Search
Sunday 12 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கோட்டாவின் வெற்றி

கோட்டாவின் வெற்றி

யதீந்திரா

கோட்டபாய ராஜபக்சவின் வெற்றி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக தமிழ்ச் சூழலில் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து பலரும் மீளவில்லை. உண்மையில் கோட்;டபாயவின் வெற்றி ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. அது தொடர்பான கணிப்புக்கள் ஏற்கனவே ஓரளவு பகிரங்கப்பட்டிருந்தது. ஆனாலும் தமிழ்ச் சூழலில் இது அதிகம் பேசப்படவில்லை. சஜித்பிரேமதாச வெற்றிபெறப் போவதான ஒரு தோற்றமே தமிழ் மக்களுக்கு காண்பிக்கப்பட்டது. அதனை நம்பியே தமிழ் மக்களும் அதிகமாக வாக்களிப்பில் கலந்துகொண்டு, சஜித்பிரேமதாசவை ஆதரித்தனர். ஒருவேளை சஜித்பிரேமதாசவின் வெற்றிவாய்ப்பு தொடர்பில் சந்தேகம் இருந்திருப்பின் தமிழர்கள் இந்தளவிற்கு வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்க மாட்டார்கள். ஏன் தேவையில்லாமல் பகையை சம்பாதிப்பான் என்று, ஒரு பிரிவினர் ஒதுங்கியுமிருக்கலாம். ஆனாலும் சஜித்தின் வெற்றி தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கூட்டமைப்பும் அதற்கு ஆதரவானவர்களும் கண்ணும் கருத்துமாக இருந்தனர்.

இதில் கூட்டமைப்பிற்கு சார்பாக எழுதியும் பேசியும் வருபவர்களும் அடங்குவர். இவ்வாறானவர்கள் தெற்கில் ஒரு சமநிலை போட்டி நிலவுவதாகவும் தமிழ் மக்களின் வாக்குகள்தான் இறுதியில் வெற்றியை தீர்மானிக்கவல்லது என்றும் அரைகுறையான ஆய்வுகளை வெளியிட்டுக் கொண்டிருந்தனர். தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளன்று யாழ்ப்பாண கம்பன் கழகத்தில் ஒரு விவாத நிகழ்வு இடம்பெற்றது. அதில் இந்தப் பத்தியாளரும் ஒரு பார்வையாளராக பங்குகொண்டிருந்தார். அங்கு பேசிய மூத்த ஊடகவியலாளர் ஒருவர் தெற்கில் கடுமையான போட்டிநிலவுவதாகவும், இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் சஜித்பிரேமதாசவை ஆதரிப்பதுதான் சரியானது என்றும் பேசிக்கொண்டிருந்தார். அவர் பேசுகின்ற போது, சபையில் கரகோசம் எழுந்தது. இத்தனைக்கும் அந்த சபையில் இருந்தவர்கள் அனைவருமே யாழ் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்த படித்த சமூகத்தினர். படித்தவர்களே அவ்வாறு கரகோசம் எழுப்புகின்ற போது, பாமர தமிழ் மக்கள் எவ்வாறானதொரு புரிதலில் இருந்திருப்பர் என்பதை இலகுவாகவே விளங்கிக்கொள்ளலாம். வடக்கு கிழக்கி;ல் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரையில் சஜித்பிரேமதாசவின் வெற்றிக்காகவே அனைவரும் ஏங்கிக்கொண்டிருந்தனர். ஆனால் கணிப்புக்களுக்கு அமைவாக கோட்டபாய ராஜபக்ச அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கிக்கொண்ட போது, அனைவருமே வாயடைத்துப் போயினர்.

கோட்டபாயவின் வெற்றி எவ்வாறு இந்தளவு வாக்கு வித்தியாசத்தில் சாத்தியப்பட்டது? தமிழ்ச் சூழலிலுள்ள ஒருசிலர் இதற்கான காரணம் யுத்த வெற்றியென்று வாதிட முற்படுகின்றனர். இது ஒரு பகுதியளவில் சரியானதே ஆனால், முழுமையான உண்மையல்ல. கோட்;டபாயவின் வெற்றியை சாத்தியப்படுத்தியதில் மூன்று பிரதான காரணங்கள் செல்வாக்குச் செலுத்தியிருந்தன. ஒன்று – பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கிடைத்த யுத்த வெற்றியின் சொந்தக்காரரான கோட்டபாய, முதல் முதலாக சிங்கள மக்களிடம் வாக்கு கேட்டுச் செல்கின்றார். அவருக்கு வாக்களிக்க வேண்டியது தங்களின் கடமையென்று ஒரு தொகுதி சிங்கள மக்கள் நிச்சயம் கருதியிருப்பர். இரண்டு – ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னரான சூழலும், சிங்கள மக்கள் மத்தியில் குறிப்பாக, படித்த மத்தியதரவர்க்கத்தினரின் மனோநிலையில் ஏற்படுத்திய புதிய அச்ச மனநிலையும். பிரபாகரன் தொடர்பான அச்சத்தை அவர்கள் முற்றிலுமாக மறந்திருந்த சூழலில்தான், இஸ்லாமிய பங்கரவாதம் என்னும் புதிய பிரச்சினை ஒன்று தலைநீட்டியது. இது தொடர்பில் அரசாங்க மட்டத்தில் நடந்த முன்னுக்குபின் முரன்பாடான விவாதங்களும் சிங்கள மக்கள் மத்தியில் எரிச்சல் ஊட்டும்வகையில் இருந்தன. ஏற்கனவே இதனை அறிந்திருந்தும் அதனை தடுப்பதற்கு போதிய நடவடிக்கைகளை அரசாங்கம் செய்யவில்லை என்பது, சிங்கள மக்கள் மத்தியில் நாட்டின் பாதுகாப்பு ஆபத்தில் இருப்பதான பொதுப் புரிதலை ஏற்படுத்தியது. எனவே தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய ஒரு புதிய தலைமை சிங்கள மக்களுக்கு தேவையென்னும் எண்ணம் சிங்கள கருத்துருவாக்கப் பரப்பில் வலுவடைந்தது. அது கோட்டபாயவின் எழுச்சிக்கு சாதகமாக இருந்தது. மூன்று – கடந்த ஜந்து வருடகால ஆட்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தி அதிருப்தி. 2015இல் நம்பிக்கையோடு வாக்களித்த சிங்கள மக்களை திருப்திப்படுத்தும் வகையிலான ஆட்சியை தேசிய அரசாங்கம் வழங்கியிருக்கவில்லை. இதனால் ஒரு தொகுதி சிங்கள மக்கள் வெறுப்புற்றிருந்தனர். மேற்படி மூன்று காரணங்களும்தான் கோட்டபாயவின் வெற்றியில் செல்வாக்குச் செலுத்திருந்தது. ஒவ்வொரு காரணங்களும் வேறுபட்ட சிங்கள மக்கள் தொகுதியின் மீது செல்வாக்குச் செலுத்தியிருக்கலாம். அவைகள் அனைத்தும் ஒன்றாக திரண்ட போது, அது கோட்டபாயவின் வெற்றியை மிகவும் இலகுவாக்கியது. மேற்படி மூன்று தொகுதி சிங்களவர்களுக்கும் நம்பிக்கையளிக்கக் கூடிய ஒரு தலைவராக சஜித்பிரேமதாச இருந்திருக்கவில்லை. மேலும் அவரால் இருக்கவும் முடியாது. இதன் காரணமாகவே வடக்கு கிழக்கு தவிர்ந்த எநதவொரு தொகுதியிலும் அவர் வெற்றிபெற்றிருக்கவில்லை. பெரும்பாண்மையான சிங்கள மக்கள் அவரை நிராகரித்திருக்கின்றனர். ஆனால் அவ்வாறான ஒருவரையே தமிழ் மக்கள் தெரிவு செய்திருக்கின்றனர். இதனை ஒரு இனரீதியான பிளவு என்று கூறலாமா? இப்படியான ஆய்வுகளும் எட்டிப்பார்க்கின்றன. கோட்டபாய ராஜபக்சவின் வெற்றி முற்றிலுமாக இனவாத அடிப்படையிலானது என்று குறிப்பிடுவது சரியானதொரு பார்வையக இருக்க முடியாது.

Gotabaya-Rajapaksa-4

நான் மேலே குறிப்பிட்ட மூன்று காரணங்களின் அடிப்படையில்தான் கோட்டாவின் வெற்றியை நாம் மதிப்பிட வேண்டும். அதே போன்று தமிழ் மக்கள் சஜித்பிரேமதாசவை ஆதரித்து வாக்களித்தமை சிங்களவர்களுக்கு எதிரான ஒரு வாக்களிப்பு என்று கூறுவதும் சரியானதொரு பார்வையாக இருக்க முடியாது. சஜித்பிரேமதாசவை பெருவாரியாக தமிழ் மக்கள் ஆதரித்தமைக்கு பின்னால் இரண்டு பிரதான காரணங்களே செல்வாக்குச் செலுத்தியிருந்தது. அதாவது, கோட்டபாய தொடர்பான அச்சம். இந்த அச்சத்தை கூட்டமைப்பும் அதிகப்படுத்தியது. உதாரணமாக கோட்டபாய வந்தால் ‘வெள்ளை வேன்’ வரும் என்பது சாதாரண மக்கள் மத்தியில் பெரியளவில் செல்வாக்குச் செலுத்தியிருந்தது. கோட்டா என்றால் வெள்ளை வேன் என்பது சமான்ய மக்கள் மனங்களில் பதிந்துபோனது. இந்த அச்சத்திலிருந்து விடுபட வேண்டுமாயின் சஜித்பிரேமதாச வெற்றிபெற வேண்டும் என்பதே தமிழ் மக்களின் பொதுப் புத்தியாக இருந்தது. அடுத்தது, தமிழ் மக்கள் சஜித்பிரேமதாசவின் வெற்றியை உறுதியாக நம்பியிருந்தனர். 2015இல் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றது போன்று இம்முறை சஜித்பிரேமதாசவே வெற்றிபெறுவார் என்பதும் தமிழ் மக்களின் பொதுப்புத்தியாக இருந்தது. நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று இந்த பொதுப்புத்தி நிலையை தாண்டி மக்கள் சிந்தித்துவிடக் கூடாது என்பதில் கூட்டமைப்பும் கடுமையாகவே பணியாற்றிருந்தது. ஆனால் கோட்டபாயவின் வெற்றி தமிழ் அரசியல் பரப்பில் நிலவிய சில கணிப்புக்களையும் ஆய்வுகளையும் பொய்ப்பித்திருக்கின்றது. அதில் முக்கியமானது, தமிழ் மக்களின் வாக்குகள் தீர்மானிக்கவல்ல வாக்குகள், வியூக முக்கியத்துவம் வாய்ந்த வாக்குகள் என்னும் பார்வைகள் முற்றிலும் தவறானவை என்பது நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.

இந்தத் தேர்தலை பொறுத்தவரையில் தமிழ் மக்களின் வாக்குகள் பெறுமதியற்றுப் போயிருக்கி;ன்றது. ஒருவேளை தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தி இந்த வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தால் அதன் பெறுமதி வேறுவிதமாக இருந்திருக்கும். தென்னிலங்கையில் சமநிலையான போட்டி நிலவுகின்ற போது மட்டும்தான் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் வாக்குகள் தீர்மானிக்கும் வாக்குகள் என்னும் தகுதியை பெறுகின்றன. சிங்கள பெரும்பாண்மைக்குள் ஒரு எழுச்சி ஏற்படுமாக இருந்தால் சிறுபாண்மையின் வாக்குகள் செல்லாக் காசாவிடும் என்பது கோட்டபாயவின் வெற்றியின் மூலம் தெட்டத்தெளிவாகியிருக்கின்றது. கூட்டமைப்பை பொறுத்தவரையில் எந்தவொரு தூரநோக்குமின்றியே சஜித்பிரேமதாசவை ஆதரிக்கும் முடிவை எடுத்திருந்தது. இந்தத் தேர்தலில் கோட்டபாயவின் வெற்றி பிரகாசமாக இருக்கின்ற நிலையில், பக்கம் சாயாத முடிவொன்றை எடுப்பதுதான் தந்திரோபாய ரீதியில் சரியானதென்று சம்பந்தன் – சுமந்திரன் தரப்பிற்கு பலரும் வலியுறுத்தியிருந்தனர் ஆனாலும் அதனை அவர்கள் பொருட்படுத்தியிருக்கவில்லை. தாங்களே மக்களின் பிரதிநிதிகள் என்னும் இறுமாப்பில் முடிவுகளை எடுத்திருந்தனர். இன்று போகுமிடம் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.

2015இல் மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்ட போது, இந்தப் பத்தியாளர் அதனை ஒரு குறைப்பிரசவ குழந்தை என்று வர்ணித்திருந்தார். அது ஒரு திணிக்கப்பட்ட ஆட்சி மாற்றம். அது சிங்கள மக்களின் இயல்பான விருப்பத்திலிருந்து நிகழ்ந்த ஒன்றல்ல என்பதே எனது கருத்தாக இருந்தது. 2018இல் இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் மகிந்த பெற்ற வெற்றியின் மூலம் மகிந்த சிங்கள மக்கள் மத்தியில் எத்தகைய செல்வாக்கை கொண்டிருக்கின்றார் என்பது தெளிவானது. ஆளும் தரப்பை விடவும் இருபது லட்சம் வாக்குகளை அவர் பெற்றிருந்தார். மூன்று மாதங்களுக்குள் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு புதிய கட்சி, ஒரு புதிய சின்னத்தின் மூலம் அது எவ்வாறு சாத்தியப்பட்டது. எனவே மகிந்தவிற்கென்று ஒரு பலமான வாக்கு வங்கி, தெற்கில் இருந்தது. 2018ல் பொதுஜன பெரமுன பெற்ற 50 லட்சம் வாக்குகள் பிறிதொரு கட்சியை நோக்கிச் சிதறுவதற்கு ஏற்றவாறு எந்தவொரு மாற்றமும் தெற்கில் நிகழவில்லை. மேலும் 2018இல் மொட்டுவிற்கு வாக்களித்த மக்கள் மிகக் குறுகிய காலத்தில் பிறிதொரு சின்னத்தை நோக்கி பயணிப்பதற்கான சூழலும் இல்லை. இதற்கும் அப்பால் 2015இல் மைத்திரி எந்தச் சின்னத்தில் போட்டியிட்டு மகிந்தவை தோற்கடித்தாரோ அதே அன்னம் சின்னத்தில்தான் சஜித் இம்முறையும் போட்டியி;ட்டிருந்தார். 2015இல் தனது தோல்விக்கு இந்திய அமெரிக்க உளவுத்துறைகளே காரணம் என்று மகிந்த குற்றம் சாட்டியிருந்தார். சிங்கள தேசிய உணர்வால் வழிநடத்தப்புடுகின்ற மக்கள் மத்தியில் அன்னம் கூட்டு என்பது, மேற்குலக இந்திய தரப்புக்களால் வழிநடத்தப்படும் ஒரு கட்சி என்னும் மனப்பதிவும் இருந்தது. இவ்வாறு தன் பக்கத்தில் பல்வேறு பலவீனங்களை வைத்துக் கொண்டுதான் சஜித்பிரேமதாச, கோட்பாயவை எதிர்த்து போட்டியிட்டிருந்தார். கோட்பாயவை பொறுத்தவரையில் சஜித்பிரேமதாச ஒரு பலமான போட்டியாளரே அல்ல. இவ்வாறானதொரு சூழலில்தான் சஜித் தோல்விடைந்தார். ஆனால் இந்த விடயங்களை துல்லியமாக மதிப்பிட்;டு தீர்மானங்களை எடுத்திருக்க வேண்டிய கூட்டமைப்பின் தலைமையோ, மீண்டும் தமிழ் மக்களை நடுவீதிக்கு கொண்டுவரும் அரசியலையே செய்திருக்கிறது. 2009இற்கு பின்னர் இடம்பெற்ற மூன்று ஜனாதிபதித் தேர்தலகளின் போதும், கூட்டமைப்பு தூரநோக்குடன், தமிழ் மக்களின் நலன்களை முன்னிறுத்தி செயற்பட்டிருக்கவில்லை. தமிழ் மக்களை ஒரு ஆட்டு மந்தைக் கூட்டம் போலவே மேய்த்திருந்தது. ஆடுகளாக இருப்பதற்கு தமிழ் மக்கள் தயாராக இருக்கின்ற போது, அவர்களை மேய்ப்பதிலும் எவருக்கும் சங்கடங்கள் இருக்கப் போவதில்லை.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *