Search
Thursday 23 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

“தஞ்சைப் பெரிய கோயிலுக்கு ராஜராஜனும் குந்தவையும் கொடுத்த உண்மையான சிலைகள் எங்கே?’’ – பொங்கும் கட்டடக்கலை ஆய்வாளர்!

“தஞ்சைப் பெரிய கோயிலுக்கு ராஜராஜனும் குந்தவையும் கொடுத்த உண்மையான சிலைகள் எங்கே?’’ – பொங்கும் கட்டடக்கலை ஆய்வாளர்!

பொன்னும் பொருளும், பல்லாயிரக்கணக்கான மக்களின் உழைப்பையும் கொண்டு அவர்கள் உருவாக்கிய கோயில்களை நாம் இப்போது எப்படிக் காத்துவருகிறோம்? ஒவ்வொரு நாளும், `சிலை மாயம்…’, `கோயில் சுவர்கள் இடிப்பு…’, `கல்தூண்கள் சிதைப்பு…’ போன்ற செய்திகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. இவையெல்லாம், நாம் தொலைத்த அடையாளங்களில் நமக்குத் தெரிந்த விஷயங்கள். நமக்குத் தெரியாமல் தொலைந்த தொன்மங்கள் எத்தனையோ இருக்கின்றன.

அப்படி நாம் தொலைத்த பொக்கிஷங்கள் சிலவற்றைப் பற்றி இப்போது வெளிவந்துள்ள செய்திகள் சில மேலும் அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்துகின்றன.

தஞ்சைப் பெரியகோயிலைக் கட்டிய ராஜராஜன் , அவன் பட்டத்து இளவரசி லோகமாதேவி ஆகிய இருவரின் சிலையோடு மொத்தம் பதின்மூன்று ஐம்பொன் சிலைகள், குஜராஜ் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள கவுதம் சாராபாய் அறக்கட்டளைக்குச் சொந்தமான ஒரு தனியார் அருங்காட்சியகத்தில் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன்.

ராஜராஜ சோழன்

இது குறித்து இவர் அளித்திருக்கும் புகாரின்பேரில் தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் உத்தரவின்பேரில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கட்ராமன் தலைமையில் விசாரணை நடைபெற்றது. கோயிலில் சிலைகள் மாயமானது உண்மைதான் என்றும், அதை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

thennan_21044_17208இது குறித்து கோயில் கட்டடக்கலை கலைஞரும் ஆராய்ச்சியாளருமான தென்னன் மெய்ம்மனிடம்  பேசினோம்…

“அருங்காட்சியகத்தில் இருப்பதாகச் சொல்லப்படும் சிலைகள் ஐம்பொன்  சிலைகள். ஆனால், கோயிலில் காணாமல் போன ராஜராஜனின் சிலை தங்கத்தால் ஆனது. இதற்கான கல்வெட்டுச் சான்றுகள் கோயிலிலேயே இருக்கின்றன. யாரோ ஒருவர் தங்கச் சிலைகளை எடுத்துக்கொண்டு அதற்குப் பதிலாக ஐம்பொன் சிலைகளை மாற்றிவைத்திருக்கிறார்.

அது மட்டுமல்ல… தஞ்சைப் பெரிய கோயிலுக்குள் தங்கத்தால் ஆன 150 விதமான பூஜைப் பொருள்கள் இருந்தன. டன் கணக்கில் தங்கமும் இருந்தது. அவையெல்லாம் இப்போது எங்கே என்று தெரியவில்லை. கோயிலை நிர்வகித்துவரும் அறங்காவலர்கள் குழுதான் இதற்கெல்லாம் பொறுப்பேற்கவேண்டும் .

அருங்காட்சியகத்தில் உள்ள சிலைகளையும் மீட்டுக்கொண்டு வர வேண்டும். கோயிலில் சிலைகளைத் திருடியது யார் என்பதை  கண்டுபிடிக்க வேண்டும். ஏற்கெனவே, ராஜராஜனின் சிலை இருந்த இடமான கோயில் கருவறையின் முதல் சுற்றில் அதை வைக்க வேண்டும். மக்கள் வழிபடுவதற்கும் கோயிலின் முதல் சுற்றைத் திறந்துவிட வேண்டும்” என்கிறார் தென்னன் மெய்ம்மன்.

தஞ்சை பெரிய கோயில்

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவரும், தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசனிடம் இது குறித்துப் பேசினோம்…

116699_thumb_17175“மாமன்னன் ராஜராஜனின் சிலையும், அவனின் பட்டத்தரசி உலகமாதேவியின் சிலையும் காணாமல் போய் ஏறத்தாழ நாற்பது, ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. பின்னர், அது குஜராத்தில் சாராபாய் அறக்கட்டளைக்குச் சொந்தமான அருங்காட்சியகத்தில் இருப்பதாகத் தகவல்கள் கிடைத்தன. தஞ்சைப் பெரியகோயிலின் ஆயிரமாவது ஆண்டுவிழா கொண்டாடியபோது சிலைகளை மீட்பதற்காக அப்போதைய கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமுயற்சி எடுத்தார். தனியாகக் குழு ஒன்றை அமைத்து, நேரில் சென்று சிலைகளைப் பார்த்துவிட்டு வந்தார்கள். பிறகு என்ன காரணம் என்று தெரியவில்லை, அந்த முயற்சியை அப்படியே கைவிட்டுவிட்டார்கள். இப்போது, சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவின் முயற்சியால் மேலும் பத்துக்கும் மேற்பட்ட சிலைகள் அங்கே இருப்பது தெரியவந்திருக்கிறது.

கல்வெட்டுகளின்படி ராஜராஜனும், அவரின் அக்கா குந்தவை நாச்சியாரும்  66 சிலைகளைக் கோயிலுக்குக் கொடுத்திருப்பதாக கல்வெட்டுகளில் குறிப்பிருக்கிறது. அவற்றில், தங்கச் சிலைகளும், ஐம்பொன் சிலைகளும்  அடக்கம். ராஜராஜனின் தந்தை சுந்தரச்சோழன். தாயார் வானவன்மாதேவியின் சிலைகள் தங்கத்தால் ஆனவை. இப்போது, கோயிலை ஆய்வு செய்த அதிகாரிகள், `கோயிலுக்குள் இருக்கும் பல சிலைகள்… பழைய சிலைகள்அல்ல. அவை கடத்தப்பட்டு, அதே மாதிரியான சிலைகள் செய்து வைக்கப்பட்டிருக்கின்றன’ என்கிறார்கள்.

கோயிலுக்கு அருகிலேயே தொல்லியல்துறை அலுவலகமும் இருக்கிறது. இவ்வளவு சிலைகள் காணாமல் போனபோது அவர்கள் என்ன செய்தார்கள்? இவையனைத்தும் விசாரிக்கப்பட வேண்டும். சிலைகளைக் கடத்தியவர்களின் மீது தமிழ்நாடு அரசு மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தஞ்சை பெரிய கோயில்

தொலைந்தவை, வெறும் கோயில் சிலைகள் மட்டுமல்ல… தமிழர்களின் கலை, பண்பாட்டு அடையாளச் சின்னங்கள். இவ்வளவு நடந்த பிறகும் இந்து அறநிலையத்துறை அலட்சியமாக இருக்கக் கூடாது. ஒரு குழுவை ஏற்படுத்தி, பழம்பெருமை வாய்ந்த கோயில்களில் மாதமொருமுறை கண்காணிக்க வேண்டும். தமிழக அரசு மேற்பார்வையில் இது நடைபெற வேண்டும். சிலைகளைக் கடத்தியவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’’ என்கிறார் மணியரசன்.

நன்றி: ஆனந்த விகடன் 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *