Search
Friday 22 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தென்மராட்சி கலைப்பரம்பரையின் 5வது தலைமுறை “திருமதி கஸ்தூரி மாசிலன்”

தென்மராட்சி கலைப்பரம்பரையின் 5வது தலைமுறை “திருமதி கஸ்தூரி மாசிலன்”

ஊர்க்குருவி;  ஒளிப்பட உதவி : பரதகலாமன்றம்

தென்மராட்சியைச் சேர்ந்த திருமதி கஸ்தூரி மாசிலன் இன்று பில்லாந்து நாட்டில் பரதகலாமன்றம் என்ற நடனக் கல்லூரியை நிறுவி பினிஷ்மொழியில் பரத நாட்டியத்தை கற்பிக்கும் ஆசிரியை. இக் கல்லூரியில் இலங்கை இந்திய,ரஷ்ய மற்றும் பில்லாந்து மாணவர்கள் கற்கிறார்கள்.

தென்மராட்சியில் நாதஸ்வர இசைப்பாரம்பரியம் மிக்க பரம்பரையின் 5வது தலைமுறையான திருமதி கஸ்தூரி மாசிலன் ஈழத்தின் மூத்த பெருங் கலைஞரான பிரபல நாதஸ்வர இசைக்கலைஞர் கலாநிதி பஞ்சாபிகேஷன் அவர்களின் (மகளின் மகள்) பேத்தியாவர். அத்தோடு ஈழத்தில் முதல்முதல் சோடி நாதஸ்வரம் வாசித்து புரட்சியை ஏற்படுத்தி ஒரு மரபை தோற்றுவித்தவரும், பல்லவி சுரம் வாசிப்பதில் இவருக்கு நிகர்இவரே என பலராலும் பாராட்டு பெற்றவருமான பிரபல நாதஸ்வர இசைமேதை சண்முகம்பிள்ளையின் பேர்த்தியும் (மகனின் மகள்) ஆவர்.

இவரது முன்னோர்களில் முதல் தலைமுறையாக விளங்கியவர்கள் 1878ல் பிறந்த திரு கந்தையா அவர்கள் தவிலிசையில் சிறந்து விளங்கினார் மற்றும் அவரது தம்பியார் சுப்பையா அவர்கள் திமிரி நாதஸ்வரம் வாசிக்கும் ஒரு இசைக்கலைஞர் . திரு கந்தையா அவர்களுக்குப் பின்னர் வந்த 2வது தலைமுறையான முருகப்பாபிள்ளை (பிறப்பு 1900) தவில் இசையில் சிறந்த சேவையாற்றியமைக்காக மாவிட்டபுர ஆதினத்தினால் சிங்கமுகசீலை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். அத்தோடு அப்போதைய இலங்கை அரச அதிபரான திரு. சிறிகந்தா அவர்களால் கலாச்சார விருதும் சன்மானமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

3வது தலைமுறையான கலாநிதி திரு பஞ்சாபிகேஷன் அவர்கள் நாதஸ்வர உலகின் இசை மாமேதை என்பது உலகறிந்தது.

4வது தலைமுறையான இவரது தாய்வழி மாமனார் இருவர் நாதஸ்வர உலகில் புகழ்பெற்றவர்கள், இன்னிசை வேந்தன் எம்.பி நாகேந்திரன் மற்றவர் நாதஸ்வர இசைமணி விக்கினேஸ்வரன். இவரது சகோதரி மாதுமை நிருபன் இசைத்துறை பட்டதாரி அவரது கணவரும் பஞ்சாபிகேசன் அவர்களின் மூத்த பேரனுமான நிருபன் நாகேந்திரன் அவர்கள் கர்நாடக இசைப்பாடகரும் நாதஸ்வர கலைஞரும் ஆவார்.

2

இவரின் மாமாவின் மகளான நிருத்திகா நாகேந்திரன் அவர்கள் ஒரு சிறந்த பாடகி. பஞ்சாபிகேசன் அவர்களின பேரப்பிள்ளைகளும் இவரின் மாமாவின் மகன்களான நாதஸ்வர கலைஞர்கள் சித்தாத்தன் மற்றும் பிரதித்தன் ஆகிய இருவரும் இன்று வளர்ந்து வரும் முன்னனி கலைஞர்கள்.

இவரது சிறியதந்தையார் சண்முகம் உருத்திரமூர்த்தி ஒரு பல்துறை நாடகக்கலைஞர்.

திரு பாலகிருஷ்ணன், திருமதி இராஜமலர் பாலகிருஷ்ணன் தம்பதிகளில் புதல்வியான இவர் தனது ஆரம்பகாலத்தில் பரத நாட்டியதினை சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் முன்னாள் நடன ஆசிரியர் திருமதி மிர்னாலினி ஜெயமோகன் அவர்களிடம் பயின்றார்கள். திருமதி மிர்னாலினி ஜெயமோகன் அவர்களே இவரது ஆம்பகால நாட்டியக் “குரு”.

இவர் சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் தனது பாடசாலைக்கல்வியை கற்று பாடசாலைக் கல்வியை முடித்த சொற்ப காலத்தில் தந்தையாரின் வேலைநிமித்தம் வவுனியாவில் வசிந்து வந்த காலப்பகுதியில் இவரின் நாட்டிய குருவாக விளங்கியவர் திருமதி சூரியயாழினி வீரசிங்கம் ( நிருத்திய வாணி) தன்னம்பிக்கையை வளர்த்த ஆசிரியர்களில் ஒருவர் இவர் என குறிப்பிடுகின்றார்.வவுனியா இந்துக்கல்லூரியில் நடன ஆசிரியர் இல்லாத காலத்தில் சிறிய காலம் ஆசிரியராக பணிபுரிந்தார். அதன் பின்னர் வவுனியா ரம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலயத்தில் நடன பாடத்தை கற்பிப்பதற்கு ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டது.

3

கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் வவுனியா றம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலத்தில் நடன ஆசிரியராக பணி புரிந்தார். இக் காலகட்டத்தில் வட இலங்கை சங்கீத சபையால் நடாத்தப்படும் பரதநாட்டியத்தில் ஆசிரியர் தராதர சித்திபெற்றமையால் இவருக்கு “பரத கலா வித்தகர்” என்ற பட்டம் வழங்கப்பட்டது.ன் அதனைத்தொடர்ந்து யாழ்பாண தேசியக்கல்வியல் கல்லூரிக்கு தெரிவான இவர் 3 ஆண்டு ஆசிரியபயிற்ச்சியின் பின்னர் Dip in Dance என்ற பட்டத்தைப் பெற்றார். அதனைத்தொடர்ந்து கொழும்பு விவேகானந்த தேசிய பாடசாலையில் (2004-2008) 5 வருட காலமும் கொழும்பு இந்துக்கல்லூரியில் 1 வருடகாலமும் ஆசிரிய பணியை மேற்க்கொண்டார் (2008-2009) இவ் 2 கல்லூரியிலும் பணிபுரியும் காலத்தில் இந்து கலாச்சார அமைச்சினால் கொழும்பு கதிரேச மண்டபத்தில் நடாத்தப்பட்ட நவராத்திரி கலைவிழாவில் நவசக்தி, மொம்மலாட்டம் மற்றும் கிராமிய கலைக்கதம்பம் போன்ற நிகழ்ச்சியை வழங்கியதற்காக பாராட்டுப்பெற்றார். இந்துக்கல்லூரியில் நாட்டிய ஆசிரியராக இருந்த காலத்தில் சக்தி ரிவி மற்றும் ரூபவாகினிக்கு பல நாட்டியநிகழ்ச்சிகளை வழங்கி இருக்கிறார்.இக் காலப்பகுதியில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தனது மேற்படிப்பை மேற்கொண்டு BA (hons) பட்டதாரி ஆனார். அத்தோடு நர்த்தனம், பரத நிருத்தம் மற்றும் பரத நாட்டியம் என்ற நூல்களை எழுதியுள்ளார்.

இவரது தனித்துவமான நாட்டிய நிகழ்வுகளுக்காக 2006ல் கொழும்பு இந்துமாமன்றத்தினராலும் 2007ல் கொழும்பு தமிழ்சங்கத்தினராலும் பராட்டி கௌரவிக்கப்பட்டது. கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் “ஆழ்கடலில் ஒரு முத்து” என்ற நிகழ்வில் கௌரவிப்பும் கிடைத்தது. 2009 ஆண்டுக்கு பிறகு பின்லாந்து நாட்டில் வசித்துவரும் இவர் அந்த நாட்டு மொழியை கற்று பினிஷ்மொழியில் கற்பிக்கும் ஒரு ஆசிரியர் ( பினிஷ் மொழியில் ஆசிரிய பயிற்ச்சியை நிறைவு செய்துள்ளார்). பின்லாந்து நாட்டில் இடம்பெற்ற கலாச்சார நிகழ்வில் பின்லாந்து நாட்டு பினிஷ்மக்களால் பராட்டி கௌரவிக்கப்பட்டார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 5.08.2017 ம் ஆண்டு நடைப்பெற்ற உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது பன்னாட்டு மாநாட்டில் இவரது நாட்டிய நிகழ்வு தமிழ்த்தாய் வாழ்த்து பரதநாட்டிய நிகழ்வவாக இடம்பெற்று பலரது பாரட்டை பெற்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *