Search
Monday 19 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழ்ப் புத்தாண்டு ஏன் தைப்பொங்கல் திருநாள் ?

தமிழ்ப் புத்தாண்டு ஏன் தைப்பொங்கல் திருநாள் ?

பிறேமலதா பஞ்சாட்சரம் 

பொங்கல் திருநாள் தமிழர் இல்லங்கள் தோறும்  தை மாதம் 1ம் திகதி கொண்டாடப்பெறும் ஒரு சமய சார்பற்ற விழாவாகும் . இது உழவர்கள் கதிரவனுக்கு நன்றி செலுத்தும் நன்னாளகவும் தமது கடின உழைப்பின் பயனை அனுபவிக்கத் தொடங்குகின்ற வேளையின் தொடக்க நாளாகவும் கருதப்படுகின்றது. பொங்கல் விழாவானது சங்ககாலம் தொடக்கம் இன்றளவும் அழியாமல் தமிழர்களால் கொண்டாடப் படுகின்ற தனிப் பெரும் விழாவாக நின்று நிலைத்திருக்க பல்வேறு காரணங்கள் இருக்கின்ற போதிலும் அது தமிழ்களின் வாழ்வோடு எக்காலத்திலும் ஒன்றிப் போகக்கூடிய ஒரு விழாவாக இருப்பதலன்றோ அதுவே தமிழ்ப் புத்தாண்டு என்னும் பெருமையைப் பெற வலிமையான சான்றுகள் உள்ளதனை  நிறுவதே  இக்கட்டுரையின்  நோக்கம்.

ஆதிகால மனிதனின் நாகரிக வளர்ச்சி

ஆதிகாலத்தில் வேட்டை சமுதாயமாக இருந்த மனிதகுலம் படிப்படியாக ஆற்றம் கரைகளை அண்டி வாழத் தொடங்கிய பொழுதே விவசாய சமுகமாக நாகரிகமடைந்தது . இக் காலப்பகுதி  கிமு 8,500 -7,000க்கும் இடைப்பட்ட காலப்பகுதியாக அறியக் கிடைக்கின்ற போதிலும் இன்றளவும் கண்டு பிடிக்கப்பட்ட பழமையான ஆற்றங்கரை  நாகரிகங்களான   யூபிரட்டீஸ்  டைகிரிஸ் ஆகிய ஆறுகளுக்கு இடைப்பட்ட மெசொப்பொத்தேமியா நாகரிகம், நைல் நதிக்கரையி ல் உருவான எகிப்திய  நாகரிகம், சிந்து நதியை அண்டிய சிந்துப் பள்ளத்தாக்கு நாகரிகம் போன்றன இற்றைக்கு கிமு 3000 ஆண்டை அண்டிய காலப்பகுதியில் உருவானவையாக தொல்லியல் ஆய்வுகள் நிருபிக்கின்றன. அவ் ஆய்வுகளில் அக்காலப் பகுதியில் வாழ்ந்த மக்கள் இயற்கையை தெய்வமாக வழிபட்டமை வெளிப்படுத்தப் பட்டுள்ளன.

pongal 2

ஆதித்தமிழரும் இயற்கையை போற்றி வழிபட்டுள்ளமை சங்ககால இலக்கிய நூல்களிலும், பக்தி இலக்கியங்கள்,  சோதிட நூல்கள் மற்றும் கல்வெட்டு ஆதாரங்கள் மூலமும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளன. தமிழர்கள்  சூரியனுக்கு முக்கியத்துவம் கொடுத்தமை இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள தமிழ் நூல்களில் தொன்மையான நூலான தொல் காப்பியத்தில்…

கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற

வடுநீங்கு சிறப்பின் மன்னிய மூன்றும்

கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே”

(தொல். பொருளதிகார புறத் திணை இயல் சூத்திரம்)

கொடிநிலை = சூரியன், கந்தழி = நெருப்பு, வள்ளி = சந்திரன் அதாவது கதிர், தீ, மதி இம்மூன்றை வாழ்த்துவதும் கடவுள் வாழ்த்துப் போலவே எண்ணப்பட்டு வரும் என்பது இதன் பொருள்.

சங்ககால மற்றைய நூல்களான திருக்குறளின் கடவுள் வாழ்த்தும், ஐம்பெரும் காப்பியங்களில் முதல் நூலான சிலப்பதிகரத்தின் கடவுள் வாழ்த்தும் சூரியனுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன.

திருக்குறளில்…  “அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு”என்பதில் ஆதி என்னும் சொல் காலத்தைக் குறிக்கும். பகவன் என்பது பகலவனைக் குறிக்கும். பகலவன் என்றால் சூரியன். எப்பொழுதும் எரிந்துகொண்டு பகலாகவே இருப்பதால் சூரியனுக்குப் பகலவன் என்று பெயரானது. சூரியனையே வள்ளுவர் பகவன் என்று குறிப்பிட்டுள்ளார்.

சிலப்பதிகாரத்தில் கடவுள் வாழ்த்தின் தொடக்கமே ஞாயிறு போற்றுதும் …..என்றே தொடங்குகிறது. மற்ற இயற்கை வழிபாடுகளான நிலா, மழை போன்ற தெய் வங்கள் சூரியனுக்கு பின்னரே குறிக்கப்படுகின்றன.

சூரியனின் வடதிசைப்பயணம்

12 மாதங்களில் தை முதல் ஆனி வரையிலும் வடதிசையிலும், ஆடி முதல் மார்கழி வரையிலும் தென்திசையிலும் சூரியன் பயணிக்கின்றது . இதை உத்தராயணம், தட்சிணாயனம் என்று கூறுவர்.  ஆறுமாதமாக தென்திசையில் பயணித்த சூரியன் வடதிசைக்கு திரும்பும் நாளே தைமுதல் நாள்.  ஆதாவது பூமி கிழக்கு மேற்காக தன்னைத் தானே சுற்றியபடி முதலில் தெற்குப்பக்கமிருந்து வடக்குப் பக்கம் நோக்கித் சூரியனைச் சுற்றத்தொடங்கும் நாள் தை முதல் நாள் என்று சோதிடமும் கூறுகின்றது.

சங்ககால நூல்களில் (கி. மு 300-கி .பி 200 வரை) தை மாதம் மற்றும் பொங்கல் பற்றிய செய்திக் குறிப்புகள்

சங்ககால தமிழர்கள் தை மாதத்திற்கு ஏனைய மாதங்களை விடவும் முக்கியத்துவம் அளித்துள்ளனர். பின்வரும் சங்ககால நூல்களில் தைமாதத்தின் சிறப்பு கூறப்பட்டுள்ளது .

புறநானூறில் (70:6-7)

“ …தைஇத் திங்கள் தண்கயம் போல்

 கொளக் கொளக் குறையாக் கூழுடை வியனகர்….”

அகநானுறில் (269)

“தைஇ நின்ற தண்பெயல் கடைநாள்

  வண்டற் பாவைஉணர்துறைத் தரீஇத்

  திருநுதற் மகளில் குரவை அயரும்..”

ஐங்குறுநூறுறில் (84)

“நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்

தைஇத் திங்கள் தண்கயம் போல….”

நற்றிணையில் (80)

“தைஇத் திங்கள் தண்கயம் படியும்

பெருந்தோட் குறுமகள்…..”

கலித்தொகையில் (59:12-13)

“…வையெயிற்றவர் நாப்பண் வகையணிப் பொலிந்து நீ

தையில் நீராடிய தவந்தலைப் படுவையோ”

தைஇத் திங்கள் தண்ணிய தரினும் – (குறுந்தொகை)

தை நீராடல்

தை மாதத்தை சிறப்பித்துக் கூறியதோடல்லாமல் அம்மாதத்திற்கு  பெருமை சேர்க்கும் வகையில் பெண்கள் ‘தை நீராடல்’ என்னும் விழாவினை கொண்டாடியுள்ளமையும்  காணக் கூடியதாக இருக்கிறது. தை மாதத்தில் பாவை செய்து நீராடி வழிபடுவதே தை நீராடல் விழா. இதில் வழிபடப்படும் பாவை மண்ணால் செய்யப்படுவது. மண் என்பது நிலத்திற்கான குறியீடு. உற்பத்திக்கு ஆதாரமாகி வாழ்வளிக்கும் நிலத்தை வழிபடுவதே இவ்விழாவின் நோக்கம். இவ்விழாவில் பறை இசைத்து ஆடப்படும் குரவைக்கூத்து, வள்ளைக்கூத்து, உலக்கை இடித்து ஆடும் ஆட்டம் போன்றவை இடம் பெற்றன. இதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் காணக்கிடைக்கின்றன.

தை நின்ற தண்பெயல் கடைநாள்

வண்டற் பாவைஉணர்துறைத் தரீஇத்

திருநுதற் மகளில் குரவை அயரும்’’ (அகம்., பா.எ., 269)

அதாவது தைத் திங்களிலே குளிர்ந்த பெயலின் கடைப்பட்ட நாட்களிலே பொன்னாலாகிய காசுகளைத் தொடுத்து அணிந்த வண்டல் விளையாட்டிற்கு உரிய பாவையை அழிகிய நெறியினையுடைய மகளிர் நீர், உண்ணும் துறையிலே கொண்டு வந்து வைப்பர். அப்போது அவர்கள் குரவைக் கூத்து ஆடுவர். இக் காலப் பகுதியிலே பெண்கள் பாவை நோன்பு என்னும் விரதத்தை கடைப்பிடித்ததும் எவ்வாறு எனக் மேற் கூறப்பட்டுள்ள  புற நானுறுப் பாடல் வரிகளான “ …தைஇத் திங்கள் ….”என்ற வரிகளில் தைமாத முழு நிலவு நாளே  அவர்களது விரதம் முடித்து நுகர்ச்சி கொள்வதற்குரிய உகந்த நாளாகக் கூறப்படுள்ளது. அதாவது தைபூச நாள். பூச நட்சத்திரத்தில், முழு நிலா வரும் நாள் தான், தைப் பூசம்.

தைபூச நன்நாளில் நீராடி வழிபடு செய்வதானது தனியே தமிழகத்தில் மட்டுமல்லாது இலங்கையிலும் அக்காலத்தில் நிகழ்ந்ததாக மகாவம்சத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது இங்கு கவனிக்கப்பட வேண்டியதாகும். இலங்கைக்கு பௌத்தமதம் வருவதற்கு முன்னர் அங்கே பூர்விகக் குடிகளாக வாழ்ந்த இயக்கர், நாகர் என்ற இரு இனத்தவர்களுள்  இயக்கர்குல மக்கள் மகாவலி கங்கை ஆற்றம்கரையில் கூடி தைப் பூச நன்னாளை கொண்டாடியதன குறிப்புள்ளது. மகாவம்ச காலம் கி.பி 5 அம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக அறியப்படுவதால் அக்காலப் பகுதியில் தமிழகத்திலும் இலங்கையிலும் தைபூச விழா கொண்டாடப் பட்டுள்ளது என்பதன் மூலம் இலங்கையில் வாழ்ந்த ஆதிகுடிகள் தமிழரே என்பதும் நிரூபணமாகின்றது.

பெண்கள் பொங்கல்

சங்க கால மகளிர் பாவை நோன்பின் முடிவில் பொங்கல் உண்டதற்கான சான்றுகள் தெளிவுறக் கூறப்படாத போதிலும் பாவை நோன்பு என்பது கடுமையான விரதமாகவும் நல்ல கணவனையடைய வேண்டி கடைப் பிடிக்கபட்டாதக பிற்கால நூலான ஆண்டாளின் திருப்பாவையூடக அறியமுடிகிறது.

“….பாலுண்ணோம் நெய்யுண்ணோம்

கோல அணிகலெல்லாம் பூணோம்”

சம்பந்தருடைய தேவாரத்திலும் தைபூச நாளன்று ;

நெய்ப்பூசும் ஒண் புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப் பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்” எனக் குறிப்பிடுகிறார். இங்கு புழுகல் என்பது பொங்கல். சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் குறை தீர அவளுடைய தோழி தேவந்தி, பாசண்டர் சாத்தான் எனும் சிறு தெய்வத்தை வேண்டித் தொழுதபோது,

‘அறுகு சிறுபூளை நெல்லொரு தூய் உச்சென்று

பெறுக கணவனோடு என்றாள்’ (சிலப்பதிகாரம்: 9:43-44)

எனவே, பொங்கல் விழாவின்போது அறுவடைப் பயிரான நெல்லின் ‘ஆவிக்கு’ படைக்கப்படும் ஒரு ‘பலித் தாவரமாக’ பூளை பூவைக் குறிபிடுகின்றார். மேலும் சிலப்பதிகாரத்தில் வரும் இந்திரவிழாவின் துவக்கத்தில் காவல்பூதத்திற்கு, புழுக்கலும் (பொங்கல்), நோடையும், விழுக்குடை மடையும், பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து வழிபட்டதாக சான்றுள்ளது. இவற்றை எல்லாம் தொகுத்துப் பார்க்கின்ற பொழுது தைமாதத்தில் சங்க கால தமிழர் விரதமிருந்தும் அவ்விரதகாலம் முடியும் வரையும் பாலும் நெய்யும் தவிர்த்தும் இருந்திருப்பார்களேயாயின்  கட்டாயமாக அவ்விரதகால நிறைவு நாளான தைபூசதன்று பொங்கலை (பாலும்  நெய்யும் கலந்து) உண்டிருபர்கள் என்பதில் ஐயமில்லை.

தைப் பொங்கல் பற்றிய பிற்கால வரலாற்று மற்றும் இலக்கிய  சான்றுகள் 

ஆண்டாளின் திருப்பவையினூடக (8ம் நூற்றாண்டு) பாவைநோன்பு விதரமானது மார்கழியில் முழுநிலா நாளில்  தொடங்கி  தைமாதமுழுநிலா நாளில் நிறைவு பெறுகிறது, இதற்கு ஆதாரமாக  திருப்பாவையில், ”மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் ” என்று தொடங்கி “நெய்யுண்ணோம்.. பாலுண்ணோம்” என்று ஆரம்பித்த நோன்பை, அதன்பின்னே “பால்சோறு, மூட நெய் பெய்து முழங்கை வழிவார..”

நெய் பொங்கல் செய்து  உண்ண வேண்டும் என்பதுபற்றி திருப்பாவை 27 ஆம் பாடலில் குறிப்பிடுகின்றார். இது அக்கார அடிசில் (சோறு ) என்று கூறப்படுகி ன்றது. இது முதலாம் பராந்தக சோழன் (கி.பி 907-953)காலக் கல்வெட்டுகளிலும் குறிப்பிடப் பட்டிருக்கிறது

மதுக்குலாம் அலங்கல் மாலை

மங்கையர் வளர்த்த செந்தீப்

புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்”

எனும் சீவகசிந்தாமணி பாடலிலிருந்து கி.பி 9ம் நூற்றாண்டிலேயே பொங்கல்விழா நடைபெற்றதற்கான ஆதாரங்கள் காட்டப்படுகிறது.

கல்வெட்டு ஆதாரங்கள் 10 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 15 ஆம் நூற்றாண்டுவரை   

திருச்சி திருக்கயிலாயமுடையார் கோவில் கருவறை வடக்குப் பட்டியில் காணப்படும் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த  கல்வெட்டில் “சங்கராந்திகளும், கிரஹணமும், மற்றும் திருக் கல்யாணங்கள் உள்ள் போது” பறை முதலிய வாத்தியங்கள் கொட்ட வேண்டிய முறைமையைத் தெரிவிக்கிறது. ராஜ ராஜ சோழன் காலத்தில்  (கி.பி. 985 – கி.பி. 1012)  ஒவ்வொரு மதப்பிறப்பன்றும்   விழா எடுக்கப்பட்டதற்கான  கல்வெட்டு ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. தஞ்சையில் கண்டெடுக்கப்பட்டகல்வெட்டில் ”  திருச் சதயத் திருவிழா பன்னிரெண்டும், கார்த்திகத் திருநாள் ஒன்றும், சங்கராந்தி பன்னிரெண்டும், பெரிய திரு உற்சவம் நாள் ஒன்பதும் ஆக நாள் முப்பத்து நான்கும்” (“கல்லும் சொல்லும்”, பக் 147, இரா. நாகசாமி) என்று குறிப்பிடப்படிருக்கின்றது . வட மொழியில் சங்கராந்தி என்றால், நுழைதல் என்பது பொருள். சூரியன் ஒவ்வொரு ராசியிலும் நுழையும் நேரத்தை சங்கராந்தி என்பார்கள்.ராஜ ராஜ சோழனின் மகனான முதலாம்  ராஜேந்திரனின் கால (11ஆம் நூற்றாண்டு – கி .பி 1014 –  1044 ), காளஹஸ்தி கல்வெட்டில், மகர சங்கராந்தி அன்று (மகர ராசியில் சூரியன் நுழையும் நாள் தை முதல் நாள்) பெரும் திருவமுது படைக்கப்பட்ட தகவலை, தொல்லியல் அறிஞர் கிருஷ்ணமூர்த்தி, வெளியிட்டுள்ளார்.  சிதம்பர சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயிலுள்ள கல்வெட்டொன்று இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் (கி.பி.1243- கி.பி.1279) காலத்தில் கயிலாயதேவன் என்பவன் தை பூச நாளில் பொ ங்கலமுது படைக்க மூலதனமாக பெரும்பற்றப்புலியூர் கீழ்ப்பிடாகை கிடாரங்கொண்ட சோழப்பேரிளமைநாட்டு எருக்காட்டுச் சேரியான சோழநல்லூர்ப்பால் சோழபாண்டியன் என்ற பெயருள்ள நிலத்தையும், அங்குள்ள கொல்லைக் குளத்தில் செம்பாதி நிலத்தையும் அளித்திருந்தான் என்று கூறுகின்றது தமிழகத்தில் நாயக்கர் காலம் (கி.பி. 1532 -கி.பி. 1736) நிலவியபொழுது தைபொங்கல் காலப்பாகுதியில் ஜல்லிகட்டு என்றழைக்கப்படும் காளையை அடக்கும் விழா அறிமுகப்டுத்தப் பட்டது.

ஜல்லிகட்டு

எப்பொழுது சித்திரையில் புத்தாண்டென திணிக்கப்பட்டிருக்கலாம்?

விஜய நகர நாயக்க மன்னர்களின் ஆட்சிக்காலப் பகுதிலேயே  ஆரியப் பிராமணர்களுக்கு அதிக முகியத்துவமளிக்கப்பட்டது. மானிய நிலங்கள் மட்டுமல்லாமல்  அல்லாமல் ஆட்சி அதிகாரத்திலும் இவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இதற்க்குக் காரணம் இந்தியாவில் முகலாயர் படையெடுப்பால் இஸ்லாமிய மதம் பாரவுவதைத் தடுக்கவும் முகலாயர் ஆதிக்கத்தைத் தடுத்து, இந்துத்துவ பிராமணிய அரசைக் கட்டியெழுப்புவதும் நாயக்க அரசின் கட்டாய கடமையாக இருந்தது ( உசாத்துணை -தமிழகத்தில் விஜயநகர ஆட்சி-முனைவர் அ.சிங்காரவேல்- சரசுவதி மகால் நூலக வெளியீடு 2007).

இவ்வாறு நாயக்கர் காலத்தில் ஆட்சி முறையில் செல்வாக்கு செலுத்திய ஆரிய பிராமணியர்கள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலும் தமிழகத்தின் ஆட்சியில் செல்வாக்கு செலுத்தியுள்ளனர். சாலிவகனனால்  (கி பி 78 ) சித்திரை 1ம் தேதிக்குப் பிரகடனப்படுத்தப் பட்ட  ஆரியப் புத்தாண்டை தமிழர்களும் கொண்ண்டாட வேண்டுமென்று திணிக்கப் பட்டிருக்கலாம். இதுவே நாளைடைவில் தமிழ்ப் புத்தாண்டு சித்திரையில்தான் என்ற மாயைக்குள் சிக்கவைக்க  சிலப்பதிகாரத்தில் பல விழாக்களில்  ஒரு விழாவாக கொண்டாடப்பட்ட  இந்திர விழாவுடன் தொடர்புபடுத்தி நியாயப்படுத்தப் பட்டிருக்கின்றது.

ஆனால்  சிலப்பதிகாரத்தில் வரும் இந்திரவிழா கண்ணகியின் காலத்தின் பின்  சோழநாட்டில் கொண்டாட படாததாலேயே  புகார் நகரத்தினை கடல்கொண்டது என்ற செய்தியை மணிமேகலை குறிப்பிடுகின்றது. சிலப்பதிகரமும்  மணிமேகலையும் ஒரேகாலத்திலேயே எழுதப்பட்ட ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட இரட்டைக் காப்பியங்கலகையால் அதில்வரும் கடல்கோள் பற்றிய வரலாற்றுச் செய்திகள் உண்மையானது என்று பூம்புகார் தொல்லியல் கலடாய்வு நிரூபிக்கின்றது .

Tamil New Year

தை மாதமே தமிழாண்டின் தொடக்கம்

தமிழ் வருடபிறப்பு தை மாதத்தில்தான் என்பதை நிறுவ 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகள் தலைமையில் ஐந்நூறுக்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் கூடி திருவள்ளுவர் பெயரில் தொடர் தமிழ் ஆண்டு பின்பற்றுவது என்றும், தை மாதம் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்றும் முடிவு செய்தார்கள். 1939 ஆம் ஆண்டு திருச்சியில் அகில இந்திய தமிழர் மாநாடு சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடியது. அதில் தந்தை பெரியார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், திரு.வி.க.,மறைமலையடிகளார் உமாமகேசுவரனார், கா.சுப்பிரமணியம், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்,எனப் பலரும் பங்கேற்றனர். தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும், பொங்கல் திருநாளே தமிழர் திருநாள் என்றும் அந்த மாநாட்டிலும் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன.

இதனை வலியுறுத்தும் வகையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனால் இயற்றப்பட்ட பின்வரும் கவிதை கட்டியம் கூருகின்றது.

தையே முதற்றிங்கள்; தைம்முதலே ஆண்டுமுதல்

பத்தன்று; நூறன்று; பன்னூ றன்று

பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்

புத்தாண்டு தைம்முதல்நாள், பொங்கள் நன்னாள்

நித்திரையில் இருக்கும் தமிழா !

சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப்புத்தாண்டு

அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே

அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்

தரணி ஆண்ட தமிழர்க்கு

தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு!

தை முதலாம் நாளையே ஈழத்திலும் தமிழர் புத்தாண்டாக கொட்டாடுவதே சரியென்று 1995 ஆம் ஆண்டளவில் இருந்தே தமிழீழ விடுதலைப் புலிகள் அதற்கான முயற்சிகளையும் விழிப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்தினர். தமிழீழப் பகுதி மட்டுமன்றி, தமிழீழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் இவ்விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கடந்த 2008 ஆம் ஆண்டு தை முதலாம் நாளில் தமிழர் தயாகத்தில் நல்லளிப்பு என்ற கைவிசேட முறைமையும்  ஏற்படுத்தப்பட்டது.

மேல்கூறப்பட்ட  தமிழர்களின்  இலக்கிய சோதிட வாரலாற்று ஆதாரங்களின்படி தை மாதமே தமிழர் வாழ்வில் முக்கியம் பெறுகின்றது. அத் தை மாதமுன்பனிக் காலத்தில்கதிரவனும் சுடாமல் அவ்வப்போது இறுதிமழையும் தூறலும் சாரலும் பெய்கின்ற பிற்பகுதில்நீராடும் தை நீ ராடலை   சங்ககால பரிபாடலில்நல்லந்துவனார் என்னும் புலவர் கூறுவதுபோல……

“கனைக்கும் அதிர்குரல் கார் வானம் நீங்க

பனிப்படு பைதல் விதலைப் பருவத்து

ஞாயிறு காயா நளிமாரிப் பின் குளத்து,,,”

நீரடி புத்துணர்வு பொங்க புதுவருடத்தை தொடங்கின் அதுபோல சிறப்பு வேறொன்னும் இல்லை.


One thought on “தமிழ்ப் புத்தாண்டு ஏன் தைப்பொங்கல் திருநாள் ?

Leave a Reply to DrC.S.Jamunanantha Cancel reply

Your email address will not be published. Required fields are marked *