Search
Sunday 12 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சிங்கள பௌத்த மதவாத — இராணுவ மேலாதிக்கம் தமிழர், முஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல , பல சிங்களவர்களுக்கும் ஒரு பிரச்சினையே ‘ 

சிங்கள பௌத்த மதவாத — இராணுவ மேலாதிக்கம் தமிழர், முஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல , பல சிங்களவர்களுக்கும் ஒரு பிரச்சினையே ‘ 

‘ ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முற்போக்கு சிந்தனையில்லாத அரசியல் சக்திகளை பலப்படுத்தும்.’

இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு பிரதான தடையாக இருப்பது தற்போதைய சிங்கள  மதவாத   — இராணுவ மேலாதிக்கமே என்று கூறியிருக்கும் நோர்வே சமூக விஞ்ஞான அறிஞரான  பேராசிரியர்  ஓவின்ட்  ஃபுக்லெருட்  அந்த மேலாதிக்கம் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு மாத்திரமல்ல, பல சிங்களவர்களுக்கும் கூட ஒரு பிரச்சினையே என்று குறிப்பிட்டிருக்கிறார்.

வரலாறு நெடுகவும் நிலைநாட்டப்பட்டு வந்திருக்கும்  (குடிப்பரம்பலுடனும் மதங்களுடனும்  மற்றும் சமூக — பொருளாதாரத்துடனும் தொடர்புடைய) முரண்பாடுகளின் பிரத்தியேகமான சிக்கல்நிலையொன்றை இலங்கை உருவகப்படுத்தி நிற்பதாகவும் அந்த சிக்கலும் அரசியல் தீர்வுக்கான முக்கிய தடையாக விளங்குகிறது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ஒஸ்லோ பல்கலைக்கழகத்தின் கலாசார வரலாற்று அருங்காட்சியகத்தில் சமூக மானிடவியல் பேராசிரியராகப் பணியாற்றும் ஓவின்ட் புலம்பெயர் சமூக உருவாக்கங்கள், கலாசாரப் பிரதிநிதித்துவ மற்றும் அழகியலின் அரசியல் உட்பட பல துறைகளில் ஆராய்ச்சிசெய்வதில் அக்கறைகொண்டவர். இலங்கை நெருக்கடி மற்றும் அதன் விளைவுகள்  குறித்து பல நூல்களை( வெளியுலக வாழ்வு ; புலம்பெயர் தமிழ்ச் சமூகமும் தொலைதூர தேசியவாதம் என்பது உட்பட — Life on the Outside ; the Tamil Diaspora and its Long Distance Nationalism ) வெளியிட்டிருக்கும் அவர் அண்மையில் ‘ இலங்கையில்  போரும் சமாதானமும் ; நோர்வேயின் ஒரு தோல்வியின் விளைவுகள் ‘  ( War and Peace in Sri Lanka ; Consequences of a Norwegian Failure) என்ற நூலை  எழுதியிருக்கிறார்.

அந்த நூலை இப்போது எழுதுவதற்கு தன்னைத் தூண்டிய காரணிகள் குறித்து திருகோணமலையை தளமாகக்கொண்டியங்கும் மூலோபாய கற்கைகளுக்கான நிலையத்தின் இணையத்தளத்துக்கு வழங்கிய நேர்காணலில் விளக்கமளித்திருக்கும் பேராசிரியர்  ஓவின்ட்  இலங்கையின் அண்மைக்கால அரசியல் நிகழ்வுப்போக்குகள் தொடர்பாகவும் கருத்துக்களைக் கூறியிருக்கிறார்.

இலங்கையில் சகலருக்குமான சமாதானமான எதிர்காலம் ஒன்றை உருவாக்குவதற்கு இருக்கின்ற தடைகளை வெற்றிகொள்வதற்கு ஒரேயொரு பாதை இன வேறுபாடுகளுக்கு அப்பால்சென்று முற்போக்குச் சக்திகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு வருவதேயாகும். அத்தகைய தந்திரோபாயம் சாத்தியம் இலங்கையில் இருக்கிறது என்பதை 2015 தேர்தல்களில் காணக்கூடியதாக இருந்தது என்று கூறியிருக்கும் பேராசிரியர் ஓவின்ட்  அந்த தேர்தல்களில் அதிகாரத்துக்கு வந்தவர்கள் பரிதாபகரமாக தோல்விகண்டதை முதலில் ஒத்துக்கொண்டவர்களில் தானும் ஒருவர் என்பதையும் சொல்லத்தயங்கவில்லை.

கேள்வி : ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் இலங்கை அரசியல் நிலைவரத்தின்மீது எத்தகைய தாக்கத்தைக் கொண்டிருக்கும் ? 

பதில்: நிச்சயமாக அது அரசியல் நிலைவரத்தில் பெரும் பாதகமான தாக்கத்தைக் கொண்டிருக்கிறது. குண்டுத்தாக்குதல்களுடன் சம்பந்தப்ட்ட  முழு விவகாரத்திலும் உள்ள புலனாய்வுத்துறைத் தவறுகளும் அரசியல் குழப்பநிலையும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முற்போக்குச் சிந்தனையில்லாத அரசியல் சக்திகளைப் பலப்படுத்துவது பெரும்பாலும் சாத்தியம்.

கேள்வி ; ‘ இலங்கையில் போரும் சமாதானமும் ; நோர்வேயின் ஒரு தோல்வியின் விளைவுகள் ‘ என்று நூலை எழுதுவதற்கு உங்களை தூண்டிய காரணங்கள் எவை? 

பதில் : இலங்கையல் நோர்வேயின் ஈடுபாட்டை நோர்வே மக்களுக்கு நினைவுபடுத்துவதும் நோர்வேயின் தலையீட்டுக்கான இலங்கையின் வரலாற்று மற்றும் அரசியல் பின்புலத்தை அவர்களுக்கு விளக்குவதுமே இந்த நூலை எழுதியதற்கான பிரதான  காரணமாகும். நோர்வேயின் தோல்வி இலங்கையில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தியது என்பதையும் அதனால் இன்னமும் கூட இலங்தை அவலப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதையும் நோர்வே பொதுமக்களுக்கு விபரமாக தெரியவைக்கவேண்டியிருக்கிறது.இந்த நூலை வெளியிடுவதற்கு 2019 மே மாதத்தை நான் தெரிவு செய்ததற்கு காரணம் போர் முடிவுக்கு வந்து பத்து வருடங்கள் நிறைவடைந்த தருணம் கடந்த கால நிகழ்வுகளைத் தொகுத்துப் பார்ப்பதற்கு இயல்பாகவே பொருத்தமானது என்று நான் நம்பியதேயாகும். அத்துடன் இலங்கை இன்னொரு ஜனாதிபதி தேர்தலை இப்போது எதிர்நோக்கியிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை தற்போதைய சூழ்நிலையில் ஜனாதிபதி தேர்தல் தவறான திசையிலான இன்னொரு நடவடிக்கையாகும் என்றே சொல்வேன்.

நோர்வேயின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகள் இலங்கையில் கூடுதலான அளவுக்கு வன்முறையுடனான புதிய வரலாற்றுக் கட்டமொன்றின் தொடக்கத்தை குறித்து நின்றது. மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக வந்ததும் மென்மையான போக்கிற்கு இடமில்லாமல் போய்விட்டது.ஆனால், தமிழர்கள் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிப்பதற்கு நெருக்குதலைக் கொடுத்ததன் மூலமாக விடுதலை புலிகள் ராஜபக்ச அதிகாரத்துக்கு வருவதற்கு உதவினார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அதையடுத்து தோன்றிய சூழ்நிலைகளில் சிங்களவர்  — தமிழர் பிளவின் இருமருங்கிலும் தேசியவாத சக்திகள் பலமடைந்தது மாத்திரமல்ல, முன்னரைக் காட்டிலும் தீவிரமான நிலைப்பாடுகள் மேலோங்கின.இது எனது நூலின் உள்ளார்ந்தமான தொனிப்பொருளாக அமைந்திருக்கிறது. சமாதான முயற்சிகளை மதிப்பீடு செய்வதை பிரதானமான நோக்கமாக நூல் கொண்டிருக்கவில்லை. சமாதான முயற்சிகளை நீண்ட வரலாற்றுப் போக்கில் வைத்துப் பார்த்து அவற்றின் தோல்வியின் வரலாற்று ரீதியான விளைவுகளைப் பற்றி ( போரின் முடிவுக்குப் பின்னரான பத்து வருடங்களுக்குப் பிறகு ) சில விடயங்களைச் சொல்வதே எனது நோக்கம்.

கேள்வி : நோர்வேயின் சமாதான முயற்சிகள் பற்றி இப்போது எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?  சமாதான முயற்சிகளின்போது செயற்பட்டதை விடவும் வேறுபட்ட முறையில் நோர்வே அதன் பாத்திரத்தை எவ்வாறு வகித்திருக்கமுடியும் என்று நீங்கள் நோக்குகிறீீர்கள்?

பதில் : நோராட் நிறுவனத்தினால் செய்யப்பட்டு 2011 ஆம் ஆண்டில் ‘ சமாதானத்தின் பகடைக் காய்கள் ‘ என்ற தலைப்புடன்  அறிக்கையாக வெளியிடப்பட்ட மதிப்பீட்டை பொதுவில் நான்ஏற்றுக்கொள்கிறேன்.இதைப் பற்றி பல விடயங்களைச் சொல்லமுடியும்.அது ஒரு நீண்ட கதை.சுருக்கமாகச் சொல்லப்போனால், அனுசரணையாளர் என்ற வகையில் நோர்வே மிகவும் பலவீனமானதாகவே இருந்தது.சமாதான முயற்சிகள் ஆரோக்கியமானவையாகவும் வெற்றியை நோக்கி முன்னேறக்கூடியவையாகவும் அமைவதற்கு தேவையான நிபந்தனைகளை விதிக்க இயலாததாக நோர்வே இருந்தது.

விடுதலை புலிகளும் அன்றைய இலங்கை அரசாங்கமும் விரும்பியிருந்தாலும் கூட, இரு தரப்புகளுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட சமாதான முயற்சியை ஏற்பாடு செய்வதற்கு நோர்வே இணங்கிக்கொண்டிருக்கக்கூடாது என்பதே எனது அபிப்பிராயம். பிரச்சினையில் சம்பந்தப்பட்ட பல தரப்புகளை உள்ளடக்காமல் முன்னெடுக்கப்படக்கூடிய  எந்தவொரு செயன்முறையினாலும் இறுதித்தீர்வைக் கொண்டுவர முடியாது என்பது இலங்கையின் கடுஞ்சிக்கலையும் அதன் அரசியலின் விளங்காப்புதிர்களையும் பற்றி அடிப்படை அறிவைக்கொண்ட எவருக்குமே தெரிந்திருக்கவேண்டும். மற்றைய தரப்புகளைச் சேர்க்கக்கூடாது என்பதுதான் விடுதலை புலிகளினதும் அரசாங்கத்தினதும் நிபந்தனையாக இருந்திருந்தால், நோர்வே சமாதான முயற்சிகளில் இருந்து விலகி கூடுதல் வலிமையும் துடிப்பும் கொண்ட தரப்புகளுக்கு இடம்விட்டிருக்கவேண்டும். அதேபோன்றே நிலைவரங்கள் குழம்பத்தொடங்கியபோது தொடர்ந்தும் தனது பாத்திரத்தை வகிப்பதை கைவிட்டுவிட்டு சமாதான முயற்சிகளில் இருந்து நோர்வே வெளியேறியிருக்கவேண்டும்.

கேள்வி: விடுதலை புலிகளை அழிப்பதற்கு உலகளாவிய ஆதரவுடன் முழு அளவிலான இராணுவ நடவடிக்கைகளை தொடங்குவதற்கு முன்னதாக சமாதான முயற்சிகளின் ஊடாக விடுதலை புலிகளை தனிமைப்படுத்துகின்ற ஒரு சர்வதேச பாத்திரத்தை நோர்வே வகித்தது என்று சில தமிழர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். நோர்வே நல்ல முகத்தையும் தீய திட்டத்தையும் கொண்டிருந்ததாக அவர்கள் குறைகூறுகிறார்கள். இந்த குற்றச்சாட்டை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்? 

பதில்: என்னால் இந்த வாதத்தை புரிந்துகொள்ளமுடியவில்லை. எவ்வாறு தனிமைப்படுத்துவது? இதற்கு எதிரான கருத்தையே எனது நூலில் நான் முனவைத்திருக்கிறேன். சமாதான முயற்சிகளின்போது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் உலகவங்கி போன்ற முக்கியமான சர்வதேச  தரப்புகளுடன் ஊடாட்டங்களைச் செய்வதற்கான வாய்ப்பு விடுதலை புலிகளுக்கு வழங்கப்பட்டது.அந்த தரப்புகளும் அதை அங்கீகரித்துக்கொண்டு அந்த இயக்கத்தினருடன் செயற்பாடுகளை முன்னெடுத்ததனர்.விடுதலை புலிகளைப் போன்ற இயக்கங்களுக்கு அத்தகைய வாய்ப்பு கிடைப்பதென்பது பெரும்பாலும்  முன்னொருபோதும் இல்லாத ஒன்றாகும். விடுதலை புலிகள் அதற்கு எவ்வாறு பதில் செயற்பாட்டைக் காட்டினார்கள்? வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரைக் கொன்றார்கள். இது தானா சர்வதேச அரசியலை நடத்தி அரசியல் தனிமைப்பாட்டை வெற்றிகொள்வதற்கான பாதை என்று விடுதலை புலிகளை தனிமைப்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாக வாதம் செய்பவர்கள் தங்களைத் தாங்களே கேட்கவேண்டும்.

1994 ஆம் ஆண்டில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆக்கபூர்வமான முறையில் தொடங்கிய முன்முயற்சிக்கு உகந்த முறையில் பதிலளிப்பதற்கு கிடைத்த வாய்ப்பை விரயம் செய்ததைப் போன்றே சமாதானப் பேச்சுவார்த்தைகளில் இருந்து வெளியேறியதன் மூலம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பம் ஒன்றையும் விடுதலை புலிகள் தவறவிட்டார்கள் என்பதே எனது அபிப்பிராயம்.இந்த விடயங்கள் குறித்து 2009 க்கு பிறகு தமிழ் அரசியல் வட்டாரங்களில்  பெரிதாக விவாதம் எதுவும் நடக்கவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

கேள்வி : இலங்கை விவகாரத்தில் அதுவும் குறிப்பாக தோல்வியடைந்த சமாதான முயற்சிகளின் பின்புலத்தில் தமிழர்கள் மீதான நோர்வேயின் கடப்பாடு பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன? 

பதில் : இலங்கை நிலைவரத்தில் அதுவும் குறிப்பாக ஈழ தமிழ் இனத்தின் நிலைவரத்தில் ஈடுபாடு காட்டுவது தொடர்பில் நோர்வேக்கு கடப்பாடொன்று இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவ்வாறு கடப்பாடு என்று நோக்குவதானால் அது நெறிமுறை சார்ந்தததே தவிர, சட்டரீதியானதல்ல. நோர்வேயின் அரசியல் ஆளும் வர்க்கம் அதன் சொந்த தவறுகள் அல்லது தோல்விகள் குறித்து கடுமையான சுயவிசாரணை செய்து பார்க்கவேணடும் ; அதன் தோல்விகளே இலங்கையின் வடக்கு — கிழக்கில் இன்னமும் நிலவுகின்ற துயர்நிறைந்த சூழ்நிலைக்கு காரணமாக இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். இத்தகைய சுயவிசாரணை ஒருபோதும் நோர்வேயில் இடம்பெறவில்லை. நான் இந்த நூலை எழுதியதற்கான காரணங்களில் அதுவும் ஒன்று.

கேள்வி: இலங்கையில் சர்வதேச சமூகம் எத்தகைய பாத்திரத்தை வகிக்கும் ? 

பதில்: இது ஒரு பெரிய கேள்வி.ஏனைன்றால் சர்வதேச சமூகம் ஒன்று இல்லை.  நிச்சயமாக என்னால் சொல்லமுடியாவிட்டாலும் கூட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு இலங்கை எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஐ.நா.வின் பொறுமை ஏதாவது ஒரு கட்டத்தில் முடிவுக்கு வரும் என்று நான் நினைக்கிறேன்.இவ்வருட இறுதியில் நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படும்பட்சத்தில் அத்தகையதொரு நிலை வரலாம்.அதனால் ஏற்படக்கூடிய விளைவுஓளை முன்கூட்டியே சொல்வது கஷ்டமானது.

நன்றி : வீரகேசரி நாளிதழ்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *