தலைப்பு செய்திகள்

சுமந்திரனின் பதில் என்ன?

சுமந்திரனின் பதில் என்ன?

யதீந்திரா

சுமந்திரன் எப்போதும் தன்னை பற்றிய விடயங்கள் சூடாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளும் ஒருவர். இதற்காகவே அவ்வப்போது அவர் வேண்டுமென்றே சர்ச்சைகளை ஏற்படுத்துவதுண்டு. இது ஒரு தேர்தலரசியல் தந்திரம். அன்மையில் கூட ஊடகவியலாளர்களுக்கு வகுப்பெடுப்பது போன்று ஏதோ சில விடயங்களை பேசியிருந்தார். உள்ளுராட்சித் தேர்தலுக்கு முன்னர் கனடிய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில், அரசியல் தீர்வு முயற்சிகள் தோல்வியில் முடிந்தால் அதற்கு பொறுப்பேற்றுக் கொண்டு அரசியலிலிருந்து விலகும் எண்ணம் இருப்பதாகவும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருந்தார். ஆனால் சுமந்திரன் வடக்கு மாகாண சபைத் தேர்தல் விவகாரத்தில் காண்பித்து வரும் ஆர்வத்தை பார்த்தால், அவருக்கு அரசியலிலிருந்து ஓதுங்கும் எண்ணம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. சுமந்திரனின் அரசியல் தீர்வு முயற்சிகளை உற்றுநோக்கினால், உண்மையில் அது தோல்வியடைந்து வெகு நாட்களாகின்றன. அந்த வகையில் பார்த்தால் சுமந்திரன் தனது தோல்வியை ஒப்புக் கொண்டு, அமைதியாகியிருக்க வேண்டும்.

சுமந்திரன் அரசியலுக்குப் புதியவராக இருந்தாலும் சம்பந்தன் அவருக்கு வழங்கிய இடம் மிகவும் உயர்வானது. அந்த இடத்தை தக்கவைத்துக் கொள்வதில் சுமந்திரனுக்கு அதிக முயற்சிகளும் தேவைப்பட்டிருக்கவில்லை. ஏனெனில் இலங்கை தமிழரசு கட்சிக்குள் சுமந்திரனை எதிர்கொள்ளக் கூடிய ஆற்றலுடன் பிறிதொருவர் இல்லை. தமிழரசு கட்சியின் தலைவராக மாவை சேனாதி சொல்லப்பட்டாலும் உண்மையில் கட்சியின் நிஜத் தலைவராக சுமந்திரனே இருக்கிறார். யாழ் மாநகர சபை விவகாரத்தில் அது மிகவும் வெளிப்படையாகவே தெரிந்தது. ஆனால் இதுவரை இடம்பெற்ற விடயங்கள் அனைத்தையும் தொகுத்து நோக்கினால் அனைத்துமே உள் குத்துவெட்டுக்கள் தொடர்பானவைதான். கஜேந்திரகுமாருக்கு பதில் சொல்லுதல். சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு பதிலளித்தல், விக்கினேஸ்வரனை விமர்சித்தல் என்றுதான் சுமந்திரனின் நாட்கள் நகர்ந்திருக்கின்றன. சுமந்திரன் தனது சட்ட ஆற்றலை நிரூபித்துக் காட்டியதாக ஒரு விடயத்தைக் கூட அறிய முடியவில்லை. ஒரு சட்ட வல்லுனராக சுமந்திரன் ஏதாவது குறிப்பாக சாதித்திருக்கின்றாரா?

இந்த இடத்தில்தான் ஒரு விடயத்தில் இந்தப் பத்தி கவனம் கொள்ளுகின்றது. கடந்த மாதம் கொழும்பு தமிழ் சங்கத்தில் “ஓர் இனப்பிரச்சினையும் ஓர் ஒப்பந்தமும்” என்னும் நூல் வெளியிடப்பட்டது. அந்த நூல் இந்திய – இலங்கை ஒப்பந்தம் தொடர்பானது. மேற்படி நிகழ்வில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னைநாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாளும் உரையாற்றியிருந்தார். பெருமாள் பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசியிருந்தார். உதாரணமாக இந்திய – சீன முரண்பாடுகள் தொடர்பாக. அப்படியான விடயங்களை இந்தப் பத்தி பெரிதாக எடுக்கவில்லை. அதே போன்று இந்திய – இலங்கை ஒப்பந்தம் தற்போது உயிரோடு இல்லை என்றும் கூறியிருந்தார். இது வரதருடைய புரிதல். ஆனால் அது சரியான கருத்துத்தானா? இந்திய – இலங்கை ஒப்பந்தம் முற்றிலுமாக உயிரிழந்துவிட்டதா அல்லது தேவைப்படும் போது உயிர்த்தெழக் கூடியவாறான ஒரு ஊசலாட்டத்தை எப்போதும் வைத்திருக்கிறதா?

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு என்று வரும்போது அந்த ஒப்பந்தம் இப்போதும் உயிர்த்தெழும் ஆற்றல் கொண்ட ஒன்றாகவே இருக்கிறது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஒரு ஆயுதப் போட்டி நடைபெறுகின்றது என்பதுதான் பல சர்வதேச அவதானிகளின் கருத்து. இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டுக் கொண்டு தங்களின் இராணுவத்தை நவீனப்படுத்தி வருகின்றன. இது எதுவரை ஒரு சுமூக நிலையில் நகரும்? இந்து சமூத்திர பிராந்தியத்தில் இராணுவ மோதல்களுக்கு வாய்ப்புள்ளதா? இவை பற்றி எவரும் முடிந்த முடிவுகளை அறிவிக்க முடியாது. ஏனெனில் சர்வதேச அரசியல் என்பது ஆருடம் கூறுதல் அல்ல. பத்து வருடங்களுக்கு முன்னர் சீனா தொடர்பில் இலங்கைக்குள் எந்தவொரு விவாதமும் இருந்ததில்லை. இந்தியா என்பது மட்டுமே ஒரு விடயமாக இருந்தது. ஆனால் இன்று இந்தியாவிற்கு சமாந்தரமாக சீனா தொடர்பிலும் பார்க்கப்படுகிறது. சீனா என்பது, தற்போது இலங்கை அரசியலில் ஒரு முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னர் எவராவது இந்த விடயங்கள் தொடர்பில் கணித்ததுண்டா? அல்லது கணிக்க முடிந்ததா? இல்லையே! ஆனால் இன்று சீனாவை அரசியல் விவாதங்களில் தவிர்க்க முடியாத நிலைமை உருவாகியிருக்கிறதல்லவா! எனவே அசைந்து கொண்டிருக்கும் உலக அரசியலில் எதுவும் நடக்கலாம் என்னும் புரிதலிருந்துதான் ஒரு இனம் தனது அரசியல் நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும். ஆனால் தமிழ்ச் சூழலில் அப்படி நடப்பதில்லை என்பதுதான் கவலைதரும் உண்மை.

sumanthiran

குறித்த நூல் வெளியீட்டின் போது வரதாராஜப் பெருமாள் முன்வைத்த ஒரு வாதம் கருத்தில் கொள்ளத் தக்கது. அவர் சுமந்திரனையும் நோக்கித்தான் அந்த வாதத்தை முன்வைத்திருந்தார். அதாவது, 13வது திருத்தச் சட்டத்தின் தோல்வி பற்றி பேசுகின்ற அளவிற்கு அது தொடர்பில் எந்தளவு தூரம் தமிழ்ச் சூழலில் சரியாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது? வரதரின் கருத்துப்படி 13வது திருத்தத்தில் பிழையில்லை. 1987 இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது இருந்த 13வது திருத்தச் சட்டம் அல்ல இப்போது இருப்பது. அப்போது ஆளுனர் அதிகாரமற்ற ஒருவர். இந்தியாவில் எவ்வாறு மானிலங்கள் இயங்குகின்றனவோ அவ்வாறுதான் இங்கும் இருந்திருக்க வேண்டும் ஆனால் அப்படி நடக்கவில்லை. இதுதான் 13வதின் தோல்வியாக பார்க்கப்படுகிறது. ஆனால் இது தொடர்பில் இந்திய அனுபவத்தோடு ஒப்பிட்டு நோக்கினால், இ;ந்தப் பிரச்சினை என்பது சட்டத்திற்கு விளக்கமளிப்பதுடன் தொடர்பானது. ஆனால் இந்த விடயத்தில் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கைக் கூட இங்குள்ள சட்ட நிபுனர்களால் போட முடியவில்லையே! ஒரு சட்டத்திற்கு நாங்களாகவே விளக்கமளிக்கக் கூடாது. உச்ச நீதிமன்றம் பிழையாகத்தான் தீர்ப்பு வழங்கும் என்பதை முன் கூட்டியே நாங்கள் தீர்மானிக்கக் கூடாது. உச்ச நீதிமன்றத்தில் நம்பிக்கை இல்லாவிட்டால் பின்னர் ஏன் அங்கு செல்கின்றீhகள். சுமந்திரன் போன்றவர்கள் கறுப்புக் கோட் போடுவதே பிழையே! உண்மையில் 13வது திருத்தச சட்டம் தொடர்பான விடயங்களில் நாங்கள் எங்களுடைய பக்க விவாதங்களை முன்வைக்கவேயில்லை.

வரதராஜப் பெருமாள் முன்வைத்த மேற்படி வாதத்திற்கு இதுவரை சட்ட நிபுனர் சுமந்திரன் எங்குமே பதில் சொல்லவில்லை. இத்தனைக்கும் சுமந்திரனின் முன்னிலையில்தான் வரதர் இந்த விமர்சனத்தை முன்வைத்திருந்தார். எல்லாவற்றுக்கும் பதில் சொல்லி சர்ச்சைகளை ஏற்படுத்தும் சுமந்திரன் இதுவரை தனது சட்ட ரீதியான பங்களிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை. உண்மையில் இந்த சவாலை சுமந்திரன் போன்றவர்கள் ஏற்க வேண்டும். சுமந்திரன் மட்டுமல்ல தங்களை பெரிய சட்ட வல்லுனர்கள் என்று கருதிக் கொள்ளும் தமிழ் சட்டத்தரணிகளும் இந்த சவாலை ஏற்க முன்வர வேண்டும். இலங்கையின் நீதித்துறைக்குள் நீதியை எதிர்பார்க்க முடியாது என்று, எந்தவொரு சட்டத்தரணியாவது நம்பினால், அவ்வாறானவர்கள் முதலில் தங்களின் வாதத்தை நடைமுறையில் நிறுவுவதற்காகக் கூட இந்த சவாலை ஏற்கலாம்.

உண்மையில் 13வது திருத்தச் சட்டம் என்பது இந்த நாட்டின் அரசியல் யாப்பு. ஒரு அரசியல் யாப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள விடயங்களை முழுமையாக அமுல்படுத்த முடியாதளவிற்கு இந்த நாட்டின் கட்டமைப்புக்கள் இருக்கின்றன என்பது ஒரு சாதாரண விடயமல்ல. ஆனால் இந்த விடயம் வரதர் கூறுவது போன்று உச்ச நீதிமன்றத்தில் எதிர்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய விடயம் ஆனால் அதற்கு எந்தவொரு தமிழ் சட்ட நிபுனரும் முயற்சிக்கவில்லை என்பது வெட்கக் கேடான விடயம். ஒரு வேளை உச்ச நீதிமன்றமும் இந்த விடயத்தில் கைவிரித்தால் அதனை ஒரு வலுவான ஆதாரமாக சர்வதேச அரங்குகளில் முன்வைக்க முடியும்.

எல்லாவற்றுக்கும் பதில் கூறுவதில் வல்லவரான சுமந்திரனால், வரதரின் வாதத்தை ஒரு சவாலாக எடுக்க முடியுமா? சுமந்திரனின் அரசியல் பிரவேசமே அவர் ஒரு சட்ட நிபுனர் என்பதால்தான் நிகழ்ந்தது. ஆனந்த சங்கரிக்கும் சம்பந்தனுக்கும் இடையில் நிலவிய வழக்குத்தான் சுமந்திரனை தமிழரசு கட்சிக்குள் கொண்டு வந்தது. ஆனாலும் அந்த வழக்கில் கூட வென்றது என்னவோ ஆனந்த சங்கரிதான்.

வடக்கு மாகாண சபைக்கு எவரை முதலமைச்சராக்கலாம் என்பதை விடுத்து முதலில் தன்னால் என்ன முடியும் என்பதை சுமந்திரன் நிரூபித்துக் காட்ட வேண்டும். சுமந்திரன் அரசியல் யாப்பு விவகாரங்களில் வல்லுனர் என்றும் சொல்லப்படுகிறது. ஆனாலும் சுமந்திரன் சொல்லி வந்தது போன்று புதிய அரசியல் யாப்போ, அந்த யாப்பு தொடர்பிலான ஒரு பொதுசன வாக்கெடுப்போ நடக்கப் போவதி;ல்லை. இது சுமந்திரனுக்கும் நன்கு தெரியும். எனவே கற்பனை யாப்பை விடுத்து, இருக்கின்ற அரசியல் யாப்பை முன்னிறுத்தி ஆக்கபூர்வமாக தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை முதலில் சுமந்திரன் நிரூபிக்க வேண்டியிருக்கிறது. கொழும்புடன் பேசிப் பயனில்லை என்னும் நிலைப்பாட்டில் இருக்கும் தமிழ் அரசியல் வாதிகள் வேண்டுமானால் வரதராஜப் பெருமாளின் வாதத்தை இலகுவாக தட்டி விட்டுச் செல்லலாம் ஆனால் சுமந்திரன் அவ்வாறும் செல்ல முடியாது. ஏனெனில் சுமந்திரன் கொழும்மை நம்பிச் செயற்படுபவர். இலங்கையின் நீதித் துறையின் மீது நம்பிக்கை கொண்டவர். அவ்வாறான ஒருவர், வரதரர் முன்வைக்கும் வாதத்தை எதிர்கொள்ளுவதுதானே சரியானது. அதுதானே சுமந்திரனின் சட்ட ஆற்றலுக்கும் தகுதி சேர்க்கும். சுமந்திரன் பதில் அளிப்பாரா?


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *