Search
Saturday 11 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

திருமந்திரம் கூறும் சரஓட்டம்

திருமந்திரம் கூறும் சரஓட்டம்

மருத்துவர் சி. யமுனாநந்தா

மனித உடம்பில் 79,000 நரம்புகள் உள்ளதாகச் சித்த மருத்துவம் கூறுகிறது. இதில் முக்கியமானவை 24 நாடிகள் ஆகும். அதில் 10 நாடிகள் மேல்நோக்கியும், 10 நாடிகள் கீழ்நோக்கியும் இருக்கும். நான்கு நாடிகள் இரண்டு பக்கங்களிற்கும் இரண்டாகப் பிரிந்து பாம்புபோலச் சுற்றி இருக்கும். இதனுள்ளே தான் உயிரோடு ஜீவ ஆற்றல் அறிதுயில் (Consciousness) செய்கின்றது. இதனைப் பிராணன் என்று கூறலாம். 24 நாடிகளில் 10 நாடிகள் மிகவும் முக்கியம். 10 நாடிகளில் 3 நாடிகள் மிகவும் முக்கியம். இதனுள்ளேயே இரகசிய உறக்கம் (Sub Consciousness ) நிகழுகின்றது. இம் மூன்றும் எம் உயிரை உடம்போடு இணைத்துக் கொண்டு இயங்குகின்றது. இந்நாடிகளுக்கு அமைவன 3 வாயுக்கள் ஆகும். அவை இடகலை (சந்திரன்), பிங்கலை (சூரியன்), சுழுமுனை (அக்கினி). இதனை இன்றைய மருத்துவம் பரபரிவு நரம்புத் தொகுதியின் மூலம் ஆராய்கின்றது. உட்சுவாசம், நிட்சுவாசம், வெளிச்சுவாசம் என்று உடலாகிய இயந்திரத்தில் பிராணனாகிய பாம்பு உட்சென்று வெளியேறுகின்றது. இதனைத் தனஞ்சயன் எனவும் கூறுவர்.

இடது நாசியிலே இயங்குகின்ற மூச்சு இடகலை ஆகும். வலது நாசியிலே இயங்குகின்ற மூச்சு பிங்கலை ஆகும். இரண்டு நாசியிலேயும் வந்துபோய் இயங்குகின்ற சுவாசம் சுழுமுனை ஆகும். அதாவது உட்சுவாசம், வெளிச்சுவாசம், சுவாச இயக்கம் ஆக இடகலை, பிங்கலை, சுழுமுனை அமைகின்றது. இதுவே உயிர்ப்பின் ஓட்டமாகும். இதனை சரம் என்பர்.

‘மேரு நடுநாடிமிக்க இடைபிங்கலை
கூடும் இவ்வானின் இலங்கைக்குறி உறும்
சாரும் தில்லைவனம் தண்மாமலயத்து ஊடு
ஏறும் சுழுமுனை இவையே சிவபூமியே’. திருமந்திரம் 2747

மனித உடலமைப்பை பாரதமாதாவிற்கு உபமானமாக மேற்கூறிய பாடல் அமைந்து உள்ளது. நடுநாடியாகிய சுழுமுனையை மேருமலையாகவும், இடைகலையினை இமய மலையாகவும், பிங்கலையை இலங்கையாகவும், இதயமாகத் தில்லையும் வர்ணிக்கப்பட்டுள்ளது.
இது உடலமைப்பு ரீதியில் மட்டுமல்ல புவியியல் ரீதியிலும், பொருளியல் ரீதியிலும், அரசியல் ரீதியிலும், காலநிலை ரீதியிலும், ஆன்மீக ரீதியிலும் கருத்தாகக் கொள்ளக் கூடியது.

‘இடைபிங்கலை இம வானோடு இலங்கை
நடுகின்ற மேரு நடுவாகும் சுழுமுனை
கடவும் திலைவணம் கை கண்டமூலம்
படர் வொன்று என்றும் பரமாம்பரமே’. திருமந்திரம் 2754

இடைகலை இமயமலை, சுழுமுனை மேருமலை, பிங்கலை இலங்கை. இங்கு இந்தியா, சீனா, நேபாளம் இலங்கைக்கு இடையேயான தொடர்பை உடலின் உயிரிரோட்டத்துடன் ஒப்பிடப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தைக் கருதும்போது அண்மையில் டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசு, வங்கக்கடலின் தாழமுக்க நிலையினால் இலங்கை வான்பரப்பிற்கு எடுத்து வரப்பட்டன. இதனைக் கார்த்திகை மாதம் 5ம் திகதி எமது வான்பரப்பில் குறிப்பாக தீவகங்களின் வானில் துல்லியமாகத் தெரிந்தது. அன்று நயினாதீவு கடற்பரப்பில் வானம் வெண்திரைபோல் காட்சியளித்தது. சூரிய ஒளியின் சில செந்நிறச் சிதறல்கள் வானை அழகுபடுத்தின.

அக்காட்சியினைத் திருமூலரின் பாடலில் கூறுவதாயின்,
‘விண்ணவனாய் உலகம் ஏழுக்கும் மேலுளன்
மண்ணவனாய் வலம்சூழ் கடல் ஏழுக்கும்
தண்ணவனாய் அது தன்மையின் நிற்பதோர்
கண்ணவன் ஆகிக் கலந்து நின்றானே’ திருமந்திரம் 3037

திருமூலரின் சிவபூமி என இலங்கையைக் குறிப்பிடுவதற்கு பௌதீக ரீதியான காட்சி ஆக அன்று பிரளயமும் சொர்க்கமுமாக காட்சியளித்தது.

உயிரின் தனஞ்சயனின் சர ஓட்டம் போன்றதே காலநிலை மாற்றம், இந்திய உபகண்டத்தில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகும். அடுத்து இமயமலை, மேருமலையின் இரு திசைகளில் சிந்து நதி, கங்கை நதி, யமுனை நதி என்பவற்றின் கடல் நீரோட்டமே இந்து சமுத்திர நீரோட்ட மாற்றத்தின் பிரதான சர ஓட்டமாகும்.
பொருளாதார அரசியல் ரீதியிலும் சுழுமுனை (சீனா), இடைகலை (இந்தியா), பிங்கலை (இலங்கை), இதயம் (தில்லைவனம் ஃ தமிழ்நாடு) என்பன சர ஓட்டமாக அமைந்து உள்ளன என்பதனை திருமூலரின் திருமந்திரத்தின் உபமானத்தின் மூலம் உய்த்து உணரலாம். அதாவது தற்போதைய பூகோள அரசியலின் சர ஓட்டத்தில் இந்தியத் துணைக்கண்டத்தின் நிலையினை சுழுமுனை, இடைகலை, பிங்கலை என்பவற்றின் புவியியில் ஒப்புவமையில் உய்த்து உணரலாம். திருமந்திரத்திற்கு ஆன்மீக உட்பொருள் மட்டுமன்றி, பௌதீக, லௌகீக உட்பொருள்களும் உள்ளன என்பதனை நாம் உணரலாம்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *