பேராசிரியர்.மு.நாகநாதன்
1980 ஆம் ஆண்டில் முதல் முறையாக சீன நட்புறவு கழகத்தின் சார்பில் மக்கள் சீனத்தில் பயணம் மேற்கொண்டேன்.
1962 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியா -சீன நாடுகள் முழு அளவில் தூதரக உறவைப் புதுப்பித்தன.
எங்களுடைய பயணக் குழு சீனம் முதன்முறையாகச் சென்றதாலும், பீஜிங் நகரிலிருந்து பயணம் தொடங்கினோம்.
இந்திய விடுதலை நாள் அன்று. ஆகஸ்ட்டு 15 -இந்திய தூதரகத்தில் விருந்து தரப்பட்டது. முதல் முறையாக சீன நாட்டின் உயர் அதிகாரிகளும் இவ்விருந்தில் பங்கேற்றனர்.
வாஜ்பாய், மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக பணியாற்றியாற்றினார். வாஜ்பாய் உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளைப் புறந்தள்ளி, சீன அரசோடு நட்புறவை வளர்த்தார். வர்த்தக உறவு ஏற்படவும் காரணமாகயிருந்தார் என்று புகழாரம் சூட்டினர்.
பாகிஸ்தானின் புகழ்மிக்க பொருளாதார அறிஞரும், ஐ.நா மன்றத்தின் முதல் மனித மேம்பாட்டு அறிக்கையை வடிவமைத்தவர்களில் ஒருவருமான முகமது ஹல்க் – “வர்த்தகம் வர்த்தகத்தை ஈன்றெடுக்கிறது. கசப்பு உணர்ச்சிகளை மறைய செய்கிறது” என்றார். (Trade begets trade.Animosity gets reduced)
இந்த உயரிய கருத்து, வாஜ்பாயின் முயற்சியால், பெரும் வெற்றியை இரு நாடுகளுக்கும் இடையே உருவாக்கியிருக்கிறது.
இந்தியா ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவில் சீனாவிடமிருந்து பொருட்களை 2017ஆம் ஆண்டில் இறக்குமதி செய்துள்ளது.
சீனாவிற்கு இந்தியா 30,000ஆயிரம் ரூபாய் கோடி அளவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.
இந்தியாவின் சிறந்த பிரதமர்களில் ஒருவரான ஐ.கே.குஜ்ரால் தனது நிர்வாக அரசியல் அனுபவங்களை நூலாக வடித்துள்ளார்.
சோவியத் ஒன்றியத்தில் அவர் பல ஆண்டுகள் தூதுவராகப் பணியாற்றி நன்மதிப்பைப் பெற்றவர்.
வாஜ்பாய் குஜராலை அழைத்து சோவியத் ஒன்றிய அரசிடம் நல்லுறவுகளை வளர்ப்பதற்கு ஆலோசனைகளைப் பெற்றார்.
தான் காங்கிரஸ் தலைவர்களுடன் நெருங்கி பழகியதைப் பொருட்படுத்தாமல் முழு அளவு நம்பிக்கை என் மீது வைத்தார் என்றும் குஜ்ரால் எழுதியுள்ளார்.
இத்தகைய பெரும் ஆளுமையை வாஜ்பாயின் வாழ்க்கையில் பல நிகழ்வுகளில் காணலாம்.
அண்ணன் மாறன் ஒன்றிய அரசின் வணிக அமைச்சராகப் பணியாற்றியபோது, தோகாவில் நடைபெற்ற உலக வர்த்தக மாநாட்டில் இந்தியாவின் வேளாண்மை பொது சுகாதாரத் துறைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு, வளர்ந்த ஏகாதிபத்திய நாடுகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன.
வளர்கின்ற நாடுகளின் தலைவர்களோடு பேசி அண்ணன் மாறன் உடன்பாடு கண்டார்
.
இந்த அரும்பெரும் செயலைப் போற்றி அண்ணன் மாறனுக்கு விருந்து அளித்துப் பாராட்டினார் பிரதமர் வாஜ்பாய்.
ஜெயலலிதா 2001ஆட்சியில் பொடா சட்டத்தைப் பயன்படுத்தி பழ.நெடுமாறன் வை.கோ ,சு.ப. வீரபாண்டியன்,சாகுல் ஹமீது, பல் மருத்துவ நிபுணர் தாயப்பன் உட்பட பலரைக் கைது செய்ததனர்.
புதுடெல்லியில் நடைபெற்ற வல்லுநர் கூட்டத்தில் கலந்து கொள்ள நான் பயணம் மேற்கொண்ட நாளில் வெளிநாட்டிலிருந்து வந்திறங்கிய வை.கோவைக் கைது செய்வதற்கு சென்னை விமான நிலையத்தில் காவல்துறை நடத்திய அராஜகத்தை எளிதில் விளக்க இயலாது.
உடல் நலிவுற்ற நிலையில் இருந்த அண்ணன் மாறனைப் புதுடெல்லியில் நான் சந்தித்து இந்த அராஜகத்தைப் பற்றிக் குறிப்பிட்டேன்.
மறுநாள் நடந்த என்.டி.ஏ ஆலோசனைக் கூட்டத்தில் இதுபோன்ற செயல்களைத் தடுக்க வேண்டும், பொடா சட்டத்தை நீக்குவதற்கு ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உரத்த குரலில் மாறன் பேசினார்.
இந்த ஆள் தூக்கி அராஜக சட்டத்தை நீக்குவதற்கு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
இதுதான் அண்ணன் மாறன் கலந்து கொண்ட இறுதிக் கூட்டமாகும். வாஜ்பாய் காலத்தில் அமைக்கப்பட்ட இந்தக் குழுவின் அடிப்படையில் தான் 2004இல் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது பொடா சட்டம் திரும்பப் பெறப்பட்டது.
இது போன்ற மற்ற கட்சியின் தலைவர்களின் ஆலோசனைகளைப் பெற்று ஒன்றிய அரசில் கூட்டணி ஆட்சிக்கு இலக்கணம் கண்டவர் வாஜ்பாய்.
பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவை இந்தியா முழுவதும் கொண்டாட வேண்டும் என்ற பெருந்தகையாளர் வாஜ்பாய் ஆவார்.
ஈராக் போரின் போது இந்தியப் படைகளை அமெரிக்காவிற்கு ஆதரவாக ஈராக்கிற்கு அனுப்ப புஷ் வலியுறுத்திய போது வாஜ்பாய் மறுத்து விட்டார்.
அந்நேரத்தில் அமெரிக்காவிலிருந்து சிரியாவிற்குப் பயணம் மேற்கொண்டார்.
அமெரிக்கா சிரியாவை எதிரிநாடாகக் கருதிய நேரத்தில் இப்பயணத்தை மேற்கொண்டார் என்பது வாஜ்பாயின் நிகரற்ற ஆளுமைக்குச் சிறந்த அடையாளம்.
குஜராத்தில் முதல்வர் மோடி தலைமையிலான அரசுப் பட்டப்பகலில் திட்டமிட்டு இஸ்லாமியர்களைப் படுகொலைகளைச் செய்த போது, குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வாய்த் திறக்க அஞ்சிய போது, வாஜ்பாய் “மோடியே ராஜ தர்மத்தை கடைப்பிடியுங்கள் ” என்றார்.
ஆனால் வாஜ்பாய் காலத்தில் கடைப்பிடிக்கபட்ட மரபுகள், மாண்புகள் எல்லாம் இன்று காலில் போட்டு அல்லவா மிதிக்கப்படுகின்றன.
மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாட்டை மக்கள் உணர்ந்து விட்டார்கள். தக்கப் பதிலையும் மக்கள் மன்றம் அளிக்கும். வாஜ்பாயின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.