Search
Monday 18 June 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கேள்விகளுடன் முடிவடையும் 2016: இனியாவது முதலமைச்சர் வழியை பின்பற்றுமா கூட்டமைப்பின் தலைமை..?

கேள்விகளுடன் முடிவடையும் 2016: இனியாவது முதலமைச்சர் வழியை பின்பற்றுமா கூட்டமைப்பின் தலைமை..?

-நரேன்-

சர்வதேச சமூகம் கடந்த ஆட்சியின் மீது கொண்டிருந்த அதிருப்தியும், கோபமும், இலங்கையில் ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வழிகோலியது. குடும்ப ஆட்சியில் இருந்து சிறிலங்கா சுதந்திர கட்சியை காப்பாற்ற வேண்டிய தேவை அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினருக்கும், மறுபுறத்தில் கோபம் கொண்டிருந்த மேற்குலக நாடுகளின் ஆதவைப் பெற்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சி பதவி மோகத்தினாலும், ஆட்சி மாற்றத்திற்கு இணைந்து செயற்பட கைக்கோர்த்துக் கொண்டன. இந்த மாற்றம் தமிழ் மக்களுக்கும் விடிவை ஏற்படுத்தும் என்று பொய்யான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு கடந்த ஆட்சியின் மீது கோபம் உற்றிருந்த தமிழ் மக்களின் உணர்ச்சிகள் மேலும் தூண்டிவிடப்பட்டது. இதனால் சிங்கள மக்களில் குறிப்பிடத்தக்க அளவினரும், வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட தமிழ் பேசும் சமூகத்தினர் பெருளமளவிலும் மைத்திரி – ரணில் இணைவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இந்தத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்மைப்பு எத்தகைய நிபந்தனையுமின்றி ஆதரவளிப்பதாக கூட்டமைப்பின் தலைவர் தேர்தலுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னராக அறிவித்தார். அப்பொழுதே அந்த நிபந்தனையற்ற ஆதரவுக்கு அங்கத்துவ கட்சிகள் சிலவற்றிடம் இருந்து எதிர்ப்பும் வெளியிடப்பட்டது. இருப்பினும் அவர்கள் கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு கட்டுப்பட்டவர்களாக அல்லது தமது எதிர்ப்பை நிறைவேற்ற முடியாதவர்களாக ஆட்சி மாற்றத்திற்கு உதவியிருந்தனர். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட உடனடியாகவே ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் ஆக்கினார். இதனைத் தொடர்ந்து நடந்த பொதுத்தேர்தலில் இந்த கூட்டு அரசாங்கம் வெற்றி பெற்று நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் இன்று வரை தொடர்கிறது.

தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டது அநீதி என்றும் அத்தைகைய அநீதிகளை புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் தராதரம் பார்க்காது தண்டிக்கப்படுவார்கள் என்றும் மைத்திரியும், ரணிலும் தெரிவித்து வந்தனர். ஜனாதிபதி தேர்தலைக் தொடர்ந்து ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் அமர்வில் பேர்க்குற்றம், மனித உரிமை மீறல் தொடர்பாக பிரேரணைகள் நிறைவேறிய போது மேற்குலகத்தின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கமும் இணை அணுசரணை வழங்கியிருந்தது. அந்தக் கூட்டம் முடிவடைந்தவுடன் சர்வதேச நீதிபதிகள் அல்லது சர்வதேச விசாரணையாளர்கள் இலங்கைக்கு வருவது இதுவொன்றும் புதிதல்ல. ஏற்கனவே அவ்வாறு நடைபெற்றிருக்கிறது என்று பிதமர் ரணில் விக்கிரமசிங்கவும், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் தெரிவித்திருந்தனர். 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் முடிவுற்று செப்ரெம்பரில் நடைபெற்ற மனிதவுரிமை பேரவையின் கூட்டத்தில் புதிய அரசாங்கத்தால் காலஅவகாசம் கோரப்பட்டது. அதன்பின்னர் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்க தரப்பினர் எந்தவொரு சிப்பாயையோ அல்லது முன்னாள் ஆட்சியாளரையோ சர்வதேச சமூகத்திடம் காட்டிக் கொடுக்க மாட்டோம். சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கையில் இடமில்லை என்று இன்று வரை கூறிவருகின்றனர்.

கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக நாட்டில் இடம்பெற்ற சாதாரண கொலை வழக்குகள் கூட தமிழ் மக்களுக்கு சாதகமானதாக அமையாத நிலையில், சர்வதேச விசாரணையையே தமிழ் மக்கள் வலியுறுத்தியிருந்தனர். இவ்வாறானதொரு நிலையில் ஐ.நா வரை சென்ற கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் சர்வதேச விசாரணை ஏற்கனவே முடிவடைந்து விட்டது. இனி அதன் தொடர்நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது எனத் தெரிவித்தார். இலங்கையில் உள்ள சட்டங்கள் அனைத்தும் சிங்கள பௌத்த மேலாதிக்க வாதத்தை மையப்படுத்தியே வரையப்பட்டுள்ளன. இதனை தென்னிலங்கையின் சட்டத்தரணிகள் எழுதிய நூல்களில் கூட கூறப்பட்டுள்ளன. உள்ளக விசாரணைப் பொறிமுறையை நிராகரித்து சர்வதேச விசாரணை ஒன்றின் அவசியத்தை கடந்த கால படிப்பினையையும், ஆதாரங்களையும் வைத்து வடமாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சி.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் அமெரிக்க இராஜதந்திரி நிஸா பிஸ்வால் உட்பட தன்னை சந்தித்த பல்வேறு நாடுகளின் இராஜதந்திரிகளுக்கும் தொடர்ச்சியாக எடுத்துக் கூறி வந்தார். இது புதிய அரசாங்கத்திற்கும், அவர்களை ஆதரித்து சர்வதேசத்திற்கு கருத்துக்களைக் கூறிவந்த கூட்டமைப்பின் தலைமைக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது. புதிய அரசாங்கத்தை ஆதரித்து சர்வதேச ரீதியில் இருந்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும், தமிழரசுக்கட்சியினரும் அதன்பின்னர் இராஜதந்திரிகளை சந்திக்கும் போது விக்கினேஸ்வரனை ஒரம்கட்ட முயன்றிருந்தனர். ஆனாலும் அவர் இன்று வரை உறுதியாகவும், நிதானமாகவும் தமிழ் மக்கள் நலன்சார்ந்த கருத்துக்களையும், நியாயமான தீர்வு நோக்கிய கருத்துக்களையும் சர்வதேச சமூகத்திற்கும், தென்னிலங்கைக்கும் வெளிப்படுத்தி வருகின்றார்.

போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை உரிய நேரத்தில் வலியுறுத்த தவறிய கூட்டமைப்பின் சட்டத்தரணியான சுமந்திரன் தான் முன்னின்று நடத்திய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலைவழக்கில் குற்றம் சாட்டபட்டவர்கள் விடுவிக்கப்பட்டதையடுத்து சர்வதேச விசாரணையின் அவசியத்தை உணர்ந்தவராக பேசியிருப்பது பலருக்கும் பல வழிகளிலும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதுடன், கேலியாகவும் பார்க்கப்படுகிறது. இதனையே தமிழ் மக்களும் அவர்களின் குரலாக வடமாகாண முதலமைச்சர் அவர்களும் தொடர்ச்சியாக கூறிவந்திருந்தனர். ரவிராஜ்சின் கொலை அரசியலுக்காக நிகழ்த்தப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிறந்த சட்டத்தரணியாகவும், மனித உரிமை செயற்பாட்டாளராகவும் போராடுகின்ற தேசிய இனத்தின் குரலாகவும் ரவிராஜ் திகழ்ந்தார். இன்று தென்னிலங்கைக்கு சிங்கள மொழியில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை எடுத்துச் சொல்ல விரும்புகின்ற தமிழ் தலைமைகளைப் போன்று ரவிராஜ் அன்றே செயற்பட்டிருந்தார். அதற்காகவே அவர் கொலையும் செய்யப்பட்டார். தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருந்த கூட்டமைப்பு அந்தக் கொலை நடந்தவுடனேயோ அல்லது குறைந்த பட்சம் நல்லாட்சி என்று கூறப்படுகின்ற இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடனேயோ மக்களை அணிதிரட்டி வீதிகளில் இறங்கி ஒரு அரசியல் நிர்பந்தத்தை கொடுப்பதற்கு தவறிவிட்டது. மறுபுறத்தில் தென்னிலங்கை சமூகம் அல்லது தென்னிலங்கை ஆளும் வர்க்கம் தான் திடசங்ற்பம் பூண்டிருந்த வகையில் இந்த வழக்கை நடத்தி முடித்திருக்கின்றது. நல்லிணக்கத்திற்காக அரசாங்கத்துடன் இணக்க அரசியல் நடத்தும் தமிழரசுக் கட்சி நீதியை நிலைநாட்டும் விடயத்தில் கூட மக்களை அணிதிரட்டவிரும்பாமல் இருப்பது அல்லது முடியாமல் இருப்பது அதன் கையாளாகத்தனத்தை காட்டுகிறதா..? அல்லது இந்த அரசாங்கத்தை காப்பாற்ற முயல்கிறதா…? என்ற கேள்வி எழுகிறது.

இதனைப்போன்றே அரசியல் யாப்பு விடயத்திலும் வரவிருப்பது புதிய அரசியல் யாப்பா அல்லது இருக்கின்ற அரசியல் அமைப்பில் சீர்திருத்தமா என்பது இன்னமும் கூட குழப்பமாகவே இருக்கிறது. இந்தக் குழப்பத்தை தீர்ப்பதற்கு புதிய அரசியலமைப்பு சபையிலும், அதன் உபகுழுக்களிலும் அங்கத்துவம் வகிக்கும் கூட்டமைப்பின் தலைமையால் இன்று வரை முடியவில்லை. மஹிந்தா ராஜபக்ச காலத்தில் நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்படும் வரை நாங்கள் பிச்சை கேட்கவில்லை. எமக்கு உரியதையே கேட்கிறோம். அதை யாரும் மறுக்க முடியாது என்று கூறிவந்த கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள், ஆட்சி மாற்றத்தின் பின்னர் தனது குரலை மாற்றத் தொடங்கியிருந்தார். சர்வதேச சமூகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் கூட இந்த நல்லாட்சியின் மீது தனக்கு நம்பிக்கையிருப்பதாக பாராட்டுப்பத்திரம் வழங்கியிருந்தார். இந்தியாவின் பிரதமர் மோடியை சந்தித்து அருகில் இருந்து பேசிய போது கூட இந்தியாவால் கொண்டு வரப்பட்ட வடக்கு -கிழக்கு இணைப்பைக் கூட வலியுறுத்தவில்லை. ஏன் இந்த தயக்கம்…? மேலும் தமிழ் மக்களிடம், அனைத்து கருமங்களும் சரியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் யாரும் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம். அவ்வாறு செய்தால் அது மஹிந்தாவின் கைகளை பலப்படுத்தி விடும் என்று பூச்சாண்டி காட்டினார். இங்கு மஹிந்தாவின் கை ஓங்குவதா…? அல்லது மைத்திரியின் கை ஓங்குவதா..? என்பது பிரச்சனை இல்லை. 65 வருடத்திற்கு மேலாக புரையோடிப்போய் இருக்கும் இனப்பிரச்சனைக்கு அல்லது தமிழ் தேசிய இனத்தின் பிரச்சனைக்கு நியாயமான தீர்வு காண்பதே அவசியம் என்பதை தமிழ் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும்.

2016 ஆம் ஆண்டுக்குள் தமிழ் மக்களுக்கு கௌரவான அரசியல் தீர்வு கிடைத்து விடும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் அவர்கள் தெரிவித்திருந்தார். இப்பொழுது அவருடைய அந்த கால அவகாசம் முடிவடைந்து விட்டது. குறைந்தபட்சம் நல்லிணக்கத்தை வெளிப்படுத்தியமைக்கு நன்றிக் கடனாக கூட அரசாங்கம் அரசியல் காரணங்களுக்காக கைது செய்து தடுத்து வைத்துள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவில்லை. தேர்தல் வாக்குறுதிகளுக்கு அமைய போர்க் காரணங்களுக்காக கையகப்படுத்தப்பட்ட காணிகள் இன்று வரை விடுவிக்கப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக் கூறலை மேற்கொண்டு அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிவிப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் கூட முற்றுப் பெறவில்லை. இன்னும் அகதி முகாம் வாழ்க்கை தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. அன்றாட பிரச்சனைகளில் இராணுவம் தலையிட்டுக் கொண்டு இருக்கிறது. தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்தி இராணுவம் விவசாய நடவடிக்கைகளையும், வர்த்தக நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது. இராணுவத்தின் ஆதரவுடன் பாலர் பாடசாலை நடைபெறுகிறது. இன்றும் இராணுவப் பிடி தொடர்கிறது. அப்படியானநிலையில் தொடர்ந்து நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதில் சம்மந்தன் மற்றும் சுமந்திரன் உள்ளிட்ட தமிரசுக் கட்சியினருக்கு என்ன இலாபம் இருக்கிறது. தாம் ஆதரவு கொடுத்து கொண்டு வந்த நல்லாட்சி என்று சொல்கின்ற இந்த ஆட்சியில் பெற முடியாதவற்றை இவர்களால் எப்போது பெறமுடியும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் தற்போது பரவலாக எழுகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையால் இந்த அரசாங்கத்திடம் இருந்து அவற்றை பெற முடியாவிட்டால் வடக்கு முதலமைச்சர் தொடர்ந்தும் திடகாத்திரமாக குரல் கொடுத்து வருவதைப் போன்று சர்வதேசத்திற்கு வலியுறுத்துங்கள்.

தமிழ் மக்கள் பேரவையால் இரா.சம்மந்தனிடம் தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தும் வகையில் அரசியல் யாப்பு முன்மொழிவு ஒன்று கையளிக்கப்பட்டது. அதைப் பெற்றுக் கொண்ட போது யாரும் யோசனை சொல்லலாம். கருத்துக்கள் சொல்லலாம். ஆனால் நானே இறுதி முடிவு எடுப்பேன் என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது பிரதமர் மற்றும் அமைச்சர்கள் சம்மந்தர் சமஸ்டி கோரவில்லை என்றும், ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டுள்ளார் என்றும் வடக்கு கிழக்கு இணைப்பை பற்றி பேசவில்லை என்றும் பௌத்திற்கு முன்னுரிமை கொடுக்க ஏற்றுக் கொண்டுள்ளார் என்றும் சிங்கள மக்கள் மத்தியில் கூறி வருகின்றனர். இந்த விடயத்தில் இதனை ஏற்றுக் கொள்வதாகவோ அல்லது மறுப்பதாகவோ சம்பந்தன் தரப்பிடம் இருந்து எந்த அறிக்கையும் வரவில்லை. இந்தவிடத்தில் மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்ற முதியோர் வாக்கு தான் ஞாபகத்திற்கு வருகிறது.

ஆக, 2016 ஆம் ஆண்டு என்பது தமிழரசுக் கட்சியை சேர்ந்தவர்களுக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர்கள் என்ற முக்கிய பதவிகளையும், பங்களாளிக் கட்சிகள் சிலவற்றுக்கு பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத்தலைவர் என்ற பதவிகளையும் வழங்கியிருக்கின்றது. இவற்றுடன் எதிர்கட்சி தலைவரின் வாசல் தளம், சுகபோக அதி நவீன சொகுசு வாகனங்கள், அதிகரித்த சம்பளக் கொடுப்பனவுகள் என்பன தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட கூட்டமைப்பினருக்கு கிடைத்திருக்கின்றது. தமது பிள்ளையின் பிறந்தநாளுக்கு ஜனாதிபதியைக் கூப்பிடக் கூட முடிந்திருக்கின்றது. இவ்வாறு சலுகைப் பட்டியல்கள் நீளும் போது தமிழ் மக்களுக்காக எதை செய்ய முடிந்தது என்றால் அதற்கான விடையைத் தேடவேண்டியுள்ளது. மக்களுக்கு அளித்த உறுதி மொழிகள் மற்றும் வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. சலுகைகளைப் பெறுவதற்கும், சுகபோக வாழ்க்கை வாழ்வதற்குமாகவா முள்ளியவாய்கால் பேரவலம் வரை சென்ற தமிழ் மக்கள் வாக்களித்தார்கள்…? இதற்காக மக்கள் உங்களை பாராளுமன்றம் அனுப்பவில்லை.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பில் வரும் ஜனவரி 21 ஆம் திகதி தமிழ் மக்கள் தமது அபிலாசைகளையும், தமது கோரிக்கைகளையும் மீண்டும் ஒரு தடவை தமிழ் மக்கள் பேரவை ஊடாக சர்வதேச சமூகத்திற்கும், தென்னிலங்கைக்கும், தமிழ் தலைமைகளுக்கும் வெளிப்படுத்த தயாராகிவருகிறார்கள். இந்த நிலையில் தமது இருப்பை தக்க வைக்கவும், மக்களது அதிருப்தியை சமாளிக்கவும், வரும் உள்ளூராட்சி தேர்தலை மனத்தில் நிறுத்தியும் தமிழரசுக் கட்சி செயற்படத் தொடங்கியிருக்கிறது. இவ்வளவு காலமும் அமைதி காத்து இந்த அரசைக் காப்பாற்றி விட்டு தற்போது வடமாகாண முதலமைச்சர், தமிழ் மக்கள் பேரவையினர் மற்றும் தமிழ் மக்கள் பேரவைக்குள் இருக்கும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த கருத்துக்களை தாமும் வலியுறுத்துவதாக கிழக்கு மாகாணத்தில் இருந்து முழக்கமிடத் தொடங்கியுள்ளனர். அடுத்த அரசியல் நகர்வுக்கான ஒரு நாடகம் புதிய அரசியலமைப்புடன் இராஜதந்திரம் என்ற பெயரில் அரங்கேறப்போகிறது. 65 வருட உரிமைப் போராட்டத்தில் மரணித்த போராளிகள், மக்களினது புதைகுழி மேல் நின்று மக்களுக்கு தேர்தல் காலங்களில் கொடுத்த வாக்குறுதிகளை கூட்டமைப்பின் தலைமை ஒருகணம் சிந்திக்கவேண்டும். அதனை செய்ய முடியாவிட்டால் பிரித்தானியாவின் கமரோன் பாணியில் பதவி விலகுவதைத் தவிர வேறு வழியில்லை. பதவி விலகுவதன் மூலமாவது எமது மக்களுக்கான உரிமைகளை எம்மால் பெற முடியவில்லை என சர்வதேசத்திற்கு காட்டுங்கள். வடக்கு முதலமைச்சருடன் இணைந்து மக்களுக்காக குரல் கொடுங்கள். அதற்காக அணிதிரள மக்கள் தயாராகவே உள்ளார்கள்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *