Search
Thursday 24 May 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜெனீவா விவகாரமும் கூட்டமைப்பின் முரண்நிலையும்

ஜெனீவா விவகாரமும் கூட்டமைப்பின் முரண்நிலையும்

நரேன்

ஜெனீவா விவகாரம் சூடு பிடித்துள்ளது. இலங்கை தொடர்பான ஐ.நா மனிதவுரிமை ஆணையாளரின் அறிக்கை எவ்வாறு அமையப் போகிறது என்ற பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இலங்கை அரசாங்கம் ஐ.நா சபையையும், சர்வதேச நாடுகளையும் எப்படி கையாள்வது என்பது குறித்து நன்கு திட்டமிட்டு செயற்பட்டு வருகிறது. இந்த அரசாங்கத்தின் வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கின்ற கூட்டமைப்பின் தலைவருக்கும் இந்த நகர்வுகள் தெரிந்திருக்க வேண்டும். கூட்டமைப்பின் தலைவரானவர் எதிர்கட்சித் தலைவராகவும் இருப்பதனால் அரசாங்கத்தின் நகர்வுகளை மிகவும் அவதானிப்புடன் தெரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு கிட்டியிருக்கிறது. அரசாங்கத்தின் கொள்கைகளையும், நகர்வுகளையும் துல்லியமாக கணித்து தனக்கு வாக்களித்த ஒடுக்கப்பட்ட தமிழ் தேசிய இனத்தின் குரலை ஓங்கி ஒலிப்பதற்கு முயற்சித்து இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா மனிதவுரிமைக் கூட்டத்தில் ஐ.நா மனிவுரிமை ஆணையாளரால் வரையப்பட்ட தீர்மானமானது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வலிகளை உணர்த்தியது. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய சர்வதேச சமூகம் இலங்கைக்கு சலுகை வழங்குவதற்கு தீர்மானித்து அதில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. இதற்கு தமிழரசுக் கட்சியின் வெளியுறவுச் செயலாளரும் பங்களிப்பு வழங்கியிருந்ததை அவரே ஏற்றுக் கொண்டிருந்தார். அந்த தீர்மானத்தையே சர்வதேச சமூகம் மன்றில் சமர்ப்பித்து இலங்கையின் இணை அணுசரனையுடன் நிறைவேற்றியது. அதனை நடைமுறைப்படுத்துவதற்கு 18 மாத கால அவகாசத்தையும் வழங்கியிருந்தது. அந்த தீர்மானம் நிறைவேறியவுடன் இலங்கை அரசாங்கம் இதனையாவது நடைமுறைப்படுத்துகிறதா என்று பார்போம் என்று அப்போதே ஆருடம் கூறியிருந்ததும் நினைவு கூரத்தக்கது.

தங்களால் மாற்றியமைக்கப்பட்ட ஒரு தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கடந்த 18 மாத காலத்தில் கூட்டமைப்பின் தலைவரும் அவரது நெருங்கிய உதவியாளருமான சுமந்திரனும் எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டனர் என்ற கேள்வி இங்கு இயல்பாகவே எழுகிறது. தமிழ் மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டி அவர்களது ஆதரவுடன் ரணில் – மைத்திரி கூட்டு அரசாங்கத்தை உருவாக்குவதற்கு பெருமளவில் துணை நின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அரசாங்கத்தை காப்பாற்றுவதற்கு இணங்கிச் செயற்பாட்டாரேயன்றி, தமிழ் மக்களின் அபிலாசைகளையும், எதிர்பர்ப்புக்களையும் நிறைவேற்றுவதற்கு பாடுபட்டதாக தெரியவில்லை. கூட்டமைப்பின் தலைவர் தமக்கு அளித்த உறுதி மொழிகளை நிறைவேற்றவில்லை என்ற ஆதங்கத்துடனும், ஏமாற்றத்துடனும் விரக்கியுற்ற நிலையில் தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்து தாமே வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கியுள்ளனர்.

இதன் பின்னரும் கூட தனது மக்கள் செல்வாக்கையும், ஸ்திரமான பிரதிநித்த்துவத்தையும் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு உரிய அழுத்தம் கொடுக்காமல் பாராளுமன்றத்தில் இரண்டு ஒத்தி வைப்பு பிரேரணைகள் மூலம் பிரச்சனையை அணுகியிருக்கிறார். இது அவரது இயலாமையின் உச்சக் கட்டத்தை நிருபித்திருக்கிறது. மக்களுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு கூட்டமைப்பு தலைவரின் இந்தச் செயலானது தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனை பலர் கடந்த வாரம் நடைபெற்ற பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் வெளிப்படுத்தியிருந்தமையையும் அறிய முடிகிறது.

இத்தகைய பின்னனியிலேயே கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி மக்களின் பிரதிநிதிகளாக மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும் என்ற நோக்கில் கடந்த 2015 இல் ஐ.நாவால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்று கையெழுத்திட்டு ஐ.நா மன்றுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த விடயத்தில் எத்தகைய கொள்கை முடிவுவையும் மேற்கொள்ளாத கூட்டமைப்பின் தலைவர் தமது மக்கள் பிரதிநிதிகளை வழிநடத்துவதில் இருந்தும் தவறியிருக்கிறார். இதனால் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டு இருப்பதையும் உணர்ந்து கொள்ள முடிகிறது.

கூட்டமைப்பின் பேச்சாளர், ‘தமக்கோ, சம்மந்தருக்கோ, மாவைக்கோ தெரிவிக்காமல் எப்படி கடிதம் அனுப்பினீர்கள்’ என்றும் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர்களை முட்டாள்கள் என்றும் ஏசியுள்ளார். இது இப்பொழுது பாரிய பிரச்சனையாக கட்சிக்குள் உருவெடுத்துள்ளது. மக்களின் போராட்டத்தில் நேரடியாக பங்களிப்பு செலுத்த முடியாதவர்கள் அல்லது அந்த போராட்டத்தை வழிநடத்த தெரியாதவர்கள் மக்களின் கோபத்தில் இருந்து தப்புவதற்கான ஒரு யுக்தியாகவும், அதேநேரத்தில் கடந்த இரண்டு வருட காலத்தில் தாம் வைத்த கோரிக்கை எதனையும் அரசாங்கம் செவிமடுக்கவில்லை என்ற ஆதங்கத்துடனும், இவை அனைத்துக்கும் மேலாக தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக் கொடுப்பதில் இருந்து தாம் விலகிவிடுவோமோ என்ற அச்சத்துடனேயே அவர்கள் காலநீடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் அனுப்பியிருந்தனர்.

ஏன் கடிதம் அனுப்பீர்கள் என்று கேள்வி எழுப்பியவர், ஐ.நா கூட்டத்தொடர் தொடர்பாக கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து விளக்கமளிக்கவும், விவாதிக்கவும் தவறியிருக்கிறார். அவர் தமிழரசுக் கட்சி சார்ந்து செயற்பட்டிருந்தால் அது தமிழரசுக் கட்சியின் பிரச்சனையாக மட்டும் இருந்திருக்கும். கூட்டமைப்பின் முடிவாக அறிவித்திருந்தது அங்கத்துவ கட்சிகளின் மத்தியில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு ஒரு சில தினங்களுக்கு முன்பாக புளொட் அமைப்பும், ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தன்று ரெலோ அமைப்பும் கூட்டமைப்பின் தலைவருக்கு தமது நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ஐ.நா மனிவுரிமைகள் பேரவைக்கு அவர்கள் கடிதம் அனுப்ப வேண்டிய நிர்பந்தத்தை மக்களின் போராட்டம் ஏற்படுத்தியுள்ளது.

கடித விவகாரம் என்பது வெறும் கடிதத்தோடு மட்டும் நில்லாமல் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனின் எதிர்கட்சித் தலைவர் பதவிக்கும் ஆபத்தாக மாறிவிடுமோ என்ற பயம் இன்று தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. இந்தக் கவலை கூட்டமைப்பு தலைவரின் அணுகுமுறையில் எதிரொலித்ததாக சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். அரசாங்கம் எதிர்கட்சித் தலைவருக்கு நான்கு கோடி ரூபாய் பெறுமதியான ஒரு வாகனம் வழங்குவதற்கு பாராளுமன்றத்தின் அனுமதியைக் கோரியிருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

நடைபெற்றிருக்கின்ற சம்பவங்களைப் பார்க்கின்ற போது அரசாங்கம் திட்டமிட்டு செயற்படக் கூடிய நிலையில் அரசாங்கத்தின் முடிவுகளுக்கும் காய் நகர்த்தலுக்கும் ஏற்ப பாதிக்கப்பட்ட மக்களின் தலைமை இழுபட்டுச் செல்வதை காண முடிகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சியானது தாம் அடைய இருக்கும் மூலோபாயங்களை எட்டுவதற்கான தந்திரோபாயங்களை தீர்க்கமாக வடிவமைத்து தனது தனத நடவடிக்கைகளில் அரசாங்கத்தை விழச் செய்வதற்கு முயற்சித்து இருக்க வேண்டும். அது தான் ஒரு மக்களின் வெற்றிக்கும், அந்த மக்களை வழிநடத்திய கட்சிக்கும் பெருமை சேர்ப்பதாகவும் வெற்றியளிக் கூடியமதாகவும் இருக்கும். கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் அது தமிழரசுக் கட்சியா அல்லது கூட்டமைப்பா அல்லது வேறு ஏதும் ஒரு அமைப்பா அல்லது தனிநபர்களின் சங்கமா என்பது தெரியாமல் உள்ளது. இதன் காரணமாகவே மாற்று தலைமையின் அவசியத்தையும் நன்கு திட்டமிடப்பட்ட கொள்கை வகுப்புடன் கூடிய கட்சியும் உருவாக வேண்டியதன் அவசியத்தை இந்த பத்தி தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது. அந்த தலைமை உருவாகும் போது மட்டுமே தமிழ் மக்களின் விடிவு சாத்தியம்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *