Search
Monday 24 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

திருமூலர் நல்கும் ஒளி: ஐப்பசி பூரணை – திருமூலநாயனார் குருபூசை (24.10.2018)

திருமூலர் நல்கும் ஒளி: ஐப்பசி பூரணை – திருமூலநாயனார் குருபூசை (24.10.2018)

மருத்துவர். சி. யமுனாநந்தா

ஊமைக் கிணற்றகத்துள்ளே உறைவதோர்
ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்துள
வாய்மையின் உள்ளே வழுவா தொடுங்குமேல்
ஆமையின் மேலுமோர் ஆயிரத்தாண்டே. (2304)

ஆத்மா – பிரபஞ்சம் என்னும் ஊமைக்கிணற்றினுள்ள ஆமை.

அழுவைகள் ஐந்து எனும் தூய நனவு, தூய கனவு, தூய உறக்கம், தூய பேருறக்கம், தூய உயிர்ப்படங்கல் இவை ஆமை தனது நான்கு கால்களையும், தலையையும் ஓட்டுக்குள் அடக்கி நீண்டகாலம் வாழ்வது போன்றதே பிரபஞ்சத்தின் ஆத்மாவின் நிலை.

விரிந்தது வித்துவுங் கெட்டது வீசம்
விரிந்தது விந்துவும் நாதத் தளவினில்
விரிந்தது உட்கட்ட எட்டேட்மாகில்
விரிந்தது விந்து வரையது லாமே. (1278)

ஒலிநாதம் உயிர் ஆகாரம் – இவை அகிலத்தில் விரகுவது எட்டெட்டு வடிவில் ஆகும். இதனையே இன்றைய இயற்பியல் விஞ்ஞானிகள் ந8 மாதிரியில் விளக்குகின்றனர்.

சுக்கிலநாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிரமத்தே தோன்று மவ் வியோனியும்
புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல்
அக்கரம் எட்டும் எண் சாணது வாரூமே. (464)

அண்மைய உயிரியல் ஆய்வாளர்கள் உயிர் உருவாகும்போது ஒளிகாழும் தன்மையை அவதானித்துள்ளனர். [Genesis in cosmic microwave background documented by observing the dim after of that seminal light].

கால் ஓடு உயிரும் கலக்கும் வகை சொல்லில்
கால் அது அக்கொடி நாயகி தன்னுடன்
கால அது ஐஞ்நூற்று ஒருபத்து மூன்றையும்
கால் அது வேண்டிக் கொண்ட இவ்வாறே. (694)

உயிரை இயக்குவது பிராணன் ஆகும். பிராணன் சுழுமுனையில் மின்னல் கொடிபோல தோன்றும் ஒளியொடு பொருந்தும். பிராணன் 513 நாடிகளிலும் உயிர்ப்புடன் கலந்து சுழுமுனையில் ஒருமுகப்பட்டுச் சுழலுகின்றது. மூச்சுப்பயிற்சி, யோகாசனம், தியானம் என்பன ஆத்மாவைக் கட்டுப்படுத்துகின்றது. திருமூலர் அருளிய மருத்துவத் தத்துவங்களும் இவற்றை அடிப்படையாக வைத்தே காணப்படுகின்றது.

தாரத்தினுள்ளே தங்கிய சோதியைப்
பாரத்தினுள்ளே பரத்துள் எழுந்திட
வேரது வொன்றி நின்று எண்ணும் மனோமயம்
காரது போலக் கலந்தெழு மண்ணிலே. (1405)

உள்ளத்துள்ளே இருந்து எழுகின்ற உள் ஒளியை ஓம் என்ற பிரணவ தியானத்துடன் உயிர்க்குப் பாரமாகிய உடம்பில் எங்கும் பரந்து நிற்கத் தியானம் செய்தால் உயிர்க்குத்துணை வேறு இல்லை.

பேரொளி ஆகிய பெரிய அவ் எட்டையும்
பாரொளி ஆகப் பதைப்பு அறக்கண்டவன்
தாரொளி ஆகத் தரணி முழுவதுமாம்
ஓர் ஒளி ஆகிய கால் ஒளி காணும். (693)

பிராணன் பேரொளி வடிவுடையது. உயிருக்கு ஒளிதருவது போல், தவயோகிகளால் அட்டமாசித்திகளை அடையும் பேரொளியினை அடைய முடியும்.

தூய்மணி தூய் அனல் தூய ஒளிவிடும்
தூய்மணி தூய் அனல் தூர் அறிவார் இல்லை
தூய்மணி தூய் அனல் தூர் அறிவார்கட்குத்
தூய்மணி தூய் அனல் தூயவும் ஆமே. (2554)

தூயது சிவவடிவம் அது ஒளிவாவமாகும். இயற்கை ஒளி உடைய மாணிக்கமணி போன்றவர் சிவப்பரம்பொருள். இதன் மூலத்தை யாரும் அறிந்தாரில்லை. இச்சோதி எம் உள்ளத்தைத் தூய்மை செய்யும்.

நின்றது அண்டமும் நீளும் புவியெலாம்
நிறைவிவ் அண்டம் நிலை பெறக் கண்டிட
நின்றவிவ் அண்டமு மூல மலமொக்கும்
நின்றவிவ் அண்டம் பலமது விந்துமே. (1275)

அண்டம் புவி எல்லாம் ஒளி பரவும். ஆன்மாக்களின் ஆணவமலம் போன்றதே அண்டம்.

வீசம் இரண்டுள நாதத் தெழுவன
வீசமும் ஒன்று விரைந்திடு மேலுற
வீசமும் நாதமும் எழுந்துடன் ஒத்தபின்
வீசமும் விந்து விரிந்தது காணுமே. (1277)

ஒளி அணுக்கள் இரு வகையில் உள்ளன. ஒன்று மேல் நோக்கிச் செல்வது. மற்றது ஒலியுடன் சமாந்தரமாக உள்ளது. இவற்றை அண்மைய சீன விஞ்ஞானிகளின் ஞரயவெரஅ வநடநிழசவயவழைn (Quantum teleportation குவாண்டம் சேய்மைச் செலுத்தல்) எடுத்து இயம்புகின்றது.

காரொளி அண்டம் பொதிந் துலகெங்கும்
காரொளி நீரொளி சாரொளி காலொளி
வானாளி ஒக்க வளந்து கிடந்துபின்
நேரொளி ஒன்றாய் நிறைந்தங்கு நின்றதே. (1274)

பேரொளியோடு பாரொளி பரந்துள்ளது. அண்டகோளம் எங்கும் கரிய ஒளி நிறைந்து உள்ளது. இதனையே இன்றைய இயற்பியல் அறிஞர்கள் கருஞ்சக்தி Black Energy என்கின்றனர்.

எழுகின்ற தீயை முன்னே கொண்டு சென்றிட்டால்
மெழுகு உருகும் பரிசு எய்திடும் மெய்யே
உழுகின்றது இல்லை ஒளியை அறிந்த பின்
விழுகின்றது இல்லை வெளி அறிவார்க்கே. (838)

சித்தவெளியில் சிவஒளியைக் காணலாம்.

வெளியை அறிந்து வெளியின் நடுவே
ஒளியை அறியின் உளி முறியாமே
தெளிவை அறிந்து செழுநந்தியாலே
வெளியை அறிந்தனன் மேல் அறியேனே. (839)

சித்தவெளியின் நடுவே பரம்பொருளை உணர்ந்தால் நாம் அப்பரம்பொருளுக்கே அடிமையாகி அதற்கு மேல் அறிவதற்கு ஒன்றுமில்லை.

ஆன்மாவே மைந்தன் ஆயினன் என்பது
தான் மாமறை அறைதன்மை அறிகிலர்
ஆன்மாவே மைந்தன் அரனுக்கு இவன் என்றால்
ஆன்மாவும் இல்லையால் ஐந்தும் இல்லையே. (2306)

ஆருயிரும் பேருயிரும் ஒன்றாகும். உயிர் அழிவற்றது. உடம்பு அழிவது. ஆருயிரும் பேருயிருமாகிய பரமனும் ஒன்றாதல். இது முத்திநிலையில் ஒன்றிக்கலாம். பதி பதார்த்தமாக நிகழலாம். ஊழிக்காலத்தில் நிகழலாம். மேலும் வாழ்வில் பேருயிர் ஆருயிரின் உள்ளேயும் இயக்குகின்றது. பதி, பசு, பாசம் என்ற முப்பொருள் உண்மையினை ஒளிவடிவில் விளக்கப்படுத்தப்படுகின்றது. இங்கு ஒளிவடிவு என்பது பல்வேறு புலவடிவுகளாகும்.

பதி, பசு, பாசம் வேறின்மை பற்றியும் இவை யாவும் சிவமயம் என்பதனையும் திருமூலர் அருளுகின்றார்.

அறிவு அறிவு என்ற அறிவும் அனாதி
அறிவுக்கு அறிவாம் பதியும் அனாதி
அறிவினைக் கட்டிய பாசம் அனாதி
அறிவு பதியின் பிறப்பு அறுத்தானே. (2405)

உயிர் பரமாக உயர் பரசீவன்
அரிய சிவமாக அச்சிவ வேதத்
திரியிலும் சீராம் பராபரன் என்ன
உரிய உரை அற்ற ஓமயம் ஆமே. (2578)

ஒமயமாகும் சிவமயம். அதாவது உயிரானது சிவவருள் பொருந்தி மேன்மையடைந்து சிவமயமாகும். இறைவடிவ ஓசை, ஒளி எல்லாம் ஆகும்.

உணர்ந்திருந் துள்ளே ஒருத்தியை நோக்கில்
கலந்திருந் தெங்குங் கருணை பொழியும்
மணந்தெழும் ஓசை ஒளியது காணுந்
தணந்தெழு சக்கரந் தான் தருவாளே. (1373)

ஒலிவடிவிலும் ஒளிவடிவிலும் சக்கர வடிவாக அருள் கிட்டும். அதாவது சக்தி அலைவடிவில் இது கிடைக்கின்றது.

உரிய நனா துரியத்தில் இவனாம்
அரிய துரிய நனவாதி மூன்றில்
பரிய பர துரியத்தில் பரனாம்
திரிய வரும் துரியத்தில் சிவமே. (2273)

பரதுரியம் பரம்பொருள் (Supraconsci ousnes) சீவன் நனவு, கனவு, உறக்கம் மூன்றையும் அடையும். பெருமைக்குரிய பேருக்கநிலையில் சீவன் பரம்பொருளை அடையும் (பரதுரியம்)

அணுவின் துரியத்தில் ஆன நனவும்
அணு அசைவின் கண் ஆன கனவும்
அணு அசைவில் பராத்தம் சுழுத்தி
பணியில் பரதுரியம் பரம் ஆமே. (2281)

ஆன்மா தன்னை மறந்த துரியநிலையில் அடையும் நினைவும் ஆன்மா புலன்வழிச் செல்லும் நிலையில் அடையும் கனவும் ஆன்மாவின் பேருக்கநிலையான சுழுத்ததியும் ஒன்றில் பொருந்தச் சிவனோடு பொருந்திப் பேரின்பப் பெருநிலையை அடையும்.

பெறுபகி ரண்டம் பேதித்த அண்டம்
எறிகடல் ஏழின் மணல் அளவாகப்
பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச்
செறியும் அண்டா சனத்தேவர் பிரானே. (2297)

அண்டங்கள் அலைகடலின் கரையில் உள்ள கைபிடி மணல் போன்றது. பகிரண்டம் என்பது அண்டவெளியைக் குறிப்பது. இவற்றையே இன்றைய விஞ்ஞானிகள் பல் அகிலக் கோட்பாடு (Multiverse Concept) என்கின்றனர்.

திசை எட்டும் தேர் எட்டும் தேவதை எட்டும்
வகை எட்டு மாநின்ற ஆதிப்பிரானை
வகை எட்டும் நான்கும் மற்றாங்கே நிறைந்து
முகை எட்டும் உள்நின்று உதிக்கின்ற வாறே. (2531)

உள்ளக் கமலத்தில் உதிக்கும் சோதியினை நாம் சிந்திக்க வேண்டும். சித்தமே சிவமயமாகும்.

பணிந்து எண்திசையும் பரமனை நாடித்
துணிந்து எண் திசையும் தொழுது எம் பிரானை
அணிந்து எண் திசையினும் அட்டமா சித்தி
தணிந்து எண் திசைசென்று தாபித்தவாறே. (640)

இதனால் அட்டமாசித்திகளைப் பெறலாம். எட்டுத்திசையில் உள்ள சக்தியின் கைவரப் பெற்றால் அட்டமா சித்திகளைச் செய்யலாம். அட்மாசித்திகளாவது சுருங்குதல், விரிதல், பெருத்துக்கனமாதல், இலேசாதல், வேண்டியதைப் பெறல் அல்லது வேண்டிய இடத்திற்குச் செல்லுதல், விரும்பியதை மேற்கொள்ளல், வசியமாக்குதல், வேற்றுருக் கொள்ளல்.

தானே அணுவும் சகத்தும் தன்நோன்மையும்
மானாக் ககனமும் பரகாயத் தேகமும்
தானா வதும் பரகாயம் சேர் தன்மையும்
ஆனாத உண்மையும் வியாபியும் ஆம்எட்டே. (649)

அதாவது அட்டமாசித்திகளில்
1. அணிமா என்பது தான் நினைத்தவுடன் அணுவைப்போல் உடலைச் சுருக்கிக் கொள்ளல்.
2. மகிமா – உலகத்தைப் போல் பெரிதாதல்.
3. கரிமா – பெரிய அளவிலான கனமாதல்
4. இலகிமா – இலேசான பரவெளிபோல் ஆதல்
5. பிராப்தி – எட்டத்தில் உள்ளதை கிட்டே அடையப் பெறல்.
6. பிரகாமியம் – பிற உடலில் சேரும் தன்மை.
7. ஈசத்துவம் – உலகை, உடம்பை உருவாக்குதல்.
8. வியாபியம் – உலகையே வசப்படுத்தல்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *