Search
Wednesday 2 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழ் இசை இயக்கம்–அடைந்தவையும் அடையாதவையும்

தமிழ் இசை இயக்கம்–அடைந்தவையும் அடையாதவையும்

பேராசிரியர் மௌனகுரு சின்னையா
தமிழ் இசை இயக்கத்திற்கு ஓர் நீண்ட வரலாறுண்டு. அது தமிழர் வரலாற்றோடும் தமிழர் பண்பாட்டு வரலாற்றோடும் தமிழர் சமூக வரலாற்றோடும் பின்னிப் பிணைந்து கிடக்கிறது.அவற்றிலிருந்து பிரித்து தமிழிசை இயக்கத்தைப் பார்க்க முடியாது

தமிழிசை இயக்கத்தின் முதற்கால கட்டம்
———————————————————————-
தமிழிசை ஓர் இயக்கமாகத் தோற்றம் பெற்ற காலமாக நாம் பல்லவர் காலத்தைக் கூறலாம்.

அப்பரும் சம்பந்தரும் இதன் முன்னோடிகளாவர்

கி.பி 7 ஆம் நூற்றாண்டில் நற்றமிழ் ஞான சம்பந்தன் எனத் தன்னை அழைத்துத் தமிழ் இசையால் இறைவனைத் துதித்தவர் அவர்

தமிழோடு இசை பாடியவர் அப்பர்

இவர்களின் பின்னோரான 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரரும்

9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்க வாசகரும்

தமிழிசை வளர்த்த முன்னோடிகள்

,இவ்வண்ணம் 7 ஆம் நூற்றாண்டிலிருந்து 9 ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியை நம் தமிழிசை வளர்ச்சியின் ஆரம்பக்காலம் எனலாம்

இவ் ஆரம்பகாலத் தமிழிசை இயக்கத்தின் சிறப்புகள் என்ன?

வடமொழிக்கு மாற்றீடாக தமிழ் மொழியில் இறைவனைத் துதிக்கலாம் என்பதும்

அவ்விசையில் நாட்டார் மரபினையும் இணைத்துக்கொள்ளலாம் என்பதுமே

சுந்தரர் மாணிக்க வாசகர் பாடல்களில் இப்பண்பை அதிகம் காண்கிறோம்.

1

கி.பி 13 ஆம் நூற்றாண்டுக்குப் பின்
தமிழிசை இயக்கத்தின் இரண்டாம் கால கட்டம்
————————————————————————-
கி.பி 13 ஆ நூற்றாண்டுக்குப் பின் தமிழகத்தில் நிலவிய தெலுங்கர் ஆட்சி ,வடமொழி ஆதிக்கம் தமிழ் என்ற ஒரு மொழியே இல்லை என ஈசான தேசிகர் போன்றோர் கூறும் அளவுக்குச் சிலரைக் கொண்டு வந்து விட்டது

இக்காலகட்டத்திலும் தமிழிசை வளர்த்தோர் அருணகிரி நாதர்
,குமரகுருபரர்
திரிகூடராசப்பக்கவிராயர்.
முக்கூடற் பள்ளு ஆசிரியர் ஆகியோர்

எனலாம்,

இதனை நாம் தமிழிசை இயக்கத்தின் இரண்டாம் காலகட்டம் என அழைப்பதில் தவறில்லை

இவர்களும் தம் முன்னோர்கள் போல மக்களிடத்தில் காணப்பட்ட சந்த இசையையும் நாட்டார் இசையையும் தமிழிசைக்குள் கொணர்ந்தவர்கள் ஆவர்.

இவர்கள் தம்முன்னோரிலிருந்துந்து கற்றுக் கொண்டனர்

எனினும் இவர்களுக்கு அரச ஆதரவு இருக்கவில்லை

அரசவையில் கர்னாடக இசையும் கோலோச்சியது.

அதுவே உயர்ந்தோர் இசையாயிற்று

அதுவும் தெலுங்கிலும் சஸ்கிருதத்திலுமே பாடப்பட்டது

.இன்னொரு வகையிற்சொன்னால் இசையில் பிராமணர் ஆதிக்கம் வலுத்தது

தமிழில் பாடுதல் தரக்குறைவாக கருதப்பட்டது

தமிழில் பாடிய அருணாசலக்கவிராயர்
,மாரிமுத்தாபிள்ளை
முத்துத் தாண்டவர்
போன்ற தமிழிசை மும்மூர்த்திகளை விட்டு

தெலுங்கிலும் சமஸ்கிருதத்திலும் பாடிய
தியராஜ சுவாமிகள்,
முத்துஸ்வாமி தீட்சிதர்
சியாமா சாஸ்திரி என்ற பிராமணர்களே
பெரிது படுத்தப்பட்டனர்

எனினும் சைவ ஆதீனங்களும் மடங்களும் தேவார இசையை வளர்க்கும் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்

16ஆம் 17 ஆ நூற்றாண்டுகளில் பிராமணருக்கு மாற்றீடாக
சைவ வேளாளர்களினதும்
சைவச் செட்டி மார்களினதும் எழுச்சி ஏற்பட்டபோது வடமொழியிலும் தெலுங்கிலும் பாடப்பட்ட கர்னாடக இசைக்கு மாற்றாக

தமிழ் பண்ணிசையை முதன்மைப்படுத்தினர்

தமிழிசை இயக்கத்தின் மூன்றாம் கால கட்டம்
———————————————————————————–

இவ்வியக்கம் 18 19 ஆம் நூற்றாண்டுகளில் ஆரம்பமானது

இதுவே பின்னால் தமிழிசை இயக்கம் என அழைக்கப்பட்டது.

மேலோங்கிய இரு சமூகக் குழுக்களான வேளாளரும் செட்டிமாரும் இதன் பின்னணியில் இருந்தனர்.ஏன்பது மனம் கொள்ளத்தக்கது

இக்காலத்தில்,தமிழிசை வளர்த்தோரை இரு பிரிவினராக வகுக்கலாம்

ஒரு பிரிவினர் தெலுங்குப்பாடல்களை தமிழில் பாடலாம் எனத் தமிழ்ப்பாட்டிசை இயக்கம் வளர்த்தோர்]

.இன்னொருபிரிவினர் தமிழிசை இயக்கம் வளர்த்தோர்

ஒன்று தமிழ்ப்பாட்டிசை இயக்கம்
இன்னொன்று தமிழிசை இயக்கம்

தமிழிசை இயக்கம் வளர்த்தோருக்குப் பின்னாலும் ஓர் அரசியலும் சமூகமும் இருந்தது,

கருணாமிர்த சாகர ஆசிரியர் ஏபிரகாம் பண்டிதர்

யாழ்நூல் ஆசிரியர் சுவாமி விபுலானந்த அடிகளார்

ஆகியோர் தமிழிசை இயக்கத்திற்கு ஆராய்ச்சி மூலம் உயிரூட்டியவர்களாவர்

இவர்கள் தமிழரின் வரலாற்றோடு தமிழிசையை இணைத்துப் பார்த்தனர்

இவர்களும் இவர் பின் வந்தோரும் தமிழிசை மூலவர்களான தேவாரம் திருவாசகம் பாடியோரை முன்னுதாரணமாககொண்டு பண்ணிசையையே தமிழிசையாகக் கண்டனர்.ஆனால் அவர்களின் நாட்டுப்பாடல்களினீடுபாட்டைப் பார்க்கத் தவறினர்

இப்பண்ணிசையே கர்நாடக இசையாக மாறியது என கூறவும் ஆயினர்,

இவர்கள் வழியில் பின்னாளில் தேவாரப் பண்ணிசைகளை ஆராய்ந்த வெள்ளைவாரணனார் போன்ற ஆய்வாளர்கள் பண்ணிசை பற்றி ஆராயவும் ஆயினர்

.இறுதியில் பண்ணிசையே தமிழிசை என்ற கருத்துரு தோற்றம் பெறலாயிற்று

தமிழிசை இயக்கத்தால் நாம் அடைந்தவை என்ன?

ஒன்று தமிழருக்கு ஓர் இசை மரபு உண்டென அறிந்தோம்

இரண்டு தமிழிசையே கர்னாடக இசையாக மாறியது என்ற கருத்தியல் பெற்றோம்

மூன்று பண்ணிசையே தமிழிசை என்ற உறுதி பெற்றோம்

நான்கு பணிசையின்ன் மூலசத்தி தேவார திருவாசகங்கள் என்ற கருத்தும் பெற்றோம்’

ஐந்து பண்ணிசை ஆய்வாளர்கள் நிறையத் தோன்றினர்

ஆறு தமிழிசை வளர்க்க அண்ணாமலைப் பல்கலைக் கழகம் என்ற ஓர் பல்கலைக்கழகம் அமைத்தோம்

அடைந்தவை இவை எனினும் அடையாதவை இன்னும் நிறைய உண்டு

தமிழிசை இயக்கம் வளர்த்தோர் பலர் தம் முன்னோடிகளிடமிருந்து பாடம் படிக்கத் தவறிவிட்டனர் போலும்

முன்னோடிகள் நாட்டார் இசையினைத் தமது தமிழிசை இயக்கத்தில் இணைத்துக்கொண்டது போல பின்னாளில் தமிழிசை இயக்கம் வளர்த்தோர் , நாட்டார் இசையினை மக்கள் இசையினை கூத்திசையினை தமிழிசையாக ஏற்கும் பக்குவத்தைப் பெற்றாரில்லை

அது அவர்கள் தம்மிலும் குறைந்த சமூக வகுப்பினரையும் கிராமிய மக்காளையும் குறைத்துப்பார்த்தமையினால் ஏற்பட்ட விளைவாகும்.

2

தமிழிசை இயக்கத்தின் நான்காம் கால கட்டம்
————————————————————————————-
1950ன் 1960 1890 களில் தமிழ் நாட்டில் ஏற்பட்ட அரசியல் சமூக மாற்றங்கள் தமிழிசையின் போக்கினை இன்னும் முன்னோக்கித் தள்ளியுள்ளன

1940 களில் எழுந்த தேசிய இயக்கம்

1950 களில் முனைப்புப்பெற்ற திராவிட இயக்கம் என்பன

தேசியக் கருத்துக்களையும்

சுயமரியாதைக்க்கருத்துக்களையும் சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும்
தமிழ் இனஉணர்வுக்கருத்துக்களையும்
தமிழிசையில் தரலாயிற்று,

இதன் முன்னோடிகள்
பாரதியாரும் பாரதிதாசனும் ஆவர்

பக்திப்பாடல்களே தமிழிசைப்பாடல்கள் என்ற இறுகிப்போன கருத்துக்களை இப்போக்கு கேள்விக்குள்ளாக்கியது

சினிமாவும் நாடகமும்இப்போக்கினை முன்னெடுத்தன

தமிழிசையில் ஆராய்வுகளை மேற்கொண்ட
சுந்தரம் முகம்மது போன்றோர் சைவர் அல்லாதார் முக்கியமாக கிறிஸ்தவர் இஸ்லாமியர் பாடிய தமிழிசைப்பாடல்கள்ம் பற்றிப் பேச ஆரம்பித்தனர்

மெல்லிசை,சினிமா இசை என்பன தமிழிசையின் அங்கங்கள் என்ற கருத்தும் மேற்கிளம்பலாயிற்று.

வேளாளர் செட்டிமார் அல்லாத ஏனைய மக்கள் இதன் முன்னணியில் நின்றனர்

1960ன் களில் வானமாமலை போன்றோரின் நாட்டுப்பாடல் ஆய்வுகளும் பல்கலைக்ழகங்கள் நாடுப்பாடல் ஆய்வுக்குக் கொடுத்த முக்கியத்துவமும் த்மிழிசையின் பிரிக்க முடியாத அமசம் நாட்.டுப்பாடல் எனும் கருத்தை ஆழமாக விதைத்தது

அரசும் ஊடகங்களும் நாட்டுப்பாடல்களுக்கு முக்கியம் கொடுத்தன

இசை விழாவுக்கு மாற்றீடாக நாட்டார் இசை மேலோங்கிய தமிழ் இசை விழாக்கள் வைக்கும் நிலையும் தோன்றியது

சினிமாவில் இளையராஜாவின் வருகையின் பின் நாட்டாரிசை சினிமாமூலம் சகல மக்களையும் சென்றடையலாயிற்று

1980ன்ளிலும் 1990ம் களிலும் உருவாகி இன்று பெரு வளர்ச்சி பெற்றுள்ள தாழ்த்த்ப்பட்ட மக்களை அடித்தளமாகக் கொண்ட தலித் இயக்கம்

இன்று தலித் இசை பற்றிப்பேசுகிறது,

இவர்கள் கிராம மக்களுள்ளும் இன்னும் கீழ்ப்படுத்தப்பாட்டுப்பார்க்கப் படும் தலித் மக்களாவர்.

அவர்கள் தமிழிசை மூலம் தம் பிரச்சனை கூறுகிறார்கள்

சிவனையும் இந்துத் தெய்வங்களையும் பாடிய தமிழிசை

இன்று சமூக கருத்துக்களையும்

தலித் மக்கள் வாழ்வையும்

பாடும் இசையாக மாறியுள்ளமை கவனிக்கத்தக்கது

தமிழிசை இயக்கம் அடையாதவை
—————————————————————————–
இப்போது தமிழிசை இயக்க வரலாற்றில் இது வரை அடையாதவை யாவை எனப்பார்ப்போம்

‘நாட்டாரிசை,

மக்களிசையான சடங்கிசை

சைவமதம் சாரா வைஸ்ணவ பாசுர இசை,

இந்து மதம் சாரா ஏனைய இஸ்லாமிய கிறிஸ்தவ மதங்களைப்பாடும் பாடும் தமிழிசை,

மதம்சாராது சமூகப் பிரச்சனைகளைக்கூறும் தமிழிசை,

மெல்லிசை,

.அதனடியாக எழுந்த சினிமா இசை,

கூத்து இசை

நாடக இசை,
,
புத்தாக்க இசை

இறுதியில் எழுந்த தலித் இசை

இவை அனைத்தையும் அடக்கியதே தமிழிசை ஆகும்

அடைந்ததை மேலும் அழுத்திக்கொண்டு

அடையாதவற்றை மேலும் இணைத்துக்கொண்டு

செல்ல வேண்டியதே இன்றை தமிழிசை அபிமானிகளின் கடனாகும்,

தமிழிசை என்பது

ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தது அல்ல

. குறிப்பிட்ட இனக்குழு சார்ந்தது அல்ல
குறிப்பிட்ட பிரதேசம் சர்ந்தது அல்ல

அனைத்தையும் இணைத்துக் கொண்டு ஓடும் ஓர் அழ்கிய பிரவாகமே

தமிழ் இசையாகும்

அதன் அழகை உணர்ந்தோர் அதனை அனுபவிப்பர்

அது கர்னாடக இசையை மாத்திரம் உள்ளடக்கியிராது

பண்ணிசையை மாத்திரம் உள்ளடக்கியிராது.

நட்டுவ மேளம் நாதஸ்வரத்தை மாத்திரம் உள்ளடக்கியிராது

கூடவே

நாட்டாரிசை

தலித் இசை

ஆகிவற்றுடன்

பறை

உடுக்கு

தப்பு

சொர்ணாளி எனும் ஊதுகுழல்

என்பனவற்றையும் உள்ளடக்கியிருக்கும்

தமிழிசை ஆர்வலர்கள் இது பற்றிச் சிந்திப்பார்களாக.

மூலம்: பேராசிரியர் மௌனகுரு சின்னையாவின் முகநூல்  பதிவு


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *