Search
Friday 20 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நயினை நாகபூஷணி அம்மன் உற்சவம்: நயினை மான்மியம் மகா காவியத்தில் விழாவணி சருக்கத்தில் உள்ள காட்சிகள்

நயினை நாகபூஷணி அம்மன் உற்சவம்: நயினை மான்மியம் மகா காவியத்தில் விழாவணி சருக்கத்தில் உள்ள காட்சிகள்

மருத்துவர் : சி. யமுனாநந்தா

கடல்கொண்ட காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த கோவலன் கண்ணகியின் பெற்றோரால் அமைக்கப்பட்ட ஆலயத்தின் உற்சவச் சிறப்பு

அறுதியிட்டுரைக்க முடியாத மிகப்பழமையான காலத்தே அமைந்த மணிப்பீடத்தில் அமர்ந்துள்ள அம்பிகையின் திருக்கோவில் அமைக்கப்பட்ட காலம் இதுவென்று வரையறை செய்ய முடியாதிருப்பினும், பெரியோர்கள் வாய்ச் செய்தியாக சோழநாட்டின் தலைநகராய் விளங்கிய காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த வணிகப் பெருமக்கள் தலைவர்களான, மாநாய்கன், மாசாத்துவான் என்னும் இருவராலும் அமைக்கப்பட்டதென அறியக்கிடக்கின்றது.

ஆதியாம் பீடத்துற்ற வம்பிகை கோயில் கொண்ட
தீதுநா ளென்கை யாற்றே மென்னினு மிருந்த மேலோர்
சேதியா தென்னிற் பொன்னித் திருநகர் மாநாய் கன்பி
னோதுமா சாத்து வானா லுள்ளதென் றுரைப்ப ரின்னும்.

(பொன்னி – காவிரி நதி, பொன்னி நகர் – காவிரிப்பூம்பட்டினம், பண்டைய சோழமன்னர்களின் இராசதானி).

சிலப்பதிகார அடியில், மாநாய்கனும், மாசாத்துவானும் முறையே கண்ணகை, கோவலன் என்போரின் தந்தையர் என்றழைக்கின்றது. சிலப்பதிகாரம் கி. மு. இரண்டாம் நூற்றாண்டினது என்ற முடிவினை இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் ஒப்ப ஏற்கின்றனர். எனவே மாநாய்கன், மாசாத்துவான் என்போரது காலமும் கோயிலின் உற்பத்திக் காலமும் இன்னும் முற்பட்டதாகின்றது.

உற்சவ காலத்தை முன்னிட்டு ஊர்மக்கள் தமது
சுற்றுச்சூழலைச் சுத்தமாக வைத்திருத்தல்.

ஒவ்வொருவரும் தத்தம் வளவுகளின் எல்லைகளோடு மருவிய, கொல்லைப்புறம் எனந அழைக்கப்படும் பெரிதும் பயன்படுத்தப்படாத இடங்களில் வளர்ந்துள்ள புற்கள், செடிகளை அகற்றி, ஆங்குக் கிடக்கும் கற்கள் போன்றவற்றினைப் பொறுக்கித் துப்பரவு செய்வர். வீண்வார்த்தை பேசுவோரைக் காண்டலரியது. யாத்திரிகர்கள் வந்து தமதெல்லையுள், வசதியாக இருக்கும்பொருட்டு விதானமிடவும், நிலத்தே விரிக்கவும் நீண்ட வெண்டுகில்களைத் தேடுவர். அதேவேளை முல்லை முகையன்ன பல்வரிசைகளையும், வடித்த சிலையன்ன தோற்றத்தினையும் உடைய மகளிர் ஒன்றுகூடிச் சிற்றுண்டிகள் தயாரிப்பர்.

எல்லை கொண்ட கொல்லையெங்கு மேகியேகி நாடுவார்
புல்லை யங்கு கல்லைநின்று போக்கிவேறு பேசுவோர்
இல்லையங்க ணெல்லைநேர வெண்ணி வெள்ளை தேடுவார்
சில்லை யன்ன முல்லையார்க டெற்றி செய்து கூடுவார்.

(நேர்தல் – பொருந்தல்; வெள்ளை – வெண்டுகில்; கொட்டகை, பந்தர் போன்றவற்றின் உட்புறமாக மேலே விதானமாக உபயோகிப்பதற்கும், நிலத்தில் விரிப்பாகக் கொள்வதற்குமான, அளவில் நீண்ட வெண்டுகில்கள்; சில்லை – சிலை)

வெளியிடங்களிலிருந்தும் வரும் யாத்திரிகள் தங்கும் வசதிக்காகத் தனிப்பட்ட மண்டபங்களை உருவாக்குவார்;; பள்ளம், மேடு பொருந்திய இடங்களைச் சமன்செய்து, வேண்டிய இடங்கட்கு மண்கொணர்ந்து பரப்புவார்கள். தாம் சீர்செய்த இடங்களை அலங்காரம் செய்வதற்குப் பல்வேறு மரங்களையும், அலங்காரச் செடிகளையும் வேருடன் மண் சிதையாது அகழ்ந்து கொணர்ந்து அவைகளைத் தத்ரூபமாகவே நாட்டுவார்கள். வேலையைவிட்டு நீங்கி முன்செல்பவர்களைப்போல், இவர்களது மேனியினின்றும், வியர்வைத் தாரைகள் முன்புறமாக வீழ்கின்றன.

வருவிந்தி னோர்கடங்க மண்டபங்கள் கட்டுவார்
மருவுபள்ள மேடு நாடி மண்ணகழ்ந்து கொட்டுவார்
தருவினங்க டாமகழ்ந்து தட்டுரூப நட்டுவார்
வெருவிமுன் பெய் வாரையென்ன மேனிவேர்வை சொட்டுவார்.

najinai-ther-7

அடியவர்கள் தாகசாந்தி செய்வதற்கு முதன்மை கொடுப்பர்

நடந்து செயல்பவர்கள் இடையே நீர்த்தாகமுற்று வருந்திடாது எதுவித தாமதமுமின்றி உடனடியாகவே நீர் அருந்தக்கூடிய வகையில், வீதிகளில் எவ்விடத்தும், குளிர்ந்த நீரும், குளிர்ந்த பானங்களாகிய ஊறுகாய், நீர், எலுமிச்சைப் பழரசநீர் மற்றும் மோர் முதலியனவும் கொண்டுள்ள அழகிய நீர்ப்பந்தர்கள் அமைத்து வைப்பர். நடையிற் செல்லும் யாத்திரீகர்கள் காட்டுநிலங்களில் எவ்விடத்தாவது துன்புறாவண்ணம் ஆங்காங்கே இடையூறாயுள்ளன-வற்றை நீக்கி அந்நிலங்களைச் சீர்செய்து வைப்பர்.

வீதி தோறு நீர் விழைந்துளார் விரைந் தருந்திடச்
சீதநீரு மோருமுற்ற செய்ய பந்தர் செய்குவார்
போதுகா னிலங்களும் புகுந்துளா ரிலங்கு பொற்
பாதமீ தழுந்திடாது பண்படத் திருந்து வார்.

மண்டபங்கள், பந்தர்கள் சிறப்போடு அமைக்கப்படும்

ஆங்காங்கே பொலிவோடு அமைக்கப்பட்ட மண்டபங்கள், பந்தர்கள் ஆகியவற்றின் உட்புறமாக, மேற்பாகத்தினை மறைத்துக் கட்டும் விதானமெனும் மேற்கட்டிகளை ஒழுங்குபடக்கட்டி, நிறைந்த தோரணங்களை எழில்பெறத் தொங்கவிட்டு, வாழை மரங்களையும், கமுகமரங்களையும் நாட்டி அழகு செய்து, உள்ளம் உருகியவர்களாய் பெரு விருப்பினொடு, வெளியான இடங்கள் தோறும், இராக்காலங்களில் உதவுவுதற்கென, வெளிச்சக்கூடுகளை-யும் தொடுத்து, இறுதியாக இங்குவந்து அம்பிகையருள் பெற்றுத் துன்பம் நீங்குமின் என அழைப்பன போன்று அசையும் கொடிகளையும் கட்டி உயர்த்தினர்.

பொலிந்தகா வணமெங் கெங்கும் போர்த்துமேற் கட்டிமாட்டி
மலிந்ததோ ரணங்கடூக்கி வாழையுங் கமுகுநாட்டி
மெலிந்துளார் வத்தி னோடும் வெள்ளிடைக் கலங்கள் பூட்டி
நலிந்துளார் வம்மினென்றே நாடு நீடுவசங் காட்டி.

(காவணம் – சோலை, பந்தர், கொட்டகை; மேற்கட்டி – விதானம், வெள்ளை; தோரணம் – குருத்தோலை அழகுரு, மாவிலை, பூமாலை போன்றவை; மெலிந்து – உளம் உருகி, மனம் கசிந்து; கலம் – வெளிச்சக்கூடு; ஊக்கி – காட்டி – கட்டி, காட்டியென விகாரம்)

நயினைx

கொடியேற்றத்துக்கு முதல் நாள் சாந்திபூசை நிகழ்த்தப்படும்

அம்பிகைக்கு இயற்றப்படும் மகோத்சவம் சிறப்புடன் நிறைவேற வேண்டப்படும் எனும் உள்ளுணர்வுடன் விழாத் தலைவராகிய பிரதம குருவானவர், விழா நிறைவேற்றப்பட வேண்டிய மிதுனத் திங்களில் சூரிய சந்திரர் ஒன்றுகூடிய திதியாகிய அமாவாசைக்குப் பின்னர் வரும் சுக்கிலபட்ச பஞ்சமித் திதியன்று இரவு குறித்த முகூர்த்த வேளையில், வேண்டிய அறிவுரைகளையும், திரவியங்களையும் முப்புரி நூல் தரித்தவர்களும், வேதாத்தியாயனம் முறைப்படி பயின்றவர்களுமான அந்தணர்களுக்கு வழங்குவர். அவர்களும் மங்கள வாத்தியம் ஒலித்திடச் சாந்தி உற்சவத்தினை உரியமுறையில் நிறைவேற்றி வைப்பர்.

வினையெழிலாக வென்றே விழவுடை மதியிற் சோமன்
தினகரன் கூடுநாள் போய்ச் சேர்ந்தபஞ் சமியிராவி
லினமுறு மதிபர் வேண தெல்லவு நல்கிமுந்நூல்
புனைபவர் தம்மாற்சாந்தி புரிவர்மங் கலங்களார்ப்ப.

கொடியேற்றத் திருவிழாவின் சிறப்பு

உரிய மந்திரங்கள் சங்கற்பித்து, நெடிதாக அன்னையின் திருச்சந்நிதிக்கு எதிரே நிறுத்தப்பட்டிருக்கும் கொடித்தம்பத்தினது உச்சியை ஞானம் அணைவது போன்று, நந்தியம் பெருமானின் வடிவு பொறிக்கப்பட்ட துவசத்தினை முறைப்படி ஏற்றிச் சுட்டிக் கட்டி வைப்பர்.

அடுத்துளசட்டி யென்னு மருந்திதியதனிற் பத்தே
யெடுத்துள விழாவினாளென் றியைந்தமந் திரங்கள்கூறி
நெடுத்துள தம்பத்துச்சி நிறையறி வேய்ந்த தென்னத்
தொடுத்துள நந்தி தீட்டுத் துவசமேற் றிடுவரன்றே.
உற்சவ வேளையில் ஒலிக்கும் நாதங்களின் சிறப்பு

பிரதம தோற்கருவியாகிய முரசு, பாம்பின் படம் போன்ற நாதஸ்வரம், ஓங்கி ஒலிக்கும் கைத்தாளம், சின்னம் எனப்படும் தட்டை வாத்தியம், புரிகளமைந்த சங்கு, கொம்பு வாத்தியம், தூரம் ஒலிக்கும் கண்டாமணி ஆகிய இவ்வாத்தியங்கள் அனைத்தும், நாகங்களின் தீவு எனப்படும் நயினையம்பதியில் ஒன்று சேர்ந்து யாவரும் கேட்கத் தக்கதாய்க் கிளர்ந்து கிரியைகளில் இடம்பெறும் ஓசைப் பெருக்கினையே கேட்க முடியாதவாறு அடங்கி மேலோங்கி ஒலிக்கும்.

உரியுடை முரசந்துத்தி யோங்குசல்லரியே சின்னம்
புரியுடைச் சங்கங் கோடு பொற்செய கண்டியாய
வரியடைத் தரணியெல்லா மறிந்திட வணிகளாகிக்
கிரியுடைக் கனம்வாய் பொத்தக் கிளைத்தன விசைக்குமன்னோ.

kodi

அண்டங்கள் அசைவதுபோல் அம்பிகையின் தேர் அசையும் காட்சி

தேரின் வலம், இடம் ஆகிய இருப்பக்கங்களிலும் சூரிய, சந்திரர்கள் உருளைகளாகிச் சுழல்வது போலவும், கூட்டமாகச் சேர்ந்துள்ள ஆலவட்டங்கள் அசைந்து செல்லவும், மேல் கீழ் உலகத்தினர் யாவர்க்கும் சூரிய சந்திரர்களை ஒன்றுசேர ஒரே வேளையிற் காணச்செய்து கொண்டு, அண்டங்கள் யாவும் அவற்றிலுள்ள சராசரங்களும் அசைந்து செல்வதுபோல் அம்பிகையின் தேரானது அசைந்து முன்னகரும்.

பக்கமொ ரிரண்டிற் றிங்கள் பரிதிபெற்றுள்போய் விம்மித்
தொக்கபே ராலவட்ட மசைவமுற் கடரானோரை
மிக்ககீழ் மேல்பாலார்க்கு நித்தலு மேவக் காட்டிப்
புக்கபாரண்ட மெல்லா மசைந்தெனப் புவனைமுன்னம்.

சுடர் கொண்டெரியும் எண்ணற்ற பல்தலைத் தீவர்த்திகள் பரவலான ஒளிச்சுடர்களுடன் விளங்கல், பல்தலை நாகங்கள் உச்சிகளில் பொருந்திய பலவாகிய சுடிகைகளில் தோன்றிய இரத்தினங்கள் ஒளிவீசும்படியாக, அம்பிகை திருமுன்நின்று படம் விரித்தாடுதலை ஒத்ததாகின்றது.

மற்றிவை யன்றித் தீசேர் வர்த்திக ளளம்பின்றாய
பொற்பஃறலைய சோதி பொழிவது கெழீஇயங்கம்
பற்பல சுடிகை பூக்கும் பருமணி யெறிக்கப்பைக
ளற்பொடு விரித்து நின்றே யாடுதல் போலுமாதோ.

பல்வேறுபட்ட நிறங்களுடைய சிறப்புமிக்க பட்டாடைகளால் மூடி அமைக்கப்பட்ட அழகிய குடைகளின் நெருங்கிய கூட்டமானது, ஏனைய அண்டங்களும், தம்மிடம் வாழ்வோரும் அம்பிகையின் தரிசனம் காணப்பெற்றுய்தியடைய வேண்டுமெனும் பெருவிருப்போடு, அங்கு வந்து திரண்டதுபோற் காட்சியளிக்கும்.

பன்னிறம் படைத்த கோலப் பசியபட்டாடை வேய்ந்த
பொன்னிருங் கவிகையெல்லாம் பொலிவன பிறவாமண்டந்
தன்னிலுற் றவரியாருந் தற்பரை கோலங் காண்பா
னுன்னிமற் றவைக ளாண்டை யுற்றது போலுமன்றே.

வேதங்களை நுனித்து ஆராந்தறிந்து கொண்ட வல்லுநர்களாகிய அந்தணர்கள் சிவ சின்னங்களாகிய கண்டிகையும், நீறும் தாங்கிய சரீரத்தினராய், அம்பாளை உளத்தே கொண்டு அவள் முன்னிலையினையடைந்து, உயரிய பொருளமைதி கொண்ட வேத மந்திரங்களை முறைப்படி பாராயணஞ் செய்து, குதூகலத்துடன் ஆனந்த பாஷ்பம் தோய்ந்த முகத்தினராய், மனங்குழைந்து, தேவியைத் துதித்து வேண்டிச் செல்வர்.

தேர்ந்துள மறையின் வல்லார் சின்னமா மணியு நீறுஞ்
சார்ந்துள மெய்யராகித் தழுவிமுன் னணியிநின்றே
கூர்ந்துள சுருதி யோதிக் குதூகலங் கொண்டு கண்ணீர்
வாந்துள முகத்தி னோடு மனங்குழைந்திரங்கிச் செல்ல.

najinai-ther-6

அடியவர்களின் பக்திப்பரவச எழுச்சி

உள்ளங் கசிந்துருகும் அன்பர்கள் சொரியும் ஆனந்தக் கண்ணீருடன் பல்வகை வாசனைத் திரவியங்கள் கலந்த குளிர்ந்த நறுநீர் நிரம்பிய நீர் விசிறிகள் மூலம் மேனோக்கி விசிறிய நறுநீர்த் திவலைகள், அம்பிகையின் திருமேனியைத் துடைத்ததுடன் நின்றுவிடாது, வீதிகளையும் குளமுறச் செய்கின்றன.

உளங்கசிந் துருகுமன்ப ரொழுகிய கண்ணீரோடு
வளந்திகழ் பனிநீரிட்ட வான்றுருத் திகள்கை யேந்திக்
களங்ககற் றிடுவா ரென்னக் கவுரிதன் மேனியெங்குங்
குளம்பட வீதிமுற்றுங் குறைவறத் தெளிக்கமன்னோ.

அடியார்கள் புங்கவி, அமலை, விமலை, மகா நாகபூஷணி, சாம்பவி, தேவி, சங்கரி என்று அம்பிகையின் பல்வேறு திருநாமங்களையும் பரவசத்தோடுச்சரிதது. நின்றவர்களாய்ப் புறமும் அகமும் ஒடுங்குகின்றனர். அவர்களை யறியாதே அவர்தம் கரங்கள் உச்சிமேற் குவிகின்றன.

புங்கவி யமலை விமலைமா நாகபூஷணி
சாம்பவி தேவி
சங்கரி யென்றென் றொடுங்கினா ரகமுந்தலை மிசைக்
கூப்பிடுங் கரங்கள்
பொங்குநீர் நாத மருங்கெலா மடர்ந்து பொலிந் தெழுந்
தசைந்திடுஞ் சோலைத்
தங்கிய கதிர்கான்றிருந்ததை யென்னத் தரிப்பிலார்
புடைதொறுஞ்சார.

மண்ணினாலாய கலங்களுள் இட்ட கற்பூரத்தையும் மேலதிகமாகச் சொரிந்த குங்கிலியத்தினையும் ஒரங்கு சேரப்பற்றிக் கொண்டு சுவாலித்தெரியும் தீச்சட்டிகளைத் தலையிற்றாங்கியோரின் அரஹர என்ற ஒலியுடன், தீயினின்றெழும் புகைமண்டலமும் ஒன்று சேரும். அதேவேளை மேளவாத்திய ஒலியுடன், அம்பிகையின் தோரிற் பொருத்தியுள்ள ஆடிகளினின்றும் வெளிப்படும் மின்னல் ஒளியும் கலந்து வானம், இருளும் மின்னலும் ஒலியுமாய்க் காட்சிதரத் தேரின் பின்வரும் அடியவர் ஏது பொருத்தமற்ற பருவத்தில் மழை என ஆச்சரியப்படுகின்றனர்.

வனைந்தமட் கலத்துட் சொரிந்திடும்பளித மாண்டகுக்
குலுக்கெரிமடுத்துப்
புனைந்தவர் சிரமே லரகர வென்னப் புகைத்திர
ணெருங்கிடமேளங்
கனைத்தொலி செய்யவூர்தியிற் படிகங்
காட்டிட மின்னலக் கவியு
மினைந்தரி பின்னின் றிதுமழை யேதிங்
கெனவறியாம னின்றேங்க.

திருவிழாவிற்கு வரும் அளவிட முடியாத அடியவர்கள்

திருவிழாவிற் திரண்ட மக்கள் கூட்டம் இவ்வளவினதெனக் கணித்துரைத்தல் முடியத்தக்கதன்று. புவியுட் புற்றமைத்துறைந்த எறும்புகளே வெளியே யூர்ந்து செல்லமுடியாத நிலை. ஒருவர் முன்னேறுதற்குத் தூக்கிய தனது பாதத்தினைப் புவியிற் பதித்தற்குச் சிறிதும் முன் சாயமுடியாது எடுத்த பாதத்துடன் நிற்க, அவ்விடத்தினுள் தமது பாதத்தினைப் பதிக்க நினைத்து உயர்த்திய வேறொருவர் முன்னவர் பாத் தமது பாதமெனும் எண்ணத்தில் அப்பாதத்தினைத் தமது பாதத்தினாற்றடவிக் கொள்கின்றார்.

ஈண்டிய சனத்தின் றிரளினை யென்னென் றியம்புவது
மம்புவியிடத்திற்
றோண்டிய குழிசேர் பிபீலிகை யூருந் தொன்னெறி
யின்மையாலவர்தந்
தாண்டிய பதத்திற் படர்தலுங் குனியாத் தகையினர்
னோக்கிமற் றொருவர்
வேண்டிய பதத்திற் புகுந்தனதாளான் மெலத்துடைத்
தனர்தம தென்றே.

தேவர்களுக்கும் தலைவியாகிய நாகராசேஸ்வரி எழுந்தருளும் வீதிகள்தோறும், தேவியை ஆராதிக்கும் வினைகளைப் புரியும் அடியார்கள், தங்களின் அன்பின் வெளிப்பாட்டுச் சின்னமாகக் குளிர்ந்த சுத்த ஜலம் நிரப்பப்பெற்ற பூரண கும்பங்களில் முறைப்படி தேங்காய், மாவிலை, பூக்கள் என்பன நிறைத்து வைத்துச் சுடரேற்றியதுடன் அமையாது. சிறந்த கனிவர்க்கங்களுடன் தேங்காய், படையற் பண்டங்கள் புதியனவாய்ப் படைத்து, வெற்றிலை பாக்கும் நிவேதித்துக் கர்ப்பூர ஆரதியும் உயர்த்தி உளம் நெகிழ்ந்து உருகுவர்.

விண்ணோர் தலைவி யெழுந்தருளும்
வீதிதோறும் வினைபுரி வார்
தண்ணார் புனற்பூ ரணகும்பந் தனைவைத்தருகிற்
சுடர் கொளுவி
எண்ணார் கனியுந் தேங்காயுமினிதா மடையும்
பழுக்காயு
முண்ணா நிரைத்துப் பளித விளக்குயரா வெருப்ப
ருளநெகிழ் வார்.

முன்னைய பாடலில் ஆண்டிற் புகுப்புணர்த்தியவர், இப்பாடலில் அறிவு முதலியவற்றிற் பகுப்புணர்த்துகின்றார்.

கல்வியிற் கரைகண்டோரும் எண்ணற்றவர், கல்வியைக் கற்போரும் எண்ணற்றவர், குற்றம் நீங்கிய அறவாணரும், அளவற்றோர், பொருட்செல்வம் பெருகிய மேலாளரும் அளவற்றோர், பல்வகைத் தேட்டங்களும் கொண்டோர் பலராவர், பக்தி முத்தி பெற்றோரும் பலராவர். பல்வேறு பணிபுரிவோரும் கணக்கிலடங்கார். அம்பிகையிடம் வேண்டல், விரும்பல், முறையிடல் எனும் எண்ணங்களுடன் வருவோரும் அநந்தராவர்.

கற்றவ ரனந்தங் கல்வி கற்பவ ரனத்தங் கோதி
னற்றவ ரனத்தஞ் செல்வ நராதிப ரநத்தந் தேட்டி
னுற்றவ ரனந்த முத்தி யோகரு மனத்தங் கைசெய்
மற்றவ ரனந்த மெண்ணி வருவது மனந்த மன்றே.

(கோது 10 இல் – கோதில் – குற்றமற்ற் தேட்டம் – தேடிப் பெற்றவை, பொருள் பண்டங்கள்; கை – கைப்பொருள், கைத்தொழில்; அநந்தம் – அனந்தம் – அளவற்றது)

devotees

நேர்த்தி செய்தல்

பலர் தங்களதும், தங்கள் குடும்பத்தவர்களதும் அங்களில் ஏற்பட்ட குறைபாடுகள், நோய்கள் என்பன குறித்து, அவை குணமடைய வேண்டுமென்று பிரார்த்தித்து நேர்த்தி செய்து, அடையாளச் சின்னங்களாக விலையுயர்ந்த பொன், வெள்ளி, தாமிரம் என்னும் உலோகங்களாற் செய்யப்பட்ட அவ்வவ்வுறுப்புக்களின் உருவங்களைக் கொணர்ந்து காணிக்கையாக்குவர். குழந்தைப் பேறற்றோர் தமக்குக் குழந்தைச் செல்வம் பெருக வேண்டும் என அம்பிகையை வேண்டிக் குழந்தை தாங்கிய தொட்டில்களைக் கொணர்ந்து அர்ப்பணிப்பர்.

அங்கமீ துற்ற தீநோ யதுவதற் கிலக்க தாகத்
தங்க மாலங்கம் மற்றும் தாமிர மிவற்றா லுற்ற
பங்க நீங்குறுப் பதேபோற் பலகொடு வருவார் பல்லோர்
துங்கமார் குழவி தூங்குந் தொட்டில் கொண்டுறு வார்பல்லோர்.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *