Search
Thursday 24 May 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கூட்டமைப்பின் முன் உள்ள கேள்வி: தேர்தலா…? கொள்கையா…?

கூட்டமைப்பின் முன் உள்ள கேள்வி: தேர்தலா…? கொள்கையா…?

-நரேன்-

இலங்கைத் தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பில் மூலோபயத்திலேயே சமரசம் செய்து கொள்கின்ற நிலை ஏற்பட்டு விட்டதோ என்ற சந்தேகம் துளிர்விடத் தொடங்கிய நேரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடந்த 6 ஆம் திகதி நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டம் அங்கத்துவக் கட்சிகளுடன் சமகால அரசியல் சூழ்நிலை குறித்து மனம் விட்டு பேசுவதற்காக தலைவர் தாமாகவே விரும்பிக் கூட்டிய கூட்டமல்ல என்பது தலைவர் சம்மந்தனின் தொடக்கவுரையில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது. அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான ஈபிஆர்எல்எபின் வேண்டுகோளின் படி கூட்டப்பட்டதாக சம்மந்தன் அறிவித்திருந்தார். வடமாகாண சபை மற்றும் தமிழ் மக்கள் பேரவை ஆகியவை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை அடியொற்றி முன்வைத்த அரசியல் தீர்வு திட்ட யோசனைகள் குறித்து கூட்டமைப்பின் தற்போதைய நிலை தொடர்பில் விவாதிப்பதை நோக்கமாக கொண்டே இந்தக் கூட்டத்தை கூட்டுமாறு அந்தக் கட்சி கோரியிருந்தது.

தென்னிலங்கை பிரதான அரசியல் கட்சிகள் இரண்டுமே தமிழ் மக்களை அடிமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே தோற்றம் பெற்றிருந்தன. இதற்கு எதிராகவே சேர் பொன் இராமநாதன், அருணாசலம் தொடக்கம் தந்தை செல்வா வரையில் தம்மால் இயன்ற அனைத்து வழிகளிலும் நாட்டை ஐக்கியப்படுத்தி அனைத்து தரப்பினரும் இயல்பு வாழ்க்கையை மேற்கொள்வதற்காக முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். இதற்காக அவர்கள் பெரிய போராட்டங்களை நடத்தினார்கள் என்றும் சொல்வதற்கில்லை. 1960 மற்றும் 70 களில் ஒருசில அறவழிப் போராட்டங்கள் நடந்தேறியிருந்தன. அப்பொழுதெல்லாம் தனிநாட்டுக் கோரிக்கை முன்வைக்கப்படவில்லை. சமஸ்டிக் கோரிக்கையே முன்வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கோரிக்கையும் கூட முதலில் சிங்கள தலைவர்களில் ஒருவரான பண்டாரநாயக்காவினாலேயே முன்மொழியப்பட்டும் இருந்தது. தேர்தல்கள் நேரத்தில் தமிழர்களை சமமாக நடத்தப்போவதாக வாக்குறுதியளித்து பின்னர் அதனை மீறுவதே தென்னிலங்கையின் அரசியல் வரலாறு ஆகும். இந்தப் பின்னனியிலேயே 1976 ஆம் ஆண்டு தனித் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து வட்டுக் கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டனி அந்த தீர்மானத்தின் மீது எத்தகைய பற்றுதியையும் கொண்டிராமல் மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தலில் கூட போட்டியிட்டது. இந்த மாவட்ட அபிவிருத்தி சபை கூட தமிழர்களின் கோரிக்கைக்கு பதில் அளிக்கும் முகமாகவும் அன்றைய ஜனாதிபதி ஜேஆரினால் அறிமுகம் செய்யப்பட்டது. இதனையும் அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டனி தனி ஈழத்திற்கான நுழைவாயில் என்று தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக பயன்படுத்தியது. இந்த நடவடிக்கையானது இளைஞர்கள் பலரை முகம் சுழிக்க வைத்ததுடன் தமிழர் விடுதலைக் கூட்டனியினர் மீது வெறுப்படையச் செய்தது.

இதன்விளைவாக தமிழீழத்தை முன்னிலைப்படுத்தி ஆயுதப்போராட்ட அமைப்புக்கள் உருவெடுத்தன. இத்தகைய அமைப்புக்கள் வெளியிட்ட வரைப்படங்களில் காங்கேசன் துறையில் இருந்து புத்தளம் வரை தமிழீழத்தின் எல்லைகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஈழப்புரட்சி அமைப்பு மற்றும் ஈபிஆர்எல்எப் ஆகியவை மாக்சிய சித்தாந்தத்தின் அடிப்படையில் செயற்பட்டமையால் அவர்களுடைய வரைபடங்களில் மலையகமும் இடம்பெற்றிருந்தது. அத்துடன் தமிழீழம் என்ற சொல்லுக்கு பதிலாக ஈழம் என்ற சொல்லே பாவிக்கப்பட்டிருந்தது.

தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து ஆயுதப் போராட்டத்தின் மூலம் சர்வதேச சமூகத்தை தட்டிய தமிழர்களின் உரிமைக்குரல் மௌனிக்கப்பட்டு எட்டு ஆண்கள் நிறைவுறும் இந்த சூழலில் தமிழர்களின் உரிமைக்குரல் பாராளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாக சர்வதேசத்தின் கதவுகளை தட்டியுள்ளது. அதேபோன்று தனிநாட்டுக் கோரிக்கையும் கைவிடப்பட்டு இணைந்த வடக்கு, கிழக்கில் இறைமையைப் பகிர்ந்து கொண்டு ஒரு சமஸ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வை மேற்கொள்வதன் மூலம் இந்நாட்டின் சகல தேசிய இனங்களும் கைகோர்த்து வாழமுடியும் என்று தமிழ் தேசிய இனம் தமது விருப்பத்தை வெளியிட்டு இருந்தது. இதனை முன்னிலைப்படுத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு தமிழ் மக்கள் அனைவரும் ஆதரவளித்து வந்திருக்கின்றனர். அது எந்த தேர்தலாக இருந்தாலும் சரி.

இந்தப் பின்னனியில் தான் 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் உருவான தேசிய அரசாங்கம் அல்லது நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற தற்போதைய அரசாங்கம் பல்வேறு திருத்தங்களைக் கொண்டுள்ள தற்போதைய அரசியல் யாப்பிற்கு பதிலாக புதிய அரசியல் யாப்பை உருவாக்கப் போவதாக அறிவித்திருந்தது. அதில் தற்போதைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கம், விகிதாசார தேர்தல் முறையில் மாற்றம் என்ற இரண்டு விடயங்களுக்கு மட்டுமே முன்னர் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. பின்னர் போனால் போகிறது என்ற போக்கில் இனப்பிரச்சனைக்கான தீர்வு விடயமும் மூன்றாவது விடயமாக தீர்த்துக் கொள்ளப்பட்டது. ஏனைய இரண்டு விடயங்கள் தொடர்பிலும் தமிழ் மக்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. தேசிய இனப்பிரச்சனை தொடர்பில் இணைந்த வடக்கு, கிழக்கில் சமஸ்டி அடிப்படையிலான தீர்வையே அவர்கள் விரும்புகின்றனர்.

தொன்று தொட்டு அடிமைப்படுத்தி வைத்திருப்பதையே தொழிலாக கொண்டுள்ள தென்னிலங்கை அரசியல்வாதிகள் சமஸ்டி என்ற சொல்லையும்இ பிரிவினைவாதமாகவே சித்தரிக்கின்றனர். சமஸ்டி என்பதன் பொருள் அவர்களுக்கு தெரியாமல் இல்லை என்பதும் தமிழர்களுக்கு எதுவும் கொடுத்துவிடக் கூடாது என்பதும் அவர்களது செயற்பாடுகளில் இருந்து தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு என்பதையும் வடக்கு, கிழக்கை இணைக்க முடியாது என்பதையும் தாரக மந்திரமாகவே தென்னிலங்கை அரசியல்வாதிகள் அனைவரும் கூறிவருகின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இந்த விடயத்தில் ஒத்துப் போகின்றார் என்றும் தென்னிலங்கை அரசியல்வாதிகள் தெரிவித்து வருகின்றனர். கூட்டமைப்பின் தலைவரும் இதனை மறுதலிக்கவில்லை. இந்தப் பின்னனியிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருக்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

இங்கு உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் ‘வடக்கு, ‘கிழக்கு இணைப்பு என்பது இப்போதைக்கு சாத்தியப்படாது. இதுபற்றி பேசுவதற்கு முஸ்லிம் தலைவர்கள் தயாரில்லை. பௌத்த மதத்திற்கான முன்னுரிமை என்ற விடயத்தில் நாம் இந்த விடயத்தை உயர்த்திப் பிடித்தால் தீர்வு தள்ளிப்போகும். அதிகபட்ச அதிகாரங்களை பெற்றுக் கொள்வதே எமது நோக்கமாகும்’ என்று எதிலும் பட்டும் படாமலும் தெரிவித்திருந்தார். ஆக அவருடைய உரையில் இருந்து அரசியலமைப்பு வழிநடத்தல் குழுக் கூட்டங்களில் பெரும்பான்மைத்துவ வாதத்தை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் தமிழ் தேசிய இனத்தின் ஆணையை வலியுறுத்தியதாக தெரியவில்லை. மேலும் 16 ஆசனங்களைக் கொண்டுள்ள ஒரு கட்டமைப்புள்ள பெரிய சக்தியாக, ஒரு தேசிய இனத்தின் வலிமை மிக்க தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தவிறியிருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

தனிநாட்டை முன்வைத்து போராடிய ஒரு சமூகம் சமஸ்டி கோரிக்கைக்கு இறங்கி வந்து அதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு அரசாங்கத்தை மாற்றி ஒரு எதிரும், புதிருமாக இருந்த இரண்டு தென்னிலங்கை அரசியல் கட்சிகளையும் ஒரு கூட்டாட்சிக்குள் அழைத்து வந்துள்ள சூழலில் மீண்டும் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுவிடுமோ என்ற ஆதங்கம் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த மக்களின் ஆணையில் இருந்து விலகிக் செல்ல வேண்டுமாக இருந்தால் அதற்கு மீண்டும் ஒருமுறை மக்களின் ஆணையை பெறவேண்டும் என்று கோரியிருந்தது. ஆனால் தமிழ் ஆளும் வர்க்கங்களின் முகவர்களாக செயற்பட்ட தமிழ் ஈழத்தை முன்னால் வைத்துக் கொண்டு தமது கட்சியின் அல்லது அமைப்புக்களின் பெயரை கொண்டுள்ள அங்கத்துவ கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் ஆகியவை இந்த கூட்டமைப்பின் தலைவருக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளதுடன், நடைபெறவுள்ள தேர்தல்கள் குறித்தே அவர்களுடைய கரிசனைகளும் வெளியிடப்பட்டிருந்தன.

தனிநாட்டுக்காக ஆயுதமேந்திப் போராடியவர்களின் இந்த நிபந்தனையற்ற ஆதரவு சில கேள்விகளை எழுப்பியுள்ளது. தமிழ் மக்களின் ஆணைகளையும், அபிலாசைகளையும் இவர்கள் துச்சமென மதிக்கிறார்களா…? அல்லது எம்மால் எதுவும் முடியாது என்ற கையறு நிலைக்கு இவர்கள் வந்து விட்டார்களா…? தேர்தலில் வாக்குப் பெறுவதற்காக மிதவாத கட்சியில் இருந்து விடுபடக் கூடாது என்ற நோக்கத்தில் செயற்படுகின்றார்களா…? கூட்டமைப்பு என்பது தாம் சார்ந்த மக்களின் பிரச்சனைகளை மையப்படுத்தி கொள்கைகளில் வேறுபட்டவர்கள் ஒரு பொதுவான இலட்சியத்தை அடைவதற்காக ஒரு பொதுவான கொள்கையை வகுத்து ஐக்கியப்படுவதற்காகவா அல்லது வெறும் தேர்தலை மட்டுமே நோக்கமாக கொண்டதா…? சுருங்கச் சொன்னால் ஐக்கியம் என்பது கொள்ளைக்காகவா…? அல்லது தேர்தலுக்காகவா…? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. பெரும்பான்மையினர் எடுக்கின்ற எல்லா முடிவுகளும் எப்பொழுதும் சரியானதாகவும் இருப்பதில்லை. சிறுபான்மையானவர்கள் எடுக்கின்ற முடிவுகள் தவறானதாகவும் இருப்பதில்லை என்ற இந்த உண்மை ஏனையவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ ஆயுதப் போராட்டத்தில் இருந்து ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்தவர்களுக்கு கண்டிப்பாக புரிந்திருக்க வேண்டும். காலம் தாழ்த்தி ஏனும் இவர்கள் புரிந்து கொண்டால் தமிழினத்திற்கு விமோசனம் கிடைக்கும்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *