தலைப்பு செய்திகள்

சம்பந்தனின் நிதானத்தால் சிங்கள ராஜதந்திரத்தை எதிர்கொள்ள முடியுமா?

சம்பந்தனின் நிதானத்தால் சிங்கள ராஜதந்திரத்தை எதிர்கொள்ள முடியுமா?

யதீந்திரா
புதிய அரசியலைப்பு தொடர்பான விவாதத்திற்கான திகதிகள் தீர்மானிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், பௌத்த மாகாசங்கத்தினர் இந்த அரசியல் யாப்பு முயற்சிகளை நிறுத்துமாறு அறிவித்திருக்கின்றனர். அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களை இணைக்கும் காரக மகா சங்கமே இந்த அறிவித்தலை வெளியிட்டிருக்கிறது. அதாவது, தற்போதிருக்கும் அரசியல் யாப்பே போதுமானது எனவே புதிய அரசியல் யாப்பு ஒன்று இலங்கைக்கு தேவையில்லை என்பதே அவர்களின் அறிவிப்பு. மகா சங்கத்தினரின் இந்த அறிவிப்பை மிகவும் ஆழமாக ஊடுருவிப் பார்த்தால் இதில் ஒரு மிக முக்கியமான விடயம் இருக்கிறது. அதாவது, தற்போதிருக்கின்ற அரசியல் அமைப்பே எமக்கு சிறந்தது என்று குறிப்பிட்டிருக்கும் மகா சங்கத்தினர் அதனோடு இணைத்து குறிப்பிட்டிருக்கும் விடயத்தில்தான் நாம் கவனம் கொள்ள வேண்டும். அதாவது, அதிபரின் அதிகாரங்கள் அப்படியே இருக்க வேண்டும் ஆனால் தொகுதிவாரி முறையிலான தேர்தல் முறை அமைய வேண்டும். இவ்வாறானதொரு விடயம் தொடர்பான கணிப்பு இந்தப் பத்தியாளரிடம் முன் கூட்டியே இருந்தது. அது தற்போது வெள்ளிடைமலையாகியிருக்கிறது.

வெளித்தோற்றத்தில் நோக்கினால் புதிய அரசியல் யாப்பு முயற்சிகளை பௌத்த மகா சங்கத்தினர் எதிர்ப்பது போன்று தோன்றினாலும் உண்மையில் அவர்கள் எதிர்க்கவில்லை. மாறாக மைத்திரி – ரணில் கூட்டரசாங்கமும் மகா சங்கமும் ஒரு புரிதலுடன்தான் இதனைச் செய்து வருகின்றனர். இந்த இடத்தில் எழும் கேள்வி, ஒரு புறம் புதிய அரசியல் யாப்பை எதிர்ப்பது போன்று காண்பித்துக் கொண்டு தற்போது அரசாங்கம் முன்வைக்கவுள்ள ஒற்றையாட்சிக்குட்பட்ட, பௌத்தத்திற்கு முன்னுரிமையளிக்கின்ற ஒரு அரசியல் யாப்பை தமிழ் மக்களின் ஆதரவுடன் தமிழ் மக்கள் மீது திணிக்க முற்படும் ஒரு முயற்சிதான் இதன் பின்னாலுள்ளதா? இப்பத்தியாளரின் பதில் ஆம் என்பதுதான்.

சிறிலங்கா கிழக்காசிய ஜனநாயகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்று சிங்கள ஆய்வாளர்களே குறிப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு சூழலில்தான் இந்த ஆட்சி மாற்றம் இடம்பெற்றது. அது என்ன கிழக்காசிய ஜனாநாயகம்? மேற்குலகு வலிறுத்தும் ஜனநாயக நெறிமுறைகளை முற்றிலுமாக புறம்தள்ளி ஒரு வகையான இராணுவ கட்டுப்பாட்டுக்குள் அனைத்தையும் முடக்குவது அத்துடன் சீனாவை சார்ந்திருப்பது. கம்போடியா, தாய்லாந்து, மியன்மார் போன்ற நாடுகளின் ஆட்சி இவ்வாறானதொரு நிலையில்தான் முன்னெடுக்கப்படுகிறது. மகிந்தவின் அரசியல் கொள்கை நிலைப்பாடும் பெருமளவிற்கு இவ்வாறானதொரு நிலையில்தான் இருந்தது. அது மேலும் தீவிரமடையக் கூடிய, சிறிலங்கா முற்றிலுமாக சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடுமோ என்னும் அச்சம் நிலவிய ஒரு சூழலில்தான் கொழும்பில் ஒரு அதிகார மாற்றம் இடம்பெற்றது. இதில் தமிழ் மக்கள் பங்களிக்காது விட்டிருந்தால் மேற்படி அதிகார மாற்றம் சாத்தியப்பட்டிருக்காது. ஆனால் தமிழ் மக்கள் இதில் பிரதான பங்கு வகித்திருந்த போதிலும் கூட, தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி எந்தவொரு பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை. கூட்டமைப்பின் பெயரில் இந்த விடயங்களை கையாண்ட சம்பந்தன் இது தொடர்பில் மற்றவர்களின் எந்தவொரு ஆலோசனையும் பொருட்படுத்தவில்லை. இதனை தங்களுக்கு சாதமாக்கிக் கொண்ட மைத்திரி- சந்திரிக்கா- ரணில் – சம்பிக்க ரணவக்க கூட்டு மிகவும் சாதுர்யமாக தேசிய இனப்பிரச்சினை என்னும் ஒன்று இந்த நாட்டில் இல்லை என்பதான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில், ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரித்திருந்தனர். உண்மையில் இதற்கான பொறுப்பு ஜாதிக ஹெல உறுமவிடயமே விடப்பட்டது. அவர்களே தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரித்திருந்தனர். ஆட்சி மாற்றத்திற்கு முன்னரே ஆட்சி மாற்றத்திற்கு பின்னரான ராஜதந்திரத்திற்கான பிள்ளையார் சுழி மிகவும் நுட்பமாக போடப்பட்டது. அதன் பின்னர் தமிழர் தரப்பை பயன்படுத்தி தங்களை மீட்டெடுப்பதற்கான காய்நகர்த்தல்கள் மட்டுமே இடம்பெற்றன. அதில் அவர்கள் பெரும் பெற்றியையும் பெற்றுவிட்டனர்.

sampanthan

சர்வதேச சமூகத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் ஒரு உபாயமாகவே 2015இல் ஜெனிவா பிரேரணைக்கு கொழும்பு இணையனுசரணை வழங்கியிருந்தது. இதற்கு சம்பந்தன் தரப்பும் ஆதரவளித்திருந்தது. இந்தப் பிரேரணையில் அதிகாரப்பகிர்விற்கான அடிப்படயாக 13வது திருத்தச் சட்டமே உள்ளடக்கப்பட்டிருந்தது. அவ்வாறானதொரு விடயம் உள்ளடக்கப்படுவதை சம்பந்தன் நிராகரிக்கவும் இல்லை. இதன் மூலம் அதற்கு அப்பாலான ஒரு தீர்விற்கான அழுத்தம் எதுவும் வெளியில் இருந்து வரமுடியாத நிலைமையை அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்டது. கொழும்பு ஒரு விடயத்தில் எப்போதுமே தெளிவாக இருக்கிறது. அதாவது, தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு என்று வருகின்ற போது, அதனை நேரடியாக வலியுறுத்தக் கூடிய ஒரேயொரு நாடு இந்தியா மட்டுமே. அமெரிக்கா ஒரு போதுமே அதனை நேரடியாக வலியுறுத்தாது. அமெரிக்காவை பொறுத்தவரையில் இதனை ஒரு மனித உரிமை விவகாரமாக மட்டுமே பார்க்கும். அதிகாரப் பகிர்வு விடயத்தில் 13வது திருத்தத்தை புகுத்திவிட்டால் அதன் பின்னர் இந்தியாவை இந்த விடயத்தில் அமைதிப்படுத்திவிட முடியும் என்பதே கொழும்பின் கணிப்பு. அது முற்றிலும் சரியானதொரு கணிப்பே.

இந்த இடத்தில் சம்பந்தன், ஜ.நாவிற்கான இந்தியத் தூதுவருடன் இது தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும். மகிந்த ராஜபக்ச கூட 13 பிளஸ் என்று கூறிக் கொண்டிருந்த நிலையில், 13க்கு அப்பால் செல்லுதல் என்னும் விடயம் ஜெனிவா பிரேரணையில் உள்ளடக்குமாறு சம்பந்தன் வலியுறுத்தியிருக்க வேண்டும். எங்களது கோரிக்கைகளை ஏற்காது விட்டால் இந்தப் பிரேரணையை நாங்கள் ஏற்கப் போவதில்லை என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். இதனை மேற்குலகு கேட்காது போயிருக்கலாம் ஆனால் அது பிரச்சினைக்குரிய விடயமல்ல. ஆனால் அதன் பின்னர் இடம்பெற்ற விடயங்களில் தலையீடு செய்வதற்கான உரிமை கூட்டமைப்பிடம் இருந்திருக்கும். எல்லாவற்றுக்கும் தலையாட்டிக் கொண்டிருக்கின்ற நிலைமை ஏற்பட்டிருக்காது. உண்மையில் ஜெனிவா பிரேரணையில் 13வது திருத்தத்தை உட்புகுத்தியானது சிங்கள ராஜதந்திரத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

இவ்வாறானதொரு சூழில்தான், அப்போது வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர தாம் புதிய அரசியல் யாப்பு ஒன்றை கொண்டுவரப் போவதாக ஜ.நாவில் குறிப்பிட்டிருந்தார். யுத்தத்திற்கு பிந்தைய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகவே இது குறிப்பிடப்பட்டது. மங்கள சரமரவீர மூலம் மேற்குலகிற்கு ஒரு தாராளவாத முகத்தை காண்பித்தது. இந்த தாராளவாத முகத்துடன் பாதர் இம்மானுவல், சுரேன் சுரேந்திரன் போன்ற தாராளவாத முகம் காண்பிக்கும் தமிழர்களுடன் இணைந்து, புலம்பெயர் சூழலில் ஒரு குறிப்பிட்ட தரப்பினரை அரசாங்கத்தை நோக்கித் தள்ளுவதிலும் கொழும்பு வெற்றிபெற்றது. இதன் மூலம் புலம்பெயர் சூழலில் இந்த அரசாங்கம் பறவாயில்லை என்னும் கருத்துடைய ஒரு தரப்பினர் உருவாக்கினர். இவர்களைக் கொண்டே மேற்குல ராஜதந்திரிகளையும் அரசாங்கம் கையாண்டது. மங்கள சமரவீரவைக் கொண்டு செய்ய வேண்டிய விடயங்களை செய்து முடித்ததும் அவர் அந்தப் பொறுப்பிலிருந்து எடுக்கப்பட்டார். பின்னர் அந்தப் பொறுப்பு ரவி கருணாநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் மாரப்பனவிடம் ஒப்படைக்கப்பட்டது. மாரப்பன தற்போது பேசிவரும் விடயங்கள் அனைத்தும் மங்கள சமரவீர பேசிய விடயங்களுக்கு முற்றிலும் எதிர்மாறானதாகும். இதுவும் கொழும்பின் இன்னொரு வகை ராஜதந்திரம். ஓவ்வொரு நபர்களையும் ஒவ்வொரு விதமாக கையாளுவதன் ஊடாக விடயங்களை தனிநபர்களின் கருத்தாக காண்பிக்க முற்படுவது.

இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் கடந்த மார்ச் மாதம் மனித உரிமைகள் பேரவையில் இரண்டு வருடகால அவகாசத்தை அரசாங்கம் பெற்றுக் கொண்டது. பிரேரணையில் உறுதியளிக்கப்பட்ட விடயங்களை அமுல்படுத்துவதற்காகவே அரசாங்கம் இந்தக் கால அவகாசத்தை கோரியிருந்தது. இதற்கும் சம்பந்தன் தரப்பு ஆதரவளித்திருந்தது.

சம்பந்தனின் நிதானத்தையும் பொறுமையையும் பயன்படுத்தி மைத்திரி-ரணில் கூட்டரசாங்கம் தான் விரும்பியவாறு விடயங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக கையாண்டது. தற்போது அரசாங்கத்தின் நகர்வுகள் அதன் இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கின்றன. அரசாங்கத்தின் நகர்வுகளை எதிர்கொள்ளுவதற்கு சம்பந்தனின் பக்கத்தில் எந்தவொரு உபாயமும் இருந்திருக்கவில்லை. அரசியல் தீர்வு ஒன்றையே, சம்பந்தன் தனது நிதானத்திற்கும் பொறுமைக்குமான காரணமாக ஒப்புவித்துக் கொண்டிருந்தார். அரசாங்கமும் புதியதொரு அரசியல் யாப்பை கொண்டுவருவதான தோற்றத்தை பெருமெடுப்பில் காண்பித்தது. மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கை, உப குழுக்களின் அறிக்கை, இடைக்கால அறிக்கை என பல விடயங்களை கவர்சிகரமான விளம்பரப்படுத்தியது.

tamil-politician-opposition-leader-sri-lanka-sampanthan_bdb48e90-5242-11e5-a8da-005056b4648e

அரசாங்கம் எந்தளவிற்கு புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பிரச்சாரம் செய்ததோ, அதனை மேவும் வகையில் அதன் மீதான எதிர்ப்பும் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டது. எதிர்ப்பு சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்ட அளவிற்கு, புதிய அரசியல் யாப்பிற்கு ஆதரவான பிரச்சாரங்கள் எதனையும் அரசாங்கம் செய்யவில்லை. மகிந்த தரப்பின் எதிர்ப்பாக மட்டுமே காண்பிக்கப்பட்ட ஒரு விடயம், தற்போது மகா சங்கத்தினரின் எதிர்ப்பாகவும் காண்பிக்கப்படுகிறது. இதன் மூலம் இது ஒரு பாரதூரமான விவகாரமாக காண்பிக்கப்படுகிறது. இம்மாத இறுதியில் இது தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ள நிலையில்தான் மகா சங்கத்தினர் இவ்வாறானதொரு அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றனர். இவ்வளவு எதிர்ப்பையும் மீறி ஒரு புதிய அரசியல் யாப்பை எவ்வாறு கொண்டு வருவது? ஒரு நாட்டின் பெரும்பாண்மை தரப்பை திருப்திப்படுத்தாமல் எவ்வாறு எங்களால் செயற்பட முடியும்? இதனைத்தான் தற்போது அரசாங்கம் சொல்லப் போகிறது? அவ்வாறாயின் பெரும்பாண்மையினால் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு விடயத்தைத்தான் எங்களால் செய்ய முடியும் என்பதே அரசாங்கத்தின் பதிலாக இருக்கப் போகிறது. அவ்வாறாயின் சம்பந்தனின் பதில் என்னவாக இருக்கும்? ஆனால் ஒன்று மட்டும் உண்மை சிங்கள ராஜதந்திரத்தின் ஆற்றலை நிச்சயமாக பாராட்டாமல் இருக்க முடியாது! ஆனால் நமதுபக்க ராஜதந்திரம்?


One thought on “சம்பந்தனின் நிதானத்தால் சிங்கள ராஜதந்திரத்தை எதிர்கொள்ள முடியுமா?

Leave a Reply to P..Maheswaran Cancel reply

Your email address will not be published. Required fields are marked *