Search
Thursday 26 April 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழ் மக்கள் தொடர்பில் தென்னிலங்கை மக்கள் புரிந்துகொள்ளவார்களா…?

தமிழ் மக்கள் தொடர்பில் தென்னிலங்கை மக்கள் புரிந்துகொள்ளவார்களா…?

-சிவ.கிருஸ்ணா-

இலங்கைத் தீவில் பல் இன மக்கள் வாழ்கின்றனர். இருப்பினும் கடந்த 65 வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டின் இரு தேசிய இனங்களுக்கிடையில் ஏற்பட்ட கசப்புணர்வுகள் பல படிப்பினைகளை தந்திருக்கின்றது. 30 வருடமாக இந்த நாடு போரை சந்தித்திருக்கின்றது. இந்த நாட்டின் வளங்கள் அழிக்கப்பட்டு தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் அபிவிருத்தியில் பின்தங்கிய நிலையில் இருக்கின்றது. இந்த நாட்டில் வாழ்ந்த பலர் தமது சொந்த மண்ணில், சொந்தங்களுடன் சந்தோசமாக வாழ முடியாதவர்களாக அன்னிய தேசங்களில் அகதிகளாகவும், தொழிலாளர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர். தென்னிலங்கை, வடக்கு – கிழக்கு பிரதேசம் என்ற பிரிவினைவாத சிந்தனைகள் தோற்றம் பெற்றிருக்கின்றது. இவை எல்லாவற்றுக்கும் தமிழ் தேசிய இனம் மற்றும் சிங்கள தேசிய இனம் என்பவற்றுக்கிடையிலான முரண்பாடே காரணம் என்பதை மறுத்துவிட முடியாது.

இன்றைக்கு 69 வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டின் ஆட்சியுரிமையை பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் பெரும்பான்மை இனத்தவரின் கையில் ஒப்படைத்து விட்டு சென்றனர். அதற்கு முன்னர் பிரித்தானியரின் காலத்தில் அரசியலமைப்புக்கள் கொண்டு வரப்பட்ட காலப்பகுதியில் இருந்து தமிழ், சிங்களம் என்ற பிரிவினைவாத சிந்தனைகள் தோற்றம்பெற்றிருந்தது. சிங்கள பௌத்த மேலாதிக்கவாத சக்திகள் அரசியல் அமைப்புக்களில் தமிழ் தேசிய இனத்தின் அபிலாசைகளையும், கோரிக்கைகளையும் புறக்கணித்ததன் விளையாக இரு இனங்களும் தனித்தனி அரசியல் கொள்கையின் கீழ் செயற்பட்டிருந்தன. அந்தநிலை சுதந்திரம் அடைந்த பின் தீவிரம் அடைந்து தமிழ் தேசிய இனம் ஒரு விடுதலைக்கானபோரை நடந்தவேண்டிய நிர்பந்தத்தை உருவாக்கியது. ஆனால் தமிழ் மக்களின் உரிமைக்கான ஜனநாயக வழி மற்றும் ஆயுதவழிப் போராட்டமானது சிங்கள இனத்திற்கு எதிரான போராட்டமல்ல. அது தென்னிலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த பௌத்த மேலாதிக்க அரசியல் சக்திகளுக்கும், அவர்களது ஏவல்படைகளாக தொழில்பட்ட இராணுவத்திறகும் எதிரான போராட்டமே. இதனை தென்னிலங்கை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சிங்கள மக்கள் தமது எதிரிகள் என்ற மனநிலை தமிழ் மக்களிடம் இல்லை. அதே மனநிலை தென்னிலங்கை மக்களிடமும் ஏற்பட வேண்டும்.

DSC_0104 (1)இரு இனங்களுக்கும் இடையிலான பிரச்சனைகள் உருவாகுவதற்கு காரணம் ஆளும் வர்க்கமே. அவர்கள் அடக்கி ஆளும் பௌத்த மேலாதிக்க வாத சிந்தனைகளை தென்னிலங்கை மக்கள் மத்தியில் விதைத்திருக்கிறார்கள். அந்த மனநிலையில் இருந்து தென்னிலங்கை மக்கள் விடுபடுமிடத்து தாமாகவே தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்கக் கூடிய ஒரு நிலை உருவாகும். மாற்றம் என்பது அடிமட்டத்தில் உள்ள மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டும். அந்த மாற்றம் பெரும் சக்தியாக ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று உருபெறுமிடத்து ஆட்சியாளர்களில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தென்னிலங்கை சிங்கள மக்கள் புரிந்து கொள்ளக் கூடிய நிலையில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு தமிழ் மக்களின் பிரச்சனைகளை தெளிவுபடுத்தக் கூடிய நிலையில் யார் இருக்கின்றார்கள் என்ற கேள்வி எழுகிறது. தென்னிலங்கை மக்கள் புரிந்து கொள்ளத்தக்க மனநிலையில் இருக்கிறார்கள் என்பதற்கு அண்மையில் நடந்த சம்பவம் ஒன்றை இங்கு சுட்டாக்காட்ட முடியும்.

அன்புக்கும் நட்புக்குமான இளைஞர் வலையமைப்பின் ஏற்பாட்டில் அனுராதபுரத்தைச் சேர்ந்த 24 இளைஞர், யுவதிகள் வடபகுதிக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். வழமையாக தென்னிலங்கையில் இருந்து வடபகுதிக்கு ஏ9 வீதியால் வந்து வடக்கின் முக்கியமான இடங்களைப் பார்த்து விட்டுச் செல்லும் பயணமாக இது இருந்திருக்கவில்லை. வடக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தெரியப்படுத்தி தென்னிலங்கை மக்கள் மத்தியில் புரிதலை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாக இடம்பெற்றிருந்தது. தென்பகுதியில் இருந்த வந்த இளைஞர், யுவதிகள் வலிவடக்கு மக்கள் தங்கியுள்ள யாழ் சபாபதிப்பிள்ளை முகாம், கண்ணகி முகாம், வடக்கில் பல தடவை தாக்குதலுக்குள்ளான உதயன் பத்திரிகை நிறுவனம், வலிவடக்கில் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட பகுதி, வனஇலாகாவால் தமிழ் மக்களிடம் இருந்து 200 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்ட மன்னாரின் குஞ்சுக்குளம் பகுதி, வீட்டுத்திட்ட பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள வவுனியா கற்பகபுரம் பகுதி உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் மனம்விட்டு பேசியிருந்தனர். அந்த மக்களும் தமது பிரச்சனைகளை தெளிவாக கூறியிருந்தனர். அதனைத் தொடர்ந்து வடக்கு இளைஞர், யுவதிகள் 50 பேருடன் தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுடன், அவை தொடர்பான தமது கருத்துக்களையும் பதிவு செய்திருந்தனர்.

20170129_104105தென்பகுதி இளைஞர், யுவதிகள் வடபகுதி விஜயத்தை முடித்து திரும்பிய போது, ‘ இப்படியான நலன்புரி நிலையங்கள் இருப்பது தொடர்பாக சிங்கள மக்களுக்கு தெரியாது. நாங்கள் தென்பகுதியில் சில நாட்கள், சில மாதங்களுக்கான நலன்புரிநிலையங்களை தான் கடந்த காலத்தில் பார்திருக்கிறோம். 28 வருடமாக இந்த இடம்பெயர்ந்தவர்கள் தங்கும் தற்காலிக முகாமுக்குள் இருக்கிறார்கள் என்பது எமக்கு தற்போது தான் தெரியும். அவர்கள் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் இருக்கிறார்கள். எதிர்காலத்தை எண்ணி பல சிறுவர்கள் ஏங்கித் தவிப்பதை பார்க்க கவலையாகவுள்ளது. வலிவடக்கில் கூட முழுமையாக காணிகள் விடுவிக்கப்படவில்லை. எமது பகுதியில் இராணுவத்தினருடன் நாம் சகஜமாக இருக்கின்றோம். ஆனால் வடக்கு மக்கள் இராணுவத்திற்கு அஞ்சுகிறார்கள். மக்களின் நிலங்களையும், வளங்களையும் இராணுவம் வைத்திருப்பதால் மக்களால் அவர்களை ஏற்க முடியவில்லை. வலிவடக்கில் உள்ள ஒரு காணியில் வீடு இராணுவத்தினர் வசம் உள்ளது. மலசலகூடம் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் காணி விடுவிப்பு நடந்துள்ளது.

தமக்கான உரிமைகள் தொடர்பில் வடக்கு மக்கள் நம்பிக்கையிழந்தவர்களாகவுள்ளனர். தற்போதைய அரசாங்கம் கூட அந்த மக்களை பற்றி பெரியளவில் கரிசணை கொள்ளவில்லை. எமக்கும், தமிழ் மக்களுக்கும் இடையிலான இடைவெளியை அரசாங்கமே ஏற்படுத்தி வருகிறது. ஒரு நாட்டு மக்களாக ஒவ்வொருவரும் பிரச்சனைகளை புரிந்து கொண்டால் இந்த நாட்டில் ஒரு நல்லிணக்கத்தை மக்களால் ஏற்படுத்தமுடியும். நாம் வரும் போது தமிழ் மக்கள் தொடர்பில் பல சந்தேகங்கள் இருந்தது. தற்போது அவர்களுடைய உண்மையான, நியாயமான கோரிக்கைகள், தேவைகளை புரிந்து விட்டோம் எனத் தெரிவித்தனர். உண்மையில் இதே மனநிலை தென்பகுதியில் உள்ள ஏனைய மக்களுக்கும் ஏற்படும் இடத்து ஆட்சியாளர்களின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

DSC_0108வடக்குக்கும், தெற்குமான உறவுபாலம் என்பது வெறும் ஏ9 வீதிப் பயணத்துடன் முடியாது அடிமட்ட மக்கள், பாதிக்கப்பட்ட மக்களுடனான ஒரு புரிந்துணர்வுடன் கூடிய கலந்துரையாடலாக அமைய வேண்டும். அதன் மூலம் தென்னிலங்கை மக்கள் மனங்களில் தமிழ் மக்கள் தொடர்பில் அவர்கள் கொண்டிருக்கின்ற சந்தேக பார்வையைப் போக்கி அவர்களது நியாயமான கோரிக்கையை புரிந்து கொள்ள வைக்க முடியும். தமிழ் தேசிய இனத்தின் நியாயமான கோரிக்கைகளுக்கு தென்னிலங்கை மக்களின் ஆதரவையும் பெற செய்ய முடியும். இதன் மூலம் தெற்கில் உள்ள பௌத்த மேலாதிக்க இனவாத சிந்தனையை அகற்றி, நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய சமாதானத்தையும், ஒற்றுமையையும் ஏற்படுத்த முடியும். அதுவே நிரந்தரமான அரசியல் தீர்வுக்கான ஒரு சமிஞ்சையாகவும் இருக்கும்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *