செய்திகள்

நெஞ்சே எழு 3 – பிக் பொஸ் சமூகம்

க.ஜெனார்த்தனன் (பயிற்சியாளர், BBA, MPM, NDTHRD, IFMA )

1999 ஆம் ஆண்டு நெர்லாந்தைச் சேர்ந்த வெரொனிக்கா தொலைக்காட்சியில், டச் மொழியில் முதன் முதலாக ஒளிபரப்பு செய்யப்பட்ட ‘பிக் பிரதர்’ நிகழ்ச்சி அன்றைய காலத்திலேயே பல வாத பிரதிவாதங்களுக்கு உள்ளாக்கப்பட்டது. தனி மனிதனின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளதாகவும், பார்வையாளர்களுக்கு விசமத்தனமான சிந்தனைகளை இவை தூண்டுவதாக உள்ளதாகவும் கருத்துக்கள் அப்போதே வந்தன. எனினும் இன்று இந்தியாவரை இதுபோல நிகழ்ச்சிகள் உள்வாங்கப்பட்டு தமிழிலும் நடைபெற்றுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொருவருமே தம்மைச்சுற்றி ஈகோ என்ற காற்று பலூன்களை கட்டி வைத்துள்ளனர், எவர் அந்த காற்று பலூனுக்கு அருகில் குண்டூசியுடன் நிற்கிறார்களோ அவர்கள் மேல் இவர்களுக்கு கோவம் வந்துவிடுகின்றது என்பதே யதார்த்தம்.

இன்று பிரபலமாக பேசப்படும் பிக் பொஸ் நிகழ்ச்சியிலும் பாருங்கள்… இன்றைய காலத்தில் கைகளில் ஒரு ஸ்மார்ட் போன் இல்லாமல் இருப்பது என்பதே வழமைக்கு விரோதமான ஒன்றாகவே கருதப்படுகின்றது. இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள், வெளி உலகத்தொடர்புகள் எதுவும் இல்லாத நிலையில், அதேவேளை இணையமோ அல்லது, தொலைபேசியோ, ஏன் புத்தகம் பத்திரிகை கூட படித்துவிட முடியாத நிலையில் வைக்கப்படுகின்றனர். இந்த புறக்காரணிகள் போதும் அவர்களின் மனங்களை உளவியலாக தாக்கம் ஏற்பட வைப்பதற்கு.

தமிழிலும் இந்த நிகழ்ச்சியை கலைஞர் கமல் ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிவருகின்றார். இங்கும் பல வாத பிரதிவாதங்கள் நடக்காமல் இல்லை, அதற்கு பதிலளிப்பதுபோல் ‘இந்த நிகழ்ச்சி ஒரு போதிமரம் போன்றது என வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் ஆடுகளாக இதைப்பார்த்தால் குளைகளும், புத்தனாக இதைப்பார்த்தால் ஞானமும் தெரியும்’ என கமல் தெரிவித்திருந்தார்.

bossசரி.. புத்தனாக இந்த நிகழ்ச்சியால் என்ன ஞானங்கள் கிடைக்கும் என்பதே இந்தப்பகுதி!

இங்கே ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டிருக்கும் பல பாத்திரங்களை அவர்களுக்கு தெரியாமலேயே நீங்கள் வெளியில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கின்றீர்கள். அவர்கள் சிலரின் நடவடிக்கைகள் உங்களுக்கு நல்லதாகவும், சிலரின் நடவடிக்கைகள் அருவருக்கத்தக்க வகையிலும் இருப்பதாக உள்ளது. பல விடயங்களையும் வெளியில் இருந்து பார்ப்பதனால் அங்கே நடப்பவற்றின் உண்மையான நன்மை தீமைகளை பெரும்பாலானவர்களால் உணரக்கூடியதாக உள்ளது. அதேவேளை இவர்களும் அதன் உள்ளே இருந்தார்களானால் இவர்களாலும் எவர் சரி எவர் பிழை என்பதை காணமுடியாது போய் தமக்கு சாதகமானவர்கள் செய்பவையே சரி என்ற மனநிலையிலேயே இருப்பார்கள். இங்கே வெளியில் இருந்து பார்க்கும் மனநிலையே உண்மைகளை அறிய உதவுகின்றது.

நாம் ஒவ்வொருவருமே மற்றவர்களின் தவறுகளுக்கு சிறந்த நீதிபதிகளாகவும், நமது தவறுகளை நியாமாக்க மிகச்சிறப்பான சட்டத்தரணிகளாகவும் உள்ளோம். நமக்கான பிரச்சினைகள், சம்பவங்களை நாமே வெளியில் இருந்து மூன்றாவது நபரின் கண்ணோட்டத்தில் நமது செயற்பாட்டை அவதானிப்போமானால் பல பிரச்சினைகளும் மனப்பாரங்களும் நொடிப்பொழுதில் தீர்க்கப்படக்கூடும் என்பதில் சந்தேகமில்லை. எனவே நம்மையே வெளியில் இருந்து பார்க்கும் மனோநிலையினை நாம் வளர்த்துக்கொள்வது அவசியமாகின்றது.

அடுத்த விடயம் ஒருவரைப்போல அத்த குண இயல்புடன் மற்றவர் இருப்பார் என்பது கட்டாயம் இல்லை. இருவரின் கருத்துக்களும் ஒத்ததாக இருக்கவேண்டும் என்பதும் கட்டாயமானதல்ல.

உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். அதனால்தான் ஓவியப்பாடம் நடத்தப்படும்போது அல்லது ஓவிய பயிற்சிகளின்போது ஒரு பொருளை பார்த்து வரைய சொல்லும்போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணங்களை கொடுக்கின்றனர்.

அதேபோல ஒவ்வொருவரின் மன ஓட்டங்களும் ஒவ்வொருவிதமாக இருக்கும் அவ்வளவுதான். உதாரணத்திற்கு உலகில் அனைத்துமே ஒரே நிறமான வெள்ளையாக இருக்கின்றது என்று வைத்துக்கொள்ளுங்கள் உலகம் நன்றாகவா இருக்கும்?. நிறைய வர்ணங்கள் சேரும்போதுதானே அனைத்தும் நன்றாக இருக்கும்.

!cid_15d82331aaf35155f251அதேபோலத்தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிறங்கள் உண்டு. ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள், ஒவ்வொரு நிறத்தையும் இரசிப்பதுபோல நாம் ஒவ்வொரு குணங்களையும் இரசிக்கதொடங்கினால் எதுவும் ஆனந்தமே.இவர் இப்படி, இவர் இதுதான், இவர் சரிவரமாட்டார் இவர், துரோகி, இவர் எதிரி, என்ற விம்பங்களை எம் மனம்தான் போட்டுக்கொள்கிறது. அந்த விம்பங்களை பிடுங்கி எறிந்துவிட்டு, எல்லோரும், எல்லாமும், என இருந்து, அத்தனையையும் இரசிக்கப்பழகினால் யாவருக்கும் சந்தோசமே அல்லவா?

பிக் பொஸ் நிகழ்ச்சியில்கூட ஒருவரின் நடத்தையினைப்பார்த்து பார்வையாளர்கள் பலர் உச்சக்கட்ட கோபத்திற்கும், எரிச்சலுக்கும் உள்ளாகப்படுகின்றனர். உண்மையில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அந்த நபரின் நடத்தையைப்போல் தான் நடந்திருப்பதையும், இனி வருங்காலங்களில் அவ்வாறான நடத்தையில் தான் ஈடுபாடது இருக்கவேண்டும் என்பதையும் அவர்கள் அதே கோபங்களுடன் ஏற்றுக்கொண்டார்களானால் சிறப்பானதுதான்.

நாம் எந்த லென்ஸின் ஊடாக உலகத்தைப்பார்க்கின்றோமோ, அந்த லென்ஸையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

நாம் பார்க்கும் உலகத்தை நாம் எப்படி அர்த்தப்படுத்திக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து அந்த லென்ஸ் தன் வடிவத்தை மாற்றிக்கொள்கின்றது.

எங்களை திறமையானவர்களாக மாற்றிக்கொள்ள முதலில் நாம் எம்மை மாற்றிக்கொள்ளவேண்டும், அதன்பின் முக்கியமாக எமது கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ளவேண்டிய தேவையும் உள்ளது.

ஆரம்பத்தில் நல்ல நணபர்களாக இந்த நிகழ்ச்சியில் இருந்தவர்களையும், பின்னர் ஒருவரை ஒருவர் குறைகூறுவதையும், பிரச்சினை படுவதையும் அறவே ஒருவரை மற்றொருவர் வெறுப்பதையும் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். நால்வர், அல்லது ஐவர் சேர்ந்து தமக்கான சௌகரியமான வட்டங்களை அமைத்துக்கொண்டு தமக்கு ஒவ்வாதவர்களை வெளியேற்ற போடும் திட்டங்களையும் கண்டிருப்பீர்கள். இந்த பிரச்சினைகள் அந்த பிக் பொஸ் வீட்டில் மட்டுமல்ல நாம் வாழும் சூழலில் பல முக்கியமான இடங்களிலும் இல்லாமல் இல்லை.

நட்பு கொண்டவர்கள் நாணையத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவர்கள். இருவருக்கும் நட்பின் அனுபவிக்கும் உரிமை சமனானதே. அதைவிட்டுவிட்டு ஒருவர்மேல் ஆதிக்கம் செலுத்த தலைப்படும்போது தான் நட்பு நரகமாகிப்போகின்றது.

சரியோ தவறோ எம் நண்பர்களையும் ஒரு முடிவு எடுக்கும்போது சேர்ந்து அலோசிக்கவேண்டும். பிழையான கருத்துக்களை சுட்டிக்காட்டுவதில் எந்த பலனும் இல்லை, அதை பக்குவமாக சொல்லி திருத்தி எடுப்பதில்த்தான் நட்பின் திறமையே இருக்கின்றது.

நண்பர்கள் வாக்குவாதப்படுப்போது ஒன்றை மட்டும் மனதில் கொள்ளுங்கள், ‘இது எனக்கும் உனக்குமான முரண்பாடு இல்லை! நீ இப்போது முன்வைக்கும் கருத்திற்கும், அல்லது இப்போதுள்ள உன் எண்ணத்திற்கும் எனது தற்போதைய கருத்துக்கும், என் தற்போதைய எண்ணத்திற்கும் இடையிலான முரண்பாடுதான் என்பதை.

vijay-tv-serial-bigg-boss-010720-660x330தினம் மாறும் கருத்துக்களால் மகத்தான மாறாத நட்பை இழக்கவேண்டுமா? ஒரு கணம் யோசியுங்கள். மனிதன் உணர்வுகளின் சங்கமம். எப்போதும் அவன் ஒரேபோல சிரித்துக்கொண்டிருப்பவனும் இல்லை, எப்போதும் துயரத்தால் அழுதுகொண்டிருப்பவனும் இல்லை. சமுகத்தாங்கங்கள், உளவியல் மாற்றங்கள் என்று எண்ணில்லாத அலையடிப்புக்களை தாங்கவேண்டிய உங்கள் நண்பனின் உணர்வுகளை புரிந்துகொள்ளுங்கள்.

ஓர் சிறிய மனக்கசப்பு என்பதற்காக பல நாட்கள் பழகிய இனிமையான பொழுதுகளை, அவரிடம் கண்டு இரசித்த முகபாவங்களை, அற்புதமான பகிரல்களை, சில மகிழ்ச்சி பகிர்வுகளை, ஒரேயடியாக மறந்துவிடமுடிகிறதா? நட்பில் உண்மையான சுகம் விட்டுக்கொடுத்தல்தானே! இப்படியாக எத்தனையோ எத்தனையோ சின்னச்சின்ன விடயங்கள் எம்மிடையே மிகப்பெரிய முரண்பாட்டு மதில்களை எழுப்பிவிடுகின்றது. அட உலகமே ஒருமித்து நின்று பிரித்துக்கட்டிய பேர்லின் சுவரே தகர்ந்துவிட்டது. உங்கள் சின்னச்சின்ன நட்பூடல்கள் தகர்ந்துவிடாதா என்ன?

இப்போது ஒரு பெரிய உண்மையை புரிந்துகொண்டீர்களா? ஓரு வீட்டிற்குள் மட்டும் நடத்தப்படும் நிகழ்ச்சி மட்டுமல்ல பிக் பொஸ்.. உண்மையிலேயே நீங்கள் பூமியில் வாழ்தல் கூட ஒரு பிக் பொஸ் நிகழ்வுதான்.. அத்தனையையும் நீங்களும் வெளியில் இருந்து பார்த்தல் என்ற மனநிலைக்கு சென்றீர்களேயானால் வாழ்தலில் உண்மையான பிக் பொஸ் நீங்கள் தான்!

http://www.samakalam.com/blog/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/

http://www.samakalam.com/blog/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/