Search
Thursday 26 April 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கூட்டமைப்பு வழங்கிய நிபந்தனையற்ற ஆதரவை இந்த அரசாங்கம் சரியாக பயன்படுத்தவில்லை! ந.சிவசக்தி ஆனந்தன் எம்.பி

கூட்டமைப்பு வழங்கிய நிபந்தனையற்ற ஆதரவை இந்த அரசாங்கம் சரியாக பயன்படுத்தவில்லை! ந.சிவசக்தி ஆனந்தன் எம்.பி

நேர்காணல்

-கே.வாசு-

2017 ஆம் ஆண்டு அரசியல் ரீதியாக பல மாற்றங்கள் நிகழவேண்டிய ஆண்டாக பிறந்திருக்கின்றது. இந்த நாட்டில் 65 வருட காலத்திற்கு மேலாக நீடித்து இருக்கின்ற இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு எட்ட வேண்டும் என்ற தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைந்த ஆண்டாக அமைந்திருக்கின்றது. அந்த வகையில் புதிய அரசியலமைப்பு, தென்னிலங்கையில் சூடு பிடித்திருக்கும் அரசியல் நிலை, வடக்கு மாகாண சபையின் நகர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பரவலாக பேசப்படுகிறது. இந்நிலையில் இவ்விடயங்கள் குறித்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்கர விடுதலை முன்னனியின் (ஈபிஆர்எல்எப்) செயலாளருமான ந.சிவசக்தி ஆனந்தன் அவர்கள் இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.

கேள்வி: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் புதிய ஜனாதிபதி பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகிவிட்டது. இந்த இரண்டு வருடத்தில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து உங்களது கருத்து என்ன?

பதில்: யுத்தத்திற்கு பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தமிழ் மக்கள் தமது கோபத்தை வெளிப்படுத்தும் விதமாகவே வாக்களித்து இருந்தார்கள். துரதிஸ்டவசமாக 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பொன்சேகா தோல்வியடைந்தார். சர்வதேச சமூகமும் மஹிந்தா ஏதாவது செய்வார் என நம்பி இருந்த தருணம் அது. ஆனால் மஹிந்த போரின் போது தனக்கு உதவி வழங்கிய நாடுகளை கைவிட்டு தன்னை ஒரு இடதுசாரியாக காட்டிக் கொண்டு சீனா, கியூபா, ரஸ்சியா போன்ற நாடுகளை கையில் வைத்துக் கொண்டு அமெரிக்காவையும், ஐநாவையும் ஏமாற்ற முற்பட்டதன் விளைவு அவர்களது கோபத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டி ஏற்பட்டது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஜனநாயக ரீதியில் நடைபெற்ற தேர்தல்கள் அனைத்திலும் தென்னிலங்கை பெரும்பான்மை அரசியல் கட்சிகளை பெரியளவில் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இருந்தாலும், மஹிந்த ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்புவதற்காக அவர்கள் சரியான தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். சர்வதேச சமூகம் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளையும் ஒரே இடத்திற்கு கொண்டு வந்து மாற்றத்தை ஏற்படுத்த முடிவு செய்தது. தமிழ் மக்களும் சர்வதேச சமூகத்தையே நம்பியிருந்தனர். சர்வதேசத்தின் உடைய ஆதரவு தமிழ் மக்களுக்கு தேவையாக இருந்ததால் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆட்சி மாற்றத்திற்கு நிபந்தனையற்ற வகையில் பூரண ஆதரவு வழங்கியது. அதன் விளைவாகவே நல்லாட்சி அரசாங்கம் என்னும் பெயரில் ஒரு கூட்டு அரசாங்கம் உருவானது. இந்த அரசாங்கத்தின் உருவாக்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்கு பாரியளவிலானது. இந்த நிபந்தனையற்ற எமது ஆதவை அரசாங்கம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே நான் கருதுகிறேன். குறிப்பாக ஆட்சி மாற்றம் நடைபெற்ற உடனடியாகவே நூறு நாள் வேலைத்திட்டத்தில் பல மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்த்தோம். ஆனால் இன்று இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் பல பிரச்சனைகள் அவ்வாறே உள்ளன. தமிழ் அரசியல் கைதிகளாக தடுத்து வைத்திருப்போரைக் கூட ஒரு நல்லெண்ண அடிப்படையில் இந்த அரசாங்கம் விடுவிக்கவில்லை. காணாமல் போனோர் தொடர்பாக அரசாங்கம் இதுவரை உரிய பதிலை வழங்கவில்லை. காணி விடுவிப்பு பற்றி பார்க்கும் போது அங்கொன்றும், இங்கொன்றுமாக சில காணிகள் விடுவிக்கப்பட்ட போதும் அது முழுமையாக நடைபெறவில்லை. புதிய காணி சுவீகரிப்புக்கள் கூட இடம்பெற்றிருக்கின்றது. சிங்கள குடியேற்றங்கள், புத்தர் சிலைகள் நிறுவுதல் என்பன முன்னைய ஆட்சியைப் போல தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. இவற்றுக்கு எதிராக நாம் கொடுக்கும் குரல்கள் அனைத்தும் விளலுக்கு இழைத்த நீராகவே இருக்கிறது. ஆகவே இரண்டு வருடங்களில் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பாரிய நன்மைகள் எதுவும் கிடைத்ததாக இல்லை.

கேள்வி: வடக்கு, கிழக்கு பகுதிகளில் இடம்பெறும் அபிவிருத்தி நடைவடிக்கைகளை மத்திய அரசாங்கம் தன்னிச்சையாக செய்வதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

பதில்: தென்பகுதியில் உள்ள பெரும்பான்மைத்துவ கட்சிகள் வடக்கு, கிழக்கு மக்களை துச்சமாகவும், இரண்டாம் தரபிரஜைகளாகவும் பார்க்கிறது. இதன் காரணமாகவே தமிழ் மக்கள் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து போராட வேண்டியும் ஏற்பட்டது. 2009 ஆம் ஆண்டு தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் நாட்டில் அதிகார பகிர்வுடன் கூடிய ஒரு சமஸ்டி ஆட்சியை உருவாக்கி மாகாண சபைகளை அதன் மூலம் நிர்வகிக்க முடியும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் நாம் இணங்கிச் செயற்பட்டிருந்தோம். இங்கு ஒரு விடயத்தை சுட்டிக் காட்ட வேண்டும். நாம் தனிநாடு கேட்டு போராடியவர்கள். தென்னிலங்கை சமூகம் எம்மை இரண்டாம் தர பிரஜையாக பார்த்து வந்தமையே அதற்கு காரணம். அதனால் எமக்கு உள்ள இறைமை அடிப்படையில் அதிலிருந்து விடுபட வேண்டிய தேவையும், இறைமை பகிர்ந்தளிக்கப்பட்டு எமக்கான ஒரு சுயாட்சி அலகையும், எமக்கான ஒரு அபிவிருத்திகளையும் நாம் பெறவேண்டும் என்றே தீர்மானித்திருந்தோம். அதனை நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தெளிவுபடுத்தியிருந்தோம். அந்தவகையில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திகள் அனைத்தும் வடக்கு, கிழக்கு மக்களினதும், அவர்களது மக்கள் பிரதிநிதிகளுடனும் கலந்தாலோசித்து மேற்கொள்ளப்பட வேண்டும். இன்னும் சொல்லப் போனால் மாகாண அரசுகள் ஊடாகவே அதனை செய்ய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அரசியல் தீர்வு என்று வருகின்ற போது இணைந்த வடக்கு, கிழக்கில் எமக்கான ஒரு சுயாட்சி அலகை நாம் கோருகின்றோம். எமக்காண அபிவிருத்தியையும், எமக்கு எவ்வாறான அபிவிருத்தி வேண்டும் என்பதையும் நாமே முடிவுசெய்ய வேண்டியவர்களாக இருந்தும் மத்திய அரசாங்கம் அதற்கு இடம்தராமல் தாமே அபிவிருத்தி என்ற போர்வையில் எமது மக்கள் மீது தனது திணிப்பை மேற்கொள்ள முனைகிறது. ஆட்சி மாற்றத்தின் பின்னரும் அந்த நிலை தொடர்வதை அவதானிக்க முடிகிறது. நாம் இதற்கு எதிராகவே குரல் கொடுத்து வருகின்றோம். அதனை நாம் தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு வலியுறுத்தி வருகின்றோம்.

கேள்வி: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண சபை மூன்றாண்டைக் கடந்து விட்டது. இந்நிலையில் வடமாகாண சபையின் செயற்பாடுகள் மற்றும் வடக்கு அமைச்சர்களின் செயற்பாடுகள் குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: வடமாகாணசபைத் தேர்தலை மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் விரும்பி நடத்தியிருக்கவில்லை. சர்வதேச நாடுகளின் நெருக்குதல் காரணமாகவே அந்த தேர்தல் நடத்தப்பட்டது. தொடர் வெற்றிவாதத்தில் மிதந்து வந்த மஹிந்த வடமாகாண சபைத் தேர்தலை நடத்தி தான் தோற்றுவிடக் கூடாது என்றே கருதியிருந்தார். சர்வதேச நிர்பந்தத்தின் அடிப்படையிலேயே அந்த தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடைபெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்ற உடனடியாகவே திவிநெகும போன்ற திட்டங்களின் மூலம் மாகாணசபைக்கு இருந்த மிச்ச சொச்ச அதிகாரங்களையும் பறித்தொடுத்திருந்தது. 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலுக்கு 2015 வரை காத்திருக்க வேண்டியிருந்தது. மாகாணசபையின் சாதாரண பணிகளைக் கூட 2015 நடுப்பகுதிக்கு பின்னரே செய்யக் கூடியதாகவிருந்தது. தற்போதே மாகாணசபை இயங்கக் கூடியதாக இருக்கிறது. ஏனைய மாகாணசபைகளை விட வடமாகாண சபைக்கு எதிராக பல நிர்பந்தங்கள் இருந்தது. வடமாகாண சபை இயங்கக் கூடியதாக இருந்தாலும் வடக்கு மாகாண அபிவிருத்தியைப் பொறுத்த வரை இந்த அரசாங்கமும் தன்னிச்சையாக மாகாணசபையை புறக்கணித்து செய்ய முயல்கிறது. வடமாகாண அமைச்சர்களைப் பொறுத்தவரை அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளது என்பது உண்மை தான். இதில் மாகாணசபை மற்றும் முதலமைச்சர் உரிய வகையில் விசாரணைகள் நடத்த வேண்டும். குற்றங்கள் நிரூபிக்கப்டபட்டால் சம்மந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அதில் எந்தவித தயவு தாட்சனியமும் இருக்கக் கூடாது. நாம் சிறந்த நிர்வாகத்தை காட்ட வேண்டும். எமது மக்கள் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டவ்கள். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு யாராவது பயன்படுத்தினால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதற்கு நாமும் எமது ஆதரவை வழங்குவோம்.

கேள்வி: இந்த வருட முற்பகுதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நடைபெற்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும்?

பதில்: இதன்போது கூட்டமைப்பின் ஐக்கியம் பாதுகாக்கப்பட வேண்டும். கூட்டமைப்பின் கடந்தகால தேர்தல் வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் உள்ளதால் அவற்றையே மீண்டும் தேர்தல் விஞ்ஞாபனமாகவும் முன்னிறுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது. இங்கு பிரச்சனை என்னவென்றால் தமிழரசுக் கட்சி தேர்தல் நேரத்தில் ஒரு சொல்லையும், தேர்தல் முடிந்த பின் வேறு விதமான வார்த்தைகளையும் பிரயோகிப்பதை நிறுத்தி தேர்தலை இரண்டாம் பட்சமாகவும், தமிழ் மக்களின் உடைய தீர்வை முதன்மைப்படுத்தியும் செயற்பட வேண்டும். தேர்தலுக்கான ஐக்கியம் என்பதை விடுத்து கொள்கைகான ஐக்கியமாக அது இருக்க வேண்டும். மக்கள் கொள்கைக்காகவே வாக்களித்துள்ளார்கள். அதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் புரிந்து கொண்டு அடுத்த தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.

கேள்வி: உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக பேசப்படுகிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: இது ஊகத்தின் அடிப்படையில் பேசப்படுகின்ற ஒரு கருத்து. அப்படி ஒரு நிலை வருகின்ற போது அதை நாம் பார்ப்போம்.

கேள்வி: புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் குழப்ப நிலை காணப்படுகின்றது. இந்நநிலையில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் தங்களது கட்சி மற்றும் தங்களது நிலைப்பாடு என்ன?

பதில்: புதிய அரசியலமைப்பு எவ்வாறான நிலையில் வருகின்றது என நாம் பார்க்க வேண்டும். தேசிய அரசாங்கம் உருவாக்கியதன் பின்னர் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்தல் மற்றும் தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துதல் என்ற இரண்டு விடயத்தை முன்னிலைப்படுத்தியே புதிய அரசியலமைப்பை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. நாம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே தேசிய இனப்பிரச்சனை தீர்வு தொடர்பிலும் அதில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்வு பற்றிய விடயம் வேண்டா வெறுப்பாகவே அரசாங்கத்தால் இணைக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் உடைய தலைவர் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவராக இருப்பதாலும், கூட்டமைப்பினுடைய பேச்சாளரும் தமிழரசுக் கட்சியின் வெளியுறவுச் செயலாளராக இருப்பதாலும் இவர்கள் இருவருமே அனைத்து விடயங்களையும் மேற்கொண்டு விட்டு அதனை கூட்டமைப்பின் முடிவு என சொல்லி வந்த நிலையில் அது தொடர்பில் தெளிவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே நான் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை கூட்டுமாறு கோரியிருந்தேன். அதன் பின்னரே கூட்டம் நடைபெற்றது அனைவருக்கும் தெரிந்திருக்கும். கூட்டமைப்புக்குள் ஜனநாயகத் தன்மை இருப்பது அவசியமானது. அதனை கூட்டமைப்பின் தலைமை புரிந்து கொள்ள வேண்டும். எங்களைப் பொறுத்தவரை இணைந்த வடக்கு, கிழக்கில் ஒரு சமஸ்டி அடிப்படையிலான தீர்வையே நாம் எதிர்பார்கிறோம். அதுவே புதிய அரசியலமைப்பில் வரவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. இந்த விடயத்தில் விட்டுக் கொடுப்புக்கு இடமிருக்கக் கூடாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இதையே கூறியிருக்கிறோம். வடமாகாண சபை மற்றும் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு திட்ட யோசனையிலும் இதுவே வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே அதற்காகவே எமது கட்சி தொடர்ந்தும் குரல் கொடுக்கும். தனிநாடு கேட்டு போராடிய ஒரு தேசிய இனம் இந்த நாட்டில் சமத்துவமாக வாழ வேண்டுமாக இருந்தால் புதிய அரசியலமைப்பில் அதற்கான பாதுகாப்பு மற்றும் சட்ட ஏற்பாடுகள் இருக்க வேண்டும். அதன் மூலமே இந்த நாட்டில் உள்ள தேசிய இனங்கள் கைகோர்த்து வாழமுடியும். அதற்காகவே நாம் சமஸ்டியை கோரி நிற்கின்றோம் இதுவே ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் நிலைப்பாடு.

கேள்வி: புதிய அரசியலமைப்பில் சமஸ்டித் தீர்வு, வடக்கு – கிழக்கு இணைப்பு என்பன இல்லாத பட்சத்தில் உங்களுடைய கட்சி எவ்வாறு செயற்படும்?

பதில்: எங்களுடைய நியாயமான கோரிக்கையை சர்வதேச சமூகம் ஏற்க வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் எனக் கூறி எமது போராட்டத்தை மௌனிக்கச் செய்ய சர்வதேச நாடுகள் அரசாங்கத்திற்கு உதவியிருந்hன. அதனை சர்வதேச சமூகமும் ஒத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு சர்வதேச சமூகம் பரிகாரமாக தீர்வைப் பெற்றுத்தர உதவவேண்டும். அதற்காக நாம் சர்வதேசத்திடம் தொடர்ந்து எமது உரிமைக் கோரிக்கையை வலியுறுத்துவோம். அதற்கு தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக இணைந்து குரல் கொடுக்க வேண்டும். தரகு அரசியலை விடுத்து உரிமை அரசியல் நோக்கி பயணிக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றுபட்டு கொள்கைக்காக குரல் கொடுக்க வேண்டும். அதன் மூலமே எமது அபிலாசைகளை அடைய முடியும்.

கேள்வி: எதிர்வரும் 28 ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெறவுள்ள எழுக தமிழ் தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

பதில்: இணைந்த வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் தாயகம். அந்த இணைப்பின் மூலமே தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவேண்டும். அதன் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் நடந்த எழுக தமிழ் பேரணி தற்போது கிழக்கின் மட்டக்களப்பில் 28 ஆம் திகதி நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இது காலத்தின் தேவையும் கூட. இதில் வடக்கு, கிழக்கு மக்கள் பெருவாரியாக கலந்து கொண்டு தமது உரிமை முழக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். இவ் எழுக தமிழைக் குழப்புவதற்கு கூட எம்மில் சிலர் முனைப்பு காட்டி செயற்பாடுகிறார்கள். தமிழ் மக்களை இனியும் எவரும் ஏமாற்ற முடியாது என்பதையும், தமிழ் மக்கள் தோற்றுப் போனவர்கள் அல்ல. என்பதையும், தமிழ் மக்களை எவரும் நசுக்கிவிட முடியாது என்பதையும் வெளிப்படுத்தி எமது நியாயமான கோரிக்கைகளை முன்வைப்பதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இதில் அனைவரும் கலந்து கொண்டு மீண்டும் ஒரு மக்கள் எழுச்சியை வெளிப்படுத்தி எமது அரசியல் அபிலாசைகளை சர்வதேசத்திற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழ் தலைமைகளுக்கும் முன்வைக்க முன்வரவேண்டும்.- என்றார்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *