செய்திகள்

டெலோ என்ன செய்யப் போகிறது?

யதீந்திரா
கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்ல்தலுக்கான வேட்பாளர் தெரிவின் போது டெலோ கடுமையான அறிக்கைகளை வெளியிட்டிருந்தது. டெலோவின் அறிக்கைகளை உற்றுநோக்கியவர்கள் இதோ டெலோ கூட்டமைப்பிலிருந்து வெளியேறப்போகிறது என்று பேசிக் கொண்டனர். அந்தளவிற்கு காட்டமான அறிக்கைகள், காட்டமான பேச்சுக்கள், கடுமையான நிபந்தனைகள் ஆனால் இறுதியில் எல்லாமே புஸ்வானமாகியது. தமிழரசு கட்சி வழமைபோல் தாங்கள் நினைத்தவாறு விடயங்களை செய்து முடித்தது. முடிந்தவரை பேசிப்பார்த்த, ஏசிப்பார்த்த டெலோ இறுதியில் தமிழரசு கட்சியின் எதேச்சாதிகாரத்திற்குள் அடங்கி, ஒடுங்கிப் போனது.

டெலோ ஒரு காலத்தின் முன்னணி விடுதலை இயக்கங்களில் ஒன்று. அதில் உள்ளவர்களுக்கு ஒரு வரலாறுண்டு. குறிப்பாக அதன் செயலாளர் சிறிகாந்தா தனது அரசியல் வாழ்வை வி.என்.நவரட்ணத்தால் உருவாக்கப்பட்ட சுயாட்சிக் கழகத்திலிருந்து ஆரம்பித்தவர். தந்தை செல்வநாயகம் என்று அழைக்கப்படும் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் 1965இல் ஜக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளும் முடிவை எடுத்தபோது, அதனை எதிர்த்து வெளியேறியவர்தான் இந்த நவரட்ணம். இவருடன்தான் சிறிகாந்தா தனது அரசியல் வாழ்வை ஆரம்பித்திருந்தார். இந்த சுயாட்சிக் கழகம் 1968இல் உருவாக்கப்பட்டது. அப்படிப்பார்த்தால் தற்போது கூட்டமைப்பின் தலைவராக அறியப்படும் இரா.சம்பந்தனுக்கு முன்பாகவே அரசியலுக்குள் பிரவேசித்தவர் சிறிகாந்தா. இப்படியான வரலாற்றைக் கொண்ட சிறிகாந்தா இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்? இதே போன்று, தற்போது டெலோவின் தலைவராக இருக்கின்ற செல்வம் அடைக்கலநாதனுக்கும் ஒரு வரலாறு உண்டு. செல்வம் சிறு வயதிலேயே ஆயுதப் போராட்டத்தில் இணைந்து கொண்ட ஒருவர். போராட்ட வாழ்வில் பல அனுபவங்களை கண்டவர். ஆனால் இன்று தமிழரசு கட்சிக்கு முன்னால் ஏன் இந்த வளைந்து போகும் நிலைமை?

selvam and srikantha

ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்கள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைப்போர் உண்டு. ஆனால் அதனை இப்போது உயர்த்திப்பிடிப்பதில் ஒரு பயனுமில்லை. ஒரு கற்றலுக்காக சில விடயங்களை பார்ப்பது முக்கியம்தான். ஆனால் அந்த கற்றல் கூட, கடந்த காலத்தை ஒரு உசாத்துணையாகக் கொண்டு முன்நோக்கி நகர்வதற்குத்தானேயன்றி, ஒருவரை ஒருவர் சுரண்டி சுகம் காண்பதற்கல்ல. ஆனால் ஆயுத விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்ட ஒவ்வொரு இயக்கத்திற்கும் ஏதேவொரு வகையில் ஒரு பங்களிப்பு உண்டுதான். இன்று வடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று விவாதிக்க முடிகிறதென்றால் அதுவும் அன்றைய அயுதப் போராட்டத்தின் விளைவுதான். மாகாண சபையென்று ஒன்று இல்லாதிருந்திருந்தால்! அப்படிப் பார்த்தால் தமிழரசு கட்சி, பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய மிதவாத கட்சிகள் எவையுமே, அரசியலில் காண்பிக்கக் கூடியளவிற்கு இதுவரை எதனையும் சாதித்தித்திருக்கவில்லை. நிலைமை இப்படியிருக்க, இயக்கங்களை பார்த்து நீங்கள் இரத்தக்கறை படிந்தவர்கள் ஆனால் நாங்களோ தூய வேட்டிக்காரர்கள் என்று சொல்வதில் எந்தவிதமான அரசியல் தர்க்கமுமில்லை. ஆயுதப் போராட்டத்தின் போது விடுகளுக்குள் ஒழிந்துகிடந்தால் பின்னர் எப்படி வேட்டியில் கறைபடியும்? வெளியில் வந்து மக்களோடு மக்களாக நின்றிருந்தாலல்லவா வேட்டியில் ஏதும் பட்டிருக்கும். பிரச்சினை என்றவுடன் கொழும்பிற்கும் இந்தியாவிற்கும் ஓடிப் போனவர்கள், களத்தில் போராடியவர்களைப் பார்த்து நீங்கள் எங்களுக்குக் கீழானவர்கள் என்று கூறுவதில் என்ன நியாயமுண்டு?

ஆனால் ஒருவருக்கான நியாயங்கள் எல்லா நேரங்களிலும் மற்றவர்களிடமிருந்து கிடைக்கும் என்றில்லை. நியாயங்கள் அப்படி இலகுவாக கிடைத்துவிடுமென்றால் ஒடுக்கப்பட்டவர்கள் எதிர்ப்பு அரசியலை கையில் எடுக்க வேண்டிய தேவையும் ஏற்படாது. இப்போதுள்ள பிரச்சினை என்னவென்றால் தமிழ் அரசியல் பரப்பில் தமிழரசு கட்சிக்கு எதிரான ஒரு உள்ளக எதிர்ப்பு அரசியல் தேவைப்படுகிறது. அதனை முன்னெடுப்பதில் அனைத்து தரப்பினரும் ஓரணியில் நிற்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. அரசியல் கூட்டுக்கள் அல்லது ஜக்கிய முன்னணிகள் அவ்வப்போது ஏற்படும் தேவைகளிலிருந்துதான் உருவாக்கின்றன. அவ்வாறானதொரு தேவை இப்போது எழுந்திருக்கிறது. ஆனால் அந்த தேவையை டெலோ புரிந்து கொண்டிருக்கிறதா?

விடுதலைப் புலிகள் தவிர்ந்த பிரதான இயங்கங்களான டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் புளொட் ஆகியவை 1990களுக்கு பின்னர் முற்றிலுமாக தங்களை ஜனநாயக நீரோட்டத்திற்குள் இணைத்துக் கொண்டன. ஆனால்; ஒரு ஜனநாயக அரசியல் கட்சிக்கான கட்டமைப்புக்கள் இவர்களிடம் எப்போதுமே வலுவாக இருந்ததில்லை. இப்போதும் அவ்வாறானதொரு நிலைமைதான் நீடிக்கின்றது. ஒப்பீட்டடிப்படையில் தமிழரசு கட்சியிடம் ஒரு குறிப்பிட்டளவான கட்சிக் கட்டமைப்புண்டு ஆனால் அதனை ஒரு ஜனநாயக கட்டமைப்பு என்று முற்றிலுமாகக் கூறிவிட முடியாது. இன்றிருக்கும் எந்தவொரு தமிழ் அரசியல் கட்சியிடமும் தீர்மானங்களை எடுப்பதில் கீழிருந்து மேல்நோக்கிச் செல்லும் நடைமுறையில்லை. அனைத்து தீர்மானங்களும் மேலிருந்து கீழ் நோக்கியே திணிக்கப்படுகின்றன. பெருமளவிற்கு தமிழ் தேசிய கட்சிகளாக இயங்கிவரும் அனைத்து கட்சிகளுமே நபராதிக்க கட்சிகள்தான். டெலோவும் இவ்வாறான பலவீனங்களுக்கு ஊடாக பயணிக்கும் ஒரு கட்சிதான். ஆனால் ஆயுதப் போராட்டத்திலிருந்து ஜனநாயகத்திற்கு திரும்பிய கட்சிகளில் ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் மற்றும் ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகளுடன் ஒப்பிட்டால் வடக்கு கிழக்கு முழுவதும் தங்களுக்கான கிளைகளுடன் இயங்கிவரும் ஒரேயொரு கட்சியென்றால் அது டெலோ மட்டும்தான்.

selvam-adaikalanathan-at-kalmunai-local-election

டெலோ வடக்கு கிழக்கு மகாணங்களிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் சிறியளவிலாவது கட்சிக் கட்டமைப்பொன்றை பேணிவருகிறது. மத்திய குழுவின் தீர்மானங்களுக்கு ஏற்பவே முடிவுகள் எடுக்கப்படுகிறது. ஆனால் அண்மைக்காலத்தில் டெலோவின் முடிவுகள் முன்னுக்கு பின் முரணாக இருக்கின்றன. அறிக்கைகள் முன்னுக்கு பின் முரணாக இருக்கின்றன. சில வாரங்களுக்கு முன்னர் செல்வம் அடைக்கலநாதன் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் சந்தித்திருந்தார். இதன் போது தங்களது ஆதரவு எப்போதும் உங்களுக்கே என்றும் குறிப்பிட்டிருந்தார். அதன் பின்னர் டெலோவின் மத்திய குழுவிலும் விக்கினேஸ்வரனா மாவையா என்றால் டெலோவின் ஆதரவு விக்கினேஸ்வரனுக்குத்தான் என்றும் முடிவானது. மத்திய குழுவின் முடிவு இவ்வாறிருக்க, டெலோவின் செயலாளர் சிறிகாந்தா, அடுத்த வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர்களாக இருவரது பெயர்களை சம்பந்தனிடம் சிபார்சு செய்திருக்கிறாராம். ஒருவர் எழுந்து நடக்க முடியாமல் இருக்கின்ற உடுப்பிட்டி சிவசிதம்பரத்தின் சகோதரர் மற்றையவர், செல்வநாயகத்தின் மகனும் நீண்டகாலமாக இந்தியாவில் வசித்துவருபருமான சந்திரகாசன். அப்படியானால் டெலோவின் உத்தியோகபூர்வமான நிலைப்பாடு என்ன? உண்மையிலேயே டெலோவின் நிலைப்பாடு விக்கினேஸ்வரனை எதிர்ப்பதுதானா?

டெலோவின் உறுதியற்ற நிலைப்பாடுகள்தான் மறுவளமாக தமிழரசு கட்சிக்கு சாதகமாக இருக்கிறது. டெலோவின் உறுதியற்ற முடிவுகளை எதிர்த்து அதன் மூத்த உறுப்பினர் கணேஸ் வேலாயுதம் கட்சியைவிட்டு வெளியேறியிருக்கின்றார். தனித்து இயங்கவும் முடிவு செய்திருக்கின்றார். டெலோவின் பலவீனம்தான் தமிழசு கட்சியின் பலம். இன்றைய நிலையில் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போதிருந்த கட்சிகளில் டெலோ ஒன்றுதான் தற்போதும் கூட்டமைப்புக்குள் இருக்கிறது. தமிழரசு கட்சியால் கூட்டமைப்பு என்று இப்போதும் கூற முடிகிறதென்றால், அதற்கு டெலோவின் அங்கத்துவம்தான் காரணம். டெலோ வெளியேறுமாக இருந்தால் கூட்டமைப்பு என்னும் பெயரை தமிழரசு கட்சியால் பிரயோகிக்க முடியாது போகும். ஆனால் யானை தன் பலமறியாது தனது தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வது போன்று, டெலோவிற்கும் தன்பலம் விளங்கமால் தமிழரசு கட்சியின் ஆதிக்கத்திற்குள் தடுமாறிக் கொண்டிருக்கிறது. டெலோவின் தலைவர்கள் முதலில் தங்களின் பலம் என்ன பலவீனம் என்ன என்பதை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அப்படிப் புரிந்து கொண்டால் நிகழவுள்ள அரசியல் மாற்றத்தின் அஸ்திபாரமாக டெலோவே திகழும். காலம் புதியதொரு அரசியல் கூட்டுக்கான தேவையை உணர்த்திநிற்கிறது. ஆனால் கட்சிகளோ புதிய சூழலுக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொள்ளத் தயாரில்லை. டெலோ புதிய சூழலை விளங்கிக்கொள்ளாது விட்டால், டெலோ 2020 தேர்தலில் படுமோசமான வீழ்சியை சந்திக்க நேரிடும். தாங்களே தமிழரசு கட்சிக்கு அடுத்த நிலையில் என்னும் கற்பனையும் கலைந்துபோக நேரிடும். ஏனெனில் தமிழரசு கட்சி கொஞ்சம் கொஞ்சமாக டெலோவை உள்வைத்தே அழித்துவருகிறது. இதுவே முன்னர் ஈ.பி.ஆர்.எல்.எப் இற்கும் நிகழ்ந்தது.