தலைப்பு செய்திகள்

நவீன இயற்பியல் கோட்பாடுகளும் திருமந்திரத்தில் பொதிந்துள்ள உண்மைகளும்

நவீன இயற்பியல் கோட்பாடுகளும் திருமந்திரத்தில் பொதிந்துள்ள உண்மைகளும்

மருத்துவர். சி. யமுனாநந்தா

அகிலத்தின் தன்மையை ஆராயும் பௌதீகம் கடந்த சில நூற்றாண்டுகளாக பல விஞ்ஞானக் கருத்துக்களை முன்வைத்து வருகின்றது. கலிலியோ, நியூட்டன், ஐயன்ஸ்டீன், ஸ்டிபன் ஹாக்கின்ஸ் என்பவர்களது கோட்பாடுகளுக்கு அப்பால் தற்போது விஞ்ஞானம் புதிய கோட்பாடுகளை நோக்கி முன்னேறியுள்ளது. அண்மைய பௌதிக விஞ்ஞானிகள், எல்லா நிகழ்வுகளும் ஒரு குறித்த கேத்திரகணித உருவின் வடிவில் சமச்சீராக நிகழ்வதாக நம்புகின்றனர். இதனை அனைத்துக்குமான கேத்திரகணிதக் கோட்பாடு (A Geometric Theory of Everything) என்று அழைக்கின்றனர். இக் கோட்பாட்டின் பிரகாரம் அகிலத்தில் உள்ள திணிவைத் தரும் துணிக்கைகளும் சக்தியை தரும் துணிக்கைகளும் கேத்திரகணித மாதிரியில் அமைந்து உள்ளன. இக் கோட்பாடுகளில் திணிவை உடைய துணிக்கைகள் போசான் என்றும் (Boson) சக்தியை உடைய துணிக்கைகள்/பேர்மியோன் (Fermions) அழைக்கப்படுகின்றன. இவைகளே அகிலத்தின் அடிப்படைத் துணிக்கைகளாக அமைகின்றன. இவை நுண்ணிழை அமைப்பில் 248 வகையான பரிதியில் ஒன்றை ஒன்று தழுவிய வண்ணமும், சுற்றிய வண்ணமும் நடனமிட்டுக் கொண்டு காலவெளித் தளத்தில் அமைகின்றன என E8 கோட்பாடு கூறுகின்றது.

திணிவுடைய துணிக்கைகளும் அவற்றுடன் இணையான சக்தியைத் தரும் துணிக்கைகளும்:

Boson (போசான்) Fermions  (பேமியோன்)
1.   Phoon  (போட்டோன்) ஒளி அலைக்குரிய கணியம் Neutrons
2. Weak bosons Electrons
3.  Glu ons Up quark
4.  Gravitons ஈர்ப்பு விசைக்குரிய கணியம் Down quark
5. Frame – Higgs Up quark
6. Weaker bosons Down quark
7. X bosons Up quark
8. More Higgs Down quark

 

ஒவ்வொரு நுண்ணிழையிலும் ஒரு வகையான சக்தியும், ஒரு வகையான திணிவுத் துணிக்கையும் அவற்றின் இணைக்கும் துணிக்கையுமாக மும்மிணைப்புக் காணப்படும் என E8 கோட்பாடு விளக்குகின்றது. குவாண்டம் பௌதீகத்தின் ஆராய்ச்சிகளும் புதிய கண்டுபிடிப்புக்களும் இவ்வாறு நவீன தத்துவங்களுக்கு ஊடாக மிளிருகின்றது.

இவ் ஆராய்ச்சியாளர்களுக்கு சிவநடனம் பற்றியோ தமிழில் பெருமையைப் பற்றியோ, திருமந்திரம் பற்றியோ எதுவுமே தெரியாது. ஆனால் E8 Theory of Everything Model, இக் கோட்பாட்டின் மாதிரி சிதம்பர சக்கர அமைப்பினையே உடையது. இதனை திருமந்திரத்தின் 91ம் பாடலில் காணலாம்.

இருந்த இவ் வட்டங்கள் ஈராறிரேகை
இருந்த விரேகை மேல் ஈராறிருத்தி
இருந்த மனைகளும் ஈராறு பத்தொன்று
இருந்த மனை யொன்றில் எய்துவன் தானே.

அகிலத்தின் இயக்கத்தினை சிவ நடனமாக திருமந்திரத்தின் 913ம் பாடல் எடுத்துக் கூறுகின்றது.

ஒன்று இரண்டு ஆட ஓர் ஒன்றும் உடன் ஆட
ஒன்றினின் மூன்றாட ஒரேழும் ஒத்தாட
ஒன்றினால் ஆடவோம் ஒன்பதும் உடன் ஆட
மன்றினில் ஆடி நான் மாணிக்கக்கூத்தே

இங்கு ஒன்றினின் மூன்றாட என்பது E8 Theory இன் Triality தன்மையை விளக்குவது போல் அமைகின்றது.

உலக ஒழுக்கத்தின் போதும், தோற்றத்தின் போதும், “ஓம்” என்னும் பிரணவ ஒலியுள் ஒடுங்கும் ஒலியில் தோன்றும் என்பதனைத் திருமந்திரப்பாடல் 381 குறிப்பிடுகின்றது.

ஆதியோடு அந்தம் இலாத பராபரம்
போத ம தாகப் புணரும் பராபரை
சோதி அதனில் பரந் தோன்றத் தோன்றுமாம்
தீதில் பரையதன் பால் திகழ்நாதமே

இதுவே படைப்பின் முதல் படியாகும்…..பாம் + அபரம் என்பது பராபரம். முதலும் முடிவும் இல்லாத சங்கும் நீக்கமற நிறைந்து இருக்கின்ற பரம்பொருள். இதனையே நவீன சார்பியல் கோட்பாடுகள் Unified field theory என நிறுவ முற்படுகின்றன.

அடுத்து குவாண்டம் பௌதீகத்தின் அடிப்படையாக Bosons, Fermions அமைகின்றன. இங்கு போசோன்கள் சக்தி உடைய துணிக்கைகளைக் கூறப்படுகின்றது. இது விந்துவைச் சுட்டுவதாக அமைகின்றது. அடுத்து/பேமியோன் திணிவை உடைய துணிக்கைகளாக அமைகின்றன. இது நாதத்தினைச் சுட்டுகின்றது.

நாதவிந்து நவசிவாயம் என திருமந்திரத்தின் 382ம் பாடலில்
நாதத்தில் விந்துவும் நாத விந்துக்களில்
தீதற்று அகம் வந்த சிவசக்தி என்னவே
பேதித்து ஞானங்கிரியை பிறத்தலால்
வாதித்து இச்சையில் வந்தெழும் விந்துவே

என உலகப் படைத்தலின் ஓம் என்ற ஒலியின் தன்மையைக் கூறுகின்றது. இதுவே குவாண்டம் பௌதீகத்தின் அடிப்படைத் துணிக்கைகளாக அமைகின்றன. அதாவது சக்தி உள்ள துணிக்கைகள், சக்தி அற்ற துணிக்கைகள் என்று அவை வகைப்படுத்தப்படுகின்றன.

ஓம் என்னும் பிரணவ வடிவம் இறைவனின் ஆனந்தத் தாண்டவத்தின் உட்பொருள் ஆகும். இதனை திருமந்திரத்தின் 887வது பாடல் பின்வருமாறு கூறுகின்றது.

ஆமே பொன் அம்பலம் அற்புதம் ஆனந்தம்
ஆமே திருக் கூத்து அன வரத தாண்டவம்
ஆமே பிரளய மாகும் அத் தாண்டவம்
ஆமே சங்காரத்து அரும் தாண்டவங்களே.

தில்லைப் பொன்னம்பலத்தில் இறைவன் ஓயாது ஆடிக் கொண்டிருக்கின்றான். இறைவன் ஓயாது ஆடும் தாண்டவம் அவைரதத் தாண்டவமாகும். மேலும் அற்புதத் தாண்டவம், ஆனந்தத் தாண்டவம், அவைரதத் தாண்டவம், பிரளயத் தாண்டவம், சங்காரத் தாண்டவம் என அகிலத்தின் அனைத்து இயக்கத்தையும் குறிக்கின்றது. Theory of everything ,y; consciousness கோட்பாட்டிற்குள் வரையறுக்கப்படுபவை இவையே ஆகும்.

இதனை உணர்ந்தவர்கள் சித்தர்கள் என திருமந்திரத்தின் 124ம் பாடல் குறிக்கின்றது.

வெளியில் வெளிபோய் விரகியவாறும்
அளியில் அளிபோய் அடங்கியவாறும்
ஒளியில் ஒளிபோய் ஒடுங்கியவாறும்
தெளியும் அவரே சிவ சித்தர் தாமே.

Expanding Universe தத்துவத்தையும், Blackhole, Warmhole தத்துவத்தையும் எளிமையாக மேற்குறித்த திருமந்திரப்பாடல் வெளிப்படுத்துகின்றது.

பேரொளியோடு பாரொளி விளங்குவதைத் திருமந்திரப் பாடல் 1274 விளக்குகின்றது.

காரொளி அண்டம் பொதிந்துல கெங்கும்
பாரொளி நீரொளி சாரொளி காலொளி
வானொளி ஒக்க வளர்ந்து கிடந்து பின்
நேரொளி ஒன்றாய் நிறைந் தங்கு நின்றதே.

குவாண்டம் பௌதீகத்தின் அடிப்படையாக நாதமும் விந்துவும் விளங்குகின்றன. இதனை 1276 வது திருமந்திரப் பாடல்

விந்துவும் நாதமும் ஏக்க விழுந்திடில்
விந்துவும் நாதமும் ஒக்க விரையதாம்
விந்திற் குறைந்திடும் நாதம் எழுந்திடில்
விந்துவை என்மடி கொண்டது வீசமே

நாத விந்து மண்டலமே அகிலம் எனக் கூறப்படுகின்றது. ஒளி அணுக்கள் (Photons) இரண்டு விதமாக உள்ளன என்பதனை 1277வது திருமந்திரப் பாடல் எடுத்துக் காட்டுகின்றது.

வீசம் இரண்டுள நாதத் தெழுவன
வீசமும் ஒன்று விரைந்திடு மேலுற
வீசமும் நாதமும் எழுந்துடன் ஒத்த பின்
வீசமும் விந்து விரிந்து காணுமே.

இதன் தொழில் நுட்பத்தினையே சீன விஞ்ஞானிகள் குவாண்டம் கணனியில் பயன்படுத்துகின்றனர்.

உயிர்மூச்சு என்பதை தனஞ்சயன் என்ற காற்றாக திருமந்திரம் விபரிக்கின்றது. இக்காற்று உடலில் ஒன்பது இடங்களில் இருக்கின்றது. இக்காற்று 224 உலகங்களிலும் வாழும் உயிர்களில் இருக்கின்றது. இக்காற்று இருக்கும் வரைத்தான் உயிர் இருக்கும். இதனை விளக்கும் 654வது திருமந்திரப் பாடல்:

இருக்கும் தனஞ்சயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற்று இருபத்து நான்காய்
இருக்கும் உடலில் இருந்தில ஆகில்
இருக்கும் உடல் அது வீங்கி வெடித்ததே

இது ஆன்மாவுக்கு சார்பியல் அடையாளத்தைக் கொடுக்கின்றது.  பரமனோடு ஆன்ம ஒளி அடங்கும் இன்பநிலை என்பது நவீன சார்பியலில் Unified field theory of Consciousness என்ற வடிவில் ஆராயப்படுகின்றது. ஆன்மாவும் அகிலமும் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று விரகுகின்றது என்பது பற்றி ஆய்வுகளே அவை. அதனை திருமந்திரம் சோதியின் சுடராய் என 135ம் பாடலில் கூறுகின்றது.

சத்த முதல் ஐந்தும் தன்வழித்தான் சாரில்
சித்துக்குச் சித்தன்றிச் சேர்விடம் வேறுண்டோ
சுத்த வெளியில் சுடரில் சுடர் சேரும்
அத்தம் இது குறித்து ஆண்டு கொள் அப்பிலே

உடலாக, உயிராக, அது உணரும் உணர்வாக, உள் ஒளிரும் தீச்சுடராய், எட்டாத் தொலைவாய், விண்ணும் மண்ணும் அளக்க நின்ற பேருருவமாய், உலகைத் தாங்கும் ஆதாரமாக, சூரியனாய், சந்திரனாய் இவற்றை ஆளுகின்றவனாய் பரம்பொருள், அண்டம் முழுவதும் கலந்து நிற்பதை திருமந்திரப் பாடல் 374 குறிக்கின்றது.

ஊனாய் உயிராய் உணர் அங்கியாய் முன்னம்
சேணாய் வான் ஓங்கித் திரு உரு வாய் அண்டத்
தாணுவம் ஞாயிறும் தண் மதியுங் கடந்து
ஆள் முழுது அண்டமும் ஆகி நின்றானே.

இங்கு குறிப்பிடப்படும் அண்டத்தாணு என்பது உலகைத் தாங்கும் அச்சு எனப் பொருள்படும். இதனையே Theory of everything மாறியின் சமச்சீர் அச்சாகக் கருதலாம்.

நவீன இயற்பியல் கோட்பாடுகளின் சாரம் திருமந்திரத்தில் பொதிந்து உள்ளது. திருமந்திரம் ஒரு யுக நூல். இதனை திருமூலர் தமிழுக்கு அருளியமையானது தமிழுக்கு கிடைத்த மிகப் பெரும் சொத்தாகும். இதன் கருத்துக்கள் காலத்துக்கு காலமே உலகில் புரியும். இயற்பியலின் முதன்மையானதே சிவ தத்துவமும் சிவ நடனமும் ஆகும். இதனைத் திருமூலர் தனது 901வது பாடலில் அகிலம் காக்க அருளும் கூத்து என அருளுகின்றார்.

தானே தனக்குத் தகுநட்டந் தானாடுந்
தானே அகார உகாரம தாய்நிற்குந்
தானே ரீங்காரத்; தத்துவக் கூத்துக்குத்
தானே உலகில் தனிநடம் தானே

இதனையே இக்கால இயற்பியல் விஞ்ஞானிகள் Theory of everything அனைத்திற்குமான கோட்பாடு என வடிவமைக்க முனைகின்றனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *