செய்திகள்

தமிழ் அரசியலை செப்பனிடும் விக்னேஸ்வரனின் முன்னுதாரணம்

கபிலன் இராசநாயகம்  
அரசியல் என்றாலே பணம் உழைப்பதற்காக என்று மக்கள் முகம்  சுழிக்கும் இன்றைய நிலையில் தனது பாராளுமன்ற பிரவேசம் அத்தகைய ஒரு சாக்கடைக்குள் சிக்காது என்பதை உறுதிப்படுத்தவும் பொதுமக்கள் தன்னை கண்காணித்துக்கொள்வதற்கு ஏதுவாகவும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தனது சொத்துவிபரங்களை தேர்தலுக்கு முன்னதாகவே பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தி ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விட்டார்.

விக்னேஸ்வரனின் இந்த செயற்பாடு இலங்கை அரசியலில் மட்டுமன்றி தமிழக அரசியலிலும் எதிர்வரும் காலங்களில் பெரும் செல்வாக்கை செலுத்தப்போகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள்  கடந்த நல்லாட்சி காலத்தில் வருமானத்துக்கு மீறி அரசாங்கத்திடம் இருந்து சலுகைகளை பெற்றுக்கொண்டார்கள் என்றும் பல மில்லயன் ரூபாக்கள் பெறுமதியான ஆடம்பர மாளிகைகளை கட்டிவைத்திருக்கிறார்கள் என்றும் தொடர்ச்சியாக குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில் விக்னேஸ்வரனின் செயற்பாடு அவர்களை சங்கடத்துக்குள் மாட்டிவிட்டிருக்கின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் தம் மீதான குற்றச்சாட்டுக்கள் தவறு என்று நினைத்திருந்தால் இம்முறை தேர்தலில் தமது சொத்துக்களை பகிரங்கபப்டுத்தி தமது நேர்மையை நிரூபித்திருக்க முடியும். பெப்ரவரி மாதம் அளவில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபோதே கூட்டணியின் சொத்துக்கள் பொதுமக்களுக்கு பகிரங்கபப்டுத்தப்படும் என்று விக்னேஸ்வரன் கூறியிருந்தார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்ட ஒரு அறிக்கையில், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் யாவும் சேகரிக்கப்பட்டு 232, கோவில் வீதி, யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன என்றும் இவற்றை பார்க்க விரும்புபவர்கள் தேர்தலின் பின்னர் முன் அனுமதியுடன் அவற்றை பார்வையிடலாம் என்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக தேர்தலில் வெற்றி பெறுபவர்களின் சொத்து விபரங்கள் மாத்திரமே பகிரங்கப்படுத்தப்படும் என்றும்  அறிவித்திருந்த போதிலும் நீதியரசர் விக்னேஸ்வரன் தனது சொத்து விபரங்களை தேர்தலுக்கு முன்னரேயே மக்களுக்கு பகிரங்கப்படுத்தியிருக்கிறார்.

தேர்தலில் வெற்றி பெறும் ஒருவர் வேட்பாளராக இருந்தபோது எவ்வளவு சொத்துக்களை வைத்திருந்தார் என்பதை ஒருவர் அறிவதன் மூலம், அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காலத்தில் எவ்வளவு சொத்துக்களை சேர்த்தார் என்பதையும் பதவித் துஸ்பிரயோகம் அல்லது முறைகேடுகள் மூலம் சொத்துக்களை சேகரித்தாரா என்பதையும் அறிய முடியும்.

இதன்படி, விக்னேஸ்வரனின் உள்ளூர் வங்கிக் கணக்குகளில் மொத்தமாக ரூபா 4,424,724.24 பணமும் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் 9,618.98 பவுண்டுகள் பணமும் 1,210.33 டொலர்கள் பணமும் இருக்கின்றன. இவைதவிர, யாழ்ப்பாணத்திலுள்ள சண்டிலிப்பாய் இரட்டையபுலத்தில் ஒரு துண்டு காணியும் கொழும்பு 7இல் அவர் வசிக்கும் வீட்டின் மீது சீவிய உரித்தும் அவருக்கு இருக்கின்றன. இவை தவிர அவருக்கு வாகனங்களோ வேறு எந்த சொத்துக்களுமோ இல்லை. நீதிபதியாகவும், நீதியரசராகவும் பணி புரிந்தகாலத்தில் விக்னேஸ்வரன் அவர்கள் உழைத்த பணமும் முதலமைச்சராகப் பணி ஆற்றிய காலத்தில் அவருக்குக் கிடைத்த வேதனத்தில் ஏற்பட்ட சேமிப்பும் இவற்றுள் அடங்கும்.  இது விக்னேஸ்வரன் தனது   நீதியரசர் தொழில் மற்றும் அரசியலில் எந்தளவுக்கு ஊழல் மோசடிகளுக்கு இடம்கொடுக்காமல் வாழ்ந்திருக்கிறார் என்பதை காட்டுகின்றது. தனது  எதிர்கால அரசியலிலும் இவற்றுக்கு இடம்கொக்காமல் இருக்கும் அவரது பற்றுறுதியை அவரது சொத்துவிபர அறிவிப்பு வெளிப்படுத்துகின்றது.

விக்னேஸ்வரனின் இந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் முக்கிய பேசு பொருளாக காணப்படுகின்றது. விக்னேஸ்வரன் தனது சொத்துக்களை பகிரங்கப்படுத்தி ஊடகங்களுக்கு வெளியிட்ட சில மணி நேரங்களுக்குள் அவர் ஊடகங்களில் முக்கிய செய்தியாக இடம்பிடித்துடன் சமூக வலைத்தளங்களில் பல நூற்றுக்கணக்கானோர் பகிர்ந்தும் உள்ளனர். தமிழக சமூக வலைத்தளங்களிலும் இந்த செய்தி கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இதேசமயம், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் கூட்டு கட்சிகள் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையின்படி, பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படும் வேட்பாளர்கள் தமது மாதாந்த படிகளின் 8 சத வீதத்தினை பொதுமக்களின் நல்வாழ்வு திட்டங்களுக்காக இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட அவர்கள் விரும்பிய ஒரு அறக்கட்டளை நிதியத்துக்கு மாதாந்தம் வழங்க வேண்டும். அது தமிழ் மக்கள் நம்பிக்கைப் பொறுப்பு நிதியமாகவும் அமையலாம். ஆகக்குறைந்தது 2 சதவீதத்தினை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுவான செலவீனங்களுக்காகவும் அவர்கள் வழங்கவேண்டும். என்றும் நீதியரசர் விக்னேஸ்வரன் கூட்டு கட்சிகளின் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபோதே இறுக்கமான நிபந்தனைகளை இட்டிருந்தார்.

தமிழ் மக்களின் உரிமைகள் விடயத்தில் மட்டுமன்றி, ஊழல், மோசடி தொடர்பிலும் மிக இறுக்கமாக நேர்மையாக வெளிப்படைத்தன்மையாக செயற்படும் விக்னேஸ்வரனின் இந்த முன்மாதிரியான செயற்பாடுகளுக்கு பொதுமக்கள் எதிர்வரும்  தேர்தலில் ஏகோபித்த ஆதரவையும் அங்கீகாரத்தையும்  வழங்குவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அரசியல் என்றாலே சாக்கடை என்றும் ஊழல் என்றும் படித்தவர்களும் நேர்மையானவர்களும் ஒதுங்கி நின்ற ஒரு நிலைமையில் விக்னேஸ்வரனின் அரசியல் பிரவேசம் பல புத்திஜீவிகளுக்கும் இளைஞர் யுவதிகளுக்கு கிளர்ச்சியையும் , நம்பிக்கையையும் ஏற்படுத்தி பலர் இன்று அரசியலுக்குள் நுழைவதற்கு ஏற்கனவே அடித்தளம் இட்டிருக்கின்றது. தற்போது அரசியலில் விக்னேஸ்வரன் காட்டிவரும் துணிச்சலான, நேர்மையான, தற்துணிவான,  வெளிப்படையான செயற்பாடுகள் தமிழ் அரசியலை ஆரோக்கியமான ஒரு நிலைமைக்கு விரைவில் இட்டுச்செல்லும் என்பதில் ஐயம் இருக்க முடியாது.