Search
Wednesday 23 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழனின் தொன்மையான வரலாற்றையும் பெருமையையும் கூறும் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்வு இன்று

தமிழனின் தொன்மையான வரலாற்றையும் பெருமையையும் கூறும் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்வு இன்று

பிறேமலதா பஞ்சாட்சரம்

இன்று மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம். பாண்டிய மன்னனுக்கு மகளாக அவதரித்த அன்னை ஆதி பராசக்தி ஆதி மூலவரான சிவபெருமானை கரம் பிடித்த திருநாள். மதுரையிலே நடக்கின்ற இச்சித்திரைத் திருவிழாவை தனியே சைவசமய சார்புடைய நிகழ்வாகவல்லாமல் ஆதித் தமிழனின் தொன்மையான வரலாற்றையும் பெருமையையும் உலகுக்குக் கூறுகின்ற நிகழ்வுகளில் ஒன்றாகப் பார்க்கமுடிகின்றது.  அத்துடன் தமிழினத்தின் பெண்ணாட்சியின் சிறப்பை காட்டிநிற்கின்கும் சாட்சியாக நின்றுதொன்று தொட்டு இன்றுவரை தமிழினம் பெண்ணுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் சொல்லும் நிகழ்வாக இச்சித்திரை திருவிழா காணப்படுகிறது. கன்னி ஆண்டதால் “கன்னிநாடு” என மதுரை பெயர் பெற்றது.

aerial-view-meenakshi-templeமீனட்சியம்ன் ஆலயம் தோன்றிய காலப்பகுதியை சரியாக நிர்ணகிக்க முடியாவிடினும் இந்தியாவின் வரலாற்று மற்றும் பூகோள ஆய்வுகளின் முடிகளின்படி இற்றைக்கு 2500 ஆண்டுகால பழமைவாய்ந்த மதுரை மாநகரத்தின் தோற்றத்தோடு இணைந்த ஆலயமாக மிளிர்கின்றது. இன்று உள்ள ஆலயக் கட்டட கட்டுமாணப்பணி 16ம் நூற்றாண்டு (கி பி 1623- கி .பி 1655 ) காலப் பழமை வாய்ந்ததாக காணப்படுகின்ற போதிலும் இவ்வாலயத்தின் மூலவழிபாடனது கடல்கொண்ட குமரிக் கண்டத்திலிருந்து தப்பிவந்த மக்களால் கி மு 6ம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்டது என வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்னர்.

தெற்கு ஆசியாவின் மிகப் பழமையான நாகரிகமான இந்தியாவில் தோன்றிய இன்னுமொரு பழமையான நாகரிமான சிந்துவெளி நகர ( கி மு 3000 – கி மு 2500) தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகளுடன் ஒத்துப் போகின்ற இரு பெரும் சான்றுககளை இம் மீனாட்சியம்மன் ஆலயமும் மதுரை மா நகரமும் இன்றளவும் தன்னகத்தே நடைமுறையில் கொண்டுள்ளன. அவையாவன தாய் தெய்வ வழிபாடும், திமில் பருத்த காங்கேயன் இன காளைகளைப் பேணும் ஏறு தழுவும் (ஜல்லிக்கட்டு ) விளையாட்டுமாகும்.

Evening-Tamil-News-Paper_27001154423சிந்து வெளி நாகரிகம் தமிழக நாகரிகமும் ஒத்தவையே எனும் கருத்து வரலாற்று ஆய்வாளர்களான Sir John H Marshal, Rev. Fr. Heras. (Studies in Proto Indo Mediterranean Culture. Vol-I. Indian Historical Research Institute. Bombay. 1953) ஐராவதம் மகாதேவன். (Indian Express – Madras – 5 August 1994 & The Hindu 14 November 2014), டாக்டர் ஆர். மதிவாணன். திரு. பூரணச்சந்திர ஜீவா போன்றோர் நிறுவியுள்ளனர். இவ் வரலாற்று அறிஞர்களின் முடிவுகள் கோடிட்டுக்காட்ட முன்பே எமது பழம் தமிழ் இலக்கியங்கள் சங்ககால பெண் தெய்வமான கொற்றவை வழிபாட்டின் முக்கியத்துவம் பற்றி விரிவாகக் குறிப்பிடுகின்றன. பெண்ணைத் தெய்வமெனப் போற்றும் சங்ககாலத்திற்குப் பிற்பட்டகால இலக்கியமான சிலப் பதிகாரக் காப்பியத் தலைவி கண்ணகி பாண்டிய மன்னனின் அரச சபையில் தனது வழக்கினை உரைத்து நீதி கேட்டதும் அப்பாண்டிய மன்னன் தன் ஆட்சியில் நீதி பிறழ்ந்தது எனவறிந்து உயிர் நீர்த்ததும் இம் மதுரை நகரத்தில்தான்.

meenakshi-temple_-madurai-_-saiko3p---shutterstock.comதென்னிந்திய வரலாற்றின்படி தற்போதுள்ள மதுரையில் கிபி 1 – 5ஆம் நூற்றாண்டு வரையில் சங்ககாலப் பாண்டியர்கள் ஆட்சியும் , கிபி 5 – 13ஆம் நூற்றாண்டு வரையில் இடைக்காலப் பாண்டியர்கள்ஆட்சியும், 14 -16 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை டெல்லி சுல்தான்களின் கொடுங்கோல் ஆட்சியின் வசமும் இருந்து அதன்பின் விஜயநகரப் பேரரசு மூலம் அந்த முஸ்லிம் ஆட்சி முறியடிக்கப்பட்டு 1520ல் விஜயநகர பேரரசின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் நாயக்கர்கள் ஆட்சியில் இருந்து சிறப்புப் பெற்று 1736ல் நாயக்கர்கள் வீழ்ச்சியுற, 1801ல் பிரிட்டிஷாரிடம் சென்று 1947 ஆம் ஆண்டுவரை அவர்களின் ஆட்சியின் கீழிருந்தது.

சித்திரைத் திருவிழாவின் பொழுது மலையத்துவச பாண்டிய மன்னனின் ஒரே வாரிசான வீரமும் விவேகமும் நிறைந்த தடாதகைப் பிராட்டி மீனாட்சியம்மன் மூவுலகையும் வென்று இறுதியில் சிவனுடன் போர் செய்ய போனபொழுது எவ்வாறு அவரை தனது மணவாளனாக காண்கின்றார் என்பதும் இறுதியில் சிவபெருமான் மதுரைக்கு சுந்தர பாண்டியனாக வந்து மீனாட்சி அம்மனை மணந்து கொள்கின்றார் என்பதையும் அங்கு நடைபெறும் ஒவ்வொரு நாள் நிகழ்வுகளும் நினைவூட்டுகின்றன

tamilnadu-landscape-1800இவ்வாறான பெருமை கொண்ட மீனாட்சியம்மன் கோவிலின் சிற்ப , கட்டட கலை சிறப்புப் பற்றிய முக்கிய தகவல்கள் :

•இங்குள்ள மீனாட்சி அம்மன் விக்கிரகம் மரகதக் கல்லால் ஆனது. இதனால் மீனாட்சி மரகதவல்லி எனப்படுகின்றார்.

•தாமரை மலரின் மொட்டைப் போன்று இக்கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்க சுற்றிலும் இதழ்கள் விரித்தாற்போன்று மதுரை மாநகரின் புராதன தெருக்கள் தமிழ் மாதங்களின் பெயர்களை தாங்கியதாக விளங்குகின்றன.ஒரு ஏக்கர் பரப்பளவைக்கொண்ட பொற்றாமரைக்குளம் எனப்படும் தீர்த்தக்குளத்தையும் இக்கோயில் பெற்றுள்ளது.

•இங்கு அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம்,முதலி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கம்பத்தடி மண்டபம்,கிளிக்கூட்டு மண்டபம், மங்கையர்க்கரசி மண்டபம், சேர்வைக்காரர் மண்டபம், திருகல்யாண கல்யாண மண்டபம், ஆயிரம்கால் மண்டபம் என்னும் பத்துக்கும் மேலான மண்டபங்கள் உள்ளன. அழகிய சிற்ப வேலைப்பாடுகள் ஒவ்வொரு மண்டபத்திற்கும் வேறுபட்டு அழகிய நுணுக்கங்களைக் கொண்டும் தனித்தனிச் சிறப்புகளையும் உள்ளடக்கியுள்ளன.

mmenakshi amman•ஆயிரம் கால் மண்டபத்தில் மொத்தமாக 985 தூண்கள் இருக்கின்றன. இத்தூண்களை எந்த கோணத்தில் நின்று பார்த்தாலும் ஒரே வரிசையில் அமைந்திருக்கும். அத்துடன் 14 கோபுரங்களும், 33,000 சிற்பங்கள் உள்ளன.கோயிலின் வடக்கு ஆடி வீதியில் கல்லில் இசைபாடும் 5 இசைத் தூண்கள், ஆயிரம் கால் மண்டபத்தில் இரு இசைத் தூண்கள் ஆக மொத்தம் 7 இசைத் தூண்கள் மீனாட்சி கோவிலில் உள்ளன.

•எல்லா சிவத்தலங்களிலும் வலது காலை தூக்கி தாண்டவமாடும் சிவபெருமான் இங்கு இடது காலை தூக்கி ஆடும் கோலத்தில் காட்சியளிக்கின்றார்.

.இவ்வாறு பெருமையும் பல சிறப்பம்சங்களும் கொண்ட மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தை உலகின் 8 அதிசயங்களில் ஒன்றாகவும் யுனெஸ்கோவின் உலக  புகழ் பெற்றும் பாரம்பரிய சிறப்பிட  பட்டியலில் சேர்பதற்குமான முயற்சிகள் நடைபெற்றதுடன் கோரிக்கைகளும் வலுவடைந்துள்ளன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *