Search
Thursday 27 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நயினை மான்மியம்

நயினை மான்மியம்

டாக்டர். சி. யமுனாநந்தா

நயினை நாகபூசணியம்மனின் தலச்சிறப்பை மெய்யுணர்வால் அறியும் போது அஃது பாற்கடலில் திருமாலுக்கு அணையாக அமைந்த ஆதிசேடனின் திரு அமைவாக உணர முடிகின்றது. இதனை நயினை மகாகவி நாகமணிப்புலவரின் தல விசேடச் சருக்கத்தின் முதலாவது பாடலில்,

‘பாருடன் புகழத்திகழ் சிகாமணிபோதற்
படிந்ததந் தன் நயினையம்பதியே’

எனக் காணலாம். இங்கு சிகாமணி என்பது ஆதிசேடனைக் குறிப்பதாகும்.

தில்லைவனத்தில் வியாக்கிரமபாதரின் வழிபாட்டினால் நடராஜப் பெருமானின் ஆனந்த நடனம் கைகூட அதனைக் கண்டு களிக்க திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட திருமாலிற்கு அணையாக அமைந்த ஆதிசேடன், திருமாலிடம் இருந்து விடைபெற்று நாகலோகம் சென்று அங்கிருந்து ஒரு பிலத் துவாரத்தின் வழியே தில்லையம்பதியை அடைந்தார். நாகலோகத்தில் திரு அமைவின் எச்சமாக புளியந்தீவில் அம்மன் ஆலயம் அமைந்து உள்ளது. இங்கு தற்போதும் நாகசர்ப்பங்கள் மிகுந்து உள்ளன. ஆதிசேடன் தில்லையம்பதியை அடைந்து தனது பாம்புருவை விட்டு மனித உடலோடு ஐந்து தலைகளுடன் பதஞ்சலியாக சிவனை வணங்க திருநடனக்காட்சி அளிக்கும் நாள் கைகூடியது. அந்நாளே தை மாத குருவாரத்தில் பூச நட்சத்திரமும் பூரணையும் கூடிய நன்னாள்.

அன்று தில்லையில் ஆனந்தக்காட்சி தருவதற்கு சிவகாமி சமேதராய் நடராஜர் காட்சி தந்தார். தேவலோகமே அவர் பின்னால் திரண்டிருந்தது. எல்லோரும் ‘சிவ சிவ’ என சிரம் மீது கரம் கூப்பி ஆராதித்தனர். பாற்கடலில் வாமன அவதாரத்தில் திருமால் அருளிய போது கருடப்பட்சியாகவும், வாசுகிப் பாம்பாகவும் இருந்த திருவமைவுகளே தற்போது நயினாதீவில் காணப்படும் கருடன் கல்லும் பாம்புக்கல்லுமாகும். வாமன அவதாரத்தின்போது திருமாலின் சக்கரத்தின் திருவமைவே வல்லிபுரஆழ்வார் ஆலயத்தின் கர்ப்பக்கிரகத்தில் உள்ள சக்கரமாகும். ஆலகாலவிடத்தை சிவன் தனதுமிடறில் தடுத்த பார்வதி அம்மனுக்கும், ஆலகாலவிடம் தாக்காது காத்தது நாக சர்ப்பம். இவ்வாறு நாகம் பூசித்த அம்மனான பார்வதிதேவியே நாகபூசணி. இத்திருவமைவே நாகபூசணி அம்மன் ஆலயத்தில் கர்ப்பக்கிரகத்தில் உள்ள அம்மனும் அதனைப் பூஜிக்கும் நாகமும் ஆகும். இது தேவியின் 64 சக்திபீடங்களில் ஒன்றாகும்.

திருப்பாற்கடலில் அமுதம் கடைந்தபோது கிடைத்த அட்சய பாத்திரமே அமுதசுரபி ஆயிற்று. நாகங்கள் ஆதிசேடனின் இரத்தினத்தை அரியணையாக வைத்து வாழ்ந்து வந்தனர். விஸ்ணுவின் அவதாரமான கௌதமரும் இப்புனித தலத்தை தரிசித்தார். இவ்வாறு கௌதம புத்தர் தரிசித்தமையினால், இன்று சிங்கள பௌத்தர்கள் இப்புனித தலத்திற்கு வந்து வணங்கி அருளினைப் பெறுகின்றனர்.

ஆனால் இந்துசமயத்தைச் சேர்ந்தவர்கள் சைவர்கள், வைஸ்ணவர்கள். இத்தலத்தின் புனிதத்தன்மையை முற்றாக அறியாமையினால் இங்கு தலயாத்திரை மேற்கொள்வதில்லை. உண்மையில் இந்துக்கள் தரிசிக்க வேண்டிய புனித தலங்களே நயினாதீவும் புளியந்தீவும் ஆகும். புளியந்தீவில் இன்னும் உள்ள நாகங்கள் ஆதிசேடன் பிலத்துவாதம் வழியாக தில்லைவனத்தை அடைந்தமைக்கான திருவமைவுச் சான்றாகும். இந்நாகங்களே நயினை அம்மனைப் பூஜித்து வந்தன.

சைவர்கள், வைஸ்ணவர்கள், பௌத்தர்களுக்கு புனிதத்தலமாக மட்டுமல்ல மானிடகுலத்திற்கு ஓர் ஆன்மீக மேம்பாட்டிற்கான புனிதத்தலமாக நயினை அமைகின்றது.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *