்பாக வடக்கில் அரசியல் நெருக்குதலைக் கொடுக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளின் தலைவர்கள் சிவில் சமூக அமைப்பு என்று சொல்லப்படுகின்ற பேரவையின் செயற்பாடுகளில் பங்கேற்று அதன் நிலைப்பாடுகளுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதன் காரணத்தால் அந்த அரசியல் நெருக்குதலுக்கு பிரதானமாக தமிழரசு கட்சியே முகங்கொடுக்கவேண்டியிருக்கிறது.பேரவையின் பின்னணியில் இருக்கின்ற அரசியல் சக்திகள் நாளடைவில் புதியதொரு அரசியல் அணியை உருவாக்கினால் எதிர்காலத் தேர்தல்களில் தமிழரசுக்கட்சி தவிர்ந்த கூட்டமைப்பின் ஏனைய கட்சிகள் அந்த அணியல் இணைந்து களமிறங்கக்கூடிய சாத்தியத்தை நிராகரிப்பதற்கில்லை.

இதனிடையே,  வடமாகாண முதலமைச்சர் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸவரன் தமிழ்மக்கள் பேரவையின் இணைத் தலைவராகச் செயற்படுவது  தமிழரசு கட்சிக்கு பெரும் சங்கடமாகப் போய்விட்டது. மக்கள் மத்தியில் முன்கூட்டியே எந்தவிதமான அரசியல்சார் பணியையும் முன்னெடுத்த அனுபவத்தைக் கொண்டிராத விக்னேஸ்வரன் திடுதிப்பென தமிழர் அரசியலில் ஒரு அதிகார மையமாக தன்னை முன்னிலைப்படுத்தக்கூடியதாக இருந்ததற்குக் காரணம் முதலில் அவர் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக நின்றமையேயாகும்.

மேலும் கூட்டமைப்பின் வேறு எந்த அங்கத்துவக் கட்சியையும் விட தமிழரசுக்கட்சியுடனேயே விக்னேஸ்வரனை வடக்குத் தமிழ் மக்கள் அடையாளப்படுத்திப்பார்த்திருப்பார்கள் என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால்,வெகுவிரைவாகவே தமிழரசு கட்சியிடமிருந்து அவர் தன்னைத் தூரவிலக்கிக்கொள்வதில் அக்கறை காட்டத் தொடங்கினார். 2015 ஆகஸ்ட் பாராளுமன்றத்தேர்தலில் கூட்டமைப்பின் வேட்பாளர்களை ஆதரிக்க விக்னேஸ்வரன் முன்வரவில்லை.அவர் விரும்பிய அணியினரால் வடக்கில் ஒரு ஆசனத்தைத் தானும் கைப்பற்றவும் முடியவில்லை. வடக்கு,கிழக்கில் கூடுதலான ஆசனங்களைக் கைப்பற்றிய தனியொரு அணியாக கூட்டமைப்பு வெளிக்கிளம்பியதன் விளைவாக சம்பந்தனால் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் முடிந்தது. ஆனால், அத்தகைய செல்வாக்கான நிலையில் இருந்தபோதிலும் கூட விக்னேஸ்வரனின் போக்கைத் தட்டிக் கேட்கவேண்டுமென்று கூட்டமைப்பின் எந்தவொரு தலைவரும் ஏன் சம்பந்தனும் கூட துணிச்சல் கொள்ளவில்லை.இதுவே காலப்போக்கில் தமிழரசு கட்சிக்கு எதிரான அரசியல் சக்திகள் முதலமைச்சரை தங்களுக்கு அனுகூலமாகப் பயன்படுத்துவதற்கு வசதியாயமைந்தது.

விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக சம்பந்தன் களமிறக்கியபோது முன்னாள் இராஜதந்திரியும் தற்போது சிங்கள தேசியவாத அரசியலின் “தத்துவவாதியாக” தன்னைக் காட்டிக் கொள்கின்றவருமான கலாநிதி தயான் ஜெயதிலக அதை “சம்பந்தனின் கைவரிசை” (Sampanthan’s master stroke ) என்று வர்ணித்திருந்தார். இன்று அந்த வர்ணனையைத் திரும்பிப்பார்க்கும்போது அதன் முரண்நகையைப் புரிந்துகொள்ளமுடியும்.

2015 ஜனவரி ஆட்சிமாற்றத்திற்குப் பிறகு ஒருவருடம் கடந்துபோவதற்கு முன்னதாகவே கூட்டமைப்பின் நிலைப்பாடுகளுக்கும் அணுகுமுறைகளுக்கும் எதிரான செயற்பாடுகளில் விக்னேஸ்வரன் வெளிப்படையாகவே இறங்கத் தொடங்கி விட்டார்.  தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட “எழுக தமிழ்” பேரணிகளில் முன்னரங்கில் நின்று அதன் கொள்கைப் பிரகடனங்களை அவரே செய்தார். பேரவை ஒருபோதுமே அரசியல் கட்சியாக்கப்படப்போவதில்லை என்ற உறுதிமொழி தனக்குத் தரப்பட்டதன் பேரிலேயே அதன் செயற்பாடுகளில் பங்கேற்க இணங்கிக் கொண்டதாக விக்னேஸ்வரன் கூறியபோதிலும் , அதன் பின்னணியில் இருக்கின்ற முற்றுமுழுதான அரசியல் நோக்கத்தையோ, நிகழ்ச்சித் திட்டத்தையோ புரிந்துகொள்வதற்கு எவரும் அரசியல் மேதையாக இருக்கவேண்டியதில்லை. கூட்டமைப்புக்கு மாற்றான புதியதொரு அரசியல் அணியையும் தலைமைத்துவத்தையும் உருவாக்குவதற்கான களத்தை அமைத்துக் கொடுப்பதே பேரவையின் நோக்கமாகும்.

TPC

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான  தேசிய ஐக்கிய அரசாங்கத்துடன் இணக்கப்போக்கைக் கடைப்பிடித்து, புதிய அரசியலமைப்பொன்றை வரைவதற்கான செயன்முறைகளில் பங்கேற்று அதனூடாக தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதே கூட்டமைப்பின் பிரதான அரசியல்   தந்திரோபாயமாகும். போரின் முடிவுக்குப் பின்னரான நல்லிணக்கம் மற்றும் நிலைமாறுகால நீதிக்கான செயன்முறைகளைப் பொறுத்தவரை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு சர்வதேச சமூகத்தின் முன்னணி வல்லாதிக்க நாடுகளின் மூலமாக அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுப்பதே கூட்டமைப்பின் அடுத்த தந்திரோபாயமாகும்.

    புதிய அரசாங்கத்துடனான சர்வதேச சமூகத்தின் உறவுகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக நல்லிணக்கம் மற்றும் நிலைமாறுகால நீதிச்செயன்முறைகள் தொடர்பில் கொழும்பு மீதான நெருக்குதல்கள் தணிய ஆரம்பித்ததும் கூட்டமைப்பின் தந்திரோபாயத்துக்கு இயல்பாகவே பின்னடைவு ஏற்படத் தொடங்கியது.அரசாங்கத்துடன் ஒத்துழைத்துச் செயற்பட்டு பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக்காண்பதற்கு முயற்சிக்குமாறே கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இந்தியா,அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை ஆலோசனை வழங்கியிருக்கின்றன.கொழும்பு மீதான சர்வதேச சமூகத்தின் நெருக்குதலை  அடிப்படையாகக் கொண்ட தந்திரோபாயத்தையே கடைப்பிடித்து வந்த காரணத்தினால் மாறிய சூழலில் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இக்கட்டானதொரு நிலை ஏற்பட்டது.

புதிய அரசியலமைப்பை வரைவதற்கான செயன்முறைகளும்  மந்தகதியிலேயே நகருகின்றன. தென்னிலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான கூட்டு எதிரணி சிங்களத் தேசியவாத அரசியலைத் தீவிரப்படுத்தத் தொடங்கியதையடுத்து இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக்கொண்டுவரக்கூடிய ஏற்பாடுகளைப் பற்றிப் பேசுவதற்கே அரசாங்கத்தலைவர்கள் அஞ்சுகிறார்கள்.அரசியலமைப்பு வரைவு வழிநடத்தல் குழு இவ்வருட ஆரம்பத்தில் அதன் இடைக்கால அறிக்கையை அரசியலமைப்புச் சபையில் சமர்ப்பிக்குமென்று அரசாங்கம் கூறியபோதிலும், அது சாத்தியமாகவில்லை.அடுத்த மாதம் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுமென்று பிரதமர் விக்கிரமசிங்க கடந்தவாரம் அறிவித்ததைக்காணக்கூடியதாக இருந்தது.அத்துடன் இடைக்கால அறிக்கையில் அரசியலமைப்பின் சகல ஏற்பாடுகளையும் உள்ளடக்குவதா அல்லது சர்வஜனவாக்கெடுப்பின் மூலமாக மக்களின் அங்கீகாரத்தைப் பெறவேண்டிய அவசியம் அல்லாத ஏற்பாடுகளை மாத்திரம் உள்ளடக்குவதா என்று வழிநடத்தல் குழு இவ்வாரம் தீர்மானிக்கும் என்றும் பிரதமர் அரசியலமைப்புச் சபைச் செயலகத்தினால்  கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கொன்றில் உரையாற்றுகையில் அறிவித்தார்.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வைப் பொறுத்தவரை புதிய அரசியலமைப்புவரைவுச் செயன்முறைகள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் கூட்டமைப்பின் தலைவர்கள்  தற்போதைய நிகழ்வுப்போக்குகளினால் அதிருப்தியடையத்தொடங்கியிருக்கிறார்கள்.என்றாலும் அந்தச் செயன் முறைகளில் இருந்து அவர்களினால் உடனடியாக வெளியேறமுடியாது.தமிழர்கள் சமஷ்டி அமைப்பு பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருக்கும்போது சிங்கள அரசியல் சமுதாயமோ ஒற்றையாட்சி முறையிலிருந்து ஒற்றை அங்குலம் தானும் முன்நகரத்தயாராயில்லை. இத்தகைய நிலைவரங்கள்  தமிழ் மக்கள் மத்தியில் பெரும் விரக்தியை ஏற்படுத்தியிருக்கின்றன.கூட்டமைப்பின் அணுகுமுறைகள் பற்றி கடுமையான கேள்விகள் கிளம்பின.

இதைப் புரிந்துகொண்ட நிலையில்தான் சம்பந்தன் கடந்த வருட பிற்பகுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அன்றைய ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ– மூனைச் சந்தித்தவேளையில் சுயாட்சிக்கான தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாக புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க அரசாங்கம் தவறுமேயானால் நாட்டில் தமிழ் மக்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட பகுதிகளை அரசாங்கத்தினால் நிருவகிக்க முடியாத நிலையை அவர்கள் ஏற்படுத்துவார்கள் என்று கடுமையான தொனியில் அவரிடம் கூறவேண்டியேற்பட்டது.

சம்பந்தன் அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கத்தினால் தமிழர்கள் மீண்டும் ஏமாற்றப்படக்கூடும் என்ற அச்சத்தை உணர்வதனாற் போலும்  பான் கீ– மூனிடம் அவ்வாறு பேச வேண்டியிருந்தது.

இது இவ்வாறிருக்க , உள்நாட்டுப்போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான பொறுப்புக் கூறல் விவகாரத்திலும் அரசாங்கம் சர்வதேசசமூகத்துக்கு கொடுத்த உறுதிமொழிகளைக் காப்பாற்றத் தவறுகிறது.நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரத்தில் ராஜபக்ஷ அரசாங்கத்தைப்போன்று சர்வதேச சமூகத்துடன் முரண்படாமல் அந்தச் சமூகத்துடன்  ஒத்துழைத்துச் செயற்படுவதாக அரசாங்கம் கூறுகின்றபோதிலும், அதன் செயற்பாடுகளில் உருப்படியான எந்த முன்னேற்றத்தையும் காணக்கூடியதாக இல்லை.

உண்மை ஆணைக்குழு, காணாமல் போனோர் விவகார அலுவலகம் , இழப்பீட்டு அலுவலகம் மற்றும் விசேட நீதிவிசாரணைப் பொறிமுறை ஆகியவற்றை அமைப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அரசாங்கம் வாக்குறுதி அளித்தது. 2015 அக்டோபரில் ஜெனீவாவில் அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் அமைக்கப்படவேண்டியிருக்கும் இந்த நான்கு பொறிமுறைகளில் எந்தவொன்றுமே இதுவரை அமைக்கப்படவில்லை. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காணாமல் போனோர் விவகார அலுவலக சட்டத்துக்கான ஒரு திருத்தம் தொடர்பில் ஒரு சட்டமூலம் பத்து மாதங்கள் கழித்து கடந்த மாத பிற்பகுதியிலேயே சபையில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்துக்கு மேலும் இரு வருட கால அவகாசத்தை வழங்குவதற்கான புதிய தீர்மானமொன்று கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஜெனீவா கூட்டத் தொடரின்போது நிறைவேற்றப்பட்டது. இந்த அவகாசத்தை அரசாங்கம் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பயன்படுத்துமென்ற நம்பிக்கை தமிழ் மக்களுக்கு இல்லை.

இத்தகைய பின்புலத்திலேயே, வடக்கில் தமிழ் மக்கள் தங்களது மனிதாபிமானப் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கக்கோரி புறத் தூண்டுதல் இல்லாமலேயே  போராட்டங்களில் இறங்கத்தொடங்கினர். இராணுவத்தினால் போர்க்காலத்தில் கைப்பற்றப்பட்ட தங்கள் நிலங்களை மீளக்கையளிக்குமாறும் காணாமல் போன தங்கள் உறவுகளுக்கு நேர்ந்த கதியைக் கூறுமாறும் கேட்டு தமிழ்ப்பகுதிகளில் அமைதிவழிப் போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கின்றன.

மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போரின் அவலங்களில் இருந்து இன்னமும் விடுபடமுடியாதவர்களாக இருக்கும் தமிழ் மக்கள் தங்களது பிரச்சினைகளை முன்னிறுத்தி அரசியல் போராட்டங்களில் மீண்டும் இறங்குவதில் பெரிதாக அக்கறை காட்டக்கூடிய மனநிலையில் இல்லை என்ற கருத்தையெல்லாம் பொய்யாக்கி மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள்.  ராஜ பக் ஷ ஆட்சியின் இராணுவாத அரசியல் அடாவடித் தனங்களுக்குப் பிறகு இரண்டரை வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் நாட்டில் ஒப்பீட்டளவில் ஜனநாயக வெளியொன்றைத் தோற்றுவித்தது என்பதை இன்றைய அரசாங்கத்தை விரும்பாதவர்கள் கூட ஒத்துக் கொள்வார்கள்.அத்தயைவெளியை தமிழ் மக்கள் தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வுவேண்டி உறுதியான முறையில் குரல் கொடுப்பதற்கும் ஆட்சியாளர்களுக்கு நெருக்குதல்களைக் கொடுப்பதற்கும் நிச்சயம் பயன்படுத்தியேயாக வேண்டும். இந்நிலையில் முற்றிலுமாக இணக்கப்போக்கு அரசியலில் கவனத்தைக் குவித்திருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  தலைவர்கள் வெகுஜனப் போராட்டங்களுக்குத் தமிழ் மக்களைத் தயார் படுத்தவேண்டுமென்பதில் அக்கறை காட்டவில்லை.அந்த இடைவெளியை நிரப்புவதற்குத் தமிழ் மக்கள் பேரவையுடன் சேர்ந்து நிற்கும் உள்ளக அரசியல்வாதிகள் முன்னெடுக்கின்ற  செயற்பாடுகள் மக்களின் கவனத்தைப் பெறுகின்றன.

கூட்டமைப்பை விடவும் தீவிர தமிழ்த் தேசியவாத  நிலைப்பாட்டைக் கொண்டவர்களாக தங்களைக் காட்டிக் கொள்ளும் தமிழ் மக்கள் பேரவையைச் சேர்ந்தவர்கள் கூட்டமைப்பில்  இருக்கின்ற சில கட்சிகளையும்  இணைத்துக் கொண்டு தமிழரசு  கட்சிக்கு எதிராக மக்களை அணிதிரட்டும் செயற்பாடுகளில் இறங்கியிருக்கிறார்கள். அண்மையில் வடமாகாண சபையில்  ஏற்பட்ட நெருக்கடியில்  முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக வடக்கு மக்களை அணிதிரட்டி வீதிப்  போராட்டங்களை நடத்துவதில் பேரவை முன்னணியில் நின்றதையும் காணக்கூடியதாக இருந்தது. மாகாண சபையில் பங்கேற்கக் கூடாது என்ற நிலைப்பாட்டைக் கொண்ட சில அரசியல்வாதிகள் அந்த மாகாணசபையின் முதலமைச்சராக விக்னேஸ்வரனே தொடர்ந்து பதவிவகிக்க வேண்டுமென்று  குரல் கொடுப்பதில்  எந்தவிதமான அசௌகரியத்தையும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.. ஆட்சி மாற்றத்துக்கு  பெரும்  பங்களிப்பைச் செய்த தமிழ் மக்களுக்கு கடந்த  இரண்டரை வருடகாலத்திலான  அரசாங்கத்தின் செயற்பாடுகள் பெருமளவுக்கு ஏமாற்றத்தையே கொடுத்திருக்கின்றன.  அரசாங்கத்தின் மீதான வெறுப்பை வெளிக்காட்டுவதற்காக பேரவையின் செயற்பாடுகளுடன்  அந்த மக்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்கள் மத்தியில் செல்கின்ற வழக்கத்தைக் கொண்ட அரசியல் இன்றைய கால கட்டத்தில் எடுபடாது என்பதை புரிந்து கொண்டு வெகுஜன  ஈடுபாட்டுடன் கூடிய அரசியல் செயற்பாடுகளை   முன்னெடுக்க தமிழரசு கட்சியின்  தலைவர்கள் முன்வராத பட்சத்தில் மக்களிடமிருந்து தனிமைப்படும் போக்கைத் தவிர்க்க முடியாது. ‘எழுக தமிழ்’ போன்ற வெகுஜனப் போராட்டங்கள் கொழும்பு அரசாங்கத்துக்கு நெருக்குதலைக்  கொடுக்கின்றனவோ இல்லையோ  தமிழ்ப்பகுதிகளில் தமிழரசு கட்சிக்கு நெருக்குதலைக் கொடுக்கின்றன என்பது மாத்திரம் உண்மை.

Eluka Thamil Batticaloa (34)

இத்தகைய  பின்புலத்திலேயே பாராளுமன்றத்தில் சம்பந்தன் தமிழ் அரசியல்வாதிகள் சிலர் மீது கொடுத்த  தாக்குதலை நோக்க வேண்டும். தமிழ் மக்கள் அடுத்துப் பயணிக்க வேண்டிய பாதை  குறித்து கடந்த பல தசாப்தகால போராட்டங்களில் இருந்து பெறக்கூடிய  படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு  தெளிவானதும் விவேகமானதுமான அரசியல் நிகழ்ச்சித்திட்டமெதையும்  முன்வைக்காமல் வெறுமனே உணர்வெழுச்சியாகப் பேசி மக்களை  வீதிப் போராட்டங்களில் இறங்குவதில் உள்ள விபரீதங்களை பேரவையின் தலைவர்கள் எனப்படுவோர் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதேவேளை,  தமிழ் மக்களுக்கு வழங்கிய  உறுதி மொழிகளைக் காப்பாற்றுவதில்  அரசாங்கம் மேலும் காலதாமதம் செய்தால் அது  தன்னால் விமர்சிக்கப் படுகின்ற –பாராளுமன்றத்துக்கு வெளியே உள்ள தமிழ் அரசியல்வாதிகளுக்கே வாய்ப்பாகப்போகும் என்பதையும் சம்பந்தன்  சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனால், ஆட்சிமாற்றத்தின்  ஆரம்பக் கட்டங்களைப் போலன்றி, அண்மைக்காலமாக அரசாங்கத்திடம் சிங்கள,பௌத்த  மேலாதிக்கவாதத்துக்கு அடிபணிகின்ற  போக்கு அதிகரித்த வகையிலிருப்பது அவதானிக்கக் கூடியதாக  இருக்கின்றது. அதன்  ஒவ்வொரு நடவடிக்கையின்   ஊடாகவும்  அரசாங்கம் தனக்கும் ராஜபக் ஷ  ஆட்சிக்கும்  இடையிலான வேறுபாட்டைக்  குறைத்துக் கொண்டே போகின்றது. தமிழர்களின் அரசியல் உரிமைகளைப் பெறுவதற்காக கொழும்பு அரசாங்கங்களுடன் ஒத்துழைத்துச் செயற்பட்ட அல்லது இணக்கப்போக்கைக் கடைப்பிடித்த தமிழ்த்  தலைவர்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டதே வரலாறாகும்.  அந்த வரலாற்றுப் போக்கை  மாற்றியமைக்கக் கூடியவர்களாக ஜனாதிபதி சிறிசேனவையும்,  பிரதமர் விக்கிரம சிங்கவையும் சம்பந்தன் இனிமேலும் நம்புகிறாரா என்பது முக்கியமானதொரு கேள்வி.தனது அணுகு முறையை தமிழ் மக்கள் மத்தியில் சம்பந்தன் நியாயப்படுத்தக் கூடியதாக அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமையவேயில்லை  அரைநூற்றாண்டுக்கும் அதிகமான கால அரசியல்    வாழ்வைக் கொண்டவராக சம்பந்தன் இருந்தாலும், அவரின் இதுகாலவரையான  அரசியல் செயற்பாடுகளை  அடிப்படையாக வைத்து அல்ல, போரின் முடிவுக்குப் பின்னரான இன்றைய காலகட்டத்தில்  அவர் தமிழர்  அரசியலில் வகிக்கின்ற  பாத்திரத்தை வைத்தே வரலாறு  அவரை மதிப்பீடு செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *