தலைப்பு செய்திகள்

கூட்டமைப்பு – மகிந்த சந்திப்பு பின்னணி என்ன?

கூட்டமைப்பு – மகிந்த சந்திப்பு பின்னணி என்ன?

யதீந்திரா

மகிந்த ராஜபக்சவுடனான எந்தவொரு சந்திப்பும் இன்றைய நிலையில் உத்தியோகபூர்வமானதல்ல. பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கும் நிலையில், மகிந்த ராஜபக்ச எந்தவொரு விடயத்திலும் முடிவுகள் எடுக்கும் அதிகாரமுள்ள ஒருவருமல்ல. ஆனால் தென்னிலங்கை அரசியலை பொறுத்தவரையில் அவர் ஒரு அதிகார மையம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பாராளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க் கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நிலையிலேயே, அதனை சமாளிக்கும் நோக்கில் மகிந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்திருந்தார். இந்த அழைப்பை பிரதான எதிர்க்கட்சிகளான ஜக்கிய தேசியக் கட்சி மற்றும் சஜித்பிரேமதாச தலைமையிலான ஜக்கிய மக்கள் சக்தி ஆகியவை நிராகரித்திருந்த நிலையிலேயே, சம்பந்தன் தரப்பு மகிந்தவின் அழைப்பை ஏற்றுக்கொண்டு, கூட்டத்தில் பங்குகொண்டிருந்தது. இந்தக் கூட்டம் பாராளுமன்றத்திற்கு மாற்றாக அமையாது என்பதை சம்பந்தன் தரப்பு சுட்டிக்காட்டியிருக்கின்றது. அதே வேளை, கூட்டமைப்பு மகிந்தவிடம் ஒப்படைத்திருக்கும், அறிக்கையிலும் மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

மகிந்தவின் அழைப்பை ஏற்றுக்கொண்டுதான் – இவ்வாறான விடயங்களை சுட்டிக்காட்ட வேண்டுமென்னும் அவசியமில்லை. அவ்வாறாயின் சம்பந்தன் தரப்பு மகிந்தவின் அழைப்பை ஏற்றுக்கொண்டதற்கு பின்னால் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்க முடியுமா? ஏனெனில் 2009இற்கு பின்னரான கடந்த பத்து வருடங்களில் கூட்டமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மகிந்தவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிக்கவில்லை – மாறாக, ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் மகிந்தவை வீழ்த்துவதற்கான முயற்சிகளுக்கே ஆதரவளித்திருந்தது. 2015இல் மகிந்தவின் தோல்வியில் கூட்டமைப்பு முக்கிய பங்காற்றியது. மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கும் முயற்சியில் மைத்திரிபால சிறிசேன ஈடுபட்ட போது, சம்பந்தன் – முக்கியமாக சுமந்திரன் – ரணிலை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

அப்போது இப்படியொரு பார்வை ஒன்றும் ஊடகங்களில் உலவியது. அது தொடர்பில் என்னிடமும் சிறிய மயக்கமிருந்தது உண்மை. அதாவது, ஆட்சி மாற்றத்தை உந்தித்தள்ளிய மேற்குலக சக்திகள் – முக்கியமாக – அமெரிக்கா இந்த ஆட்சியை பாதுகாக்க முற்படுகின்றது. அதுதான், சுமந்திரன் இந்தளவிற்கு இதில் ஈடுபாடு காட்டுகின்றார் – ஆனால் அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கை தொடர்பில் கலந்துரையாடும் வாய்ப்பை பெற்ற போது, இவ்வாறான பார்வைகளில் எவ்வித உண்மையும் இல்லை என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை என்னும் தலைப்பில், அமெரிக்காவில் இடம்பெற்ற பிராந்திய நிகழ்வொன்றில் பங்குகொள்வதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தது. இதன் போது, அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கை தொடர்பான ஆய்வுகளில் செல்வாக்குச் செலுத்தும், முன்னணி சிந்தினைக் கூடங்கள், இராஜதந்திரிகள் பலர் அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கை தொடர்பில் விபரித்தனர். அமெரிக்க இராணுவ கேந்திர மையமான பென்ரகன் மற்றும் அமெரிக்காவின் இந்தோ – பசுபிக் இராணுவத் தலைமையகம் ஆகியவற்றில் இடம்பெற்ற கலந்துரையாடல்களிலும் பங்குபற்ற முடிந்தது. இங்கிருந்து நாம் சிந்திக்குமளவிற்கு அங்கு ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. உண்மையில் சுமந்திரனின் அதிக ஈடுபாட்டிற்கு பின்னால், அவருக்கும் ஜக்கிய தேசியக் கட்சியின் உயர் மட்டத்தினருக்கும் இடையிலான தனிப்பட்ட நெருக்கமே காரணமாக இருந்திருக்க வேண்டும். இலங்கையின் புவியியல் அமைவிடமானது, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடமொன்றில் அமைந்திருக்கின்றது என்பது உண்மைதான். அவ்வாறான இடமொன்றில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்துச் செல்வதை அமெரிக்கா கவனத்தில் கொள்ளாமல் இருக்காது. ஆனால் சில தமிழ் ஆய்வாளர்கள் மிகைப்படுத்தி கூறுமளவிற்கு, நிலைமைகள் பாரதூரமானதல்ல.

ஆனால் அரசியல் தீர்விற்கு தென்னிலங்கையிலுள்ள அனைத்து தரப்புக்களும் – முக்கியமாக மகிந்த ராஜபக்சவின் ஆதரவு தேவையென்னும் புரிதல் சம்பந்தன் தரப்பிடம் இருந்திருந்தால், சுமந்திரன் எட்ட நின்றிருப்பார். மகிந்தவுடனான இணக்கப்பாடு தமிழர்களுக்கான அரசியல் தீர்விற்கு அவசியம் என்னும் பார்வை கூட்டமைப்பிடம் எப்போதுமே, இருந்திருக்கவில்லை. மகிந்த அணியை எதிர்த்துக் கொண்டு, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை பெற முடியும் என்னும் பார்வைதான் கூட்டமைப்பிடம் இருந்தது. புதிய அரசியல் யாப்பொன்றை நிச்சயம் தங்களால் கொண்டுவர முடியுமென்று, சுமந்திரன் பல்வேறு சந்தர்ப்பங்களில் உறுதிபடக் கூறியிருந்தார். அதில் ஒரு வேளை தோல்வியடைந்தால் அரசியல் வாழ்விலிருந்து ஒதுங்கிவிடும் எண்ணம் இருப்பதாகவும் கூறியிருந்தார். ஆனால் புதிய அரசியல் யாப்பும் வரவில்லை – சுமந்திரனும் அரசியலிருந்து ஒதுங்கவுமில்லை. ஒரு வேளை, மைத்திரியின் ஏற்பாட்டில், மகிந்த திடீர் பிரதமராகியிருந்தால், ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய இந்தளவு வெற்றியை பெற்றிருக்க மாட்டார். ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய பெரும் வெற்றிபெற்றதற்கு பின்னால் சம்பந்தன் தரப்பின் தவறுகளுக்கும் முக்கிய பங்குண்டு. எந்த இடத்தில் அமைதியாக இருக்க வேண்டும் – எந்த இடத்தில் ஆத்திரப்பட வேண்டும் – எந்த இடத்தில் பேச வேண்டும் என்பது சம்பந்தன் தரப்பிற்கு இன்றுவரை தெரியவில்லை.

இந்த இடத்தில் ஒரு விடயம் நினைவுக்கு வருகின்றது. தமிழ் ஊடகச் சுழலில் மூத்த ஊடகவியலாளர் என்று சிலரால் அழைக்கப்படும் ஒரு நண்பர், ஒரு முறை இவ்வாறு கூறிக் கொண்டிருந்தார். இதனை அவர் வேறு சில சந்தர்ப்பங்களிலும் பேசியிருக்கின்றார். 2010இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்போது மகிந்தவை தோற்கடிப்பதற்காக, சம்பந்தன் தரப்பு விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பிரதான பங்குவகித்த மேஜர் ஜெனரல் சரத்பொன்சேகாவிற்கு ஆதரவளித்திருந்தது. அப்போது சம்பந்தனை நியாயப்படுத்துவதில் தனது நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்த குறித்த ஊடகவியலாளர், இப்படிக் கூறினார் – சரத்பொன்சேகாவை ஆதரித்ததன் மூலம் சம்பந்தன் சிறிலங்கா இராணுவத்திற்குள் ஒரு பிளவை ஏற்படுத்தியிருக்கின்றார். இது எங்கள் சாணக்கியம் என்றார். உண்மையில் இந்தக் கூற்றை, ஒரு வேளை அந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவையாக கூறலாம்.

பொதுவாகவே தமிழர்களில் ஒரு பிரிவினரிடம் அதி-மேதாவித்தனம் அதிகமாகவே உண்டு. அந்த மேதாவித்தனத்தின் ஒட்டுமொத்த வடிவம்தான் தமிழ் மிதவாதிகள். தமிழ் மிதவாதிகள் என்பதும் தமிழ் மேதாவிகள் என்பதும் கிட்டத்தட்ட ஒன்றுதான். ஆனால் இயக்க பின்புலத்திலிருந்து வந்தவர்களிடம் இந்தப் பண்பு மிகவும் குறைவு. சிலரிடம் அறவே இல்லை எனலாம். சிறிலங்கா இராணுவத்திற்குள் தங்களால் பிளவை ஏற்படுத்த முடியுமென்று எண்ணுவதும் – இந்த மேதாவித்தனத்தின் அப்பாவித்தனம்தான். உண்மையில் யுத்த வெற்றிவாதத்தை கூறுபோடுவதற்கான போட்டிதான் 2010இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல். பொன்சேகாவை ஆதரித்ததன் மூலம், யுத்த வெற்றி வாதத்தில் தமிழர்களும் பங்காளிகளாகினர். ஆனால் சிங்கள தேசியவாதிகளோ – யுத்த வெற்றியை ராஜபக்சேக்களுக்கு வெளியில் பார்க்கவில்லை. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் சஜித்பிரேமதாச இதே உக்தியை கையாண்டு பார்த்தார். பொன்சேகாவின் ஊடாக, கோட்டபாயவின் யுத்த வெற்றித் தகுதியை பலவீனப்படுத்துவதற்கு முயற்சி செய்தார். ஆனால் படுதோல்வியடைந்தார்.

TNA and Mahinda

இன்று மகிந்தவை சந்தித்தற்கு பின்னாலும் ஏதேனும் சாணக்கியம் இருப்பதாக சிலர் வாதிடலாம். அதாவது, மகிந்தவுடன் நெருக்கத்தை ஏற்படுத்துவதன் ஊடாக, கோட்டாவை பிரித்தாளலாம் என்றும் அப்பாவித்தனமாக சிலர் எண்ணக் கூடும். ஆனால் அது ஒரு பகல் கனவாகவே இருக்க முடியும். ஒரு வேளை அது சாத்தியப்பட்டாலும் கூட – நிச்சயமாக தமிழர் தரப்பு ஒன்றால் அது ஒரு போதுமே சாத்தியப்படாது. எப்போது தமிழர் தரப்பு தென்னிலங்கை அரசியலில் தலையீடு செய்கின்றதோ அப்போதெல்லாம் தென்னிலங்கை முன்னரைவிடவும் தங்களுக்குள் ஒன்றுபடும் – சிங்கள தேசியவாதிகள் முன்னரைவிடவும் தமிழர்களுக்கு எதிராக திரும்புவர்.

ஆனால் ஒரு வேளை இப்படியிருந்தால் அதனை வரவேற்கலாம். அதாவது, அரசியல் தீர்வொன்றை பெற வேண்டுமாயின் மகிந்த ராஜபக்சவின் ஆதரவு இன்றியமையாத ஒன்று. அந்த வகையில் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் மகிந்தவுடனான நெருக்கம் அவசியம். இந்த அடிப்படையில் கூட்டமைப்பு மகிந்தவை அணுக முற்பட்டால், அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். மகிந்த ராஜபக்ச 13 பிளஸ் தொடர்பில் பேசி வருகின்றார். இதனை அவர் இந்திய ஊடகங்களிடமும், பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்திருக்கின்றார். ஆனால் கோட்டபாயவோ 13வதை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் முரண்பாடான கருத்துக்களை கொண்டிருக்கின்றார். ஆனால் இந்தியாவோ தொடர்ச்சியாக 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் பேசி வருகின்றது. இந்தியாவை பொறுத்தவரையில் – அங்கு எவர் ஆட்சியில் இருந்தாலும் – இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான அணுகுமுறை என்பது எப்போதுமே 13வதை அடிப்படையாகக் கொண்டுதான் இருக்கின்றது. இந்த இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்;டால், கூட்டமைப்போ அல்லது கூட்டமைப்பிற்கு மாற்றானவர்களாக தங்களை காண்பித்துக் கொள்பவர்களுக்கோ ஒரு அரசியல் இயங்கு தளம் நிச்சயம் கிடைக்கும். பொறுப்பை இந்தியாவின் மீது சுமத்திக்கொண்டு, மகிந்தவின் 13-பிளஸ் ஆலோசனையை முன்வைத்து விவாதிக்கலாம். 13-பிளஸ் என்றால் என்ன என்பதை முதலில் ஆராயலாம். அதற்கு நாங்கள் தயார் என்று தமிழர் தரப்பு கூறலாம். இதன் மூலம் தென்னிலங்கையின் மீது ஒரு அரசியல் பூட்டை போட முடியும். அந்தப் பூட்டை திறக்க வேண்டிய பொறுப்பை தென்னிலங்கையிடமே விட்டுவிட வேண்டும். இது நிகழ வேண்டுமாயின் முதலில் தமிழர் தரப்பு, தங்களின் தமிழ் மேதாவித்தனங்களை கைவிட வேண்டும். தென்னிலங்கையில் ஒருவரை சார்ந்து மற்றவர்களை எதிர்க்கும் காலாவதியாகிப்போன அரசியல் அணுகுமுறைகளில் நேரத்தை செலவிடாமல் – அரசியல் விடயங்களில் தென்னிலங்கைக்கு எவ்வாறு பூட்டுப் போடுவதென்று, சிந்திக்க வேண்டும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *