Search
Tuesday 20 October 2020
 • :
 • :
தலைப்பு செய்திகள்

நெஞ்சே எழு 5: தயக்கத்தை போக்க தயங்கவேண்டாம்..

நெஞ்சே எழு 5: தயக்கத்தை போக்க தயங்கவேண்டாம்..

க.ஜெனார்த்தனன் (பயிற்சியாளர், BBA, MPM, NDTHRD, IFMA )

எம்மில் பெரும்பாலானவர்களிடம் இருந்து களையப்படவேண்டிய குணம் தயக்கமே ஆகும். தயக்கம் என்பதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொண்டுவிட முடியாது. தயக்கங்களின் காரணமாக பல நிகழ்வுகள் அரங்கேறாமலேயே போயிருக்கின்றன. வாழ்கையில் பல முன்னேற்றங்களையும், புதிய திருப்பங்களையும் இந்த தயக்கம் என்ற ஒரே பதம் இல்லாமல் செய்துவிடுகின்றது.

உலகில் வெற்றியாளர்களில் 100 வீதம் பேர், ஏதோ ஒருகட்டத்தில் அவர்களின் முன்னாலே தோன்றிய தயக்கங்களை தகர்த்துதெறிந்துவிட்டு முன்வந்தவர்களாகவே இருப்பார்கள். தயக்கம் என்பது, ஒரு விதமான அச்ச உணர்வே, ஏன் வீணாக இதற்கு முயற்சி செய்யவேண்டும்? இப்போது வேண்டாம், முதலில் யாரும் முயற்சிக்கட்டும் பிறகு நான் பார்க்கலாம், எனக்கேன் இந்த தேவையில்லாதவேலை!, என்பவை போன்ற சிந்தனைகள்தான் தயக்கத்தின் தூதுவர்கள், முக்கியமாக தன்னம்பிக்கை இன்மையே இந்த தயக்கங்களையும் அதன் தூதுவர்களையும் மனிதர்களின் மனங்களினுள் அழைத்துவந்து மனிதர்களை முழுச்சோம்பேறி ஆக்கிவிடுகின்றது.

ஒருவனின் சுய முன்னேறத்தில் ‘ஏராளமான காரணங்களை தோரணங்களாகக்கட்டி தயக்கம் திருவிழா கொண்டாடுகின்றது. தன்னம்பிக்கையோ இந்த திருவிழாவில் தொலைந்துவிட்ட குழந்தையின் மனோநிலையினைப்போல பரிதவிக்கின்றது. உலகின் வெற்றியாளர்கள் பலரின் வாழ்கைக்குறிப்புக்களை எடுத்துப்பாருங்கள், அவர்கள் சில நடவடிக்கைகளை தமது வாழ்க்கையில் எடுப்பதற்கு தயங்கியது கிடையாது என்பது தெரியவரும்.

Image processed by CodeCarvings Piczard ### FREE Community Edition ### on 2016-03-24 16:24:04Z | http://piczard.com | http://codecarvings.com

சீனாவின் பிரபல தொழிலதிபரும், அந்த நாட்டின் முக்கிய பணக்காரர்களில் ஒருவருமான ஹூகான் ஸியாங் தெரிவிக்கும் கருத்தினை பாருங்கள், ‘ஆரம்பகாலத்தில் நான் பல தொழில்ரீதியான சரிவுகளை கண்டேன், சொல்லப்போனால் அதற்குரிய காரணங்களை கண்டறியவே நான் தயங்கியவனாகவே இருந்தேன். இறுதியில்த்தான் தயக்கமே என் தொழில் எதிரி என்பதை தெரிந்துகொண்டேன்’ என்று தெரிவித்துள்ளார். எம்மில் பலருக்கு தொழிலில் மட்டுமின்றி அன்றாட நடவடிக்கைகளிலேயே தயங்கள் உண்டு. குறிப்பாக சிலரை எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு மற்றவர்களிடம் சகயமாகப்பழகவே தயக்கமாக இருக்கும், இன்னும் சிலருக்கு தம்மிடம் பல திறமைகள் இருந்தும் அதை வெளிக்காட்டத் தயக்கம் இருக்கும், வேறு சிலருக்கு சந்தர்ப்பங்கள் தானே அமைந்தாலும் கூட, அந்தச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தவே தயக்கமாக இருந்து அந்த சந்தர்ப்பங்களை மட்டும் இன்றி வாழ்கையினையே தொலைத்த சம்பவங்கள் பலவற்றை நாங்கள் காணலாம். ஏன் சிலர் தமது காதலை வெளிப்படுத்தவே தயங்கி அதிலும் தோற்றுப்போன சம்பவங்கள் சினிமாக்களில் மட்டும் இன்றி நியத்திலும் உண்டு.

கீதையிலேயே கண்ணன் அர்சுனனிடம், ‘கடமையை செய் பலனை எதிர்பாராதே’ என விளக்கம் கொடுகின்றனார். அதாவது நீ செய்யவேண்டிய ஒரு செயலின் பலாபலன்களை கருத்தில் கொள்ளாது, எந்த வித தயக்கமும் இன்றி அந்த கடமையினை செய்! வெற்றியும் தோல்வியும் உன் செயற்பாடுகளாலும், சூழ்நிலைகளாலும் உருவாகும் என்கின்றார். ஏன் ஒருவிதத்தில் கீதை எனும் புனித உபதேசம் கூட ஒரு தயகத்தின் காரணமாக தயக்கத்தை அகற்றவே உருவாகியது. போர்க்களம் புகுந்தும்கூட தர்மத்தை நிலைநாட்ட யுத்தம் செய்யவேண்டிய அர்ச்சுனன், எதிரில் உள்ளவர்களும் தனது சகோதரர்கள் என நினைத்து யுத்தம் செய்ய தயக்கம் கொள்கின்றான். அந்த தயக்கத்தை போக்கி அவனை நெறிப்படுத்தவே கீதா உபதேசத்தை பரந்தாமன் அருளினான். அர்சுனனின் தயக்கத்தை பரந்தாமன் போக்கியதுபோல எமது தயக்கங்களை எம் அறிவு களையவேண்டும். நிகழ்காலத்தில் கிடைக்கும் சந்தர்ப்பங்களை தயக்கங்களால் கைவிட்டுவிட்டால், எதிர்காலத்தில் அதை எண்ணி வேதனையடைவேண்டிய நிலை கண்டிப்பாக ஏற்படும்.

Inspiring-Short-Story-of-Lord-Krishna-Arjuna-in-Hindi

முக்கியமான ஒன்றை கவனித்துப்பாருங்கள், உங்களிடம் அதீத திறமைகள் இருக்கும், ஆற்றல்கள் இருக்கும், அனால் உங்களைவிட அறிவிலும், திறமையிலும் குறைந்தவர்கள், உங்கள் துறையில் விற்பன்னர்களாக இருப்பவர்களுடன் மிக நெருக்கமாக இருப்பார்கள்!, அதேபோல நீங்கள் எதிர்பார்த்திருந்த சந்தர்ப்பங்களை பெற்று அவர்கள் முன்னேறி இருப்பார்கள். காரணம், அந்த விற்பன்னர்களுடன் நெருக்கமடைய நீங்கள் தயங்கியதும், பின் நின்றதுமே ஆகும். அது மட்டுமின்றி உங்களைவிட திறமை குறைந்த அவர்களே இவ்வாறு முன்னேற முடிந்திருந்ததென்றால் அந்த சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைத்திருந்தால், சும்மா புரட்டிப்போட்டிருக்கமாட்டீர்களா ?

ஒரு கணத்தயக்கத்தால் சந்திரனை தொட்டமனிதன் என்ற பெருமையை தவற விட்ட அல்றின் போல எத்தனையோ மனங்கள் தங்கள் சந்தர்ப்பங்களை தவறவிட்டுவிட்டு அல்லல்பட்டுக்கொண்டிருக்கின்றன. தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் சந்தர்ப்பத்தை தவற விடுவதைவிட தயங்காமல் முயன்று தோல்வி பெறுவது எவ்வளவோ மேலானது.

fearofpublicspeaking-hypnotherapistcork

தயக்கம் கூடாது என்பதற்காக ஆராயமல் ஒரு செயலில் தணிந்து இறங்குவது என்று பொருள் கொள்ளவும் கூடாது. சரி…தயக்கங்களை எவ்வாறு இல்லாமல் செய்வது? ஒரு மழைநாளில் நனைந்துகொண்டு வீதியால் செல்லவேணடும் என உங்களுக்கு ஒரு ஆசை இருக்கலாம்! ஆனால் என்ன பைத்தியக்காரத்தனம் என்று மற்றவர்கள் சொல்வார்கள்! காய்ச்சல் வந்துவிடும் என்பதுபோல தயக்கம் இருக்கும்… தயக்கத்திற்கு சாவு மணி அடிக்க தயாராகுங்கள்.. மழைவந்தவுடன் வீதிக்கு இறங்கி நடவுங்கள், இப்படி அன்றாடம் உங்கள் சின்னச்சின்ன ஆசைகளுக்கு (விபரீதம் இல்லாத ஆசைகள் மட்டும்) எற்படும் தயங்கங்களை தகர்க்க ஆரம்பியுங்கள். உங்களை நாளாந்தம் புதுப்பித்துக்கொள்ளுங்கள், கண்ணாடிக்கு முன் நின்று, உங்கள் பிம்பத்தை பார்த்து கட்டளை இடுங்கள், நீ சாதிக்கப்பிறந்தவன் என்று அறிவுறுத்துங்கள், உங்கள் துறைகளில், உங்கள் திறமைகளை மேலும் மேலும் மெருகூட்டி வையுங்கள், உங்கள் திறமைகளை கால ஓட்டத்திற்கு தக்கவாறு மெருகேற்றுங்கள், அவற்றை வெளிக்காட்ட சந்தர்ப்பங்கள் கிட்டும்போது தைரியமாக எழுந்து நில்லுங்கள், இருக்கும் மட்டும்தான் புல்லும் மலைபோல தோன்றும், எழுந்துவிடால் மலையும் புல்தான்…
ம்ம்ம்…போதும் எழுந்திருங்கள்….

முன்னைய பதிவுகள்

நெஞ்சே எழு 4 – வாழ்தலின் தெரிவுகள்

நெஞ்சே எழு 3 – பிக் பொஸ் சமூகம்

நெஞ்சே எழு 2 – தலைவர் எடுத்த முடிவுகள்

நெஞ்சே எழு 1 – மகிழ்தலில் மகிழ்தல்


3 thoughts on “நெஞ்சே எழு 5: தயக்கத்தை போக்க தயங்கவேண்டாம்..

 1. Nivetha

  தயங்காதிரு மனமே. தயக்கத்தை போக்க உதித்ததே கீதை. அல்றின் பற்றிய இன்னும் ஒரு தகவல் அவர் பிற்காலத்தில் தன் தயக்கத்தை நினைத்து ஏங்கியதாகவும் 2nd in moon என தன் வாகனத்தில் எழுதி திரிந்ததாகவும் அறிய முடிகிறது. சுவாரகசியத்துடன் சிந்திக்க வைக்கிறது கட்டுரை

  Reply
 2. Shanmugam

  உண்மை. தயக்கம் என்பது சாதிப்பதற்கு எதிரான ஒரு தடைக்கல்

  Reply
 3. Nerusan

  நிச்சயமாக அச்சம் என்பது மடமை தான் அச்சம் தாண்டி உச்சம் தொடுவோம் …..அற்புதமான பதிவு

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *