தலைப்பு செய்திகள்

தடம் மாறுகிறதா தமிழ் தேசியக் கூட்டமைப்பு!

தடம் மாறுகிறதா தமிழ் தேசியக் கூட்டமைப்பு!

நரேன்

அனைவரும் எதிர்பார்த்ததைப் போன்றே தமிழ் தலைமையின் குறிப்பாக தமிழரசுக் கட்சியின் பரிபூரண ஆதரவுடன் இலங்கைக்கு ஐ.நா மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் தமக்கு தாமே கூட்டமைப்பின் தலைமைப் பதவியை சூட்டிக் கொண்டு யாருடைய ஒப்புதலையையும் பெறாமல், தாங்கள் எடுக்கின்ற முடிவு சரியானதா, பிழையானதா என்று கூட அங்கத்துவ கட்சிகளுடன் விவாதிக்காமல் இராஜதந்திரம் என்ற போர்வையில் மிக இரகசியமாக காய்களை நகர்த்துகின்றது. பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் அந்த மக்கள் தம்முடைய நலனுக்காகத் தான் இவர்கள் பணியாற்றுகிறார்கள் என்று நம்ப வைப்பதற்கு பதிலாக, இவர்களின் ஒவ்வொரு செயலும் அந்த மக்களின் சந்தேகங்களை வலுப்படுத்துவதாகவே அமைந்துள்ளன. மக்கள் ஒருவரை தலைவராக ஏற்றுக் கொண்டு விட்டால் அவருக்காக உயிரையும் கொடுப்பார்கள். தனது தலைவரின் மீது தங்களுக்கு தெரியாமல் ஒரு துரும்பு கூட பட்டுவிடக்கூடாது என நினைப்பார்கள். ஆனால் கூட்டமைப்பின் தலைவருக்கும் அதன் பேச்சாளருக்கும் இலங்கை அரசாங்கத்தின் அதிரடிப்படை பாதுகாப்புடகேயே தமது மக்களை அணுக முடிகிறது. இதுவும் மக்களின் சந்தேகத்தை வலுப்படுத்துவதற்கு மூலகாரணமாகும்.

உரிமைக்காக போராடுகின்ற மக்களின் தலைவர்கள் உரிமையைக் கொடுக்க வேண்டியவர்களிடம் இருந்து பாதுகாப்பைப் பெற்று உரிமைக்காக போராடுகின்ற மக்களை சந்திக்கின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலை இந்த நாட்டைத் தவிர வேறு எங்கும் நடந்திருப்பதாக தெரியவில்லை. இதற்கு காரணம் தலைவர் மக்கள் நம்பிக்கையை வென்றெடுக்காமையே. உலகின் பல்வேறு தலைவர்களும் தனது மக்களுக்கு ஏதாவது ஒன்றென்றால் துடித்து போனது தான் வரலாறு. ஆனால் கூட்டமைப்பின் தலைவரைப் பொறுத்தவரையில் மக்கள் மாதக்கணக்கில் வீதியில் போராடுகின்ற போது அவர்களின் தவிப்பையும், மனவுளைச்சலையும், வேதனையையும், குடும்ப சூழலையும் உணர்ந்து கொண்டவராக தெரியவில்லை. தனது வர்க்க நலன் சார்ந்து செயற்படுவதாகவே அதாவது ஆளும் வர்க்கத்துடன் கைகோர்த்து தனது பதவியை காப்பாற்றிக் கொண்டு மக்களின் நலனை காற்றில் பறக்க விட்டுள்ளதாகவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சகல மக்களும் கூறுகின்றனர்.

இந்த நிலையில், தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையையும், அவர்களின் அபிலாசைகளையும், அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயத்தையும் பெற்றுக் கொள்வதற்கு பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர் தியாகமும், அந்த தியாகத்தை செய்ய வைத்த படைத்தரப்பினரது அட்டுழியமும் சர்வதேசத்தின் கதவுகளை தட்டியிருந்தன. இந்தவொரு நல்ல சந்தர்ப்பத்தை தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக பயன்படுத்தியதாக தெரியவில்லை. பாதிக்கப்பட்டவர்களில் தானும் ஒருவன் என்ற உணர்வுடன் செயல்பட்டதாகவும் தெரியவில்லை. மக்களிடம் இருந்து அன்னியப்பட்டு மக்கள் நலனுக்காகவே தான் பணிபுரிவதாக சொல்வதை மக்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள். இங்கு ஒன்றை சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும். 1977 ஆம் ஆண்டு தேர்தலில் அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டனி வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் தமிழீழ கோரிக்கையை முன்வைத்து அதற்கான சர்வஜன வாக்கெடுப்பாக அந்த தேர்தலை பயன்படுத்துமாறு தமிழ் மக்களைக் கேட்டுக் கொண்டது. இதன் விளைவாக தமிழர் விடுதலைக் கூட்டனிக்கு 18 ஆசனங்கள் கிடைத்தன. ஒட்டுமொத்ததில் அந்த தேர்தலில் தமிழீழ கோரிக்கையை முன்வைத்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் வடக்கு, கிழக்கு வாழ் மக்கள் 62 வீதமான வாக்குகரைள வழங்கியிருந்தனர். அப்போது ஐக்கிய தேசியக கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. பாராளுமன்றத்தில் அடுத்த பெரிய கட்சியாகவும், உத்தியோக பூர்வ எதிர்கட்சியாகவும் தமிழர் விடுதலைக் கூட்டனி இருந்தது. தேர்தல் முடிவைத் தொடர்ந்து அமிர்தலிங்கம் அவர்கள் எமது உறுப்பினர்கள் தமிழீழத்திற்கான புதிய தேசிய சபையையும், இறைமையுள்ள புதிய அரசியல் யாப்பையும் உருவாக்குவார்கள் என்று ஒரு புறம் சொல்லிக் கொண்டு மறுபுறத்தில் எதிர்கட்சித்தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டார்.

சீற்றம் கொண்ட இளைஞர்கள் ஈழக் கோரிக்கைக்கு என்ன நடந்தது என்று கேட்ட போது, 5 மாத கால அவகாசத்தில் ஐந்தாயிரம் பேரை திரட்டுங்கள். அவர்கள் எத்தகைய போராட்டத்திற்கும் தயாராக இருக்க வேண்டும். சாத்வீக முறையில் போராட்டத்தை முன்னெடுப்போம். முடியாவிட்டால் சர்வதேச நாடுகளிடம் ஆயுதம் மற்றும் பயிற்சி உட்பட அனைத்தையும் பெற்றுக் கொண்டு தீவிரவாத வழியில் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று கூறியிருந்தார். தலைவர்களின் இந்தக் கூற்றே இவ்வளவு பேர் இரத்தம் சிந்துவதற்கும், தமிழ் மக்களின் தொகை பாரிய அளவில் வீழ்ச்சியடைவதற்கும் காரணமாக அமைந்தது.

ஆயுதப்போராட்டம் 2009 ஆம் ஆண்டு மௌனிக்க செய்யப்பட்ட பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளுக்கும் சர்வதேச சமூகத்தின் உதவியுடனும், ஒத்துழைப்புடனும், தலையீட்டுடனும் நீதியைப் பெற்றுக் கொள்வதற்கும், இணைந்த வடக்கு, கிழக்கில் ஒரு சுயாட்சி அலகு அடிப்படையில் எம்மை நாமே ஆள்வதற்கும் கூட்டமைப்பின் ஒற்றுமையையும், ஐக்கியத்தையும் வலுப்படுத்த வேண்டும். அதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்த பிரச்சாரத்திற்கு இன்று வரையில் நல்ல பலனும் கிடைத்திருக்கின்றது.

ஆனால், மக்கள் வழங்கிய ஆணைக்கு ஏற்றாற் போல் இன்று வரை செயற்பட்டார்களா என்பது விடைகாணமுடியாத கேள்வியாகவே தொக்கி நிற்கிறது. மக்களின் உடைய காணிகள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உண்மையை கண்டறியப்பட வேண்டும் எனக் கூறி மக்களிடம் வாக்கு கேட்ட கூட்டமைப்பின் தலைமை அதனை அடைவதற்கு எந்த்தகைய நடவடிக்கைளை எடுத்திருக்கின்றது என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும். பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளாக போராட்டத்தையும், வீதியில் மக்களது ஜனநாயக போராட்டத்தையும் ஒழுக்கமைத்து அந்த இரு போராட்டங்கள் ஊடாக மக்களின் அபிலாசைகளையும், உரிமைகளையும் அடைய முயற்சித்து இருக்க வேண்டும். ஆனால் கூட்டமைப்பின் தலைமை அந்த இரு வழிப்பாதைகளையும் நகர்த்தாது ஒரு வழிப்பாதை வழியாக பாராளுமன்றத்திற்குள் நகர்கின்றது. அது கூட தடம் மாறி செல்கின்றதா என்ற சந்தேகம் எழுந்திருக்கின்றது. இதனாலேயே அரசியல் தலைமைகள் இன்றி மக்கள் தாமாகவே வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கியுள்ளனர்.

ஜெனீவாவில் கால அவகாசம் வழங்கி சில நாட்களே ஆன நிலையில் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியதைப் போன்று எந்தவொரு படை வீரரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு தாம் தயார் இல்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும். எமது பிரச்சனையை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம். இதில் யாரும் தலையிட வேண்டாம் என்றும் உலகத் தலைவர்கள் உதவத் தயராக இருப்பதாகவும் குருநாகலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் புதன் கிழமை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இNது கருத்துக்களையே பிரதமரும் தெரிவித்து வருகிறார். இது தவிர, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் வடமாகாண முதலமைச்சர் ஆகியோர் அமர்ந்திருந்த கூட்டத்தில் நல்லிணக்க செயலணியின் தலைவியான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள், பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்த படைத்தரப்பினரை சட்டத்தின் முன் நிறுத்த முடியாது. போர் இல்லாத காலத்தில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பாக விசாரிக்க முடியும் என்றும் கூறியிருந்தார். அந்த மேடையில் இருந்த மாவை சேனாதிராஜா இது குறித்து ஒரு வசனம் கூட பேசாதது மக்கள் மத்தியில் பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்பின்னரும் கூட்டமைப்பின் தவைவரோ அல்லது அதன் பேச்சாளரோ எதுவித கருத்தையும் வெளியிடாமல் இருப்பதும் கவலையளிக்கிறது. இது குறித்து வடமாகாண முதலமைச்சர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது, இலங்கை அரசு நீதி வழங்காது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். முதலமைச்சரின் உடைய இந்த கூற்று அவர்முதலமைச்சராக மட்டும் பேசியதாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர் முன்னால் நீதியரசராகவும் இருந்திருக்கிறார். இதனால் இலங்கையின் ந{Pத்துறை தொடர்பிலும் அவருக்கு தெரியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பாதுகாப்பு தரப்பினர் எவரையுமே தண்டிக்க மாட்டோம் என்பதில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதும் தெளிவாகின்றது. ஒடுக்கப்பட்ட ஒரு தேசிய இனத்திற்கு அதற்கு உரித்துடைய நீதி கிடைக்காது என்று தெரிந்த பின்னர் இந்த அரசாங்கத்திற்கு முண்டு கொடுக்க வேண்டிய தேவை என்ன என்பதை கூட்டமைப்பின் தலைவர் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். ஒரு அநீதிக்கு எதிராக நீதி நிலைநாட்டப்படும் போது மட்டுமே அத்தகைய அநீதிகள் தொடர்ந்தும் இடம்பெறாமல் செய்ய முடியும். சட்டத்தின் முன் நிறுத்த மாட்டோம் என்று சொல்லும் போதே தர்க்க ரீதியில் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியவர்கள் என்பதை சகலரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஒரு சிறிய தர்க்க ரீதியான வாதம் கூட கூட்டமைப்பில் இருக்கும் சிரேஸ்ட சட்டத்தரணிகளுக்கு புரியாமல் போனது வியப்பாக இருக்கிறது. ஏதோ நடந்திருப்பதாக தெரிவித்து அரசாங்கத்தை எதிர்ப்பது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி கொண்டு, அரசாங்கத்திற்கு எந்தவிதத்திலும் சிறு கீறல் கூட வந்து விடக் கூடாது என்று முண்டு கொடுப்பவர்களை பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் தலைவர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும். அரசாங்கத்தோடு இணைந்திருக்கின்ற இந்த வேளையில், யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டு மிகவும் இக்கட்டான சூழலில் உயிருக்கு உத்தரவாதம் இன்றி பல்கலைக்கழகம் சென்று பட்டப்படிப்பை முடித்து ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் தெருவில் இருப்பதை உணர்ந்து தமக்குள்ள நல்லுறவை பயன்படுத்தி அவர்களுக்கு ஒரு வேலைவாய்ப்பைக் கூட பெற்றுக் கொடுக்க முடியாதவர்களை எப்படி அவர்கள் தங்களது தலைவராக ஏற்றுக் கொள்வார்கள்.

இணக்க அரசியல் என்பது இணங்க வேண்டிய இடத்தில் இணங்கியும், தட்டி கேட்க வேண்டிய இடத்தில் தட்டிக் கேட்டும், அழுத்தம் கொடுக்க வேண்டிய இடத்தில் அதைக் கொடுத்தும் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதே ஆகும். இன்றைய கூட்டமைப்பு செய்வது சமரச அரசியல். இந்த நிலை மாறி இணக்க அரசியலின் உண்மைப் பொருளளை உணர்ந்து காய்களை நகர்த்த வேண்டும். அல்லது தமிழரசுக் கட்சியின் மீதுள்ள கோபம் ஏனைய பங்காளிக் கட்சிகளின் மீதும் மிக மோசமாக திரும்பும்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *