Search
Tuesday 26 March 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கே எஸ் ராஜா: தமிழ் வானொலி நேயர்களுக்கு மறக்க முடியாத பெயர்

கே எஸ் ராஜா: தமிழ் வானொலி நேயர்களுக்கு மறக்க முடியாத பெயர்

“வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகே ஆவலுடன் குழுமியிருக்கும் நேயர்கள் அனைவருக்கும் உங்கள் அறிவிப்பாளன் K.S.ராஜாவின் அன்பு வணக்கம்!”

கே எஸ் ராஜா .

இந்தப் பெயர் அந்தக்கால தமிழ்நாட்டு வானொலி நேயர்களுக்கு மறக்க முடியாத பெயர் . 1970 – 80 களில் இலங்கை வானொலியில் எல்லோரையும் ஈர்த்த இனிய குரலுக்கு சொந்தக்காரர்.

” இது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவை” என்று அவர் அறிவிக்கும் பாணியே வித்தியாசமானதாக இருக்கும் . அவரது நிகழ்ச்சிகளில் விறுவிறுப்பும் சுவாரசியமும் கொடிகட்டி பறக்கும் .

நிகழ்ச்சியின் இடையில் நேரத்தை அறிவிக்கும் போது கூட , ஏதோ ஒரு திரைப்படப் பாடலின் இடையில் வரும் , “ஹலோ இப்ப என்ன டைம்?” என்ற பி சுசீலாவின் குரலை மட்டும் ஒலிபரப்பி விட்டு , அதன் பின் கே.எஸ்.ராஜா தன் குரலில் நேரத்தை அறிவிப்பார் .

நிகழ்ச்சியை முடிக்கும் போது “மீண்டும் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடைபெறுவது கே எஸ்” என்று மட்டும் சொல்லிவிட்டு “ராஜா” படத்தின் , ” நீ வர வேண்டும் என எதிர்பார்த்தேன்” பாடலில் , டிஎம்எஸ்ஸின் குரலில் வரும் “ராஜா..” என்ற வார்த்தையை மட்டும் ஒலிபரப்பி நிகழ்ச்சியை முடிப்பார் .

இப்படி விறுவிறுப்பாக நிகழ்ச்சிகளை வழங்கி கொண்டிருந்த இவருடைய குரல் , திடீரென்று வானொலியில் கேட்காமலே போனது. அதன் பின் பத்திரிகைகளில் கே.எஸ்.ராஜா புலிகளுக்கு ஆதரவானவர் என்று இலங்கை அரசு வேலையை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக தகவல் வந்தது .
.
சிறிது இடைவெளிக்குப் பின் திடீரென்று ஒருநாள் இலங்கை வானொலியில் இவர் குரல் ஒலித்தது.
அன்று ஏனோ கொஞ்சம் படபடப்பாகவே பேசினார் .

“என் விருப்பம்” என்ற நிகழ்ச்சியை வழங்கி அதில் “உத்தமன்” படப் பாடலான , “கேளாய் மகனே” என்ற பாடலை முதல் பாடலாக ஒலிக்க விட்டார் .

நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டிருந்த நான் அதிர்ந்து போனேன் ; ஏன் என்றால் அது இலங்கை அரசால் அப்போது தடை செய்யப்பட்டிருந்த பாடல் .
காரணம் அந்தப் பாடலின் இடையில் வரும் , “கொள்ளும்கொள்கையில் குரங்காக , கொடுமையைக் கண்டால் புலியாக ” என்ற வார்த்தைகள் ; புலி என்ற வார்த்தை வந்தாலே , அந்த பாடல் தடை செய்யப்பட்டுவிடும்.

ஆனாலும் இந்தப் பாடலை ஒலிக்க விட்ட கே.எஸ். ராஜா , புலி என்ற வார்த்தை வருவதற்கு முன்னதாகவே பாடலை நிறுத்தி விட்டார்.

அத்தோடு விட்டாரா ?

அடுத்து அவர் ஒலிபரப்பிய பாடல் –
“வெற்றி மீது வந்து என்னை சேரும்”
எனக்குத் தெரிந்து இதுதான் அவருடைய கடைசி நிகழ்ச்சி. அதன்பின் அவர் குரல் வானொலியில் கேட்கவே இல்லை .

சில நாட்களுக்கு பின் குமுதம் பத்திரிகையில் ஒரு செய்தி …கே எஸ் ராஜா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக …

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது :
பொதுவாக தன் நிகழ்ச்சியை முடிக்கும்போது ,”நீயா” படத்தில் ஸ்ரீபிரியாவின் குரலில் , “என்னை விட்டுட்டு போறீங்களா ராஜா?”என ஒலிபரப்பி விட்டு ,
உடனே கே.எஸ்.ராஜா அசத்தலான குரலில் சொல்வார் :
“போக மாட்டேன்… அடுத்த வாரம் மீண்டும் சந்திப்பேன்.
அது வரை உங்களிடமிருந்து விடை பெறுவது கே.எஸ். ராஜா”

ஆனால் கடைசியில் எவரிடமும் சொல்லாமலே விடை பெற்றுப் போய் விட்டார் கே.எஸ்.ராஜா !

ஆனாலும் …
கே.எஸ்.ராஜா அப்படி செய்திருக்க வேண்டாம் .
(அல்லது )
கே.எஸ். ராஜாவை .. அப்படி செய்திருக்க வேண்டாம்.

என்ன செய்வது..?

.”ஏதோ ஒன்றை தொலைத்தது போல
ஏதோ மீண்டும் பிறந்தது போல
தாயே என்னை வளர்த்தது போல
கண்களின் ஓரம் கண்ணீர் வருதே
ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே”
.
இன்னொன்றும் இப்போது ஞாபகத்துக்கு வருகிறது .

ஜனவரி 5 -1967 .
இலங்கை வானொலி ,
“இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்” எனப் பெயர் மாற்றம் பெற்ற தினம்.

முகநூல் பதிவிலிருந்து: Parthasarathy CK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *