Search
Wednesday 28 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சீன-இலங்கை துறைமுக உடன்படிக்கை மீண்டும் ஒரு வரலாற்று பதிவாகுமா?

சீன-இலங்கை துறைமுக உடன்படிக்கை மீண்டும் ஒரு வரலாற்று பதிவாகுமா?

கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்

ஹம்பாந்தோட்டை துறைமுக கட்டுமானத்திற்கான சீன – இலங்கை – 2017 உடன்படிக்கை உள்நாட்டிலும், பிராந்திய, சர்வதேசத் தளத்திலும் அதிக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஆளும் தரப்பு எல்லாவித நெருக்கடியையும் கடந்து இந்த உடன்பாட்டில் கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது. சீனாவின் ஒரேபாதை ஒரே சுற்றும், ஏற்கனவே அறிமுகமான முத்துமாலைத் தொடரிலும் ஹம்பாந்தோட்டை பிரதான இடத்தை வகித்துவருகிறது. இவ்வுடன்படிக்கையின் அரசியலை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

உடன்படிக்கையின் உள்ளடக்கம்

உடன்படிக்கையின் உள்ளடக்கம் ஏற்கனவே செய்யப்பட்ட சீனா – இலங்கை உடன்பாடுகளை விட தனித்துவமானது. இலங்கை அரசாங்கம் பெற்றுக் கொள்ளவுள்ள 193 மில்லியன் ரூபாயும் வர்த்தக கடனாகக் கொண்டு துறைமுக நிர்மாணப்பணி பூர்த்தி செய்யப்படும். துறைமுகத்தின் முழுமையான செயல்பாட்டுக்கான உபகரணங்களை கொள்ளவனவு செய்வதற்கு 600 மில்லியன் அ.டொ முதலீடு செய்ய வேண்டியுள்ளது. புதிய உடன்படிக்கையின் கீழ் 1.4 பில்லியன் அ.டொ மொத்தப் பெறுமதியாகும். அசையும், அசையாத சொத்துக்கள் பராமரிப்பு இலங்கை இரண்டு நிறுவனங்கள் பொறுப்பேற்கும்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு, கடற்படை சேவை, நங்குரமிடல், அவசர நிலமைகளுக்கு பதிலளிப்பு. சுற்றுச்சூழல் மாசடைவதை கட்டுப்படுத்துவது, உட்பட்ட பொறுப்புக்களை மேற்படி நிறுவனங்களது கட்டுப்பாட்லிருக்கும்.

பத்தாண்டு காலப்பகுதிக்கு பின்னர் 20 சதவீத பங்குகான இலங்கை துறைமுக அதிகார சபை விரும்புமிடத்தில் விற்பனை செய்வதற்கு சீன நிறுவனம் (CMPH) இணங்கியுள்ளது. China merchants port Holdings நிறுவனம் 70சதவீத பங்கினையும், இலங்கை துறைமுக அதிகாரசபை(SLPA) 30 சதவீத பங்கையும் கொண்டே துறைமுகக் கட்டுமானத்தை மேற்கொள்கின்றன. ஒப்பந்த கைச்சாத்திடப்பட்ட தினத்திலிருந்து அடுத்துவரும் 70 ஆண்டுகள் நிறைவடைந்தும் சகல பங்குகளையும் கொள்வனவு செய்வதற்கோ அல்லது 80 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் 60 சதவீத பங்கினை மேற்படி இரு நிறுவனங்களிடமிருந்தும் ஒரு டொலருக்கு இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு உரிமம் உண்டு.

1151 ஹெக்டயர் கடல் பரப்பு 99 வருடத்திற்கு குத்தகைக்கு கொடுக்க உடன்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் தேசியபாதுகாப்பு இலங்கையின் பொறுப்பில் அமைந்திருப்பதுடன் துறைமுகத்தை இராணுவ பயன்பாட்டுக்கு அனுமதிப்பதில்லை எனவும் இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இதன் அமைவிடம் ஹம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத்திற்கு பக்கமான கடல்பரப்பாக உள்ளது.

hambantota-port-image1

எழுந்த விமர்சனங்கள்

ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் தேசியாரீயில் ஒரு அழிவாகவும், பொருளாதார ரீதியில் ஒருகாட்டிக் கொடுப்பாகவும் உள்ளது என ஜே.வி.பி இன் பராளுமன்ற உறுப்பினர் விமல் ரத்னாயக்கா தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கிய உடன்பாட்டை கிளித்தெறியப்படும் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

1987 இல் இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திட்ட அதே தினத்தில் (29 July) சீனா – இலங்கை உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.

பொருளாதார அடிப்படையில்

இலங்கை – சீனா உடன்படிக்கை பொருளாதார ரீதியில் அபாயமானது தானா? ஒன்பது பிரதான கேள்வியாகும்.

இத்துறைமுகத்திற்கான கட்டுமானப் பணிகள் அதிகம் ஏற்கனவே நிறைவடைந்துள்ளது அதனடிப்படையில் 2008 முதல் 2011 வரையும் முதலாவது கட்டத்தின் பூர்த்திக்காலமாகவும் 2011 – 2014 வரை இரண்டாவது சட்டம் பூர்த்தியான தெனவும் 2023 இல் மூன்றாவது கட்டம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்டது. இதில் மூன்றாவது கட்டம் திட்டமிட்ட படி ஆரம்பிக்க முடியாமை காலதாமதமாகியுள்ளது. இதன்படி 2023 இல் தென்னாசியாவிலேயே மிகப்பெரிய துறை முகமொன்றாக அமையுமென இலங்கை துறைமுக அதிகாரசபை குறிப்பிட்டது. ஒரே நேரத்தில் 33 கப்பல்களை பரிமாற்றம் செய்யக்கூடிய இறங்குதுறையை அமைப்பது என குறிப்பிடுகிறது. இதனால் பாரிய பொருளாதார இலாபத்தினை இலங்கை அடைவுமென கிறிஸ்தோபர் பிரஷ்ஷன் குறிப்பிடுகின்றார். அவர் இரண்டாவது கட்டம் ஆரம்பிக்கும் போதே 2011 இல் நிறைவு செய்யப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள கப்பல் தரிப்பிடம் உலகிலேயே மிகப்பெரியது. பாரிய கப்பல்கள் நிறுத்தக்கூடியதும் 10 கடல்மைலுக்கு கப்பல்கள் நிறுத்தக் கூடிய வசதிகளைக் கொண்டதுமாக அமைந்துள்ளது. ஏறக்குறைய 20 மில்லியன் சரக்கு கப்பல்கள் தரித்து செல்வதை கையாளச் கூடிய வல்லமையுடையதாக அமைந்துள்ளது என்றால் ஒருவருடத்தில் (300 நாட்களில்) ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட சரக்கு கப்பல்களை கையாளும் துறைமுகமாக அமைந்துள்ளது என விபரித்தார்.

றொபேட் ஹப்லன் என்கின்ற அமெரிக்க கடலியல் ஆய்வாளர் குறிப்பிடும் போது ஹம்பாந்தோட்டை முழுமையாக அபிவிருத்தியடையும் போது சரியாக பத்துத்தடவை கூறலாம். சிங்கப்பூர் ரெட்டடாம் (Rotterdam) மற்றும் புஜாரெச் (Fujairajh) என்பவற்றுக்கு நிகராக உலகளாவிய மட்டத்தில் பிரதான மையமாக இத்துறைமுகம் அமையும் என்றார்.

சர்வதேச ஆய்வாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் வர்த்தக மையமாக ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் அமையவுள்ளமை தெளிவாக தெரிகிறது. கிழக்கு இந்து சமுத்திரத்திலிருந்து மேற்கு இந்து சமுத்திரத்திற்கு நகர்வதற்கான மையமாக ஹம்பாந்தோட்டை அமைந்துள்ளது. எனவே பொருளாதார ரீதியில் ஆபத்தானது என்பது சற்று மிகைப்படுத்தியது தான். அவ்வாறன்றி இலங்கையை வேறு எந்த நாட்டுடனும் பொருளாதார உடன்பாட்டை எந்தக்கட்சியும் ஏற்படுத்தாத போது தற்போதைய அரசாங்கம் முயன்றாக அமைந்தால் அது காட்டின் கொடுப்பாகவே அமையும். இலங்கை உலகத்திற்கு மறைப்பதற்காக எதையும் வைத்துக் கொள்ளவில்லை.

அத்துடன் கடந்த ஆட்சியாளர்களின் காலப்பகுதியிலேயே சீனாவுடனான நட்பும் நெருக்கமும் இலங்கைக்கு அதிகரித்து. ஹம்பாந்தோட்டை துறைமுக கட்டுமானத்திற்கான திட்டமிடல் மகிந்தராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போதே ஆரம்பிக்கப்பட்டது. தற்போது ஏன் அவர்களே அதனை நிராகரிக்கிறார்கள் என்பது பிரதான கேள்வியாக உள்ளது. இவை அனைத்துக்கும் தெளிவான பதில் அரசியல் என்பதாகும்.

SriLankaLogistics9_469863

அரசியல் நலன்கள்

இலங்கையின் ஆளும் தரப்பினைப் பொறுத்தவரை சீனா அவர்களின் அரசியல் இருப்புக்கான மிகச்சிறந்த தெரிவாக உள்ளது. சீனாவை முன்னிறுத்தியே பிராந்திய சர்வதேச சக்திகளை ஆளும் தரப்பு கையாள கடந்தகாலம் முதல் பழக்கப்பட்டுள்ளது. காரணம் அதிகமான நெருக்கடியை கொடுக்க முயலும் போதெல்லாம் சீனாவிடம் சரணடையும் இயல்பினை கொண்டிருக்கின்றன. அதனால் சீனா பக்கம் சாய்வதன் அளவைக் கட்டுப்படுத்துவதற்கோ அல்லது குறைப்பதற்கோ சில விட்டுக் கொடுப்புக்களை பிராந்திய சர்வதேச சக்திகள் செய்யப் பழக்கப்பட்டுள்ளன. இதனது மறுபக்கமும் ஏறக்குறைய அதேயளவாகவே உள்ளது. அதாவது ஆளும் தரப்பு தாம் சீனாவுடன் சாய வேண்டிய நிலை ஏற்படும் என்பதனால் எங்கள் மீதான நெருக்கடியை மட்டுப்படுத்துமாறு கூறிக் கொள்ள முனைகின்றன.இது ஒரு சிறந்த இராஜதந்திரமாகும்.

இலங்கையின் இனப்பிரச்சினை சார்ந்த தீர்வுகளை காலம் கடத்தவும் கிடப்பில் போடவும், இத்தகைய இராஜதந்திர பயணம ஆளும் தரப்புக்கு மிகச் சிறந்த பயனைத்தருகிறது. புதிய அரசியலமைப்பை சார்ந்து இந்திய, அமெரிக்க தரப்புக்களின் நிலைப்பாட்டை சீனாவை வைத்துக் கொண்டு கையாள முடியுமென்பதே ஹம்பாந்தோட்டை உடன்படாகும்.

யதார்த்தமான அரசயல் – பொருளாதாரம்

யதார்த்தமான உலக அரசியல் பொருளாதாரத்தை அவதானிப்பேமாயின் அதன் வல்லமையும் வலுவும் சீனாவிடமே உள்ளது. குறிப்பாக உலகப் பொருளாதாரத்தின் இயங்குவிசையின் மையமாக சீனாவே காணப்படுகிறது. இலங்கை தங்கிவாழ் பொருளாதாரத்தில் கட்டி வளர்க்கப்பட்ட நாடு என்ற அடிப்படையில் சீனாவிடம் தங்கியிருப்பது ஒன்றும் புதியதல்ல. ஒரு காலத்தில் பிரித்தானியாவிடம், பின்னர் அமெரி;க்காவிடம் பின்னர் தற்போது சீனாவிடம். சீனாசார்ந்த வெளிநாட்டுக் கொள்கை பொருளாதாரமாக அரசியலாக இலங்கைக்கு அதிக இலாபகரமானது. ஒரு பெரும் தேசமான இந்தியாவை எதிர்கொள்வதற்கான அரசியல் புராதன காலத்திலிருந்து இந்தியாவுக்கு எதிரான வெளியுறவுக்கொள்கையாலே சாத்தியமாகியது.

அடுத்து பொருளாதார வலுவுடைய தேசத்துடன் நெருக்கமான வெளியுறவை வகுத்துக் கொள்ளும் மரபு இலங்கைக்கே உரியது. அந்தவகையில் சீனாவுடனான வெளியுறவுக் கொள்கை இலங்கை அரசியல் பொருளாதார இராணுவ இராஜதந்திர தளத்தில் இலாபகரமானது. இத்தகைய உறவை உருவாக்கியவர் சிறிமாவோ பண்டரநாயக்கா, அதனை முன்னெடுத்தவர் சந்திரிகா குமாரதுங்கா, அதனை மூர்க்கத்தனமாக கடைப்பிடித்தவர் மகிந்த ராஜபாக்ஷா, அதனை சரியாக கையாளுபவர் தற்போதைய ஆட்சியின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா.

இலங்கை சிங்கப்பூருக்கு மாற்றீடாக சாத்தியப்படுகின்றதோ இல்லையோ தெரியாது ஆனால் ஒ ருவர்த்தக நகரமாக மாற்றிக் கொள்ளும் திட்டமிடல் நிகழ்ந்து முடிந்துள்ளது. இந்துசமுத்திரத்தில் வலுவான வர்த்தக நகரம் இலங்கை என்பது இருபத்தியோராம் நூற்றாண்டில் தவிர்க்க முடியாதது. இதனை அமெரிக்கா உட்பட்ட மேற்குலக நாடுகளும் விரும்பியது போன்றே சீனாவும் திட்டமிடுகிறது. தனது ஒரே சுற்று ஒரே பாதைக்கு ஆரோக்கியமாக சிந்தனையாக கருதுகிறது. இதனால் சீனாவின் விட்டுக்கொடுப்பின் எல்லையும் இலங்கையின் நெகிழ்வும் இருதரப்பினையும் திருப்திப்படுத்தும் (win – win) அம்சமாகவே அமைந்துள்ளது.

சீனாவாலேயே இலங்கையின் உள்நாட்டு பொருளாதார உள்கட்டுமானம் சாத்தியமாகின்றது. அதனை எந்த நிபந்தனையும் இன்றி சீனா இலங்கைக்கு வழங்கிவருகிறது. இனப்பிரச்சினை தீர்வையோ, புதியஅரசியாலமைப்பை பற்றியோ, மனித உரிமையை பற்றியோ எந்தவிதமான உரையாலையும் சீனா இலங்கை அரசாங்கத்துடன் மேற்கொள்ளவில்லை. ஆனால் ஏனைய சக்திகள் அவ்வாறில்லை. உள்நாட்டு அரசியலில் தலையீட்டை செய்வதற்கு சமரசம் பேசும் ஒரம்சமாக பொருளாதார உதவிகளையும், நன்கொடையையும் பிராந்திய, மேற்கு சக்திகள் கையாளும் போது உறவு விரிசாடகின்றது. இதனால் பொருளாதார பலத்தை பொறுகின்ற போது பேரம்பேசலுக்கு உட்படாது சீனா செயல்படுவதனலாம் இலங்கை சீனாவை நோக்கி நகர்கிறது.

lanka_660_033113105450

பொது எதிரணி அரசியல்

பொது எதிரணியைப் பொறுத்தவரை சீனாவுடனான உறவினால் தற்போதைய ஆட்சியை வீழ்த்தி அதிகாரத்தை கைப்பற்ற முடியுமா என்பதை தந்திரமாக கொண்டு செயல்படுகிறது. இவ்வணியின் தலைமை தாங்குகின்ற முன்னாள் ஜனாதிபதியே இலங்கை – சீனா உறவை அதீதமாக்கியவர். அவரது காலத்திலேயே ஹம்பாந்தோட்டை துறைமுகம் கட்டியெழுப்பப்படும் உடற்பாடு எட்டப்பட்டது. அதுமட்டுமன்றி ஜே.வி.பி.யே இலங்கை சீன உறவை பலப்படுத்திய சக்தியாக செயல்பட்டவர்கள். இப்போது நிராகரிப்பது என்பது தமது கட்சி அரசியல் மட்டுமேயாகும். இலங்கை இலங்கையருக்கு மட்டும் உரியதல்ல இலங்கை இன்று இலங்கையருக்கும் உலகத்திற்கும் உரியது. இது புராதன காலத்திலிருந்து நிகழ்ந்து வருகின்றது. இதனை பொது எதிரணி புரிவது மட்டுமே அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான உத்தியாகும். வேறு எதனால் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது.

கொழும்பு துறைமுக நகரம் போன்று ஹம்பாந்தோட்டையும் சர்வதேச பங்கெடுப்புடன் வெற்றிகரமாக முன்னெடுக்கும் திறன் தற்போதை அரசாங்கத்திடம் உண்டு.

எனவே தற்போதைய அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள உடன்படிக்கையின் மூலம் சீனாவை எப்படியான சீட்டாக பயன்படுத்துவதென மீண்டுமொரு தடவை காட்டியுள்ளது. அமெரிக்கா, இந்திய தரப்பினை வியக்கவைத்துள்ள இந்நடவடிக்கை நிச்சயமாக அந்நாடுகளது நெருக்கத்தினை சாத்தியப்படுத்துமென எதிர்பார்க்க முடியும். இனப்பிரச்சினை, புதிய அரசியலமைப்புக்கள் எந்த சக்தியும் பேராடுவதில்லை என்தை அது தெளிவாக இனங்காண உதவும். இது புதிய அரசியல் யாப்புக்கான முயற்சியின் தடைகளை இலகுபடுத்தும்.

இரு நாட்டுக்குமான உடன்படிக்கையில் 99 வருட குத்தகைஎன்பது தென்னாசியாவில் சீனாவுக்கான இரண்டாவது வெற்றியாக அமைந்துள்ளது. ஏற்கனவே குவாதர் துறைமுகம் 49 வருடத்திற்கு பாகிஸ்தானிடமிருந்து குத்தகைக்கு சீனா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தென்னாசியாவில் சீனாவின் ஒரே பாதை ஒரே சுற்று என்பது அதிக திருப்பத்தை தரக்கூடியதாக மாறிவருகிறது.அது மட்டுமன்றி இலங்கையுடனான உடன்படிக்கையில் தேசிய பாதுகாப்பு இலங்கைப்படைகளிடமும் இதனை இராணுவ ரீதியில் பாவனைக்குட்படுத்த முடியாததென்பதும் உடன்பாட்டில் வெறும் பதிவாகவே அமையவுள்ளது. வேண்டுமாயின் உலகத்திற்கு தெரியப்படுத்திக் கொள்ளலாம். நடைமுறைக்கு சாத்தியமற்ற செயற்பாடாகவே அமையவுள்ளது என்பது தமிழர்களுக்குரிய அனுபவமாகும்.

எனவே இவ்வுடன்படிக்கை யூலை 29இல் செய்யப்பட்டதால் மீண்டும் ஒரு வரலாற்று திருப்பமாக அமையவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.இந்தியாவும் அமெரிக்காவும் சரியாக கையாளப்படக் கூடிய அம்சமாக உடன்படிக்கை அமையவுள்ளது.


One thought on “சீன-இலங்கை துறைமுக உடன்படிக்கை மீண்டும் ஒரு வரலாற்று பதிவாகுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *