Search
Tuesday 17 September 2019
  • :
  • :

தமிழரசுக் கட்சியின் இராஜதந்திரம் எதுவரை?

தமிழரசுக் கட்சியின் இராஜதந்திரம் எதுவரை?

-அ.நிக்ஸன்-
புதிய அரசியல் யாப்புக்கான உத்தேச சட்டமூலத்தில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அடிப்படைகள் கூட இல்லையென தெரியவந்துள்ள நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தமது சரியான நிலைப்பாட்டை இதுவரை வெளிப்படுத்தவில்லை. ஆனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஏனைய அங்கத்துவ கட்சிகள் அது தொடர்பான தமது எதிர்க் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளன. இருந்தாலும் அந்தக் கட்சிகளும் கூட அடுத்த கட்ட செயற்பாடு என்னவாக இருக்க வேண்டும் என்று வெளிப்படையாக கூறவில்லை. வெறுமனே எதிர்ப்பாக மாத்திரமே இருக்கின்றது.

முன்னேற்றம் இல்லை
நல்லாட்சி அரசாங்கத்துக்கும் மஹிந்த ராஜபக்சவின் முன்னைய அரசாங்கத்துக்கும் இடையே வேறுபாடுகள் இல்லையென தேசிய சமாதான பேரவையின் பணிப்பாளர் ஜெகான் பெரேரா தனது பத்தி எழுத்து ஒன்றில் சுட்டிக்காட்டியிருந்தார். அது மாத்திரமல்ல இனப்பிரச்சினை விவகாரத்தில் நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்னவும் கூறியிருந்தார்.

நல்லாட்சி அரசாங்கம் முன்னேற்றகரமான செயற்பாடுகளில் ஈடுபட்டாலும் வடக்கு கிழக்கில் மக்களின் இயல்பு வாழக்கை உரிய முறையில் மீள மாற்றியமைக்கப்படவில்லை என்றும் அரசியல் தீர்வு விடயத்தில் மெத்தனப் போக்கு காணப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை குறித்த அறிக்கை ஒன்றில் சமீபத்தில் கூறப்பட்டிருந்தது. ஆகவே நல்லாட்சி அரசாங்கம் குறித்த விமர்சனங்கள் போதியளவு எழுந்துள்ள நிலையிலும் அந்த அரசாங்கத்துக்கு பக்கபலமாக செயற்பட்டு வரும் தமிழரசுக் கட்சி மௌனமாக இருப்பது ஏன் என்ற கேள்விகள் எழாமல் இல்லை.

எது இராஜதந்திரம்? 
தீர்வு ஒன்றை பெறுவதற்காக முடிந்தவரை அமைதியாக இருந்து விட்டுக் கொடுத்து செயற்பட வெண்டும் என்ற இராஜதந்திர நோக்கம் சம்பந்தனிடம் ஏற்கனவே இருந்தது. அதுவும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியை ஏற்றுள்ள நிலையில் பொறுமையை கடைப்பிடித்து செயற்பட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்கலாம். ஆனால் புதிய யாப்பில் என்னென்ன விடயங்கள் உள்ளடங்கும் என்பது தொடர்பாக சம்பந்தன் சுமந்திரன் ஆகியோருக்கு ஏற்கனவே சொல்லப்பட்டு விட்டது என்று அமைச்சர்கள் தற்போது வெளிப்படையாகவே கூற ஆரம்பித்துவிட்டனர்.

ஏன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ககூட நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். குறிப்பாக பௌத்த சமயத்துக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு தமிழரசுக் கட்சி இணங்கியுள்ளது என்று அவர் விபரித்திருந்தார். ஒற்iயாட்சி தன்மை மாறாது என்றும் பிரதமர் விளக்கமளித்திருந்தர். ஆனாலும் சுமந்திரன் அதற்கு உடனடியாகவே மறுப்பும் வெளியிட்டிருந்தார். எனினும் பௌத்த சமயத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று பிரதமர் கடந்தவாரம் மீண்டும் உறுதியளித்துள்ளார். அதேவேளை வடக்கு கிழக்கு இணைப்பு இல்லை என்றும் மாகாணங்களுக்கு அதிகளவு அதிகாரங்கள் வழங்கப்படாது என்றும் மூத்த அமைச்சர்கள் செய்தியாளர் மாநாடுகளில் வெளிப்படையாகவே கூற ஆரம்பித்துவிட்டனர். வுடக்க கிழக்கை இணைப்பதற்கு எவரும் கேட்கவில்லை என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல செய்தியாளர் மாநாட்டில் கூறியுள்ளார்.

ITAK

பொறுமையின் எல்லை
அதேவேளை தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் வடக்கு கிழக்கில் இராணுவ நிலைகளை நிரந்தரமாக அமைப்பது மற்றும் அரசியல், பொருளாதார நிலைமைகளை மத்திய அரசு கண்காணிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் புதிய அரசியல் யாப்பில் இணைப்பது குறித்து ஆலோசிக்கப்படுகின்றன. இராணுவ நிர்வாகம் என்பது தற்போது நிழலாக இருக்கின்றது. அதனால் அந்த நிர்வாக முறையை வடக்கு கிழக்கிற்கு மாத்திரம் சட்டத்தால் அங்கீகரித்து சிவில் நிர்வாக முறையில் கீழ் இராணுவ தலையீடுகளை ஏற்படுத்தும் வசதிகளை புதிய யாப்பில் சேர்ப்பது குறித்து இரு பிரதான கட்சிகளும் யோசனை நடத்துகின்றன.

பாதுகாப்பு உயர் அதிகாரிகளிடம் இருந்து அதற்கான யோசனைகள் பெறப்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக ஆளுநர்களுக்கான அதிகாரத்தின் கீழ் அவற்றை செய்வதற்கு அரசாங்கம் முற்படுகின்றது. இந்த விடயங்கள் குறித்து சம்பந்தன் சுமந்திரன் ஆகியோருக்கு ஏற்கனவே கூறப்பட்டு அதற்கான காரணங்கள விளங்கப்படுத்த்ப்பட்டுள்ளது என்றும் பெயர்; குறிப்பிட விரும்பாத உயர் அதிகாரி ஒருவர் கூறினார். ஆகவே இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான உண்மை நிலைமை 90 சதவீதம் வெளிப்பட்டுள்ள நிலையிலும் இனிமேலும் பொறுமைகாப்பது என்ற இராஜதந்திரம் எந்தளவு தூரத்துக்கு சாத்தியமானதாக அமையும்?

சம்பந்தன் நியாயபடுத்துகின்றார்.
ஆகவே நல்லாட்சி அரசாங்கத்தின் புதிய யாப்புத் தொடர்பான விடயங்களில் சம்பந்தன் ஏன் மௌனமாக இருக்கின்றார். அந்த மௌனம் அரசாங்கம் குறித்த விமர்சனங்கள் பிழையானவை என்று அர்த்தப்படுத்தும் போக்கை காட்டி நிற்கின்றது. இனப்பிரச்சினை விவகாரம் என்பது நீண்டகால அரசியல் போராட்டம். 30 வருட அஹிம்சைப் போராட்டமும் அதற்க அடுத்தபடியான 30 வருட ஆயுதப் போராட்டமும் தோல்வியடைந்த நிலையில் அல்லது திட்டமிட்டு அழிக்கப்பட்ட நிலையில் அதன் பின்னரான அரசியல் சூழல் என்பது ஜனநாயக முறையிலான போராட்டம் ஒன்றை நியாயப்படுத்தி நிற்கின்றது.

ஆனால் அந்த ஜனநாயக இடைவெளியைப் பயன்படுத்தி கண்ணை மூடிக் கொண்டு நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் 70 வருட அரசியல் போராட்டமே பிழையானது என்ற எண்ணக் கருவை உருவாக்கி வருகின்றது என்பதை சம்பந்தன் உணராதவராக இருக்கின்றார்? நல்லாட்சியில் இணைந்ததன் மூலம் பெறப்பட்ட முக்கியமான இரண்டு பதவிகள் உள்ளன. ஒன்று நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் பதவி, இரண்டாவது எதிர்க்கட்சித் தலைவர் பதவி, இந்தப் பதவிகளுடன் புதிய அரசியல் யாப்புக்கான வழிகாட்டல் குழுவிலும் அங்கம் வகிப்படுகின்றது.

ITAK

தமிழரசுக் கட்சியின் கோட்பாடு
எனவே நல்லாட்சி அரசாங்கம் என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சிங்களம் அல்லாத ஏனைய சமூகங்களுக்கு எதிராக செய்கின்ற ஒவ்வொரு வேலைத் திட்டங்களுக்கும் துணைபோகின்ற நிலைமை என்பது தமிழரசுக் கட்சியின் அடிப்படைக் கோட்பாட்டுக்கு ஆபத்து என்று கூட உணர முடியவில்லையென்றால், அதையும் தான்டி இருக்கக் கூடிய புதிய இராஜதந்திரமா சம்பந்தனின் இந்த அணுகுமுறை?

இந்த செயற்பாடுகள் குறித்து வடக்கு கிழக்கில் சாதாரண மக்கள் கூட பேச ஆரம்பித்துவிட்டனர். இதற்கெல்லாம் விமர்சனங்களே தேவையில்லை என்று யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தகர் ஒருவர் கூறினார். ஆகவே சாதாரண மக்களுக்குக் கூட இந்த அரசியல் அணுகுமுறை தவறானது என்று புரிந்துவிட்ட நிலையிலும் சம்பந்தன், கடைப்பிடிக்கின்ற இராஜதந்திரத்தின் பொருள்கோடல் என்ன? 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலத்தில் இருந்து நீதிமன்றங்கள் தமிழ்மக்கள் தொடர்பான விடயங்களுக்கு வழங்கிய தீர்ப்புகள் எல்லாமே பௌத்ததேசியவாத கண்ணோட்டத்துடன் அமைந்தது என்பதை எல்லோரும் அறிவர்.

யார் நெல்சன் மண்டேலா?
இந்த நிலையில் இனப்பிரச்சினை விவகாரம் என்பது சட்டத்தால் தீர்க்கப்படக் கூடியதல்ல. அது அரசியல் பிரச்சினை. ஆகவே அரசியல் பிரச்சினைக்கு புதிய யாப்பும் அதன் சட்ட ஏற்பாடுகளும் தீர்வாகாது. எனவே 1920 இல் இருந்து தமிழர்கள் பறக்கணிக்கப்பட்ட வரலாறுகளை ஆவணப்படுத்தி வெளிப்படுத்துங்கள் நெல்சன் மண்டேலா வழியில் போராடுங்கள்? ஒரு மணிநேரம் மாத்திரம் வீதியில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது தமிழ் அரசியல் தலைவர்களுக்கு அழகல்ல. அதுவும் மக்கள் ஏற்பாடு செய்யும் ஆர்ப்பாட்டங்கள்தான் அவை.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *